நாம் சில நாட்களுக்கு முன் எழுதியிருந்த கட்டுரையில் நம் மாநில நிதியமைச்சர் “பெட்ரோல் மீதான vat குறைக்கப்படுமா ?” என்கிற கேள்விக்கு வரிவிதிப்பை பற்றி நடத்திய பாடத்தை அலசியிருந்தோம். அந்த கட்டுரையில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் (மன்னிக்க), ஒன்றிய அரசின் மற்றும் மாநில அரசின் வரி விதிப்பு முறையையும் அது ஒன்றிய அரசு விதிக்கும் வரி மாநிலங்களுக்கும் எவ்வாறு பயன்படுகிறது என்பதனையும் எடுத்து சொல்லியிருந்தோம். அது மட்டுமல்லாமல் தி.மு.க.வின் வாக்குறுதியில் கூட பெட்ரோல் மீதான வரியை சதவீத அடிப்படையில் குறைப்போம் என்று ஏன் அவர்கள் வாக்குறுதி தரவில்லை என்பதையும் எடுத்து சொல்லியிருந்தோம்.

அந்த கட்டுரையை படிக்கச் கிளிக் செய்யவும் பெட்ரோல் மீதான வரி குறைப்பு சாத்தியமா?

பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி குறைப்பு இல்லை

அன்று, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு(மாநில அரசின் பெட்ரோல் மீதான வாட் குறைக்கப்படுமா என்கிற கேள்விக்கு ) நேற்று நம் மாநில நிதியமைச்சர் பதிலளித்திருந்ததாக தெரிகிறது. தற்போதைக்கு பெட்ரோல் மீதான வரி குறைக்க முடியாது என்பதை தற்போது குறைக்க வேண்டியதில்லை. சென்ற வருடம் மாநில அரசின் பெட்ரோல் மீதான வரிவிதிப்பில் செய்யப்பட்ட மாற்றம் ஏற்கெனவே மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் மாநில அரசிற்கு நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் தற்போது ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து வைத்திருப்பதோடு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கபடும் வரியை (நேரடியாக பகிர்ந்தளிக்க படும் வரியை) குறைத்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாத வரியை (மறைமுகமாக மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரியை) அதிகரித்து இருக்கும் வேளையில் மாநில அரசின் வாட் வரியை குறைத்தால் அது ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் அமைந்துவிடும் என்று மீண்டும் பாடம் எடுத்து இருக்கின்றார்.

முதல்வன் பட ரகுவரன் போன்று மாநில வரியை குறைப்பீர்களா மாட்டீர்களா? அதை மட்டும் சொல்லுங்கள் என்ற மனநிலையில் இருந்த மக்களுக்கு கிடைத்த பதில் ஒன்றிய அரசின் வரி விதிப்பு அதிகமாக இருக்கின்ற சூழலில் மாநில அரசின் வாட் வரியை குறைத்தால் அது ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் அமைந்துவிடும் அதனால் தற்போதைக்கு வரி குறைப்பிற்கு வாய்ப்பில்லை என்பதே.

தி.மு.க.வின் சட்டப்பேரவை வாக்குறுதி நம் மாநில நிதியமைச்சர் சுட்டிக்காட்டிய ஒன்றிய அரசின் வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்ட பின், மாநில அரசின் வரிவிதிப்பு முறை மாற்றம் செய்யப்பட்டபின் வெளியிடப்பட்டது தானே என்கிற கேள்வியும். நிதி அமைச்சர் சொல்லும் காரணங்களை வைத்து பார்க்கும் பொழுது ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான வரிவிதிப்பை குறைக்காத வரை அல்லது ஒன்றிய அரசை பா.ஜ.க. ஆட்சி செய்யும் வரை மாநில அரசு வரி குறைக்க வாய்ப்பில்லையா என்கிற கேள்வியும் மக்கள் மனதில் எழாமல் இல்லை.

அதோடு உள்ளீட்டு வரி குறைவாக இருக்க வேண்டும் என்று பாடம் எடுத்த மாநில நிதிமைச்சரும் வாக்குறுதிகளை நிறைவேற்றி பழகிய தி.மு.க.வுமும் இப்படியொரு நிலைப்பாடு எடுத்திருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்து இருக்கின்றது.

எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம்

மக்களாட்சியில் யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.புதிய ஆட்சி தொடங்கி ஒரு மாதம் தான் ஆகிறது என்று சொல்லவீர்களானால் தி.மு.க முதல் முறை ஆட்சிக்கு வரவில்லை என்பதையும்;பெருந்ததொற்று காலத்தில் ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்த பின் தான் சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதி வெளியிடப்பட்டது என்பதனையும்;தி.மு.க. நிர்வாகம் பற்றிய புரிதல் இல்லாமல் மேடைகளில் உளறும் கத்துகுட்டி கட்சியும் இல்லை என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும். அதோடு தேர்தல் வாக்குறுதிக்கு முரணானதாக இருக்கும் புதிய அரசின் செயல்பாடுகளும் அறிவிப்புகளுமே எதிர்க்கட்சி தலைவர்களாலும் மக்களாலும் விமர்சிக்கப்படுகிறது.மக்கள் விமர்சிக்கிறார்கள் என்பதை விட ஏமாற்றங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அவர் சுட்டிக்காட்டியிருப்பது போல் தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட நகை கடன் தள்ளுபடி பற்றியோ அல்லது முதல் சட்டசபை கூட்ட தொடரிலேயே நீட் தேர்வு ரத்து என்பதை பற்றியோ அல்லது பெட்ரோல் டீசல் விலை குறைப்பை பற்றியோ எந்த அறிவிப்பும் இல்லை தான்.முன்னதாக டாக்டர் அன்புமணி அவர்களும் தி.மு.கவின் வாக்குறுதியும் செயல்பாடுகளும் முரணானதாக இருக்கின்றது என்று விமர்சித்து இருந்தார்.

நீட் தேர்வு ரத்து தொடர்பான கட்டுரையை படிக்க வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் (பகுதி-2):நீட் தேர்வு எனும் அரசியல் மாயம்


இவை அல்லாமல் 30வயதுக்குட்பட்டவர்க்கு கல்விக்கடன் தள்ளுபடி என்பதை பற்றியும் இன்று வரை எந்த செய்தியும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒருவர் 30 வயதை கடந்துகொண்டிருக்கின்றார்கள்,தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதியின் படி கல்விக்கடன் தள்ளுபடிக்கான தகுதியை இழந்து வருகின்றார்கள். .

மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது

வாக்குறுதியின் படி கல்வி கடன் ரத்து பெட்ரோல் மீதான வரி குறைப்பு தற்போது சாத்தியமில்லை. காரணம், பெருத்ததொற்று நெருக்கடியை ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் சாமாளித்து வரும் வேளையில் கடன் தள்ளுபடி வரிக்குறைப்பு போன்ற அறிவிப்புகள் அரசாங்கத்தின் நிதி சுமையை மேலும் அதிகரிக்கும்.

அரசாங்கத்தின் சுமை என்பது மக்களின் சுமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

பெட்ரோல் மீதான வரி ஒன்றிய அரசின் வருமானத்திற்கும் சரி மாநில அரசின் வருமானத்திற்கும் பெரிய பங்கை அளிப்பது.ஆனாலும், கூட அரசின் மொத்த செலவினங்களில் பாதியளவு கூட ஈடு செய்ய முடியாதது.பெட்ரோல் இன்னும் ஜி.எஸ்.டி வரம்பில் கொண்டு வரப்படாததற்கு காரணம் மாநில அரசின் வருமானத்தை வெகுவாக பாதிக்கும் என்பதே.அதோடு பெருந்தொற்றை சமாளிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் எடுத்த நடவடிக்கை மற்றும் ஊரடங்கால் அரசாங்கத்தின் வருமானத்தில் ஏற்பட்ட சரிவு பெரிய நிதிப்பற்றாக்குறையை ஏற்படுத்திருக்கின்றது.இப்படியான சூழலில் ஒன்றியமோ மாநிலமோ எந்த அரசாங்கமாகினும் எந்த கட்சியாகினும் வரி குறைப்பு நடவடிக்கை எடுக்குமானால் அது அரசிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.அதன் காரணமாக நாம் நினைவில் வைத்து கொள்ளவேண்டியது. காலத்திற்கும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அல்லது மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் ஒன்றிய அரசின் கூட்டணியில் இல்லாத போது பெட்ரோல் டீசல் விலையை பற்றி அரசியல்வாதிகள் வைக்கும் விமர்சனங்களை நாம் சட்டை செய்யக்கூடாது என்பதே. நாம் அரசியல்வாதிகளின் இப்படியான விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் நிர்வாக ரீதியாக அரசியலை புரிந்துகொண்டாலே நிஜமான நிர்வாக ரீதியிலான சிக்கலுக்கலுக்கான தீர்வுகளை பற்றி அரசியல்வாதிகள் பேச ஆரம்பிப்பார்கள்.

