நிலா!

 

நிலா!

 

சொல்லும் பொழுதும் எழுதும் பொழுதும் எத்தனை அழகான உணர்வை தருகிறது. சின்னதான ஒரு சாளரம்; அந்த சாளரம் நிறைய நிலவு மட்டுமே தெரியும் ஒரு இரவு இன்னும் எத்தனை அழகாக இருக்கும்!

 

பௌர்ணமிக்கு இன்னும் ஒரு நாள் இருந்தது. ஆனால், பௌர்ணமியோடு வரும் விசாகம் ஒரு நாள் முன்னமே வந்திருந்தது.விசாகம் மட்டும் முன்னதாக வரவில்லை அன்று  ஷாராவின் குட் மார்னிங் மெசேஜும் முன்னதாக வந்திருந்தது. எப்போதும் அவர்களுக்கு இடையிலான பேச்சு, வீராவிடம் இருந்தே தான் தொடங்கும் அரிதிலும் அரிதாகவே ஷாரா பேச்சை தொடங்குவாள்.அவர்களுக்கு இடையிலான இந்த உரையாடல்களும் கூட நிலவை போன்றது தான் தேயும் வளரும்.இல்லாமல் போனாலும் மீண்டும் வளரும்.

 

வருடம் 2023.

 

ஷாரா  வீராவுக்கு  “Good morning” என்று வாட்சப் இல் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தாள். அவன் எந்த குறுஞ்செய்திகளும் அனுப்பாமல், அவளாக அவனுக்கு அவள் ஒரு குட் மார்னிங் மெசேஜ் அனுப்புவது; இருபது வருடத்தில் இது தான் இரண்டவாது முறை. அந்த  ‘குட் மார்னிங்’ வந்த அந்த மத்தியான நேரத்திலேயே பௌர்ணமியும் வந்துவிட்டது.   வீரா, தற்போது பிலிப்பைன்ஸில் இருக்கின்றான், அங்கே சூரியன் உச்சி வானத்தை தொட்டு கொண்டு இருந்தான். எப்போதும் அந்த நேரத்தில் தான் அவன் ஷாராவிற்கு “குட் மார்னிங்” அனுப்புவான், அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த இரண்டு மணி நேர இடைவெளி தான் அவன் நேரம் சென்று அனுப்பும் ‘குட் மார்னிங்’ களுக்கு காரணமாக இருந்தது. என்றுமில்லாமல் அன்று அவளிடம் இருந்து வந்த குட் மார்னிங்கை  இருபது நிமிடம் கழித்தே  கவனித்த  வீராவின் முகம் அந்த நொடியே பௌர்ணமி நிலவை போல பிரகாசமானது. வேலை சம்பந்தமான விசாரிப்புகளை தொடங்க வந்த குட் மார்னிங்  அது. இறைவனே இறங்கி வந்து வரம் கேட்டது போல் இருந்தது வீராவிற்கு. அவள், அவனிடம் எதையுமே கேட்டதில்லை. பேசியதே குறைவு என்கிற பொழுது, என்ன கேட்டிருக்க  முடியும்! அவளுக்கு தெரிந்த ஒருவருக்கு வேலை தேடித்தர கேட்டும் அந்த அவர் வேலையில் மேம்பட மேலும் என்ன படிக்கலாம் என்று கேட்டும் ஆரம்பித்த உரையாடல் அது.

இறைவனே இறங்கி வந்து வரம் கேட்கும் சந்தர்ப்பங்களில் நாம் நிச்சயம் திக்குமுக்காடிப்போவோம்.அந்த சந்தர்ப்பத்தில், கொடுத்தே தீர வேண்டும் என்கிற எண்ணமும் கொடுக்க முடியாமல் போய் விடக் கூடாது என்கிற பயமும் நம்மை தொற்றிக்கொள்ளும். வீராவும் அப்படியான மனநிலையில் தான் இருந்தான்.

 

அவனுடைய மனதை அவன் எப்போதும் அவளிடம் நேரடியாக வெளிக்காட்டிக்கொண்டதே இல்லை. ஆனால் அதே சமயத்தில் , அவன் மனதில் எந்த ரகசியமும் ரகசியமாய் இருந்ததில்லை. அது எப்போதும் கவிதைகளாய் ஜனனமெடுக்கும். பிறக்கும் அந்த கவிதைகளை  வாசிக்கும் எல்லோரையும் போல், அவளும் கூட அவள் கருவிழிகளில் அந்த கவிதைகளை கொண்டு தாலாட்டுவாள் என்கிற நம்பிக்கை அவனுக்கு. உத்தேசமாக அவள் வாசிப்பாளா என்பது கூட தெரியாது என்றாலும் அவள் வாசிப்பதற்கெனவே அவன் எழுதும் கவிதைகள் போல் ஒன்றை அன்றும் எழுதினான்.

 

“மகிழச்சியெல்லாம் தரும் இறைவன்

தானே இறங்கி வந்து

வரம் ஒன்று கேட்டார்.

நிற்க கொள்ளாமல்

பறக்க போதாமல்

சுற்றியும் தேடிவிட்டு

மன்றாடினேன் அவரிடம்

“நீ கேட்கும் வரமொன்றை

இல்லை! இல்லை!

நீ கேட்கும் வரமெல்லாம்

இல்லை என இல்லாமல்

நான் கொடுக்கும்படியாய்

வரம் கொட்டிக் கொடு” என்று

சிரித்தான் இறைவன்

என் உள்ளும் புறமும் நின்று.”

 

எப்போதும் போல் கவிதையோடு அவன் நிறுத்திக்கொள்ளவில்லை. “நீங்க கேட்டதுக்காகவே, நான் அதிகம் முயற்சி பண்ணுவேன்” என்று அவள் கேட்பதை செய்வது, அவனுக்கு எத்தனை முக்கியம் என்பதை சொல்லாமல் சொன்னான்.

 

விவரங்களை குறுஞ்செய்திகளில் பேசிக்கொண்டு இருக்க முடியாது என்று அவன், “பேசலாமா?” என்று அவளைக்  கேட்டு மெசேஜ் அனுப்பியிருந்தான்.

 

அவன் அவளிடம் பேசலாமா என்று கேட்ட பொழுதே, “உன் mail id  என்ன?” என்று கேட்டு  அவள் மெசேஜ் அனுப்பியிருந்தாள். அதோடு “call” என்றும் மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

 

அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்பதற்காகவே அவன் தொடர்பு எண்ணை அத்தனை வருடங்களும் மாற்றிக்கொள்ளாமல் வைத்திருந்தான் வீரா மனதில் “அவளே கூட அழைத்திருக்கலாமே!” என்று தோன்றியது.

 

அவளிடம் பேசப்  போகிறோம் என்பதிலேயே அவன்  எல்லாம் மறந்திருந்தான். அவள் என்ன கேட்டாளோ அதை விடுத்து என்ன பேசினாலும், அவள் ஏதேனும் தவறாக நினைத்துக்கொள்வாள்  என்கிற எண்ணங்கள் அவனுள் தயக்கத்தை உருவாக்கியிருந்தது..

 

 

‘ரிங்…..’ ‘ரிங்……’ ஓசை முடிந்து அவள் குரல் கேட்பதற்குள்ளாகவே அவன் ஆரம்பித்தான். அவன், அங்கே ஹலோ சொல்லவும் இல்லை; அவள், ஹலோ சொல்லவதற்கு இடம் கொடுக்கவும் இல்லை. “அப்பறம்! எல்லாம் எப்படி இருக்கீங்க?” என்கிற விசாரிப்புகளும் அங்கு இல்லை.

 

அவள் அதிகம் பேசுவதற்கும் அவன் இடம் தரவில்லை.குழந்தைகள் எப்படி பெரியவர்களிடம் பேசும் பொழுது அவர்கள் கவனிக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டு பேசிக்கொண்டே இருக்குமோ?  அது போலவே தான் அவன்  அவளிடம் பேசும் தருணங்களெல்லாம் ஒரு குழந்தை போல ஆகிவிடுவான்.

 

வேலை சம்பந்தமாக மட்டுமே அவர்களின் அந்த உரையாடல் நடந்துகொண்டிருந்தது.

“என் mail id!…..(அழுத்தமாக)

உங்க email search box ல என் பேர் அடிச்சாலே வந்திருக்கும்!

என் மெயில் id கூட ஞாபகம் இல்லை!” என்று அவன் கொஞ்சம் இழுத்த பொழுது, அவள் சிரித்தது அவன் காதுகளில் ஒலித்தது.

 

“என் மெயில் id கூட ஞாபகம் இல்லை!” என்று அவன் இழுத்த தொனியில் கோபம் இருந்ததாக தெரியவில்லை.அதை ஏமாற்றம் என்றும் வரையறுத்து விட முடியாது. அது என்ன மாதிரியான உணர்வு என்பது ஷாராவிற்கு புரிந்துவிட்ட படியால் கொஞ்சம் சிரித்துவிட்டு,

“எல்லாம் எப்படி இருக்காங்க” என்கிற விசாரிப்புகளுக்குள் பேச்சை செலுத்தினாள்.

 

“”ம்ம்…. நல்லா இருக்காங்க”  இதை சொல்லும் பொழுதும் கூட வீராவின் கவனம் அந்த பேச்சில் இல்லை. அவளுக்கு நம்முடைய மின்னஞ்சல் முகவரியும் கூட நினைவில் இல்லை என்கிற எண்ணத்திலேயே அவன் மூழ்கியிருந்தான்.ஆனாலும் அந்த பேச்சின் இடையில் அவள் சிரித்ததை அவன் மறக்கப்போவதில்லை. அவள் நலம் விசாரித்ததையும் மறக்கப்போவதில்லை.”

 

 

அவர்களின் அந்த உரையாடல் முடிந்தவுடன், அவன் அவனுடைய இரண்டு மின்னஞ்சல் முகவரிகளையும் அவளுக்கு அனுப்பிவைத்து விட்டு, வேகமாக அவனுடைய, mail box ஐ திறந்தான்,2011 இல் அவள் அவனிடம் பேசுவதை நிறுத்திக்கொண்ட பொழுது அவளுக்கு அவன் அனுப்பிய முதல் மின்னஞ்சல் பத்திரமாக இருந்தது.

 

அதை அவன் பார்த்துக்கொண்டு  இருந்தபொழுது,”மெயில் அனுப்பிட்டேன் செக் பண்ணு” என்று அவள் மெசேஜ்  அனுப்பியிருந்தாள்.பத்திரமாக வந்து சேர்ந்தது என்று வீரா பதிலனுப்பினான். அந்த மின்னஞ்சலும் கூட இனி அவனிடம் பத்திரமாக இருக்கும்.

 

2019 வரை அவளுக்கு அவன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தான்.

 

அங்கிருந்து வீராவின் எண்ணங்கள் பின்னோக்கி சுழன்றது.

 

வருடம் 2011.

 

விமலும் வீராவும் வகுப்பில் இருந்த எல்லோருக்கும் சேர்த்து ஒரு புத்தகத்தை பிரதி எடுத்துக்கொள்வதற்காக வெளியில் வந்து இருந்தார்கள்.  பள்ளிக்காலத்தில் இருந்தே வீரா,இத்தகைய வேலைகளை முன்வந்து எடுத்துக்கொள்வதில்லை.ஆனால், இந்த முறை வீராவிற்கு இந்த வேலையை பொறுப்பு எடுத்துக்கொள்வது அவசியமாக இருந்தது.

காரணம்,வீராவிடம் அப்போது, மொபைல் போன் இருந்திருக்கவில்லை. விடுமுறையின் போது மட்டும் ஷாராவிடம் பேசுவது அவனுக்கு  போதுமானதாக இல்லை. அதோடு அவள் வேலைக்கான நேர்காணல் என்ன ஆனது என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

 

வீராவும் விமலும் அன்று இரயில்வே ஜங்ஷனில் சந்தித்துக்கொண்டார்கள்.அங்கிருந்து அவர்கள் புத்தகத்தை பிரதி எடுத்து மீண்டும் அந்த சந்திப்பில் அவர்கள் விடைபெற்றுக்கொள்ளும் வரை விமலுடைய போன் விமலுடையது இல்லை. விமல் அவனுடைய முக்கியமானவங்க தெரிஞ்சவங்க எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்துவிட்டு வீராவிடம் போனை கொடுத்துவிடுவான்.அப்போதிருந்த போன்களில்  ரகசியங்களுக்கும் இடம் இல்லாமல் போனதால்,போன் பரிமாற்றங்கள் சாதாரணமானதாக இருந்தது.

 

வீரா விமல் போனிலிருந்து ஷாராவிற்கு மெசேஜ் அனுப்பினான். “who r u ?” என்று ஷாரா பதில் கேள்வி கேட்டாள். அவளையே கண்டுபிடிக்க சொல்லி கேட்டு படியில் நின்றபடி மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்த வீரா, கூட்டம் குறைந்து ஒரு இடம் பார்த்து செட்டில் ஆனதும், அவளை அழைத்தான். அவள் தொடர்பில் வருவதற்குள்ளாகவே, அந்த ரிங்கின் தாளத்திற்கு புன்னைகைகளை வழிந்து கொண்டு இருந்தான் வீரா.

 

தொடர்பில் வந்த அவள், ‘ஹலோ’ சொன்னாள், இவனும் ‘ஹலோ’ சொன்னான். அவள் மீண்டும் ‘ஹலோ’ சொன்னாள், இவனும் மீண்டும் ‘ஹலோ’ சொன்னான்.

“யாரு” கொஞ்சம் வேகமாகவும் சலிப்பாகவும் அவள் கேட்கும் போதே,

“இன்னும் தெரியலையா?” என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் , அவன் தான் என்பதை அனுமானித்துக் கொண்டு அவள்,”நீ..ஈ..யா”  என்று இழுத்து அவளுள் இருந்த ‘யாரா இருக்கும்?’ என்கிற கேள்வியையும் பதட்டத்தையும் அவள் மூச்சோடு வெளியே அனுப்பினாள்.

“முதல் ல…. ஹலோ…வேற யாரோ மாதிரி இருந்தது.”வளர்ந்த குழந்தை பேசும் தொனியில் அவள் இதை சொல்ல;

கொஞ்சம் கோபம் கலந்த உரிமையோடு நிறைய புன்னைகளை வழிய விட்டபடி வீரா இப்படிச்ச்சொன்னான், “நான் தான் … என் குரல் கூட தெரியலன்னு   சொல்லுங்க”

குழந்தைகள் எந்த உணர்வுகளையும் கட்டி போடுவதில்லை. குழந்தைகள் தங்களுக்கு பிடித்தவர்களிடம் பேசும் பொழுது சத்தமாகவே தான் பேசுவார்கள். அவர்கள் பேசும் எல்லோரிடமும் சத்தமாகவே தான் பேசுவார்கள்.காரணம், குழந்தைகள் பிடிக்காத யாரோ ஒருவரிடம் பேசுவதே இல்லை. குழந்தைகள் விளையாடும் பொழுதும், பேசும் பொழுதும் என்று எப்போதும் எதையும் சத்தமாகவே தான் செய்வார்கள். எல்லாமே குழந்தைகளுக்கு புதிதாக இருப்பதால் எதையுமே ஒரு பரவசத்தோடு அவர்கள் செய்வதால், குழந்தைகள் பரவசநிலையையில் இருக்கும் இடங்கள் சத்தமும் சிரிப்பும் புன்னைகையுமாகவே தான் இருக்கும். அன்று அந்த பேருந்திலும் சூழல் அப்படியாகத் தான் இருந்தது. அதை வீராவைத் தவிர அத்தனை பேரும் கவனித்தார்கள்.அத்தனை பேர் கவனிப்பதையும் கவனித்து வந்த விமல் நீட்டி நெளிய முடியாமல் வெட்கி குறுகி உட்கார்ந்திருந்தான்.வீராவிற்கு ஷாராவின் குரலைத் தவிர எதுவும் கேட்கவில்லை. ஒரு குழந்தையாக மாறி பரவசநிலையில் இருந்த வீரா பேசிக்கொண்டு வந்ததை தான் பேருந்தில் எல்லோரும் கவனித்துக்கொண்டு வந்தார்கள்.ஷாரா எப்போதுமே அவனுக்கு புதுமையாகவே தான் தோன்றுவாள்.

“இல்ல டா யாரோ பெரிய ஆள் மாதிரி இருந்தது” என்றாள் ஷாரா.அவர்கள் உரையாடல் இப்படியே தொடர்ந்தது.

 

ஒரு புன்சிரிப்புடனும் பெருமையுடனும் “பெரிய பையன் ஆகிட்டேன் தெரிஞ்சுக்கோங்க!”என்றான் வீரா.

 

வீரா: சரி! இன்டெர்வியூ என்ன ஆச்சு? அதை கேட்க தான் இவ்வளவு அவசரமா அடிச்சேன்.

ஷாரா: செலக்ட் ஆகிட்டேன் டா!அடுத்த வாரம் ஆபீஸ் க்கு வர சொல்லி இருக்காங்க.

வீரா: அப்ப treat!

ஷாரா : ட்ரீட் தானே! வா! வா! பாத்துக்கலாம்

விளையாட்டாகவே ட்ரீட் கேட்ட வீரா அவளைச் சந்திக்க இது தான் சந்தர்ப்பம் என்று  “இந்த வாரம் லீவு க்கு ஊருக்கு வரேன். முக்கியமா உங்களைப் பார்க்கிறதுக்கு தான் வரேன்.” என்று உங்களைப் பார்ப்பதற்காக என்பதை அழுத்தமாக சொன்னான்

சும்மா அடிச்சுவிடாத என்றாள் ஷாரா.

வீரா: நிஜமா தான். பார்க்கலாமா?

ஷாரா : தெரில!

வீரா : இல்லைனா இரண்டு நாள் லீவு க்கு ஏன் வரேன்! இப்ப தான் வந்துட்டு போனேன்.

ஷாரா :ம்ம்ம்??

வீரா : சனிக்கிழமை என்ன ன்னு பேசுவோம்.. எப்படியும் ட்ரீட் வைக்கிறேன் சொல்லிருக்கீங்க ல?

அவசரமாக அதை கேட்டு முடித்து மேலும் தொடர்ந்த வீரா ,”உங்க ஈமெயில் id என்ன என்று கேட்டான்?”

அவள் அவளுடைய இரண்டு மின்னஞ்சலையும் அவனுக்குச் சொன்னாள்.

ஒன்றில், அவள் பெயரின் பாதியும் பிறந்த தேதியும் இருந்தது. மற்றொன்றில் அவள் பெயரோடு நிலா என்று இருந்தது. அதைப் பற்றி கேட்டதற்கு நிலா பிடிக்குமென்றாள்.

இயல்பாக  நடக்கின்ற ஒரு விஷயத்தின் மீது ஆசிரியர் தன் கற்பனையை ஏற்றி சொல்வதற்கு பெயர் தற்குறிப்பேற்ற அணி. நாம் ஒருவரை விரும்பும் பொழுதும் கூட அவர் செய்யும் செயல்களில் நம் கற்பனைகளை ஏற்றி மகிழ்ந்து கொள்வோம். பொம்மை காதல்களிலும் ஒரு தலை காதல்களிலும் இது அதிகம் நடக்கும். அவள் இயல்பாகவே அவள் பெயரோடு நிலா என்று சேர்த்திருந்ததை, காலம் எத்தனை அழகாக இந்த விளையாட்டை விளையாடுகிறது என்று எண்ணிக்கொண்டான் வீரா. அவன் பெயரான சந்திரன் (வீர சந்திரன்) தானே நிலா என்பதும், இயல்பாகவே அவளுக்கு  பிடித்த ஒன்றின் பெயராக அவன் பெயர் இருப்பதை நினைத்து சிலிர்த்துக்கொண்டான்.

“நான் school முடிஞ்சு நீங்க போன பிறகு உங்க பெயரை எப்படி எப்படியோ போட்டு orkut ல தேடினேன்” என்று வீரா சொல்ல.

“இந்த நிலா id ல தான்  orkut ல இருக்கேன்” என்றாள்.

“உன் மெயில் id என்ன?” இது தான் அவள் முதல் முறையாக வீராவிடம் அவனுடைய மெயில் id பற்றி கேட்டது.

“veeraathiveera@gmail.com” அவனுடைய இந்த மின்னஞ்சல் முகவரியை கேட்டு அவள் சிரித்தாள்.

“காலேஜுல என்னை பசங்க அப்படி தான் கூப்புடுவாங்க rhyming அ இருக்கவும் நானும் அப்படியே வச்சுக்கிட்டேன்” என்றதற்கு அவள்,”புயலடித்தால் பறக்கிற மாதிரி இருந்துகிட்டு இந்த பேர் தேவையா ?” என்று நக்கலடித்தாள்.அவள் அவனை இன்னும் எத்தனை வாரியிருந்தாலும் அவன் ரசித்துக்கொண்டு இருந்திருப்பான். ஆனால், ஜங்ஷன் வந்துவிட்டது. அவனும் விமலும் இறங்க வேண்டும். “சரி! சனிக்கிழமை பார்க்கலாம்” என்று அந்த உரையாடலை முடித்துக்கொண்ட பின்னும் கூட அவனில் இருந்து வழிந்து கொண்டிருந்த மகிழ்ச்சியும் புன்னகையும் முடிந்தபாடில்லை.

“நீ என்ன டா! இப்படி இருக்க! பேசுறதுக்கே! பஸ் ல இருக்கோம் ன்னு ஞாபகம் இல்லாம! எனக்கு என்னமோ நீ அவய்ங்கள்ட்ட பேசமா இருக்கிறது சரி தோனுது.பயமா இருக்கு. இப்படி இருந்தா நீ என்ன ஆவ ன்னு” என்று விமல் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள் அவன் காதில் விழுந்தாலும் அவன் முழுதுமாக அவன் இருந்த உலகத்தில் இருந்து வெளியே வரவில்லை. இதையெல்லாம் விமல் சொல்லிக்கொண்டிருந்த பொழுது தான் வீரா சுற்றியும் அந்த பேருந்தைப் பார்த்தான். அப்போது தான் அந்த பேருந்து அவன் கண்களுக்கு மீண்டும் தெரிந்தது. ஆனாலும் இன்னும் அங்கிருந்த மனிதர்கள் அவன் கவனத்திற்கு வரவில்லை.காதுகளை எட்டிய விமலின் வார்த்தைகளும் அவன் கவனத்திற்கு செல்லவில்லை.

விடியும் வரை அவளிடம் பேசியதை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருப்பான். விடிந்த பின், 2008 க்கு பின் அவர்கள் சந்தித்துக்கொள்ள போவதை எண்ணி சந்தோசப்பட்டுக்கொள்வான்.

 

அந்த சனிக்கிழமை வந்ததா? அவர்கள் சந்தித்துக்கொண்டார்களா?2023ல் இருவரும் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்?ஷாராவிற்கு எல்லாம் மறந்து போனதா?வீரா மனதில் மட்டும் தான் காதல் இருந்ததா? ஒரு தலை காதல் சரி! அதென்ன பொம்மை காதல்?

தொடர்ந்து படியுங்கள்…….

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *