நம் நாட்டில், இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. தற்காலத்தில், நமக்குக் கிடைக்காத சலுகைகள் வசதியான ஒருவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கம் பெரும்பான்மை மக்களிடம் இருக்கிறது. பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டிலும் கூட ‘கிரீமி லேயர்‘ (Creamy Layer) முறை கொண்டு வரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
இட ஒதுக்கீட்டு முறையின் இலக்கு என்னவோ, அதை நோக்கி அது பயணிக்கிறதா என்று நாம் ஆராய வேண்டும். இலக்கை நோக்கிப் பயணிப்பதில் இருக்கும் சில தடுமாற்றங்கள் தான், பெரும்பான்மை மக்கள் இட ஒதுக்கீட்டு முறையின் மீது ஒரு தவறான பார்வை கொண்டிருப்பதற்கான காரணம். பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கும் கிரீமி லேயர் முறையைப் பட்டியலின இட ஒதுக்கீட்டிற்கும் கொண்டு வந்துவிடலாமா? அது சரியாக இருக்குமா?
இது பற்றிய விவாதத்தை முன்னெடுக்கும் முன் நாம் நம்மைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது இருக்கும் ஜாதிகள் எப்படி வந்தன என்று புரிந்துகொள்ள வேண்டும். படையெடுப்புகளுக்கு முன் இருந்த பாரத தேசத்தில், சாதி முறை ஒரு நெகிழ்வற்ற அமைப்பு அல்ல; அது ஒரு நெகிழ்வான அமைப்பாகவே இருந்தது. படையெடுப்புகளுக்குப் பின், மிகக் குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து அது தன் நெகிழ்வுத்தன்மையை முழுதுமாய் இழந்து கிடக்கிறது.
700 ஆண்டுகளுக்கு முன் பட்டப்பெயர்களாக இருந்தவை எல்லாம் இன்று ஜாதிப் பெயர்களாக மாறியிருக்கின்றன. ஒருவர் தச்சராக வேண்டுமென்றால், ஒரு தச்சரிடம் சென்று அவரோடு தங்கியிருந்து தொழில் கற்று அவர் தச்சராக முடியும். பிறப்பால் அர்ச்சகர்களாக இருந்தவர்கள், கொல்லர்களாக இருந்தவர்கள் எல்லாம் புலவர்களாக இருந்ததை நமக்கு வரலாறு சொல்கிறது.
ஒருவர் தான் யார் வழி வந்தவர் என்று தன் பெற்றோர் வழிப் பூர்வீகத்தையும், ஊர் அல்லது நாட்டின் பெயரையும், தன் தொழில்முறைப் பட்டத்தையும் தான் அடையாளமாகக் குறிப்பிட்டு வந்தார்கள். ஜாதி என்று அறியப்படுவது தொழில் நிமித்தமானதாகவே இருந்தது.
க்ஷத்திரியர்கள் அந்தணர்களானார்கள்; அந்தணர் பரசுராமர் க்ஷத்திரியராகக் கொஞ்ச காலம் இருந்து மீண்டும் அந்தணராக வாழ்ந்தார். ஜாதி அமைப்பு யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்கிற நெகிழ்வுத்தன்மையுடன் தான் இருந்தது.
இங்கே எல்லோரும் ஒரு திருக்குறளின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு பேசுவார்கள்: “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ என்று பேசுவார்கள். அடுத்த வரியில், “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்“ என்கிறார் வள்ளுவர்.
‘செய்தொழில்‘ என்பது செய்யும் தொழில் சார்ந்தது மட்டும் அல்ல; அவரின் செயல்பாடுகள் மற்றும் குணம் சார்ந்தது. இந்த குறள் கீதையின் கருத்தோடு ஒத்துப்போகிறது.
நம் பாரத தேசத்தின் இலக்கியங்கள், புராணங்கள் மற்றும் கல்வெட்டுகள் மூலம் நாம் புரிந்துகொள்ளும் முக்கியமான உண்மை – இங்கே ஜாதி பிறப்பால் ஆனது அன்று; மாறாக அதில் ஒரு நெகிழ்வுத்தன்மை இருந்தது.
பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆட்சி செய்யத் தொடங்கிய பொழுது, அவர்களின் நிர்வாக வசதிக்காக நம்மைச் சில ஜாதிப் பெயர்களுக்குள் அடக்கினார்கள். அதற்கு முன்னமே சில படையெடுப்புகளின் தொடக்கம் தொட்டு, நம் சமூகம் செயற்கையான பஞ்சம் முதலிய பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்கத் தொடங்கிய காலத்திற்குப் பின், கையில் இருக்கும் தொழிலைக் காத்துக்கொள்ள வேண்டித் தங்கள் பிள்ளைகளுக்கு அந்தத் தொழில்களைக் கடத்த ஆரம்பித்தார்கள். அதன் பின் நம்மிடம் வரி வசூல் செய்யவும், நம்மை நிர்வகிக்கவும் பிரிட்டிஷ்காரர்கள் அவர்களைப் பார்த்த காலத்தில் நாம் என்னவாக இருந்தோமோ, அதைத் தங்கள் வசதிக்கேற்ப ஒருங்கிணைத்தார்கள்.
உதாரணமாக, கோவில் பணி செய்கிற கலைஞர்கள் பல இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். வேறு வேறு வேர்களைக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். கலை சம்பந்தமான ஒரு பத்து விதமான கோவில் வேலைகளைச் செய்கிற கலைஞர்கள் இருந்தார்கள் என்றால், அந்தப் பத்து பேரையும் ஒரே ஜாதிப் பெயரின் கீழ் இணைத்தது ஆங்கிலேய அரசு.
வணிகர்களின் பட்டப்பெயர்கள் ஜாதிப் பெயராக மாறின. அந்நியப் படையெடுப்புகளுக்கு முன்னால் அரசு காவலர்களாக, படைவீரர்களாக இருந்தவர்கள், சிதறிப் போய் வாழ்வாதாரத்திற்காகத் திருட ஆரம்பித்த போது, அவர்களைக் ‘கள்ளர்கள்‘ என்றும் ‘பரம்பரை குற்றப்பிரிவினர்‘ என்றும் ஆங்கிலேயர்களால் ஒரு குடைக்குள் கொண்டு வரப்பட்டார்கள். நிர்வாக வசதிக்காகக் கொடுக்கப்பட்டு, இன்று பிறப்பின் அடிப்படையில் தொடரும் இந்த ஜாதிப் பெயர்கள் அல்லது இந்த அமைப்பு அதன் நெகிழ்வுத்தன்மையை இழந்து நிற்கிறது.
மனிதர்களை மனிதர் அடிமையாக நடத்தும் விதமும் வழக்கமும் கூட அந்நியப் படையெடுப்புகளுக்குப் பிந்தையது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதில் சுதந்திரத்திற்குப் பின்னான அரசு முறையில், 700-800 வருடம் ஒடுக்கப்பட்ட பட்டியலினத்தவர்களுக்கு எல்லா விதங்களிலும் சமமான வாய்ப்பை வழங்கத்தான் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது.
இந்தியா குடியரசு ஆனதிலிருந்து கணக்கிட்டால் 75 வருடங்கள் முடிந்துவிட்டன. தமிழகத்தில் ஒரு திரையரங்கில் நரிக்குறவர் பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு அரசியல் கட்சிகள் ஜாதி சாயம் பூசின. என்னுடைய பார்வை அதிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. அதே அந்தப் பெண், நம் எல்லோரையும் போல நல்ல உடை அணிந்து, படித்தவர் போல, நாகரிகமானவர் போலத் தோற்றம் அளித்திருந்தால் அவரை யாரும் தடுத்து நிறுத்தியிருக்க மாட்டார்கள். இந்தியாவில் எங்கும் ஜாதிச் சான்றிதழ் கேட்டு அனுமதி மறுக்கப்படுவதில்லை.
75 வருடங்களாக ஒருவர் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இப்படியிருக்க நாம் அனுமதித்திருக்கும் அதே வேளையில், ஒரு பக்கம் சிலர் பல தலைமுறைகளாகப் பட்டியலினத்தவர்களுக்கான சலுகைகளை அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள்.
மக்களில் சிலர், அதற்குத்தான் “இட ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்பட வேண்டும்” என்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவறான புரிதலுக்கும் நம் அமைப்பில் இருக்கும் கோளாறு தான் காரணம். நம் ஜாதி அமைப்பில் இருக்கின்ற நெகிழ்வுத்தன்மை மாறிவிட்டது தான் அடிப்படை காரணம்.
ஒரு பட்டியலினக் குடும்பத்தில் இருந்து ஒரு மாணவனும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும் இருக்கிறார்கள். இவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன்; பட்டியலினக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவனின் அண்ணனுக்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக நல்ல வேலை கிடைக்கிறது; அந்த வேலை அவர்கள் குடும்பத்தை ‘ஓபிசி கிரீமி லேயர்‘ (OBC Creamy Layer) வகையில் சேர்த்து விடுகிறது. அந்த குடும்பம் அப்போதுதான் மேலே வந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு மறுக்கப்படும் சலுகை, வசதியான பட்டியலின மாணவனுக்குக் கிடைக்கும் பொழுது, சமூகத்தின் ஒரு சாரார் பட்டியலின மக்களுக்குக் கொடுத்து வரும் சலுகைகள் மீது அதிருப்தி கொள்கிறார்கள்.
இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி சார் சலுகைகள் வெறும் பொருளாதாரம் பற்றியது மட்டும் இல்லை என்கிற புரிதல் மக்களிடம் இல்லாமல் போனதற்கு நம் அமைப்பில் இருக்கின்ற குறைதான் காரணம். ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக, அவர்கள் சார்ந்தவர்களுக்கு அதிகாரத்தில் இடமளிக்கவே இந்த முறையை நாம் பின்பற்றுகிறோம். அவர்களுக்கான நீதி கிடைக்க நீதித்துறையில் அவர்களும் இருக்க வேண்டும்; அவர்கள் குரல் ஒலிக்க அரசியலில் இருக்க வேண்டும். இது ஒரு சமூகப் பாதுகாப்புச் சம்பந்தமானது.
எல்லாம் சரி! ஆனால், இது ஒரு சமநிலையை ஏற்படுத்தி விட்டதா என்றால், நிச்சயமாக இல்லை. பட்டியலினத்தவர்களிலும் கூட பாகுபாடுகள் இருக்கின்றன. அவர்களிலும் இன்னும் பலர் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருக்கிறார்கள். அதே போல், இது பல பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும். இந்தியாவில் பல பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்களுக்கான சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்ய நாம் செய்து கொண்ட ஒரு ஏற்பாடு, வேறு மாதிரியான ஏற்றத்தாழ்வைப் புகுத்திக் கொண்டிருக்கிறது. இதைச் சரி செய்யாமல் இருந்தால், மக்களில் ஒரு சாரார் மற்றொரு சாரார் மேல் வெளிக்காட்டிக்கொள்ளாத ஒரு வெறுப்பை வளர்த்துக்கொள்வார்கள். “சின்னவனுக்கு மட்டும் எல்லாம் செய்கிறீர்கள்” என்று பெற்றோர் மேல் அதிருப்தி கொள்ளும் மூத்த பிள்ளைகள், இளைய பிள்ளைகள் மீது வளர்த்துக்கொள்ளும் வெறுப்பைப் போன்றது அது. அரசாங்கம் எனும் பெற்றோர் எல்லாப் பிள்ளைகளையும் சரியாகக் கையாள வேண்டும்.
நாம் இப்போது இருக்கும் சாதி வகைப்படுத்தலில் ஒரு நெகிழ்வுத்தன்மையைக் கொண்டு வர வேண்டும். இதில் நாம் ஏதேனும் பெரிய மாற்றங்களை முன்னெடுத்தால், அது பெரிய எதிர்ப்புகளையும் அதிருப்தியையும் கொண்டு வரலாம். மாறாக நாம் சிறிய மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
இட ஒதுக்கீட்டு முறையில் எல்லாப் பிரிவுகளிலும் மூன்று தலைமுறையாக அல்லது குறிப்பிட்ட காலத்திற்குப் பொதுப்பிரிவிலோ, பிற்படுத்தப்பட்ட பிரிவிலோ, பட்டியலினப் பிரிவிலோ வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டு வரலாம். ஒருவர் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி அமைச்சராகி விட்டார் என்றால், மீண்டும் நாம் வேறொரு உட்பிரிவில் அந்த வாய்ப்பு கிடைக்காத ஒருவருக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டாமா? கிரீமி லேயர் முறையை எல்லாப் பிரிவினருக்கும் கொண்டு வந்தாலும் கூட, குடும்ப வருமானத்தோடு குடும்பப் பொருளாதார நிலையின் காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
எல்லாப் பிரிவுகளிலும் நாம் ஒரு முன்னுரிமைப் பட்டியலைக் கொண்டு வர வேண்டும். அந்த முன்னுரிமைப் பட்டியல் எப்போதும் ஒரே மாதிரியானதாக, குடும்பத்தின் பிறப்பு அடிப்படையிலான பின்னணி சார்ந்ததாக மட்டும் அல்லாமல், தற்காலச் சூழலைப் பொறுத்து மாற்றமடையும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இப்படி ஒரு முன்னுரிமைப் பட்டியல் கொண்டு வரும் பொழுது, ஏற்கனவே இருக்கின்ற நடைமுறையை அது எந்த வகையிலும் பாதிக்காது. மாறாக, பட்டியலினப் பிரிவிலோ அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவிலோ வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறவருக்கு அந்த வாய்ப்பைக் கொண்டு சேர்க்கலாம். அதிகாரப் பிரதிநிதித்துவத்தில் இன்னும் வாய்ப்புகள் கிட்டாமல் இருக்கும் சமூகங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். பட்டியலினத்தவருக்கு இருக்கும் தனித்தொகுதி நடைமுறை போல், வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்ற சமூகங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தர குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
இப்படியான மாற்றங்கள், கால மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு சமநிலையை நாம் கொண்டு வர முடியும். இல்லையென்றால் ஒரே பக்கமாக நாம் பாரம் ஏற்றிக்கொண்டிருப்போம்
முடிவாக மிக முக்கியமாக நாம் இந்த இட ஒதுக்கீட்டு முறையை ஓரளவு தனியார் நிறுவனங்களை பின்பற்ற வைக்க வேண்டும். எதிர்காலத்தில் அரசு பணிகள் தனியார் வேலைவாய்ப்புகளோடு ஒப்பீடும் பொழுது இன்னும் குறைந்து கொண்டே தான் போகும். அதன் பொருட்டு நாம் சிறிய அளவிலேனும், பெரும் நிறுவனங்கள் சமூகத்தில் பிந்தங்கியவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கும் படி செய்ய வேண்டும். நாம் முன்பு குறிப்பிட்டதை போல அதில் அந்த முறைமையில் ஒரு நெகிழ்வு தன்மை இருக்க வேண்டும்.