வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!
கடவுள் இருக்காரா? இல்லையா? நாம்(மனிதன்) அறிவு என்று அறிந்து வைத்திருக்கும் அறிவு நமக்கு வந்த பின் நாம் தேடி புரிந்து கொண்டு பேர் வைத்திருக்கின்ற கடவுளைப்பற்றிய இந்த வாதம் ஒரு முற்றுப்பெறாத வாதமாகவே தான் இப்போதும் எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கின்றது.
கடவுள் இருப்பதாய் நம்புகிறவர்களும் கடவுள் இல்லை என்று நம்புகிறவர்களும் கடவுளை தேடாமலையே ஒரு தீர்மானத்தில் நிற்பதால். இந்த வாதம் காலத்திற்கும் முற்றுபெறாமலையே இருக்கிறது. கடவுளை நம்பி, பின் நம்பாமல் தேடிக் கடவுளை கண்டவர்கள், கடவுளை எப்படி அணுக வேண்டும் அடைய வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிவிட்டு தான் சென்றிருக்கிறார்கள். ஆனாலும், அந்த ஞானம் எல்லோரையும் சென்றடைவதில்லை. சென்றடைந்தாலும் எல்லோருக்கும் புரிவதில்லை. அதன் காரணமாகவே தான் அவற்றையெல்லாம் மறைபொருள் என்றார்கள்.
யார் உண்மை பொருளை தேடுகிறார்களோ? யார் தன்னை தூய்மை படுத்திகொண்டு பின் உண்மை பொருளை தேடுகிறார்கள் அவர்களுக்கு மட்டுமே தான் அந்த ஞானம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.
சிவனைப் பற்றி ஏதோ எழுதியிருக்கின்றாய் என்று படிக்கவந்தால் என்னடா புரியாதது போல் எதை எதையோ எழுதி வைத்திருக்கின்றாய் என்று திட்ட வேண்டாம். இதோ வந்துவிட்டேன்.
சிவன் கோவிலுக்களுக்கு சென்றதுண்டா? சிவன் கோவில்களுக்கு சென்றதில்லையென்றாலும் சில கோவில்கள்களின் பெயர்களை கேட்டு இருப்பீர்கள் தானே. தஞ்சை பெருவுடையார் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நெல்லை நெல்லையப்பர் கோவில். நிச்சயமாக கோவில் பக்கமே செல்லாதவர்களாக இருந்தாலும் கூட இந்த பெயர்களை கேட்டு இருப்பீர்கள்.
எல்லாமே சிவன் தானே! எதற்கு தனித்தனியாக இத்தனை பெயர்?இதற்கு முன்னால் இப்படி ஒரு கேள்வி உங்களுக்குள் எழுந்ததுண்டா? தஞ்சாவூர் சிவன் கோவில்; மதுரை சிவன் கோவில், நெல்லை சிவன் கோவில் இப்படி பெயர்கள் இருந்திருக்கலாம் தானே? அடையாளத்திற்காக வைத்திருப்பார்களோ?
ஒரு சிறிய கிராமம், அந்த ஊரில் ஒரு சிவன் கோவில் அந்த கோவிலுக்கு பெயர் திருமறை நாதர் கோவில். அந்த ஊரில் அது தான் பெரிய கோவில், அந்த ஊர் மக்கள் அதை பெரிய கோவில் என்றே சுட்டி வந்தார்கள். அடையாளத்திற்கு என்றால் இப்படியும் சொல்லலாம் தானே! நம் ஊரில்(இந்தியாவில்), எல்லா ஊர்களிலும் சிவன் கோவில்கள் தான் பெரிய கோவில்களாக இருந்தது இருக்கின்றது. தஞ்சை பெரிய கோவில் என்று சுட்டுகிற வழக்கமும் நான் சொன்ன கிராமத்தில் இருக்கும் கோவிலை அவ்வூர் மக்கள் பெரிய கோவில் என்று சொல்லும் வழக்கத்தை போல வந்தது தான்.
சிவனுக்கு என்று ஒரு உருவம் கொடுத்திருக்கின்றோம். உருவம் கொடுத்திருக்கோமா? ஆம்! அப்புறம் ஏன்? சிவனை சிவனாக இல்லாமல் இந்த சிவன் கோவில்களில் லிங்கமாக வைத்திருக்கின்றார்கள். ஒரு வேளை, இதெல்லாம் சிவன் என்று நாம் தான் நம்பிக்கொண்டிருக்கின்றோமா?
அவர்கள் யாருமே சிவன் இல்லை தான். தோற்றமே இல்லாதவர் தோன்றாதவர் அவர் தான் சிவன். தோன்றாதது எதுவோ அதுவே தான் அழியாதது. அழியாதது எதுவோ அதுவே தான் இறைவன், அவனே தான் பரசிவன்(பர- Top, above all). இப்படித்தான் சைவ தத்துவங்கள் சொல்கிறது.சனாதனம் என்று அறியப்படுகின்ற இந்து மதமும் சொல்கிறது.
எது தோன்றாதது? ஆற்றல்- அறிவு ஆன்மா-சிவன் -ப்ரம்மம்-Energy
அத்தனை வார்த்தைகளும் ஒரு பொருளைத் தான் குறிக்கிறது. விஞ்ஞானம் ஆற்றல்/energy என்கிறது. திருமூலர், அறிவு(சித்தம்-மனம்-அல்லது ஆன்மா) என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். பகவத் கீதை ஆத்மா என்கிற பதத்தை பயன்படுத்துகிறது.
இந்த பரசிவன்-பரப்ரம்மம்-பரமாத்தமா-the eternal energy, ஒரு வேலையும் செய்வதில்லை. என்னுடைய ஆசிரியர் சில மாணவர்களை திட்டும் பொழுது, “இப்படி பரப்ரம்மம் மாதிரி உக்காந்திருக்க” என்று சொல்லி திட்டுவார். பேச்சுவழக்கிலேயே ஒரு பெரிய ஞானம் நம் சமூகத்திற்குள் கடத்தப்பட்டு இருக்கின்றது.அப்படி கடத்தப்பட்டும் அதன் உண்மை பொருளை யாரும் உணர்ந்திருக்கவில்லை. திட்டிய ஆசிரியருக்கு தெரியுமோ தெரியாதோ! ஆனால், எனக்கும் திட்டு வாங்கிய சக மாணவனுக்கு அந்த வாக்கியத்திற்கு அன்று பொருள் தெரியாது.
அசைகளற்ற இறைவனுக்கு இப்படி ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும் என்கிற எந்த ஆசையும் இல்லை. அவர் அதை செய்யவும் இல்லை. It just happened. இறைவனில் இருந்து தோன்றிய ஆன்மாக்கள் ஜட இயற்கைக்குள் சிக்கிக்கொண்டது. இப்பொழுது இந்த இறைவன் என்ன செய்கிறார். நாம் இப்படியாக மாட்டிக்கொண்டுள்ளோம் என்று இரங்கி, நம்மை இதிலிருந்து விடுவிக்க பார்க்கிறார். எந்த ஆசையும் இல்லாதவர் இந்த ஆன்மாக்கள் எப்படியோ போகட்டும் என்று விடாமல், நம்மை இதிலிருந்து விடுவிக்க செய்வதால் தான் அவரை அருளுடையவர் என்கிறோம்.
சரி, நம்முடைய அறிவிற்கு எட்டும் படி ஞானிகள் அவர்கள் உணர்ந்து கொண்ட இறைவனைப் பற்றி இப்படி தான் சொல்லிவைத்து இருக்கின்றார்கள். இந்த சிவனைத் தான் நாம் வணங்கிறோமா?நிச்சயமாக இல்லை. அந்த சிவன்- பரமாத்தமா-பரப்ரம்மம் எப்படி இருப்பார் என்றே நமக்கு தெரியாது. நபிகள் போன்றதொரு ஞானி இறைவனுக்கு உருவமில்லை என்றதற்கு அதுவே தான் காரணமாக இருக்க முடியும்.
பகவத் கீதையில், “ஒருவர் வளரும் சூழல்களுக்கு ஏற்ப நம்பிக்கைகளை அவர்களுக்குள் நானே தான் உருவாக்குகிறேன். கடவுள் என்று எதையெல்லாம் தீர்க்கமாக ஒருவர் நம்புகின்றாரோ அவருக்கு அந்த நம்பிக்கைகளை நானே உருவாக்கி அந்த கடவுள்கள் மூலம் நானே அவரின் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறேன் என்கிறார்” இறைவன்.
உதாரணமாக, சிலர் ரமண மகரிஷியை வணங்குகிறார்கள், இன்று எல்லோருக்கும் பரீட்சயப்பட்ட சாய் பாபா, சிறு தெய்வம் வழிபாடுகள், இந்த நம்பிக்கைகள் எல்லாம் இறைவனாலேயே தான் ஏற்படுத்தப்பட்டு அந்த நம்பிக்கைகளின் விளைவாக நிறைவேற்றப்படும் வேண்டுதலுகளும் இறைவனாலேயே தான் நிறைவேற்றப்படுகிறது என்பது தான் அதன் அர்த்தம்.
தமிழில் தெய்வம் என்கிற வார்த்தைக்கும் இறைவன் என்கிற வார்த்தைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது.மனிதராய் பிறந்து வளர்ந்து தெய்வ நிலைக்கு உயர்ந்தவர்களை தெய்வமானவர்களை. கற்பில் தியாகம் வீரம் இவற்றில் தெய்வ நிலைக்கு உயர்ந்தவர்களை இவர்களைத்தான் தெய்வம் என்று வணங்குகிறோம்.
சரி! சிவன்-the ultimate god -eternal force /energy, never been created and cannot be destroyed.
இந்த சிவனைத்தான் சிவன் என்று வணங்குகிறோமா? ஆம்! அப்படியென்றால், தோன்றாத சிவன், பாண்டிய மன்னன் மகளை வந்து எப்படி மணம் புரிந்து இருப்பார்? தோன்றாத சிவன் எப்படி வந்து பிரவசம் பார்த்து தாயுமானவர் ஆகியிருப்பார்?தோன்றாத சிவன் எப்படி மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல திருவாசகம் எழுதியிருப்பார்? இப்படித் தோன்றாத சிவன், ஆங்காங்கே தோன்றி ஏன் அத்தனை திருவிளையாடல்கள் என்கிற பெயரில் புட்டு தின்னும் சேட்டை எல்லாம் செய்ய வேண்டும்?
இந்த இடம் தான் த்ரில்லிங் ஆன இடம் மனசை திடப்படுத்திக்கோங்க
திருவிளையாடல்கள் செய்யப்பட்டது எல்லாமே மனிதராக பிறந்தவர்களின் செயல்களாகவே தான் இருந்திருக்கும்.அப்படியென்றால், மனிதர்களாக பிறப்பெடுத்தவர்களின் பெயரால் தான் சிவாலயங்கள் இருக்கின்றதா?மனிதர்களால் எப்படி அற்புதங்கள் நிகழ்த்த முடியும்?
எல்லா சிவாலயங்களும் மனிதர்களாக பிறப்பெடுத்தவர்களின் பெயரால் எழுப்பட்ட்டதல்ல.சில சிவாலயங்கள் நடந்த சில தத்துவங்களின் விளக்கமாக எழுப்பப்பட்டது.
மனிதர்களாக பிறப்பெடுத்தவர்களால் அற்புதங்கள் நிகழ்த்தமுடியுமா என்றால் முடியும்! யோகம், பிராணாயாமம், தியானம் இவற்றின் மூலம் ஒருவருக்கு அஷ்டமாசித்திகளும் வசப்படும் என்கிறார் திருமூலர்.
கவனத்தை மூக்கின் நடுவில் நிறுத்தி தியானத்தில், நிலைப்பவர்கள் சிவனே தான் என்கிறார் திருமூலர். இதே தியானத்தை பற்றி பகவத் கீதையும் பேசுகிறது. யோகத்தில் பல நிலைகள் கடந்து தன்னையறிந்து தன்னுள்ளே கடவுளை கண்டவர்கள் சிவனாகவே ஆகிறார்கள். பரப்பிரம்மத்தில்- பரசிவனில்-பரமாத்மாவில் இருந்து தோன்றிய உயிர்கள் மீண்டும் அந்த தோற்றமும் அழிவும் இல்லாத ஆற்றலோடு இணைவதை நாம், “சிவ பதம் அடைந்தார்” என்றே தானே சுட்டுகிறோம்.
யோகத்தில், தியானத்தில்,நிலைபெற்று உடலோடு இறைவனை உணர்ந்து இறைவனோடு ஒன்றியவர்களை இறைவன் என்றே சுட்டலாம் தானே!
மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனுமவ னாமே.விளக்கம்:
இரண்டு கண்களையும் புருவ மத்தியிலுள்ள மூக்கின் நுனியில் வைத்து தியானம் செய்தால் உடலில் இருக்கும் சோர்வு நீங்கிவிடும். உடலுக்கு அழிவும் வராது. மனது ஒரு நிலையாக இருக்கும். உலக உணர்வு இருக்காது. தன்னை மறந்த நிலையில் உடல் இருக்கும். எதன் மீதும் நாட்டம் வராது. இந்த நிலையிலிருப்பவர்கள் சிவ நிலையில் இருப்பவர்களாவர்.
மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)
எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடும் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.விளக்கம்:
மலதுவாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலும் பிறப்புறுப்புக்கு இரண்டு அங்குலம் கீழும் உள்ள இடத்தில் இருக்கும் ஜோதியை (குண்டலினி சக்தி) உணர்ந்து தியானிக்க முடிந்தவர்களோடு உடலுக்கு உயிர் கொடுக்கும் இறைவன் கலந்து நிற்பான்.
இப்படி யோகா கலையை பயன்படுத்தி மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம், காலத்தை வெல்ல முடியும் என்கிறார் திருமூலர். இப்படி சிவனோடு சிவனாக கலந்தவர்களின் பெயரால் தான் சிவாலயங்கள் நிர்மாணிக்க பெற்றிருக்கும். தவத்தில் நிலைபெற்று கால பரிணாமத்தை கடந்த ஒருவரைப்பற்றியது தான் மார்க்கண்டேயர் கோவில். தமிழ் மட்டும் இல்லை அநேக மொழிகளில், வார்த்தைகளிலேயே அர்த்தங்கள் இருக்கும். காலன் என்கிற சொல், காலம் பற்றியது தான், உயிர் கடிகாரம் என்று ஒன்று இருக்கிறது, சரியாக இத்தனை நேரம் தூங்க வேண்டும் இந்த நேரத்திற்கு பசிக்க வேண்டும் இதெல்லாம் எப்படி நடக்கிறது? காலம் ஓடவில்லை என்றாலும் இது நடக்கும் தானே! ஓவ்வொரு உடலுக்கு ஒரு காலம் இருக்கும் தானே! அந்த time lapse தான் காலன் என்று அறியப்பட்டு இருக்கும்.
யோக ஞானத்தை கொண்டு அஷ்டமாசித்திகள் வசப்படுதலாம், காலத்தைவெல்லலாம்.இதையெல்லாம் செய்தவர்கள் எல்லோருமே சிவனாகவே தான் அறியப்பெற்று இருக்கின்றார்கள். அவர்கள் மட்டும் இல்லை இந்த ஞானங்களை உணர்ந்து உபதேசித்த குருமார்களையும் சிவனாகவே தான் இந்த உலகம் அறிந்துவைத்து இருக்கின்றது.அப்படி ஒரு குரு தான் மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியிருக்கிறார். அப்படியான சிவன்கள் தான் தவநிலையில் இருந்தார்கள்.
பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்தது
ஆசற்ற சற்குரு அம்பல மாமே.2விளக்கம்: ஆருயிர்களுக்குத் தொன்மையே ஏற்பட்ட மலத்தைப் போக்குதற்கு, மாயை வினைகளை உடன்கூட்டி அம் மலத்தைப் பறித்திட்டருள்வன். மலம் நீங்கவும் உயிர்கள் சார்புபற்றிப் பன்னெடுநாள் விருப்பம் வைத்திருந்த உடலின் விருப்பத்தை ஒழிப்பித்து, நேரடியாகத் தன் திருவடியிற் கூட்டிப் பெரும்பேறு நல்குதலால் அச் சிவம் பேரருள் நோக்கத்தையுடையது. அத்தகைய குற்றமகற்றிக் குணமருளும் உண்மைக் குரு அறிவுப் பெருவெளிச் சிவனேயாவன்.
பின் வந்த புத்த மதத்திலும் அதே தான் நடந்தது, புத்தா என்பதற்கு ஞானம் பெற்றவர் ஞானம் பெற்றவர்கள் எல்லாம் புத்தர்களாகவே தான் அறியப்பெற்றார்கள். அப்படியென்றால், புத்தர் சிலைகள் எல்லாம் தியான நிலையில் இருப்பது போல இந்த சிவாலயங்களில் சிவனை தவநிலையில் இல்லாமல், ஏன் லிங்க வடிவில் வைத்தார்கள். சஹஸ்ரஹாரத்தில் இருக்கும் இறைவனை, மூலாதாரத்தில் ஒளி வடிவில் இருக்கும் உயிர் இணைந்த நிலையை குறிப்பது தான் லிங்க வடிவம். (energy inside the body merging with eternal energy outside the body)
அந்த இணைவில் ஒன்று ஆண் கூறாகவும் மற்றொன்று பெண் கூறாகவும் சுட்டப்பெற்றது. வடிவில்லாத இறைவனுக்கு நாம், நாம் அறிந்து வைத்திருக்கும் ஞானத்தின்படி கொடுத்த குறியீடுகளில் ஒன்று தான் லிங்க வடிவம். (symbol of creation- symbol eternal bliss).நித்திய பேரின்பத்தின் குறியீடாக உவமைகளாக மனிதன் அறிவிற்கு எட்டிய சிற்றின்ப காதலே தான் நிற்கிறது.
இதில் இவ்வளவு விஷயம் இருக்கின்றதா? அப்படியென்றால், இந்த சிவாலயங்களில் குறிப்பாக சுவாமி சந்நிதியை சுற்றி வரும் பொழுது, இரண்டு மனைவிகளுடன் தென்படும் சூரியன்,வீணையை வைத்துக்கொண்டு ஒரு சரஸ்வதி, ஒரு குரு( தட்சிணாமூர்த்தி), துர்க்கை , ஒரு லிங்கோத்பவர். இதெல்லாம் என்ன?
லிங்கோத்பவர் பற்றி நாம் முன்னமே எழுதியிருக்கின்றோம், ஆரம்பமும் முடிவில்லாத இறைவனை; முடிவில்லாத இயற்கையை உணர்ந்தும் குறியீடு தான் லிங்கோத்பவர்.படைப்பின் ஆதாரமாக இருக்கும் ஆற்றலும் நிலைபெறுதலின் ஆதாரமாக இருக்கின்ற ஆற்றலும் தொடமுடியாத விஸ்தரித்துக்கொண்டே இருக்கும் இறைவனின் இயற்கையை பற்றிய குறியீடு அது.
லிங்கோத்பவர் பற்றி முன்னமே விரிவாக எழுதி இப்போது சுருக்கமாக விவரித்துவிட்டதால், நாம் இந்த சிவாலயங்களில் இருக்கும் சுவாமி சந்நிதியை சுற்றி வரலாம்.
சூரியன் நிச்சயமாக இருப்பார், சில கோவில்களில் மனைவிகள் என்கிற பெயரில் இரண்டு பேருடன் அல்லது சில கோவில்களில் தனியாகவும் இருப்பார், என் ஞாபகம் சரியாக இருந்தால், சுற்றி வர தொடங்கும் பொழுது முதலில் அவர் தான் இருப்பார்.சூரியனின் ஆற்றல் தான் எல்லா உயிருக்குமான ஆதார ஆற்றலாக இருக்கின்றது, சூரியன் இல்லாமல் மழையும் கூட எப்படி பெய்யும். தினமும் வானத்தில் காணும் சூரியனும் எதுக்கு தனியாக ஒரு உருவம் கூட ரெண்டு பேரு?
உருவமற்ற இயற்கையையும் இறைவனையும் ஒரு உருவமாக அவதானித்தக் கொள்வது தான் மனிதனின் சிற்றறிவிற்கு எளிதானாக இருக்கின்றது என்று பகவத் கீதையில் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் சொல்கிறார். நான் இங்கே எழுதிய அதே வார்தைகளால் அவர் அதை சொல்லவில்லை கொஞ்சம் வேறு மாதிரியாக சொல்லியிருக்கின்றார்.
ஓர் உன்னத நிலையை அடைவதற்கு முன் நம் மனம் பக்குவப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அதனால் தான், யோகம் பற்றி பேசுவதற்கு முன்னர் திருமந்திரத்தில் பக்தி அறம் ஒழுக்கம் எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பது பற்றியெல்லாம் திருமூலர் பேசுகிறார்.
உயிர்களின் தோற்றம் இயக்கம் என்று எல்லாவற்றிக்கும் ஆதாரமாக இருக்கின்ற சூரியனை வணங்கி, அவனுடன், உஷா பிரத்தியுஷா என்று அவன் மனைவிகளாக உருவகப்படுத்தப்பட்டிருப்பதும் சூரியனே தான். இருளை விலக்கும் சூரியனின் முதல் ஒளியை விடியலை உஷா என்றும், சூரியனின் தன்மையான மாலை நேர ஒளியை பிரத்தியுஷா என்றும் உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.
நமக்குள் இருக்கும் இருள் விலக வேண்டி, இருளை போக்கும் முதல் ஒளியை உஷா என்கிற கடவுளாக வைத்திருக்கிறார்கள்.
உண்மை ஞானத்தின் வடிவமாக தான் சரஸ்வதியை நிறுவியிருக்கிறார்கள். இந்த ஞானம் யாரிடம் இருந்து வரும் குருவிடம் இருந்து. To attain higher state of knowledge or wisdom , you have to think about wisdom/knowledge. How you think of wisdom or knowledge? அறிவையும் ஞானத்தையும் அறிவின் கடவுளாக உருவகப்படுத்தி, இப்போது நீங்கள் அந்த ஞானத்திடமே அறிவிடமே அறிவை வேண்டும் பொழுது என்ன நடக்கும்? Here comes the law of attraction.
தட்டுங்கள் கிடைக்கப்பெறும் கேளுங்கள் கொடுக்கப்படும்.இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஞானத்திடம் நீங்கள் ஞானம் வேண்டுகிறீர்கள். அந்த ஞானத்தை, நம் வினைகளுக்கு ஏற்ப நமக்குள் இருந்தே தான் இறைவன் ஊறச் செய்வார்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
என்ன படித்தாலும், என்ன கற்றாலும், நல்ல ஊழ் இல்லாதவர்களுக்கு, நல்ல வினைகளை செய்யாதவர்களுக்கு ஞானம் எட்டாது.
நமக்குள் இருந்து தான் அந்த ஞானம் ஊறும், அதுவும் வினைகளுக்கு ஏற்பவே தான் ஊறும், இங்கே குருவின் வேலை என்ன? ஞானத்தை தேடிச் செல்லும் பொழுது நம்மை தடுமாற்றங்களில் இருந்து விடுவித்து அந்த வழியில் நிலைபெறச் செய்வது தான் குருவின் வேலை.
அப்புறம் இந்த துர்க்கை? இதை நான் வந்து உங்ககிட்ட எப்படி சொல்வேன்!
கெட்ட விஷயங்களை ஒடுக்கும் நல்ல சக்தியின் உருவகம் தான் துர்கை.
ஒரு சிவன் கோவில், அதில் ஒரு லிங்கம், அதைச் சுற்றி அத்தனை உருவங்கள், அதற்குள் அத்தனை தத்துவங்கள்; இதையெல்லாம் சுற்றி உயிர்களின் ஆதாரமான ஒளி,இருளை விலக்கும் ஒளி, ஞானம், குரு, தீய விஷயங்களை ஒடுக்கும் நல்ல சக்தி,இவைகளின் துணைக்கொண்டு; உங்களை நீங்கள் அறிந்து, உங்களுக்குள் நீங்கள் ஒன்றும் பொழுது நீங்களும் சிவனும் கூட ஒன்றாகலாம்.
சிவனோடு ஒன்றி சிவனாகவே ஆனாலும் சிவன் ஒருவன் தானே! அதான், எல்லா சிவனும் சிவனல்ல, ஆனால், எல்லாமும் இங்கே சிவன் தான். All the energy or life form or any existence is the projection of eternal energy or bhraman or siva.
அப்ப கோவிலுக்கு போய் சரஸ்வதிகிட்ட பாஸ் ஆகணும் வேண்டிகிட்டா நடக்காதா?அதுவும் நடக்கும் உங்கள் நம்பிக்கையும் முயற்சியும் எந்த அளவு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவில் நடக்கும்.
இந்த உலகில் உயிர்கள் வாழ என்ன தேவையோ அதை வேண்டினாலும் இறைவன் கொடுப்பார் என்கிறார் இறைவன். சோ, நீங்கள் என்ன பண்றீங்க? அண்ணனுக்கு ஒரு பத்து இருபது கோடி பரிசு கிடைக்கணும்ன்னு வேண்டிக்கோங்க. எனக்கு அண்ணன் இல்லைன்னு வராதீங்க அண்ணன்ன்னு என்னை சொன்னேன்