செய்தி சேகரித்து வழங்குவதில், இந்திய ஊடங்கங்கள் குறிப்பாக தமிழகத்தில் செயல்படும் ஊடங்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை என்பது அநேகர் அறிந்த ஒன்று தான்.
ஆனாலும், அரசியல் காரணங்களுக்காக செய்திகளும் அரசியலாக்கப்பட்டு விடுகிறது. அப்படியாகவே தான் தினமலர் நாளிதழில்,”மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு நிரம்பி வழிகிறது ஸ்கூல் கக்கூஸ்” என்னும் தலைப்பில் வெளியான செய்தியும் கூட. அரசியலாக்கப்பட்டு இருக்கிறது.
உண்மைகளை கொண்டே பொய்களை நிறுவும் செய்திகளும்,செய்திகளை கொண்டே அரசியல்வாதிகளின் கருத்துக்களும் நம் மீது திணிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கைது செய்த போது , தி.மு.கவும் அதன் சார்பு ஊடகங்களும் அமலாக்கத்துறையை அத்தனை மலிவாக சித்தரித்ததோடு அது ஆளுங்ககட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை என்கிற கருத்தை, அதிகம் வாசிப்பு பழக்கம் இல்லாத சாமானியர்களிடம் திணித்தது. ஒரு வகையில் அது சரி தான். நூறு சதவீதம் நேர்மையான தைரியமான ஆட்சியை வழங்க கூடிய அளவு தனிப்பெரும்பான்மை கொண்ட பா.ஜ.க. நூறு சதவீதம் நேர்மையான தைரியமான ஆட்சியை நடத்துகிறதில்லை.
எல்லாவற்றையும் சட்டபூர்வமாக கையாள்கிறோம் என்று பா.ஜ.க சொல்லிக்கொண்டாலும், ஜெ. மறைவிற்கு பின்னர் அத்தனை வேகமாக விசாரித்து முடித்து தண்டனை வழங்க முடிந்த சசிகலாவின் வாழ்க்கை ஜெ. இருந்த வரை கிடப்பில் போட்ட அளவில் தான் அவர்களின் நேர்மையும் தைரியமும் இருக்கின்றது. இப்படியாக குற்றம் செய்த அரசியல்வாதிகளின் மீதுள்ள வழக்குகளை விசாரித்து முடிப்பதிலோ அல்லது அதில் தீவிரம் காட்டுவதிலோ பா.ஜ.க.விடம் நேர்மையோ தைரியமோ இல்லை தான். அதற்காக தி.மு.கவும் அதில் உள்ள அமைச்சர்களும் மிக முக்கியமாக செந்தில் பாலாஜி அவர்களும் நேர்மையின் சிகரங்கள் இல்லை. ஆனால், மக்களில் ஒரு சாராரை பா.ஜ .க. எதிர்ப்பு என்கிற பெயரில் அந்த அமைச்சர்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டை மனதளவில் எடுக்க வைத்ததில் தான் தமிழக ஊடங்களில் கருத்து திணிப்பு வேலை செய்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின் பொழுது,பெரிதும் மெனெக்கெட்டு, “எங்களை சீண்டிப்பார்க்காதீங்க” என்று கண்டன பதிவை வெளியிட்ட மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களும் கூட “செந்தில் பாலாஜி ரொம்ப நல்லவர் நேர்மையானவர் அப்பழுக்கற்றவர் என்றெல்லாம் குறிப்பிடவில்லை”.
இப்படியாகவே தான் இரண்டு உண்மைகளை மறைக்க சாதாரணமான உண்மையை பெரிதுபடுத்தி கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களை நம் கவனத்தில் இருந்து மறைக்கிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில், பா.ஜ.க. பழி வாங்குகிறது என்று ஓங்கி ஒலித்தவர்கள். மங்க செய்த உண்மைகள்:
1. செந்தில் பாலாஜி மீது அடிப்படை ஆதாரங்களுடன் சுமத்தப்பெற்ற குற்றசாட்டு.
2. எதிர்க்கட்சியாக இருந்த பொழுது எதற்கெடுத்தாலும் ஆக, அவர் பதவி விலக வேண்டும், ஆக இவர் பதவி விலக வேண்டும் என்று கூவிய ஸ்டாலின் அவர்கள், இன்னமும் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர செய்வது.
3. தி.மு.க ஊழல் சார்ந்த விஷயங்களுக்கு எப்போதும் கடுமையான எதிர்ப்பாளர் இல்லை
இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.
இப்படி எல்லா செய்திகளும் கருத்து திணிப்புகளாகவே தான் இருக்கின்றது. கீழே இருக்கும் செய்தி அதற்கு சின்ன உதாரணம்.
அமலாக்கத்துறை அராஜகத்தில் ஈடுபடுகிறது என்பதை நிறுவுவதன் மூலம், மத்தியில் ஆளும் கட்சி மீதும் ஒரு எதிர்மறை எண்ணத்தை உருவாக்கி, அமைச்சர் பொன்முடி பாவம் என்பது போன்ற கருத்தை நிறுவும் வேலையையே தான் மேலே உள்ள செய்தி அதிகம் செய்கிறது.
அமலாக்க துறை சோதனைக்கு பொன்முடி முழுமையாகவும் சரியாகவும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பூட்டு பலவந்தமாக உடைக்கப்படவில்லை. அதோடு ஒரு செய்தியை கடத்த என்ன மாதிரியான படத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதும் அவர்கள் நினைக்கும் கருத்தை நமக்குள் திணிக்க பெரிதும் உதவுகிறது.
மேலே உள்ள அமைச்சர் பொன்முடி சம்மந்தமான செய்தியில் உள்ள படத்தையும் அந்த செய்தியும் பாருங்கள். கீழே ஒடிசா ரயில் விபத்து குறித்து வேதனை தெரிவித்த பிரதமர் மோடி குறித்த செய்தியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் படத்தை பாருங்கள்.
இப்படியாகவே தான் செய்திகள் என்கிற பெயரில் கருத்துக்கள் திணிக்கப்படுகிறது.
இப்படி தினமும் ஆயிரம் செய்திகள் வெளிவருகிறது. ஊர்ஜிதப்படுத்தப்படாத பொய்களும் உண்மைகளாக நிறுவப்பட்டுவிடுகிறது. அப்படி தினமும் வெளியாகும் ஆயிரம் செய்திகளில் ஆயிரமாவது செய்தி தினமலர் வெளியீட்டின் சேலம் திருச்சி பதிப்பில் வெளியான கீழே உள்ள செய்தி.
மாநிலத்தின் முதல்வராக வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்று எல்லோருக்கும் பொதுவானவராக இருக்கும் முதல்வர். ஒரு தனியார் செய்தி ஊடகத்தின் செய்தி வழங்களில் இருக்கும் குறையை சமய நம்பிக்கைகளோடு தொடர்படுத்தி கண்டனம் தெரிவிப்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது. எங்கள் எந்த மதத்தை பின்பற்றுவார்களாக இருந்தாலும் சனாதனத்தை அல்லது ஹிந்து மதத்தை சேர்ந்தவர் தான் என்று எந்த நம்பிக்கையை பின்பற்ற வேண்டும் யாரை கடவுளாக பின்பற்ற வேண்டும் என்பதில் எந்த வரையறையும் இல்லாத மதத்தை அல்லது கலாச்சாரத்தை பொதுமைப்படுத்தி, தினமலர் செய்தியை கண்டித்ததாக சொல்லி இழிவு படுத்தியது கண்டிக்கத்தக்கதே.
முதல்வர் எழுப்பிய கண்டன குரலை தொடர்ந்து கூட்டணி கட்சிகளும் கூட கண்டனங்களை பதிவு செய்ய தவறவில்லை.பொதுவான ஒரு எதிர்ப்பு கிளம்பியதால் தினமலரும் கூட பொறுப்பு துறப்பு ஒன்றை வெளியிட்டதாக தெரிகிறது.
அப்ப தினமலர் வெளியிட்ட செய்தி சரியா? செய்தி சரி தான் வெளியிட்ட முறை தான் தவறு.செய்தி எப்படி சரியாகும்.? கண்டனம் தெரிவித்த ஒருவரும் இது ஒரு பொய் பரப்புரை என்று இதுவரை வழக்கு தொடுத்தாக தெரியவில்லை.
அந்த ஒன்றே செய்தியில் பொய் இல்லை என்பதை நிறுவ போதுமானது. தலைப்பு நிச்சயம் பொறுப்பற்ற முறையிலும் அருவருக்கத்தக்க வகையிலும் இருப்பதற்கு நிச்சயம் தினமலரை ஆயிரம் முறை கண்டிக்கலாம். அதற்கு தான் எல்லோரும் கண்டித்திருக்க வேண்டும். மாறாக கவனம் ஹிந்து மதத்தின் மீது திருப்பப்பட்டிருக்கின்றது.பிராந்திய கட்சிகள் தேசிய கட்சிகளின் மீது நிறுவ முற்படும் வெறுப்பு அதற்கு காரணமாக இருக்கலாம்.பிராந்திய கட்சிகள் தேசிய கட்சிகளின் மீது நிறுவ முற்படும் வெறுப்பு அதற்கு காரணமாக இருக்கலாம்.காங்கிரஸ் தி.மு.க வின் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது காமராஜர் மீதும் கூட வெறுப்பு பரப்பப்பட்டது. பா.ஜ.க.வை வம்பிழுக்க தி.மு.கவிற்கு கிடைத்த அடி தாங்கியாக இருப்பது ஹிந்துக்கள் தான்.
தினமலர் செய்தி நிறுவனத்திற்கு தி.மு.க மீது தனிப்பட்ட வெறுப்பு இருந்திருக்கலாம். அதனால், அவர்கள் அப்படியான தலைப்பை கொடுத்திருக்க வாய்ப்பிருக்கின்றது.ஆனாலும், தி.மு.கவினரும் தினமலரும் மறந்துவிட்ட ஒன்று என்னவெனில், தி.மு.க முழுமையாக பொதுமைப்படுத்தி எதிர்த்த புதிய கல்வி கொள்கையில் முன்மொழியப்பட்ட திட்டம் தான் இந்த காலை உணவு திட்டம்.
மேலே இருக்கும் செய்தியின் படி, இந்த காலை உணவு திட்டத்தால் ஒரு புதிய சிக்கல் ஏற்படவே செய்திருக்கின்றது. அதுவே தான் கவனம் பெற்றிருக்க வேண்டும். அந்த செய்தியின் மூலம் நிர்வாகமும் அரசாங்கமும் பெற வேண்டிய படிப்பினைகள் தான் கவனம் பெற்றிருக்க வேண்டும். மாறாக சனாதன வெறுப்பும் சமூக நீதி பிம்பம் கொண்ட அரசியலும் தான் முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
ஆரம்ப பள்ளி மாணவர்கள் என்பவர்கள் குழந்தைகள், அவர்களில் நிச்சயமாக எல்லோரும் மிக நேர்த்தியாக கழிவறையை பயன்படுத்துவார்கள் என்பதற்கில்லை.அது அவர்கள் கற்றுக்கொள்ளும் வயது.
எத்தனை பள்ளிகளில் போதுமான அளவு சுத்தமான கழிவறைகள் இருக்கின்றது? முன்னோட்டமாக இந்த திட்டம் சில பள்ளிகளில் செயல்படுத்தப் பட்ட பொழுது இப்படியான நிர்வாக ரீதியிலான எத்தனை சிக்கல்கள் அறியப்பட்டது? அதில் எத்தனை சிக்கல்களுக்கு, முழுவீச்சில் திட்டத்தை செயல்படுத்தும் முன்னர் தீர்வு காணப் பட்டது?முன்னோட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தவற்கு முன்னர், மாநில அளவில் இந்த திட்டத்திற்கான தேவை ஆராயப்பட்டதா? அல்லது புதிய கல்வி கொள்கையில் முன்மொழியப்பட்டதின் படி நேரடியாக அரசியல் ஆதாயங்களுக்காக மட்டும் செயல்படுத்தப்பட்டதா ? ஒவ்வொரு பள்ளிகளிலும் எத்தனை போதுமான அளவில் தூய்மை பணியாளர்கள் இருக்கின்றார்களா? என்று இப்படியான பல கேள்விகளையம் உரையாடல்களையும் எழுப்பி அதனைத்தொடர்ந்து ஒரு நிர்வாக சீர்திருத்தத்திற்கு காரணமாக இருந்திருக்க வேண்டிய செய்தி, பொறுப்பற்ற முறையில் வெளியிடப்பட்டதால் எப்போதும் போல் அரசியல்வாதிகளின் ஆதாயம் தேடும் அரசியலுக்கு இரையாகி இருக்கின்றது. சோறு படிப்பும் எத்தனை முக்கியமோ சுத்தமான கழிவறை எல்லோருக்கு கிடைக்கவேண்டியதும் அவசியமானதே.