ஆட்சிக்கு வரும் போதே நிர்வாக சிக்கல்களை பற்றி அரசியல் கட்சிகளுக்கு நினைவு வருகின்றது.அதற்கு மக்கள் நிர்வாக முறைகளையும் சிக்கல்களையும் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் காரணமாகும்.

பெட்ரோல் மீதான வரி குறைக்கப்படாது என்றதற்காகவோ கடன் தள்ளுபடி பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இது வரை வெளியிடாததற்கோ ஆளும் கட்சியை குற்றம் சாட்ட முடியாது என்கிற நிதர்சனத்தை புரிந்து கொண்டு, இனிமேல் எந்த அரசியல்வாதியும் டீசல் விலை திடுக்கிட வைக்கிறது;பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது; காஸ் விலை கவலை பட வைக்கிறது என்று எதுகை மோனையில் பேசினாலோ அல்லது சுய புராணம் பேசிவிட்டு ஸ்லைடு போட்டு வரி விதிப்பு முறையை பற்றி பாடம் எடுத்தாலோ அவர்களை முதலில் கேள்விக்குட்படுத்துங்கள். அவர்கள் என்ன மாற்று வழி வைத்திருக்கின்றார்கள் என்று கேட்க பழகுங்கள்.இப்போதும் கூட நிதி அமைச்சர் வரி குறைக்க முடியாததை நேரடியாக மக்களிடம் சொல்லாமல் ஒன்றிய அரசின் மீது குற்றசாட்டு வைத்துவிட்டு பெரிய விளக்கம் கொடுத்துவிட்டு சொல்வதற்கு மக்களிடம் புரிதல் இல்லாமல் இருப்பதே காரணமாகும். அரசியல்வாதிகள், அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை விட மற்றவர்கள் மீது குறை சொல்வதற்கு மக்களாகிய நாமும் காரணமாக இருக்கின்றோம்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. நம்முடைய வேலைவாய்ப்பு; குடும்ப வருமானம்; தனியார் நிறுவனமாக இருந்தாலும் தகுதிக்கான சரியான ஊதியம் இவைகளையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் சம்பள கமிசனின் பரிந்துரை படி தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் ஊதியம் வேண்டுவது போன்ற அணுகுமுறையே நம்மிடம் இருக்க வேண்டும்.

உதாரணமாக, அரசாங்கம் மற்றும் தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஓரே தகுதியடைய ஆசிரியர்களின் ஊதியத்தில் இருக்கும் இடைவெளி குறைக்கபட வேண்டும் என்பதை பற்றி சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் எந்த கட்சியும் குரல் கொடுத்து இருக்க மாட்டார்கள் என்பதை கவனித்து இருக்க மாட்டீர்கள். காரணம், நம் கவனத்தை எப்போதும் விலைவாசி ஏற்றத்தின் மீதும் வரிவதிப்பின் மீதும் எதிர்கட்சிகள் திசை திருப்பவதே. அடுத்த முறை கடன் ரத்து , வரி குறைப்பு என்றில்லாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தரும் ஊதியத்திற்கிடையில் இருக்கும இடைவெளியை குறைக்க உத்ரவாதம் தரும் அரசியல்வாதிகளை தேடுங்கள். நாம் தேடாத வரை அவர்கள் கிடைக்க மாட்டார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *