சென்ற மாதம் ஐந்தாம் தேதி(05/03/25), ஒரு செய்தி கண்ணில் பட்டது, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றாக்குறை என்பது ஒரு மக்கள் பிரச்சன்னையே இல்லை என்று நடிகர் விஜய் கருத்து தெரிவித்து இருந்ததை பற்றிய செய்தி. ஐந்து பக்கங்களுக்கு ஒரு அறிக்கை தயார் செய்து இறுதியில், இது குடியாட்சியின் முதன்மை பிரச்சனை இல்லை, இது குடியாட்சியின் தத்துவார்த்தமான பிரச்சனை என்கிற வசனத்தோடு முடித்து இருந்தார்.

இதை ஏன் நாம் இப்போது எடுத்து பேச வேண்டும், நடிகர் விஜய் எப்படி பகுதி நேர அரசியல்வாதியாக அறியப்படுகிறாரோ நாமும் கொஞ்சம் அப்படித்தானே, பகுதி நேரமாக தான் அரசியல் சார் கட்டுரைகளை எழுதி வருகிறோம், சென்ற மாதம் முழுதும் வேலைப்பளு அதிகம் இருந்ததால். இந்த “Fair delimitation” பஞ்சாயத்து குறித்து எழுத நேரம் அமையவில்லை. நடிகர் விஜய்க்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எழுதி கொடுப்பதற்கு பதினோரு பேர் கொண்ட குழு இருப்பது போன்று நமக்கு யார் இருக்கிறார்கள்?!

அவர்களை போன்று நாம் எதையும் பொத்தாம் பொதுவாக பேசிவிடவோ எழுதிவிடவோ கூடாது என்பதில், கூடுமான அளவில் கவனமாகவே தான் இருக்கிறோம். அதனால், இது குறித்து எழுத அவகாசம் தேவைப்பட்டது.

நம் முதல்வர் தான் இந்த பஞ்சாயத்தை முதலில் முன்னெடுத்தார்,நீ ஏன் விஜயை குறித்து கட்டுரையை தொடங்கியிருக்கிறாய் என்கிற கேள்வி உங்களுக்கு ஏழுலலாம்.

உறுப்பினர்கள் பற்றாக்குறை என்பது பிரச்சனையே இல்லை என்கிற அவரின் கருத்தை கண்டு வந்து கடுப்பு தான் காரணம். அப்புறம் எந்த புற்களை புடுங்குவதற்கு கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்க முற்படுகிறீர்கள், படித்து ஜில்லா கலெக்டர் ஆக வேண்டியது தானே! என்று தோன்றியது.

நிர்வாகத்தை நடத்துவது அதிகாரிகளை கொண்ட அரசாங்க இயந்திரம் என்றால், அந்த இயந்திரத்தின் மேற்பார்வையாளர்கள் மக்கள் பிரதிநிதிகள்.தேர்தல் பற்றிய ஒரு உப்மா கதையை எல்லோரும் எங்காவது படித்து இருப்பீர்கள், ஒரு விடுதியில், என்ன சாப்பாடு வழங்கலாம் என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, நூறு பேரில், 20 பேர் பூரி வேண்டும் என்றும், 20 பேர் சப்பாத்தி வேண்டும் என்றும், 20 பேர் பொங்கல் வேண்டும் என்றும் 10 பேர் தோசை வேண்டும் என்றும் வாக்களித்தார்கள் 30 பேர் எப்போதும் போல் உப்புமா போடுங்கள் என்று வாக்களித்தார்கள். அது நூறு பேருக்கான ஒரு விடுதியாக இருந்தது என்று கொள்வோம், இப்போது அந்த நூறு பேர் 1000 பேராக ஆகிவிட்டார்கள்.நூறு பேருக்கு பொதுவாக ஒரு உணவை தேர்வு செய்ததை போலவே ஆயிரம் பேருக்கு பொதுவாக ஒரே உணவு என்று செய்தால் என்னவாகும்.உப்புமாவிற்கு வாக்களித்த 30 பேர் 300 பேர் ஆகியிருப்பார்கள். இறுதிவரை மற்றவர்களின் குரல் எடுபடாது.

ஜனநாயகத்தில், அதிமுக்கியமாக நாம் இப்போது பின் பற்றும் தேர்தல் முறைகளில் இந்த உப்மா சிக்கல் எப்போதும் இருக்கின்ற சிக்கல், மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல்,பிரதிநிதிகளை அதிகரிக்காமல் விட்டால் அந்த சிக்கல் இன்னும் பெரிதாகும்.

சமத்துவம், ஜனநாயகம், சமூக நீதி என்று இன்ன பிற வஸ்துக்களை தங்கள் அரசியல் பேச்சுக்களில் மட்டும் சேர்த்துக் கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளும் இப்போதும் தங்கள் வேட்பாளர்களை ஜாதி மதம் எல்லா வஸ்துக்களையும்  ஆராய்ந்து தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு ஊரில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றால், அந்த சமுதாய மக்களில் ஒருவர் தான் அங்கே வேட்பாளராக ஆக்கப்படுகிறார். உதாரணத்திற்கு ஒரு தொகுதியில் புறா ஜாதியை சேர்ந்தவர்கள் 40 பேர் குயில் ஜாதி 25 பேர் மற்றவர்கள் 35 பேர் என்றால், அங்கே புறா தான் வேட்பாளர். குயிலோ மற்றவர்களோ அந்த தொகுதியில் சிறுபான்மையினராக கருதப்படுவதில்லை.அந்த தொகுதியில் சில ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம், மக்கள் தொகை அதிகரித்து விட்ட பின், அந்த தொகுதி இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டால் குயில் ஜாதியில் இருந்தோ மதத்தில் இருந்தோ ஒருவர் வேட்பாளராக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.ஒரே தொகுதிக்குள் இருந்தாலும், இந்தியாவில், எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில், குயில்களும் புறாக்களும் தனித்தனி எல்லைகளை வகுத்துக்கொண்டு தான் வாழ்கிறது.இப்படியான சூழலில் மக்கட் தொகை எண்ணிக்கைக்கேற்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதும் தொகுதி எல்லைகளை மாற்றியமைப்பதும் தான் நியாயமாக இருக்கும்.

ஓட்டு அரசியலுக்காக மட்டும் அவ்வப்பொழுது அம்பேத்கர் படத்தை எடுத்து தலைக்கு பின்னால், மாட்டி வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் அநேகமான சமயத்தில் அம்பேத்கர் கொடுத்த அரசியலமைப்பில் இருந்து நேரத்திற்கு தகுந்தாற் தங்களுக்கு வேண்டியதை மட்டும் வேண்டியது போல எடுத்துக்கொண்டு வாதம் செய்கிறார்ககளே தவிர, அம்பேத்கர் தந்த அரசியல் அமைப்பின் காரண காரியங்களை முழுமையாக இவர்கள் புரிந்திருக்கவில்லை.(நமக்கு தேவை ஓட்டு அதுக்கு தேவை போட்டோ )

அரசியலமைப்பு, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கட் தொகைக்கு ஏற்ப தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது, கூடுமான வரையில் எல்லா தொகுதிகளிலும் ஏறக்குறைய ஒரே அளவிலான வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறது. அதன் படி, 1950க்கு பிறகு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு கொண்டே தான் வந்தது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த இந்த நடைமுறை 1976 இல் நிறுத்தப்பட்ட்டது. 2001 இல் தொகுதிகளின் எல்லைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டது.

இதை ஏன் இப்போது அரசியல் கட்சிகள் கையிலெடுத்திருக்கிறது?84 வது சட்டதிருத்தத்தின் படி இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வது 2026க்கு பின்னர் செய்யவேண்டும் என்று தள்ளி வைத்திருக்கிறார்கள். எப்படியும் இந்த முறை தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை, நாடாளுமன்றம் பெரிதாக கட்டப்பட்டு விட்டது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

நடிகர் விஜய் தமிழக முதல்வரும் தி.மு.க எனும் மாநில கட்சி தலைவரும் ஸ்டாலின் போன்றவர்களும் முன்வைக்கும் வாதம், தற்போது உத்தரபிரதேசம் 80 உறுப்பினர்களையும் தமிழகம் 39 உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது. இப்போதுள்ள நிலவரப்படி தமிழகம் தோராயமாக 18லட்சம் பேருக்கு ஒரு உறுப்பினரை கொண்டிருக்கிறது என்றால் உத்தரபிரதேசம் 25 லட்சம் பேருக்கு ஒரு உறுப்பினரை தான் கொண்டு இருக்கிறது. சமத்துவம் சமூகநீதி பேசுகிற மத இன மொழி பாகுபாடுகளை கடந்த அரசியல்வாதிகளாக தங்களை முன்னிறுத்திக்கொள்கிறவர்கள் இந்திய ஜனநாயகத்தில், உத்தரப்பிரதேசம் வஞ்சிக்கப்படுகிறது என்று பொங்கியிருக்க வேண்டாம்.

இங்கே மாநிலங்களின் உரிமைகளை பறிக்கப்படும் என்று பேசுகிறார்கள். ஜனநாயக நாட்டில்,இத்தனை பேருக்கு ஒரு பிரதிநி இருக்க வேண்டும் அரசியலமைப்பு வலியுறுத்துவது ஒரு பொழுதும் யாரின் உரிமையையும் பறித்துவிடாது. இது மாநிலங்களை பாதிக்காது மாநில கட்சிகளை பாதிக்கும், இது எந்த வகையில் சில மாநில கட்சிகளை பாதிக்கும் என்றால், அவர்களால் கூட்டணி பேரம் பேசி மத்திய அமைச்சர் பதவி வாங்க முடியாது.மூன்றாவது முறையாக காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்குமா என்கிற சந்தேகம் எழுந்த பொழுது பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெரும் என்கிற எதிர்பார்ப்புகள் இல்லை, புதுச்சேரியும் சேர்த்து நாற்பது தொகுதிகள் நம் கையில் இருந்தால் நாம் பிரதமராகி விடுலாம் என்று முன்னாள் முதல்வர் கணக்குப்போட்டதாக ஒரு பேச்சு இருந்தது. அந்த சமயத்தில் தான் அ.தி.மு.க தொண்டர்கள் பாரத தாயே என்றெல்லாம் போஸ்ட்டர்கள் அடித்தார்கள். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை இப்படியான கனவுகளை தான் உடைக்கும்.

 

பிரதிநிதிகளை மக்கள் தான் தேர்ந்துஎடுக்கிறார்கள்.மாநிலங்கள் தேர்ந்தெடுப்பதில்லை. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. ஆனால், 38 மாவட்டங்கள் தான் இருக்கிறது.அதாவது 38 கலெக்டர்கள் தான் இருக்கிறார்கள். ஒரு மாவட்டத்தில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மற்றொரு மாவட்டத்தில் நான்கு சட்ட மன்ற உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். மாவட்ட எல்லைகளை மாற்றி அமைப்பது, புதிய மாவட்டங்களை உருவாக்குவது, ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது, இரண்டு மாவட்டங்களை சேர்ப்பது, இதெல்லாம் 234 மக்கள் பிரதிநிதிகளை கொண்ட மாநில அரசாங்கத்தின் கையில் இருக்கின்றது. அதே போன்று மாநில எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் புதிய மாநிலங்களை உருவாக்கும் அதிகாரம் எல்லாம் 543 உறுப்பினர்களை கொண்ட மத்திய அரசாங்கத்தின் கையில் இருக்கிறது.மக்கட்தொகைக்கு ஏற்ப உறுப்பினர்கள் அதிகரிக்கப்படக்கூடாது என்றால், எதற்கு 234 உறுப்பினர்கள் கலெக்டர்கள், தாசில்தார்கள், பஞ்சாயத்து அலுவலர்கள் போதுமே எதற்கு தேர்தல்!இதெல்லாம் புரிந்து இருந்தாலும் கூட இங்கே  இன வேறுபாடுகளை புகுத்தி அரசியல் ஆதாயம் தேடிக்கொண்ட மாநில காட்சிகள், மாநிலங்களை எல்லாம் ஏதோ தனித்தனி நாடுகள் என்பதை போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்து, குட்டையை குழப்பி மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களின் fair delimitation கோஷமும் அப்படியான ஒரு வேலை தான்.

 

இவர்களை நாம் கேட்க விரும்புவது,  “தொகுதி மறு சீரமைப்பு செய்வதற்கு முன், உத்தரபிரதேசம் போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களை மூன்று அல்லது நான்கு மாநிலங்களாக பிரித்து தமிழகத்தை விட குறைவான உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களாக செய்துவிட்டால் போதுமா? ஒரு மாநிலத்திற்கு 20 உறுப்பினர்கள் என்கிற வகையில், 40 மாநிலங்களாக பிரித்துவிடலாம் அப்போது சர்ச்சைகள் எழுப்பாமல் இருப்பீர்களா?”   அப்போதும் 140 கோடி பேருக்கு 800 உறுப்பினர்கள் தான் இருப்பார்கள். ஆனால், உறுப்பினர்கள் பற்றாக்குறை பிரச்சனையே இல்லை என்று விஜய் பேசுகிறார். கேள்வி நேரத்தில் எல்லோரும் கேள்வி கேட்க அனுமதிக்கப் படுவதில்லையாம் அதனால் இது தேவையற்றதாம். சட்டமியற்றுவது தொடர்பான விவாதம் வாக்கெடுப்பு, தொகுதி மேம்பாடு, நாட்டின் பிரதமரை தேர்வு செய்வது, மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக கேள்வியெழுப்புவது என்று ஒரு பிரதிநிதியின் கடமை கேள்வி நேரத்தில் கேள்வி கேட்பது என்பதோடு மட்டும் முடிந்துவிடவில்லை.  எல்லா உறுப்பினர்களும் கேள்வி கேட்கலாம், நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் பொழுது, யாருடைய கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் என்பதை அனுமதிப்பதில் தான் சில நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை இயற்ற உங்களிடம் ஒரு இஸலாமிய உறுப்பினர் கூட இல்லையே என்றெல்லாம் விஜய் கருத்து தெரிவித்து இருந்தார். அந்த சட்டத்திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், விஜய் சொன்ன இஸ்லாமிய உறுப்பினர்கள், எல்லோரையும் சேர்த்து 30 உறுப்பினர்கள் 36 முறை அது தொடர்பாக 111 மணி நேரம் கலந்தாலோசித்து 25 வக்பு வாரியங்களையும் 15 மாநிலங்களை கலந்து, அதற்கு பின்னர் தான் அந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. உறுப்பினர்களின் கடமை கேள்வி நேரத்தில் கேள்வி கேட்பது மட்டும் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். உறுப்பினர்கள் பற்றாக்குறை என்பது நீங்கள் சொன்னது போல் பேப்பர் பிரச்சனை இல்லை விஜய். practical பிரச்சனை. கொஞ்சம் படித்துவிட்டு அரசியல் செய்யுங்கள், எழுதி கொடுப்பதை படித்து மட்டும் அரசியல் செய்ய நினைக்காதீர்கள், இதை தொடர்ந்தால், இதுவரை மூன்றாவது கட்சியாக தங்களை முன்னிறுத்திக்கொண்டு காலப்போக்கில் காணாமல் போன கட்சிகளோடு சேர்ந்து விடுவீர்கள்.

நமக்கான அரசியலமைப்பை நாம் உருவாக்கி கொண்ட நாள் முதல் எல்லா மாநிலங்களும் ஒரே எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கவில்லை, எல்லா மாவட்டங்களும் ஒரே மாதிரியான சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்டிருக்க போவதுமில்லை. இது நடைமுறையில் எப்படி சாத்தியப்படும்? இது சாத்தியப்பட வேண்டுமென்றால், தொகுதி எல்லைகள் மாற்றியமைக்கப்படும் பொழுதெல்லாம், மாநில மாவட்ட எல்லைகளையும் மாற்றியமைத்துக்கொண்டிருக்க வேண்டும். All even at all the times.

நிதியமைச்சராக இருந்த சமயத்தில், தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சிலில் தமிழகம் போன்ற பெரிய மாநிலத்திற்கும் ஒரு ஓட்டு கோவா போன்ற சின்ன மாநிலத்திற்கு ஒரு ஓட்டா என்று கேட்டு இருக்கிறார்.இப்படி சமயத்திற்கு தகுந்தாற் போல் அரசியல்வாதிகள் சர்ச்சைகளை எழுப்புவதெல்லாம் அதிகாரத்திற்கான போட்டியில் முந்திக்கொள்வதற்கு தான். நிர்வாக சீரமைப்பு இவர்களின் அதிகாரப்போட்டியை கடந்த ஒன்று.அது காலத்தின் கட்டாயத்தின் தேவை, ஐம்பது வருடங்களில் மக்கட்தொகை அசுர வேகத்தில் வளர்ந்து விட்டது.மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை இன்னமும் உயர்த்தப்படாமல் இருந்தால், அது ‘இந்திய ஜனநாயகம்’ என்கிறதை அர்த்தமற்றதாக செய்யும்.

இது தொடர்பாக இன்னும் எந்த வரைவும் ஏற்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. அதற்குள் ஆளுக்கொரு பக்கமாக கூவ தொடங்கியிருக்கிறார்கள்.இந்த மாற்றம் எப்படி நடைமுறைப்படுத்த படும் என்பதை கவனித்து நாம் நம் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால், இந்த மாற்றம் நிச்சயம் தேவையான ஒன்று தான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *