“அந்தா பஸ் வந்திருச்சு டா”விமலின் சத்தம் கேட்டு ஷாராவிற்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்த வீரா நிமிர்ந்து பார்த்தான்.

 

விளக்குகள் இல்லாத சாலையில் இருந்து ,இருளை விலக்கிக் கொண்டு ஒரு பேருந்து வந்து நின்றது.

 

“சரி டா பாப்போம் போய்ட்டு மெசேஜ் பண்ணு” என்றான் செல்வா.

 

“படியப் பாத்து ஏறு இறங்கு மெசேஜ் அனுப்பிகிட்டே ஏறாதா” என்று பேருந்தில் ஏறிவிட்ட வீராவைப் பார்த்து நக்கலடித்தான் சுதாகர்.

 

எல்லாவற்றுக்கும் சரி என்பது போல் தலையை ஆட்டினான் வீரா. பேருந்தின் பின் வரிசை இருக்கையில் ஜன்னலோரமாக உட்கார்ந்துகொண்டு வெளியில் இருந்த நண்பர்களுக்கு கையசைத்து, “சரி வரேன் ” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே பேருந்து நகர்ந்தது.

 

பேருந்தில் நடத்துனர்,ஓட்டுநர்,வீரா தவிர்த்து ஒருவரும் தென்படவில்லை.நடத்துனர் வீராவை நோக்கி வருவதைக் கண்டு ஒரு கையில் அந்த போனை வைத்துக்கொண்டே மறு கையில் காசை எடுத்துக்கொண்டிருந்தான்.

 

காலையில் இருந்து அவள் பேசவில்லை. இப்போது அவள் அவனுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டிருக்கின்றாள். நொடியும் தாமதிக்காமல் அவளுக்கு பதிலனுப்பிவிட வேண்டும், ஒரு நொடி தாமித்தால் அன்றைய நாளில், அவள் இவனிடம் பேசும் வார்த்தைகளில், இரண்டு குறைந்து போகலாம். அதனால் வீரா அவள் மெசஜ்க்கு நொடியும் தாமதிக்காமல் பதில் அனுப்பிக்கொண்டிருந்தான்.

 

நடத்துனரிடம் காசை கொடுத்து பயணச்சீட்டை பெற்றுக்கொண்டிருந்த பொழுதும் கூட அவன் ஒரு கையில் அவளுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தான்.

 

அந்த பேருந்தில் இருந்தது வீரா மட்டும் தான். அவனுக்கும் பயணசீட்டை கொடுத்தாயிற்று. நடத்துனர் முன்னே சென்று அமர்ந்துகொண்டார்.பேருந்தின் ஜன்னலுக்கு வெளியில் வெளிச்சம் இல்லாத இருள்வெளிகள்.மொத்த அண்ட வெளியிலும் அவனும் ஷாராவும் மட்டும் இருப்பது போன்ற மாயை அந்த இருள்வெளி  தந்தது.

காலையில் அவன் பார்த்த பொட்டல் காடுகளும் வயல்களும் வெளிச்சமில்லாத அந்த இருள்வெளிகள். பிரதான சாலையை அடையும் வரை அந்த பேருந்து இந்த இருள்வெளிக்கு மத்தியில் ஓடும் அந்த கரடுமுரடான சாலையில் தனியாய் தான் பயணிக்கப்போகிறது.அந்த  இருளோடும், மூட முடியாத ஜன்னல் வழி தன்னை சீண்டிய பனியோடும் கூட சேராமல் ஷாராவிடம் பேசிக்கொண்டே வந்தான் வீரா.

 

சதீஷையும் பாலாவையும் மறந்தும் போனான் வீரா.அந்த நொடியில் அவன் உலகத்தில் ஷாரா மட்டுமே தான் இருந்தாள்.

 

அவர்கள் பேச்சின் மையமாக எதுவுமே இல்லை. ஆனால், பேசிக்கொண்டே இருந்தார்கள்.

 

“மியூசிக் டைரக்டர் ஆகனும்னு ஒரு  ஆசை அப்புறம் அதுக்கெல்லாம் நிறைய அறிவு வேணும் ன்னு “ஏதேதோ பேசிக்கொண்டு வந்தவர்களின் பேச்சு இந்த இடத்திற்கு வந்தது.

 

“உனக்கென்ன டா ஜீனியஸ்” நண்பர்கள் எல்லோரும் ஜீனியஸ் என்று சொல்லும் பொழுது வராத பூரிப்பும் புன்சிரிப்பும் வீராவின் முகத்தில் வந்து உட்கார்ந்து கொண்டது.

 

அந்த பேருந்திற்கும் கூட பரவசம் தாளவில்லை. பின் வரிசையில் இருந்த வீராவை ரெண்டடி மேலே தூக்கி போட்டதில், போனை கீழே விட்டான்.

 

பேருந்தில் வேகம் ஒன்றுமில்லை. சாலையின் மகிமை.அதையெல்லாம் வீரா பொருட்படுத்தவில்லை. குலுங்கி குலுங்கி நகர்ந்துகொண்டிருந்த பேருந்தில், இருக்கைக்கு கீழே குனிந்து போனை தேடினான்.

 

கடைசி வரிசைக்கும் பின்னால் கிடந்தது, வேகமா எடுத்து வேகமா அவளுக்கு அடுத்த மெசேஜ் அனுப்பினான்.அந்த பூரிப்பு கொஞ்சமும் மாறவில்லை.

 

“எல்லாம் அப்படித்தான் சொல்லறாங்க. நீங்க சொல்றது கூட கிண்டல் பண்ற மாதிரி தான் இருக்கு”

“ச்ச ச்ச”சிரித்துக்கொண்டே இந்த பதிலை அனுப்பினாள் ஷாரா.

சிரித்துக்கொண்டே அவள் அனுப்பிய அந்த பதிலிலிருந்த சிரிப்பு, வீராவையும் பற்றிக்கொண்டது.ஒளிர்கிற சிரிப்பில் திரி தூண்டி எண்ணெய் விட்டது போல் ஷாராவிடம் இருந்து வந்த ஒவ்வொரு மெசேஜ் உம் வீராவின் முகத்தை இன்னும் ஒளிரச்செய்தது.அந்த பேருந்து பரமக்குடிக்குச் செல்லாமல், அதே அந்த குண்டும் குழியுமான சாலையில் முடிவில்லாமல்  போய்க்கொண்டே இருந்திருந்தாலும்  வீராவிற்கு எந்த கவலையும் இருந்திருக்காது.

“ரஹ்மான் ரொம்ப பிடிக்கும் இப்ப பண்ற பாட்டு தான் பிடிக்கலை, அந்த மன்னிப்பாயா பாட்டு மாதிரி” அவளுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தெரிந்தும் வீரா இதைச்சொன்னான்.

 

அவளுக்கு பிடித்த பாடல் என்று தெரிந்து பிறகு  அந்த பாடலை பார்க்கும் பொழுதெல்லாம் அவள் நினைவால் அதை நிறுத்தாமல் கேட்டாலும் கூட அந்த பாடலில் அவன் மனம் ஒட்டவில்லை தான்.

 

“பாட்டு ல ஒரு flow இருக்கனும் .. அந்த பாட்டுல அது இல்லை ன்னு எனக்கு ஒரு ஃபீல் ” அவளிடம் பேசுவதற்கு ஆயிரம் இருந்தும் அவளுக்கு பிடித்த பாடல் ஒன்று அவனுக்கு பிடிக்கவேயில்லை என்பதற்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான் அந்த ஜீனியஸ்.

 

ஷாரா மட்டும் இல்லை நண்பர்களும் கூட அவனை நக்கலாக தான் ஜீனியஸ் என்று அழைத்திருப்பார்கள்.அல்லது ஒருவேளை ஜீனியஸ்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்னவோ.

 

“முன்னாடியே சொல்லிருந்தா நானும் இன்னிக்கு வந்திருப்பேன் இல்லை நாளைக்கு பிளான் பண்ணிருக்கலாம்” அவள் இன்று வெளியில் சென்று வந்ததை குறித்து வீரா அனுப்பிய மெசேஜ் இது.

 

“பிளான்லாம் இல்ல டா சும்மா தீடீர்னு” இந்த பதிலை கண்டு வீரா அடுத்து அது குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை.

 

“தனியா தான் ட்ராவல் பண்றேன் இன்னிக்கு ஒரு நாள் லேட்டா தூங்குங்க”கையில் போனுக்கு பதிலாக கண்ணாடி இருந்திருந்தால் அதில் இந்த மெசேஜை அனுப்பும் பொழுது வெளிப்பட்ட வீராவின் முன் பற்களை பார்த்திருக்கலாம்.

 

“சரிங்க சார்”ஆளில்லாத அந்த பேருந்திலும் கூட ஷாராவின் இந்த பதிலைக் கண்டு வெட்கத்தில் முகம் திருப்பிக்கொண்டான் வீரா.

 

வீராவிற்காகவே வந்த அந்த பேருந்து பரமக்குடி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

 

வீரா: பஸ் மாறனும்

ஷாரா: ம்ம் இன்னும் எவ்வளவு நேரம்?

வீரா : இங்கிருந்து நம் ஊர் பஸ்ஸ்டாண்ட் க்கு  ஒரு மணிநேரம் அங்கிருந்து வீடு.

 

வீரா : பஸ் எடுத்துட்டுட்டேன்

ஷாரா: தல வலிக்குது

வீரா: சரி! போய் தூங்குங்க (இந்த பதிலை அனுப்பிய போது இந்த தலைவலியெல்லாம் இப்ப தான் வர வேண்டுமா என்கிற சலிப்பு வீராவிற்கு இல்லாமல் இல்லை).

ஷாரா: பரவாயில்ல. நீ வீட்டுக்கு போற வர பேசலாம். ஒரு டீ குடிச்சுட்டு வரேன்.

வீரா : இந்த பஸ் கூட்டமா இருக்கு. இல்லாட்டி, பேசிக்கிட்டே வரலாம்.மெசேஜ் பண்ணிக்கிட்டே வரதுக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. இப்படி போனை கையில் வச்சுக்கிட்டே வந்தது இல்ல.

 

ஷாரா : சொல்லு. இப்ப தான் மறுபடி போன் எடுத்தேன்.

வீரா: டீ குடிச்சாச்சா?

ஷாரா: ம்ம்.

வீரா : ஒரு ஹெல்ப் பண்ணுங்க. வீட்ல நெட் இருக்கு ல.  மாமாவுக்கு பர்த்டே அவங்களுக்கு அங்க 12 மணி ஆகி இருக்கும். என் மெயில் ல இருந்து ஒரு மெயில் அனுப்புங்க.

 

இன்னும் ஒரு மணிநேரத்தில் வீரவால் அந்த மெயிலை அனுப்ப முடியும்,காலையில் போனில் அழைத்து கூட வாழ்த்த முடியும்.ஷாராவிடம் அவன் மெயில் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி அவன் அனுப்புவது போல் அவன் மெயிலில் இருந்து அவள் மெயில் அனுப்ப வேண்டும் என்கிற எண்ணம்.

அவள் கேட்கும் முன்பே பாஸ்வேர்ட் அவளுக்கு பறந்திருந்தது. அவன் பெயரில் இருந்த எழுத்துக்களுக்கும் அவள் பெயரில் இருந்த எழுத்துக்களுக்கும் வரிசையாக எண்களை கொடுத்து அந்த எண்களில் அவள் பெயர் வருவது போல் ஒரு எட்டு இலக்க எண்ணை பாஸ்வேர்ட்டாக வைத்திருந்தான்.அவள் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவன் சொன்னது போல மெயில் அனுப்பிவிட்டு அனுப்பிட்டேன் என்று மெசேஜ் அனுப்பினாள்.

 

மணி பதினொன்றானது வீரா வீடு வந்து சேர்ந்தான். வீடு இன்னும் தூரமாக இருந்திருக்கலாம்.அன்று காலையில் ஷாரா பேசியிருந்தாலும் தொடர்ந்து 3 மணி நேரம் அவனோடு மெசேஜில் அரட்டை அடித்திருக்க வாய்ப்பில்லை. மகிழ்ச்சி பெருமூச்சோடும், மூன்று மணி தொடர்ந்த அரட்டை முடியப்போகிறது என்கிற ஏக்கத்தோடும் ,அவளுக்கு “குட் நைட்” அனுப்பினான் வீரா. அவளும்  “குட் நைட்” அனுப்பினாள் வீராவால் முடித்துக்கொள்ள முடியவில்லை. “sweet dreams” என்று அனுப்பினான். “sweet dreams” அவளும் அனுப்பினாள். கனவு போல்  கடந்த இந்த மூன்று மணி நேரத்தை விடவும் அவனுக்கு எந்த கனவும் இனிக்க போவதில்லை. தூங்க மனமில்லாமல். தூங்க சென்றவன். சீக்கிரமே எழுந்தான்.

 

 

மீண்டும் “குட் மார்னிங்” மீண்டும் ஷாரா மெசேஜ் க்காக காத்திருப்பு. மீண்டும் ஷாரா பதிலனுப்பவில்லை. நேற்று தாமதாக தூங்கியதால் இன்னும் தாமதகமாக எழுந்திருப்பாள் என்று நினைத்தான். ஆனால், அவன் எதிர்பார்த்ததை விட தாமதமானது. அவளிடம் இருந்து ஒரு மெசேஜ் உம் வரவில்லை.மறுநாள் கல்லூரிக்கு செல்ல வேண்டும். இன்று மதியமே வீரா ஊருக்கு கிளம்ப வேண்டும்.

“ஏன் பேசலை?” போனை கையில் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான்.

“நான் நாளைக்கு ஊருக்கு போறேன்” அடுப்படியில் இருந்த அம்மாவுக்கு கேட்கும் படி சொல்லிவிட்டு கையில் போனை வைத்துக்கொண்டு உட்கார்ந்தான் வீரா.

ஏன் என்ற கேள்வியை முடிக்கும் போதே சரி என்று சம்மதம் சொன்னார் வீராவின் அம்மா.அவன் அம்மாவிடம் சம்மதம் கேட்கவில்லை.”நாளைக்கு college போகனும் இன்னிக்கு கிளம்பு” என்று அவன் அம்மா சொல்லியிருந்தாலும் கேட்டிருக்க மாட்டான். அவளிடம் பேசாமல், அவளிடம் சொல்லாமல் அவனால் கிளம்ப முடியவில்லை.

பிற்பகலிலும் அவள் பேசவில்லை.

“good evening “மாலையில் அவளிடம் இருந்து மெசேஜ் வந்தது.அந்நேரம் மொட்டை மாடியில் தனியாக உட்கார்ந்திருந்த வீரா, வேகமாக அவளை அழைத்தான்.

 

ஷாரா: ஊருக்கு போகலையா ?

வீரா: நீங்க பை சொல்லலை அதான் கிளம்பல

ஷாரா : சும்மா சொல்லு டா

வீரா : நிஜமா தான்

 

விளையாட்டாக சொல்வது போலவே சிரித்துக்கொண்டே சொன்னான் வீரா. பொம்மை காதலில் பொய்கள் உண்மைகளாகவும் உண்மைகள் பொய்களாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது.அவள் அதை நம்ப ஆசைப்பட்டிருந்தாலும் கூட அதை நம்பவில்லை.

 

வீரா போனுக்கு வேறொரு அழைப்பு வந்துகொண்டிருந்தது.யாரென்று பார்த்துவிட்டு ஷாராவிடம் பேச்சை தொடர்ந்தான் வீரா.

 

“இன்னிக்கு இந்தியா மேட்ச் . மேட்ச் பார்க்கிறதுக்காக சரி நாளைக்கு ஊருக்கு போகலாம் நாளைக்கு லீவு போட்டுக்கலாம் ன்னு” ஏற்றுக்கொள்ளப்படாத உண்மைக்கு பதிலாய் இந்த உண்மையை சொன்னான் வீரா.

 

2011, ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடந்துகொண்டிருந்தது, அன்று இந்தியாவிற்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டி. போட்டி ஆரம்பித்தது முதல் வீரா போட்டியை ஒன்றும் பார்க்கவில்லை. ஷாரா எப்போது மெசேஜ் அனுப்புவாள் என்று தான் பார்த்துக்கொண்டிருந்தான். மதியம் அவன் ஊருக்கு கிளம்பியிருந்தாலும் ஊருக்கு சென்று அவனால் அந்த போட்டியை பார்த்திருக்க முடியும். இத்தனையும் தாண்டி போட்டி அயர்லாந்துடன், எப்படியும் ஒரு தலைப்பட்சமாக இருக்க போகும் போட்டி அது. முக்கியமில்லாத அந்த போட்டி முக்கியமான ஒரு உண்மைக்கு  மாற்றாய் இருக்க உதவியது.

 

அன்று அந்த போட்டி நடந்திருக்காவிட்டால்.ஷாரா எத்தனை முறை கேட்டு இருந்தாலும் வீராவால் வேறு காரணத்தை தேடியிருக்க முடியாது.

 

ஷாரா :அப்பறம் என்ன மேட்ச் பாக்கிறதுக்கு லீவு போட்டுட்டு எனக்காக ன்னு சொல்ற

வீரா : சும்மா சொல்றது தான்.( உண்மையில் இது தான் சும்மா சொன்னது)

ஷாரா : இரு அம்மா கூப்பிடுறாங்க.

வீரா: மெசேஜ் பண்ணுங்க எனக்கு கால் வந்துட்டே இருக்கு.

 

ஷாராவின் இணைப்பை துண்டித்த பிறகு, வேகமாக ரஞ்சித்துக்கு அடித்தான்.

 

வீரா: என்ன டா அதிசயமா பசங்க நம்பர் க்கெல்லாம் அடிக்கிற. எந்த புள்ளைகளும் போன் எடுக்கலையா?

ரஞ்சித்: அது இருக்கட்டும் மச்சி ! உன் போன் என்ன engaged இருக்கு? உன் போன் engaged அ இருக்க வாய்ப்பில்லையே..

வீரா: அப்ப முக்கியமா யார்கிட்டயோ பேசுறேன் ன்னு தெரியுது ல அப்பறம் என்ன மறுபடி மறுபடி

ரஞ்சித் : யாரு ‘டாட்’ அ. நானும் அந்த முக்கியமான ‘டாட்’ யார்னு தெரிஞ்சுக்கனும் தான் அடிக்கிறேன்.

வீரா: தெரியனும் இருந்தா தெரியும். இப்ப ஒன்னும் தெரிய வேணாம் போனை வை.

 

ரஞ்சித்: நான் மறுபடி அடிச்சு டிஸ்டர்ப் பண்ணுவேன்.

வீரா: நாளைக்கு நான் college க்கு வர மாட்டேன். நாளைமறுநாள் வந்து  அடிப்பேன் பாத்துக்க

 

ரஞ்சித் இணைப்பை துண்டித்துவிட்டு,ஷாராவிடம் இருந்து மெசேஜ் வந்ததும் மீண்டும் அவளை அழைத்து பேசினான் வீரா.

 

ஷாரா : அம்மா கோவிலுக்கு கிளம்ப சொன்னாங்க

வீரா: சரி!எனக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க. ‘உனக்கும் எனக்கும்’ படத்துல வர த்ரிஷாவும், ‘சந்தோஷ் சுப்ரமணியத்து’ல ஜெனிலியாவும் கலந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கனும்னு.

இதை சொன்ன பொழுது ஷாராவை நினைத்து வீரா சொன்னான்.ஷாரா என்ன நினைத்தாலோ தெரியவில்லை.

 

“ஷோக்கா சொன்ன டா” என்று விளையாட்டை பதில் சொல்லி “வேண்டிக்கிறேன் வேண்டிக்கிறேன்”என்று முடித்தாள்.

 

மார்ச் 7 தேதி திங்கள்கிழமை.

வீரா இப்படி அவசியமே இல்லாமல் விடுமுறை எடுத்தது கிடையாது. இன்று அவளிடம் பேசவும் முடியாது. அவள் கல்லூரிக்கு கிளம்பியிருப்பாள் என்று நினைத்துக்கொண்டே அவன் ‘குட் மார்னிங்’ மெசேஜ்  கூட அனுப்பவில்லை.

 

தாமதாகவே கண்விழித்த வீரா போனையும் கூட எடுக்கவில்லை.பல் துலக்கி விட்டு வந்து போனை அவன் கையில் எடுப்பதற்கும் ஷாரா அவனுக்கு அனுப்பிய அந்த “forward மெசேஜ்” வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.

Walk in rain.

Laugh more

Appreciate kindness.

If you made a mistake, apologise

If you are thankful, say it.

If you are wrong admit it.

If you love someone, tell them now.

Good morning.

கடைசி வரி அவன் மனதில் ஒலித்த பொழுது அவன் கண்கள் விரிந்தது. அவன் நின்றுகொண்டிருந்த அந்த கூடம், வழியும் அவன் மகிழ்ச்சியை கொள்ள போதுமானதாக இல்லை.உலகில் உள்ள  வயலின் கலைஞர்கள் எல்லோரும் சேர்த்து வீராவின் மனவெளியின் பின்னணியில் வயலின் நரம்புகள் அறுந்துவிடும் அளவிற்கு வேகமாக இசைத்துக்கொண்டிருந்தார்கள்   அந்த வேகத்தோடும் உற்சாகத்தோடும் போனை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குச் வேகமாக பறந்தான்.அந்த வெட்டவெளியில் உலகமே உங்களைச் சுற்றி இருந்தாலும் நீங்கள் மட்டும் தனியாக இருக்கும் உணர்வை பெறுவீர்கள். அவளிடம் தனியாக பேசவேண்டும் என்கிற எண்ணம் தானாக வந்து அவனை மொட்டைமாடிக்கு அழைத்துச்சென்றது.

 

அவள் கையில் போன் இருப்பதை வீராவிற்கு தெரிவிப்பதற்காகவே தான் அவள் அந்த மெசேஜ் அனுப்பியிருக்க வேண்டும் என்று வீரா நினைத்துக்கொண்டான்.அந்த  நினைப்பு தந்த மகிழ்ச்சியில் மிதந்துகொண்டே வேகமாக அவளை அழைத்தான்.

அழைத்த வேகத்தில், அவளிடம் சொல்லியிருக்க வேண்டும்.

 

“என்ன போன் எல்லாம் college க்கு எடுத்துட்டு போகலாமா”அதே உற்சாகத்துடன் கேட்டான் வீரா.

“இன்னிக்கு லேட். பஸ் அ விட்டுட்டேன். இரு இறங்கணும்” அவளிடம் அந்த  உற்சாகம் இல்லை.

வீரா : friends எல்லாம் விட்டுட்டு போய்டுவாங்களா?

ஷாரா: இல்ல.. எல்லாம் sincere சிகாமணிங்க. ஒரு பையன் மட்டும் என்கூட பஸ் ல இறங்கினான் அவனும் வேகமா போய்ட்டான்.  இன்னிக்கு சைக்கிள் டெஸ்ட் வேற. ஒன்னும் படிக்கலை.

வீரா: என்ன  friends போங்க லேட்டா போன எல்லாம் சேர்ந்து லேட்டா போறதில்ல.

ஷாரா: சரி நான் அப்பறம் பேசுறேன்.

வீரா: அப்பறம் நான் ஊருக்கு போய்டுவேன்

ஷாரா :சரி!பாத்து போய்ட்டு வா!நானும் பக்கத்துல வந்துட்டேன்.

 

மூச்சு வாங்க நடந்து கொண்டே அவள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட வீராவிற்கு எதையும் சொல்ல தோன்றவில்லை.

 

எப்ப தான் சொல்லுவாங்க? தொடர்ந்து படியுங்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *