நாம் ஏன் அரசியல் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்று சமயங்களில் ஒரு சோர்வு ஒட்டிக்கொள்வதுண்டு, இங்கு என்ன மாறிவிடும்? என்கிற சலிப்பு ஏற்படுவதுண்டு. ஆனாலும், நடக்கும் நிகழ்வுகளே என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது, ஒரு வாக்காளனாக அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற சாமானியனாக நான் வேண்டும் மாற்றத்திற்காக நான் ஏதேனும் செய்து கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணம் என்னை எழுதச் சொல்லிக்கொண்டிருக்கிறது. காலம் தேவையற்ற எந்த வேலையையும் செய்வதில்லை. என்னைக் கொண்டு இந்த அரசியலை விமர்சித்துக் காலம் எழுதிக்கொண்டிருப்பதற்கும் காரணம் இல்லாமல் இருக்காது.
அதோடு, நான் எதிர்பார்க்கிற ஒரு அரசியல் மாற்றம் என் காலத்திலேயே மிக விரைவாக நடக்க வேண்டும் என்கிற என் பெருங்கனவு நிகழ்ந்தேறுகிறவரை நான் எழுதிக்கொண்டுதான் இருக்கப் போகிறேன்.
அதுதான் மாற்றம் வந்துவிட்டதே விஜய் வென்றுவிட்டாரே! என்கிற எண்ணம் இங்கே பலருக்கு இருக்கலாம். இது நாம் எதிர்பார்த்த மாற்றம் கிடையாது. 2017-இல் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்வதற்கு முன்னதாக நாம் விஜய்யிடம் ரஜினியிடம் கொண்டு வரச் சொல்லிக் கேட்ட மாற்றம். ரஜினியும் விஜய்யும் உறுதி அளித்த மாற்றம், அரசியல் சாமானியர்களுக்கான களமாக இல்லை, சாமானியர்கள் தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு என் செல்வாக்கு பயன்படட்டும் என்ற ரஜினிகாந்த் பெருந்தொற்று காரணமாக விலகிக்கொண்டார். அது இன்னமும் பெரிய ஒரு ஏமாற்றம் தான்.
ஏன் கெட்டது சாதாரணமாக நிகழ்வது போல ஒரு நல்லது நிகழ்வதில்லை. ஒரு நல்லது நடக்க ஏன் பகீரத பிரயத்தனங்கள் தேவைப்படுகிறது? கெட்டவர்கள் மட்டும் எப்படி ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற கேள்விகள் என்னுள் உறுத்திக்கொண்டே இருந்தது. ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவு ஒன்றில் இதற்கு அவர் பதில் சொல்கிறார், என் மனதில் ஒரு கேள்வி எழுந்து எதார்த்தமாக அவர் அதற்குப் பதில் சொல்லியிருக்கும் ஒரு பதிவை எப்படிக் காலம் எனக்குக் காட்டியது என்று ஒரே வியப்பு.
அவர் சொல்கிறார், “கெட்டவனுக்குக் கெட்டதைச் செய்வதில் இருக்கும் உறுதி நல்லவனுக்கு நல்லதைச் செய்வதில் இருப்பதில்லை” அதைக் கேட்டதும், எனக்குச் சரி தான், இதே தான் வந்தால் யாரும் பாதிக்கப்படுவார்களா நம்மால் யாரும் பாதிக்கப்பட்டால் என்ன ஆவது என்று சிந்தித்துக்கொண்டே இருந்தால் ஒரு நன்மையையும் நடக்காது, அப்படித் தான் சாமானியர்களை அரசியலுக்குக் கொண்டு வருகிறேன் என்று ரஜினி அரசியலுக்கு வராமல் போனதும்.
சரி! ரஜினி வரவில்லை, விஜய் என்ன சொன்னார்? மருத்துவர் ஆக வேண்டும், பொறியாளர் ஆக வேண்டும் என்பது போல் அரசியலையும் ஒரு தொழிலாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தை நாம் கொண்டு வருவோம் என்றார். செய்தாரா? நடந்ததா? இன்று இதுவரை இல்லை. ஆனால், இதெல்லாம் உடனே எப்படி நடக்கும்? என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டாலும் விஜய் எதிர்காலத்தில் அதைச் செய்வார் என்பதற்கான சமிக்கைகளைக் கூடக் காட்டவில்லை.
சரி! சாமானியர்களை அரசியலுக்கு வரும் சூழலை ஏற்படுத்துவேன் என்றார், இதுவரை செய்யவில்லை. அவரின் ஓட்டுநரின் பையனுக்கு சீட் கொடுத்த கதையெல்லாம் சாமானியர் கணக்கில் வராது. விஜய்யின் அந்த ஓட்டுநர் விஜய் மற்றும் சங்கீதா பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் அவரும் பங்குதாரராக இருக்கிறார்.
சாமானியர்களைத் தேர்தல் அரசியலுக்கு வருவது இப்போதைக்கு சாத்தியமில்லை. மற்றபடி எல்லாம் சரியாக இருக்கிறதா என்றால், எல்லாம் சிரிப்பாக இருக்கிறது. முதல்வர் விஜய் கரூரில் பேசிய காணொளியைப் பார்த்தேன், சிறுவயதில் சிம்பு வெளிப்படுத்தும் அதீத நடிப்பாற்றல் தான் நினைவிற்கு வந்தது, விஜய் எப்போதும் ஒரு ரூபாய்க்கு பத்து ரூபாய் அளவில் நடிக்கிறவர் இல்லை, ஆனால், கரூர் பேச்சில் அவரின் உடல் மொழி காசே வாங்காமல் பத்து ரூபாய்க்கு நடித்த சிறு வயது சிம்புவைத்தான் நினைவுப்படுத்தியது.
என்ன நடந்திருக்கிறது? முதல்வராக அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார். அவர் கட்சி எப்படி சாமானியர்களைத் தேர்தல் அரசியலுக்குக் கொண்டு வரும் வேலையைச் செய்யும் இப்படியெல்லாம் விஜய் பேசியிருக்க வேண்டும். ஆனால், பொய்களைப் பேசிக்கொண்டிருந்தார். ஆம்! பொய்களைத் தான் பேசிக்கொண்டிருந்தார்.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப்பணி ஆணையைக் கொடுக்கும் நிகழ்வை நடத்திக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் சொல்லியிருந்தாலும், அவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க நீதிமன்றம் குறுக்கே நின்றுகொண்டிருக்கிறது. இது சட்டபூர்வமாக செல்லுபடியாகுமாக என்கிற வாத பிரதிவாதங்கள் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.இதில் ஒரு தெளிவு கிடைக்காமல் அவர்களுக்கு இந்த அரசுப் பணி கிடைக்கப்போவதில்லை. சட்டத் தெளிவு இல்லாத முதல்வரின் சுயாதீனமான முடிவு இது. இந்தக் குழப்பங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களை மேலும் மனரீதியாகப் பாதிப்பு அடையச் செய்யும் என்று நாம் நிலைகொண்டிருப்போம், அவர்களோ விஜய் கொடுத்த வேலையை திமுகவும் பாஜகவும் சேர்ந்து புடுங்கிக்கொள்ள வழி செய்து விட்டது என்று நினைப்பார்கள். இவர்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பதே ஒரு தவறான முடிவுதான். அது பல்வேறு எதிர்வினைகளைக் கொண்டு வந்திருக்கிறது மீண்டும் கொண்டு வரும்.
அடுத்து அவர் பேசியதில், கட்சி நிதி என்கிற வார்த்தையைச் சொன்னதும் திமுககாரர்கள் ஓடிவிட்டார்கள் என்றார். நேரலையைக் கண்டவர்களுக்குத் தெரியும், கட்சி நிதி என்றதும் ஒரு சலசலப்பு ஏற்பட்டது எந்தக் கட்சி என்றே சொல்லவில்லை எதற்குப் பதற்றம் என்கிற கேள்வி வருகிறது, உதயநிதி எழுந்து, “ஏன் சொல்லுங்கள் எந்தக் கட்சியென்று எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
உதயநிதியின் அந்த உறுதி, ஐயா இலங்கை ஜெயராஜ் சொன்ன கருத்தைத்தான் நிறுவுகிறது. கெட்டவனுக்குக் கெட்டதைச் செய்வதில் ஒரு அதீத உறுதி இருக்கிறது. என்ன வழக்கு போட்டாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்கிற மமதையில் அவர் அப்படிப் பேசினார்.” மாட்டிக்கொள்ளாமல் மக்கள் பணத்தை எடுத்துக்கொள்வதில் முன்னோடிகள் அவர்கள் என்பது யாருக்கும் தெரியாததா?
உதயநிதி அப்படிச் சொன்னதற்கு வீர வசனங்கள் பேசும் ஒருவர் கூட ஆண்ட கட்சிகளான திமுகவையும் அதிமுகவையும் தான் குறிப்பிடுகிறோம் சாட்சியங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னதாகத் தெரியவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் கரூரில் பேசிய முதல்வர் திமுக வெளிநடப்பு செய்வதற்கும் முன் உதயநிதி என்ன சொன்னார் அதற்கு முதல்வர் என்ன பதில் கொடுத்தார் என்று பேசியிருப்பார்.ஆனால், அப்படி பேசாமல் சினிமாத்தனமான ஒரு பொய்யை அங்கே பேசும் பொழுது,இவர்கள் பொய்களை தான் பேசுவார்கள் இதற்கு திமுக பரவாயில்லை என்கிற எண்ணம் இங்கே விதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் அம்மையார் ஜெயலலிதா நினைவிற்கு வருகிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் மீதான குற்றச்சாட்டுகளை நேருக்கு நேராக முன்வைக்க முடிந்த ஒரு முதல்வர் அவர்தான். ஒரேயொரு முதல்வரும் அவர் தானோ என்று தோன்றுகிறது.
கரூரில் என்னை இப்படிச் செய்தார்கள் அப்படிச் செய்தார்கள் என்று பேசிய முதல்வர் காவல்துறையையும் குறை சொன்னார். சரி இப்பொழுது முதல்வர் அவர் தானே! சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இன்னின்ன நடவடிக்கை எடுத்திருக்கிறேன்; சிலரை நேரில் அழைத்து கண்டித்திருக்கிறேன், வழக்கை சிபிஐ விசாரித்துக்கொண்டிருப்பதால் மேற்கொண்டு நாம் இதில் தலையிடவில்லை என்று பேசினாரா? இல்லை. தான் முதல்வர் என்பதையும் மறந்து தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குறையை இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார். சரி செய்ய அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைப் பேசியிருக்கலாம்.
குழந்தைகளின் இழப்பு அவர் மனதை வாட்டியது நானே சோகத்தில் த்ரிஷாவுடன் திருமண நிகழ்வுகளுக்குச் செல்வதும், கோட் இசை வெளியீட்டு விழாவில் ஆடுவதுமாக இருந்தேன் இப்படி சோகத்தில் இருந்த என்னை எப்படியெல்லாம் விமர்சிக்கிறார்கள் என்று அழுதுகொண்டிருந்தார் (கண்களைக் கசக்கிக் கொண்டிருந்ததைச் சொன்னோம்).
ஒரு ஊரில் ஒரு சிறுவன் என்ன செய்வானாம்; எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டிவிட்டு ஓடுவது; பிறர் வீட்டுப் பிள்ளைகளை வம்பு செய்வது என்று இருப்பானாம் எல்லோரும் சேர்ந்து வந்து அவன் மீது புகார் வாசித்தால், நானே பாவம் என்னை எல்லோரும் சேர்ந்து வசைபாடுகிறீர்கள் என்பானாம் அப்படியான ஒரு முதல்வரை நாம் பெற்று இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. அவரின் சிறு குறு வட்டங்களை விட்டு எல்லாப் பக்கமும் மோசமான விமர்சனங்கள்; பொய்யான கருத்துக்களைப் பரப்பிவிட்டு; விஜய்யை ஏக ரட்சகனாகக் கட்டமைத்துவிட்டு அதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றினால், ஐயோ கொல்றாங்க என்று திமுக தலைவர் போல அரசியல் அனுதாபம் தேடுகிறார். என்ன விஜய்யை இப்படிச் சொல்றீங்க? ஆம், பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களை மேடையேற்றிப் பார் நான் அவர்களுக்கு அரசு வேலை கொடுக்கிறேன் என்னையே இப்படிப் பேசுகிறார்கள் என்று அழுவதற்குப் பெயர் அது தானே!
இவர்களுக்கு அரசு வேலை கொடுப்பது என்கிற முடிவே தவறு என்கிற பொழுது அதை மேடையேற்றி அரசியலாக்குவதை என்னவென்று சொல்வது? இந்தப் பணி நியமன ஆணையை நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது.
திமுகவை ஒழித்துக்கட்டுவோம், குழந்தைகளின் இழப்பு என்னைப் பிசைகிறது என்று திமுகவை ஏகத்துக்கும் சாடிய வேட்டைக்காரன், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து ஒரு முதல்வராக ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தாரா? இல்லை.
அமோனியா வாயுக் கசிவு போன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பற்றிப் பேசினாரா இல்லை. உங்களிடம் ஏதோ வசீகரம் இருக்கிறது, நீங்கள் பேசினால் எல்லோரும் கவனிக்கிறார்கள் எது பேசினாலும் நம்புகிறார்கள் என்கிற பொழுது, நடக்கின்ற பிரச்சனைகளைப் பற்றியும் அதை உங்களின் அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பது பற்றியும் தானே பேசியிருக்க வேண்டும்.
இப்படி இந்த முதல்வர் விஜய் மீது நமக்கு இரண்டாயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர் பதவியேற்ற பொழுது அவர் பேசிய விஷயத்தை மீண்டும் பேசியதற்காக நிச்சயமாக நான் பாராட்டுகிறேன். யாரும் லஞ்சம் கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள் என்கிறார். திமுக அதிமுக போன்ற கட்சிகளின் தலைவர்கள் யாரும் இதைப் பேசியிருந்தால் நிச்சயமாகச் சிரித்திருப்போம்.
இங்கே முதல்வரும் அவரின் அமைச்சர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வெளிப் பகட்டிற்காகச் செய்யப்படும் வெற்று ஆய்வுகள் எந்தத் தீர்வுகளையும் தரப்போவதில்லை. சிங்கப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் வேறு பெயரில் ஏற்கனவே இருந்த திட்டங்கள் தான். அரசுப் பள்ளிக்குள் சென்று கேள்வி கேட்டு ஆசிரியர் பதற்றம் அடையச் செய்வதால் ஓரிரு ஆணைகளால் எல்லாம் மாறிவிடாது. இங்கே சிஸ்டத்தை மாற்ற வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். கரூர் சம்பவத்தை இன்னமும் சொல்லி அரசியல் ஆதாயம் தேடும் நீங்கள் இப்படி கூட்டங்களை எப்படி மேலாண்மை செய்ய வேண்டும் என்பதற்கு எதுவும் நெறிமுறைகளை வகுத்துக் கொண்டிருக்கிறீர்களா? இனி கரூர் சம்பவம் மாதிரி ஒரு சம்பவம் எங்கும் எந்தக் கூட்டத்திலும் நடக்காத அளவு கூட்ட மேலாண்மைக்கான நெறிமுறைகளை நம் அரசு வகுத்துக்கொண்டிருக்கிறது என்று நீங்கள் பேசியிருந்தால், விசில் அடிக்க கற்றுக்கொண்டு நானும் விசிலடித்திருப்பேன். ஆனால், திமுகவை பழி சொன்னதோடு திருப்தி கொண்டுவிட்டீர்கள். லஞ்சத்தை ஒழிக்கத்தான் மத்திய அரசு நேரடியாக மக்கள் கணக்கில் வரவு வைக்கும் படி ஒரு சிஸ்டம் கொண்டு வந்தது ஆனால், நீ லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்றிருந்தார்கள் மாநில அரசின் அதிகாரிகள். பயோமெட்ரிக்ஸ் முறை கொண்டுவந்தும் லஞ்சம் வாங்க வழிகளைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
லஞ்சத்தை ஒழிக்கும் விஷயத்தில் நீங்களோ மேடையில் நின்றுகொண்டு என்னைத் தாண்டி நீ கீர்த்தி சுரேஷைத் தொடுடா என்று பைரவா படம் போல் பேசுகிறீர்கள். லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமென்றால் லஞ்சம் வாங்குகிறவர்களின் ஈடுபாட்டை நாம் குறைக்க வேண்டும். நான் ஒரு அதிகாரியிடம் சென்று நிற்க வேண்டிய தேவையே இல்லாமல் நான் கேட்கும் சான்றிதழ்கள் என்னை வந்து சேரும் என்கிற நிலை இருக்க வேண்டும்.
இணைய சேவை மையங்கள் சரியாக இயங்குகிறதா என்று மாவட்ட அதிகாரிகளை ஆய்வு செய்யச் சொன்னதாக ஒரு செய்தி பார்த்தேன். முதலில் சர்வர் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள். எல்லோரும் தனித்தனியே ஆய்வுகள் செய்ய வேண்டியதில்லை. சில பிரச்சனைகளில் இருக்கின்ற குறை எல்லாம் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்காமலேயே தெரிய வல்லது. அதையெல்லாம் சரி செய்ய வழிகளைக் கண்டறியுங்கள்.
அப்புறம் இந்தச் சாமானியர்கள் அரசியலையும் ஒரு career ஆகத் தேர்ந்தெடுக்கும் நிலையைக் கொண்டுவருவேன் என்றீர்களே அது எப்போது திமுககாரர்களை உங்கள் கட்சியில் இணைத்துக்கொண்ட பிறகா?
வெறும் சினிமா வசனங்களும், அனுதாபம் தேடும் நாடகங்களும் சாமானியர்களின் அரசியலாக மாறாது. வெளிப்படையான நிர்வாகமும், உறுதியான கட்டமைப்பு மாற்றங்களுமே (Systemic changes) உண்மையான மாற்று அரசியலுக்கான தொடக்கம். அதை விஜய் என்று உணரப் போகிறார்?
சரி, அப்படி மாற்றத்தை கொண்டு வரத்தான் அண்ணாமலை இருக்கிறாரே என்று ஒரு கூட்டம் வரலாம்.
அண்ணாமலையின் ஆளுமை மீது நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் பாஜககாரராக நமக்குத் தெரிவதற்கு முன்னமே அவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர் தான். சாதாரணமானவராக இருந்து அவர் இந்த இயக்கத்தைத் தொடங்கவில்லை, அவருக்கு ஒரு ஆளும் தேசியக் கட்சியின் துணை இருந்தது. பணமும் பலமும் அரசியலுக்குத் தேவை என்பதை நாம் மறுக்கவில்லை, ஆனால், அதையெல்லாம் வைத்திருக்கும் ஒரு அரசியல் தலைவனும் கட்சியும் என்றைக்குத் தொடர்ச்சியாகச் சாமானியர்களை அரசியலுக்குக் கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறதோ அது தான் உண்மையான மாற்றம். ஆனால், அண்ணாமலை, எலைட்கான அரசியல் வகுப்புகள் எடுக்க இருக்கிறார். அது மட்டும் இல்லாமல், அப்படி உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கட்சி சரியான கொள்கைகளால் பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். தனி நபரை முகமாகக் கொண்டு தொடங்கலாம் ஆனால், அப்படியே இருந்துவிடக் கூடாது. அண்ணாமலை பின் செல்லுகிறவர்கள் சாமானியர் ஒருவரை அண்ணாமலை தலைவர் என்று கைகாட்டினால் ஏற்பார்களா? என்பது சந்தேகம் தான்.இன்று அதிமுக கலைந்து போக காரணம் வசீகரத் தலைமை இல்லை என்பது தான் . திமுக இன்னமும் இருப்பதற்கு காரணம் வாரிசு அரசியல்(ஒரு முகம்), நாளைக்கே ஸ்டாலினும் உதயநிதியும் அரசியலில் இருந்து விலகிக்கொண்டால் திமுகவும் உடைந்து போகும். நல்லதோ கெட்டதோ சமூகம் முகங்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பம் அப்படித்தான் இருக்க முடியும்என்கிற எதார்த்தத்தை நாம் மறுக்கவில்லை. ஆனால், பயணம் அப்படியே இருந்துவிடக் கூடாது.
சரியான ஒரு அரசியல் மாற்றம் நிகழும் வரை அண்ணாமலையாக இருந்தாலும் விஜய்யாக இருந்தாலும் ரஜினியே வந்தாலும் பிழைகள் விமர்சிக்கப்படும்.பிழைகள் விமர்சிக்கப்படும் பெயர்களை விமர்சிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்காதீர்கள்.