மை அள்ளி முகமெல்லாம் போல் இருந்த பூமி, அந்த இரவின் இருட்டில் வானத்தோடு  ஒன்றாய் கலந்திருந்தது.

அந்த இருட்டை கிழித்துக்கொண்டு கருமையான அந்த சாலையில் வெள்ளையாய் ஒரு நான்குச் சக்கர வாகனம் சாலையின் வெள்ளைக்கோடுகளுக்கு இடையே வெளிச்சத்தை பாய்ச்சி வேகமாக சென்றுகொண்டிருந்தது. அதன் உள்ளே வெள்ளை முழுக்கை சட்டை அணிந்து, ஸ்லீவ்களில்(sleeves) பட்டன் போடாமலும் அதனை மடிக்கவும் இல்லாமலும் இருந்த கைகள் ஸ்டேரிங்கை பிடித்துக்கொண்டிருந்தது. நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்த கால்கள் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தது.

“அண்ணே இப்ப நல்லா ஓட்ட ஆரம்பிச்சுட்டார் ‘க்கா அந்த பயம் கூச்சம் எல்லாம் இல்லாம” முன்னிருக்கையில் இருந்த கார்த்தி கபினியிடம் சொன்னான்.

விடுமுறைக்கு இந்தியா வந்திருந்த வீராவை அழைக்க கபினியும் கார்த்தியும் விமான நிலையம் சென்றிருந்தார்கள். விமான நிலையத்தில் இருந்து  காரை வீரா ஓட்டிக்கொண்டு வந்தான்.

“ஆமாண்ணா! வண்டி நூறு எல்லாம் தாண்டி போகுது ” என்று கபினி சொல்லி முடிக்க சின்னதாய் சிரித்துவிட்டு “அப்பறம் ‘ண்ணா பாப்பா எப்படி இருக்கு! அங்க யாரு? உமாராணி தான் பார்த்தாங்களா? ” என்று கேட்டு அந்தப் பேச்சை மடை மாற்றி கார்த்தியின் குழந்தைப்பற்றி விசாரித்தான் வீரா.

“ம்! பாப்பா நல்லா இருக்கு’ண்ணா ரெண்டு மூணு டாக்டர் பார்த்தாங்க அவங்களும் தான் பாத்தாங்க ண்ணா” என்று கார்த்தி முடிப்பதற்குள், புன்னகை மாறாமல், “நல்லா பார்த்தாங்க ல?” அவன் தீர்மானித்த பதிலை வேண்டி கார்த்தியிடம் இந்த கேள்வியை கேட்டான் வீரா.

“அண்ணா! அவருக்கு சொல்லிடுங்க உமா ராணி தான் பார்த்துச்சு; நல்லா பார்த்துச்சுன்னு” பின்னாலிருந்து கபினியின் குரல் ஒலித்ததும் திரும்பிய கார்த்தி, “ஏன் ‘க்கா?ஆனா,முதல ரொம்ப பயம் புடுத்திட்டாய்ங்க; உமா ராணி தான் வந்து பார்த்துட்டு தண்ணி கம்மியா இருக்கு அப்படி இப்படி சொல்லி பயம்புடுத்தி அப்பறம் இன்னொரு பெரிய டாக்டர் வந்தாங்க; அவங்க, இல்லை பிரச்சனை ஒன்னும் இல்லை நம்ம வெயிட் பண்ணலாம் ன்னு அப்பறம் ஒரு வழியா நார்மல் டெலிவரி ஆச்சு ” என்று கார்த்தி சொல்ல வீராவிற்கு சின்னதாய் ஒரு ஏமாற்றம்.

“அவங்க இப்ப தான் அங்க PG பண்றாங்க; trainee தானே ! so சின்னதா பிரச்சனை மாதிரி எதாவது நோட்டீஸ் பண்ணி அது அவங்களுக்கு பெரிய பயம் தந்திருக்கும் அதை தான் உங்கள்’ட்டையும்  சொல்லிருப்பாங்க” உமாராணிக்காக வீரா விளக்கம் கொடுத்து கொண்டிருந்த பொழுதே, “அவருக்கு உமா ராணி தப்பு செஞ்சுருச்சுன்னு சொன்னா ஏத்துக்க முடியாது ‘ண்ணா” என்றாள் கபினி.

“அப்படியா’ண்ணே!” கார்த்தி கேட்டதற்கு வீரா ஒரு பதிலும் சொல்லவில்லை.

“அது ஒரு பப்பி லவ் ண்ணா அதுவும் ஒன் சைடு ” கொஞ்சம் அசட்டையாக சொன்னாள் கபினி.

“யாரு’ண்ணே உமா ராணி யா?” என்று கார்த்தி கேட்டதும்,படப்படத்த வீரா, “அண்ணே! நீங்க பாட்டுக்கும் எதுவும் கிளப்பி விட்றாதீங்க! அந்த பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, இப்ப தான் PG பண்ணிட்டு இருக்கு; நல்லா இருக்கட்டும்; நீங்க பாட்டுக்கும் ஊருக்குள்ள இப்படி சொல்லிட்டு இருக்காதீங்க” என்றதும் கபினி தொடர்ந்தாள், “அந்த பொண்ணு பார்க்க அந்த பொண்ணு மாதிரி இருக்கும் ண்ணா” .

“ஓகே! ‘க்கா புரியுது! உமாராணி அந்த ஒன் சைடு; அதென்ன? ஹான்! பப்பி லவ் மாதிரி இருக்கும்” என்று சொல்லி வீரா பக்கம் திரும்பிய கார்த்தி “அண்ணே!அக்கா ஏதோ சொல்றாங்க” என்று வீராவைப் பார்த்து கார்த்தி கேட்டவுடன், வீரா அவன் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்த மிச்ச மீதி இடுக்குகளையும் ஆக்கிரமித்து இன்னும் சாவகாசமாய் உட்கார்ந்து, வலது கையை ஸ்டேரிங்கில் இருந்து தளர்த்தி, இடது உள்ளங்கை இடது பக்கம் பார்த்தபடிக்கு வைத்து ஸ்டேரிங்கை பிடித்து கதையை ஆரம்பித்தான்.பப்பி லவ் என்று கபினி சொன்ன பொழுதே வீராவின் மனம் சாலையில் இருந்து பள்ளிக்காலத்திற்குச் சென்று விட்டது.

“வீரம் படத்துல, ஸ்கூல் படிக்கும் போது உங்க அண்ணனுக்கு கோப்பெருந்தேவி ஒரு பொண்ணை பிடிச்சிருந்ததுன்னு ஒரு கதை சொல்லுவாங்கள? அப்படி தான் ஸ்கூல் காலத்தில”  என்று  வீரா சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, “அக்கா! இவ்வளவு நேரம் ஸ்டேரிங் எப்படி பிடிச்சிருந்தாரு? இப்ப அந்த கதைய ஆரம்பிச்சோன கை எப்படி ஸ்டைலா இருக்கு பாருங்க” என்று கார்த்தியும்;

“அது அப்படித்தான்’ ண்ணா நூறு தடவை இந்த கதைய சொன்னாலும் அப்படித்தான் இருப்பாரு” என்று கபினியும் வீராவை பரிகாசம் செய்ய கூட்டணி சேர்ந்தார்கள்.

வீராவின் நாக்கு மேல் அன்னத்தை தொட்டுக்கொண்டு இருந்தது. அவனுடைய முதுகு அவன் உட்கார்ந்திருந்த இருக்கையை அழுத்தி பின்னால் தள்ளிக்கொண்டு இருந்தது.கைகள் ஸ்டேரிங்கை முன்னால் தள்ளியபடி அழுத்தியது.அந்த இருட்டில்; மெலிதான அந்த ஒலியில்; வீராவின் வெட்கச்சிரிப்பு மின்னிக்கொண்டிருந்தது.

“சரி! ‘ண்ணே அப்பறம்?” கார்த்திக் தொடர்ந்து கேட்க, “அப்பறம்ம்!.. ஸ்கூல் முடிஞ்சு கொஞ்ச வருஷத்துல நம்பர் கிடைச்ச்சு….

கொஞ்ச நாள் பேசினேன்……

நிஜமாவே கொஞ்ச நாள் தான். மாசம் கூட இல்ல.

அப்பறம் அவங்க பேசலை..

அப்ப்பறம்ம்!!!  ரொம்ப….. இல்ல! கொஞ்சம் வருஷத்துல பார்த்தா…… அவங்களுக்கு… மேரேஜ் ஆகிடுச்சு!” இதை சொல்லிக்கொண்டிருந்த வீராவின் கவனத்தில் அந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.

“அவங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு எங்களை ஏன் ‘ண்ணா டிவைடர்ல கொண்டு போய் விடுறீங்க” கார்த்தி சிரித்துக்கொண்டே கேட்டதும் வீராவின் கவனம் சாலைக்கு  திரும்பியது. “ரோடு இங்க இருக்கு ண்ணா” என்று கார்த்திக் சொல்லுவதற்கு முன்னதாகவே, வலது பக்கத்தின் முன்னாள் இருபதடி தூரத்தில் அவர்களை நெருங்கிக்கொண்டிருந்த அந்த டிவைடரை தவிர்க்க வண்டியை சாலையின் இடது புறமாக செலுத்தினான் வீரா.

“ஏன் புள்ள வேற இருக்கு! நீ கதையெல்லாம் சொல்ல வேணாம் ரோட்டை பார்த்து ஓட்டு”  என்று கொஞ்சம் பயந்தது போல் பாசாங்கு செய்து பொய்யாக மிரட்டினாள் கபினி.

ஆம்! அந்த 2023ம் வருடத்தில். வீராவிற்கு குழந்தை பிறந்திருந்தது. அந்த குழந்தை தான் உமா ராணியை அவர்கள் கண்ணில் காட்டியது.

2022 அகடோபர் மாதம். கபினியின் பரிந்துரையின் பெயரில் ஏழு மாத கர்ப்பிணியான அவளை அழைத்துக்கொண்டு ஒரு மருத்துவமனைக்குச் சென்றான் வீரா.

அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் அவர்களால் மருத்துவரை சந்திக்க முடியவில்லை. நிர்வாக குளறுபடிகளால் அதிக நேரம் அவர்கள் காத்திருக்க நேரிட்டதை புரிந்து கொண்ட வீரா, அதிகமாக கோபமுற்றான். அதுவரை இல்லாமல், மருத்துவரை சந்திக்க போகும் கடைசி நிமிடத்தில் அவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள், வீரா மாஸ்க் வாங்க சென்ற அந்த மருத்துவமனையின் மருந்தகத்திலும் எந்த ஒழுங்கும் பின்பற்றபடவில்லை.

அடுத்த இருபது நிமிடங்களில் வீராவின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது, “கபினி இருக்காங்களா? உங்க டோக்கன் நம்பர் தான் ” என்று அவர்கள் சொல்ல, “உங்க hospital எனக்கு பிடிக்கலை அதுனால என் பொண்டாட்டியை கூட்டிட்டு நான் வீட்டுக்கே வந்துட்டேன்” என்று கோபமாகவும் நிதானமாகவும் வீரா சொன்னதை கேட்டு எதிர்பக்கத்தில் இருந்தவரால் எதுவும் பேச முடியவில்லை.

கபினி அழுதுகொண்டிருந்தாள், “இங்க எங்க administration சரியா இருக்கோ அங்க பார்த்துக்கலாம் விடு” என்ற வீராவின் கோபம் இன்னும் தணியவில்லை அதற்காக தான் கபினி அழுதுகொண்டிருந்தாள்.

மறுநாள், அவர்கள் அந்த பெரிய மருத்துவமனைக்கு சென்றார்கள். உள்ளே அவர்களை அனுமதிக்கும் முன்னரே,அங்கிருந்த பணியாள் ஒருவர் அவர்களை மாஸ்க் அணியச் சொன்னார்.
உள்ளே சென்றதும் பெயர் பதிவு செய்துகொண்டு கபினியும் வீராவும் காத்திருந்தார்கள். “பாதி பேர் trainee தான் போல?”என்று வீரா சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கபினியின் பெயர் சொல்லி அழைத்தார்கள்.

“இதுக்கு முன்ன எங்க பார்த்தீங்க?” பயிற்சியில் இருக்கும் மருத்துவர் ஒருவர் கேட்டார்.
“husband வெளிநாட்டுல இருந்தாங்க அங்க தான் பாத்துட்டு இருந்தோம்” என்றாள் கபினி.
“அந்த ரிப்போர்ட் எல்லாம் கொண்டு வந்து இருக்கீங்களா” என்று கேட்டவர், “சார்! நீங்க அங்க வெயிட் பண்ணுங்க” என்று வீராவை பார்த்துச் சொன்னதும். வீரா அங்கே காத்திருப்பவர்களுக்காக  போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

கபினியின் எடை உயரம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்ததை வீரா கவனித்துக்கொண்டிருந்தவன் சில நொடிகளில் மாறியது.

சுற்றியும் பார்த்தான், “ராஜகீர்த்தனா சித்ரா அனிதா” அவனுக்கு இடது பக்கம் வரிசையாக மூன்று அறைகள் இருந்தது ஒவ்வொரு அறைக்கும் வெளியில் இருந்த பெயர் பலகையில் இருந்த மருத்துவர்களின் பெயரைத்தான் வீரா வாசித்துக்கொண்டிருந்தான்.

அங்கே நீல நிற சீருடையில், மிதமான உயரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக அங்கிமிங்கும் ஓடிக்கொண்டு இடையிடையில் பரிசோதனைக்கு வந்தவர்களை பார்த்துக்கொண்டும் இருந்த ஒருவர் வீராவின் கவனத்தை ஈர்க்க. வீராவின் கண்கள் வேகமாக அவரின் நெற்றிக்கு சென்றது. அந்த நெற்றி கால வெளியில் வீராவை பின்னோக்கிச் இழுத்துச் சென்றது. வீராவினுள் எப்போதும் ஏற்படும் அந்த பரவசம் அப்போது அவனுள் ஏற்பட்டது.

பதின்ம வயதில் அவன் பார்த்த ஷாரா, அப்படியே மீண்டும் வந்தது போல் இருந்ததாள் அந்த பெண். இன்று அவனுக்கு குட் மார்னிங் மட்டும் அனுப்பும் ஷாராவிற்கும்  அவன் மனதிற்கள் முதன் முதலாய் வந்த ஷாராவிற்கும்  கூட வித்தியாசங்கள் இருந்தது. காலம் அத்தனை மாற்றங்களை செய்து. மீண்டும் ஷாராவை அவன் கண்ணில் காட்டியது

“அந்த டாக்டர் பேர் என்ன?” அவன் மனமும் கண்களும் வேகமாக அந்த பெயர் பலகையை தேடிச்சென்றது.

“ராஜகீர்த்தனா! செம பேர்! ஷாரா பேரை வைக்க முடியாது வச்சா ஷாராவிற்கு தெரிஞ்சுரும். பேசாம ராஜ கீர்த்தனா ன்னு பேர் வச்சுடலாம்!” வீரா இப்படி நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே கபினி வந்துவிட்டாள்.

“கபினி அங்க பாரேன்! அப்படியே ஷாரா மாதிரி”என்று வீரா சொல்ல.

“அதான் இவ்வளவு பிரகாசமாக இருக்கா மூஞ்சி” என்று கேட்டுக்கொண்டே திரும்பிய கபினி.

“ஆமா மாமா ஆ!” அவளும் அதிசயித்து “similar ஆ கிட்டத்தட்ட அதே face cut!” என்றதும். “அதே similar ன்னு தான் நானும் சொல்றேன் அந்த டாக்டர் நம்மை பார்த்தா நல்லா இருக்கும்’ல்ல?” என்று வீரா சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவர்களிடம் வந்த பணியாள் ஒருவர் “நீங்க சித்ரா மேம்மை போய் பாருங்க அந்த முத ரூம்” என்றதும் வீராவின் அத்தனை பரவசமும் அடங்கியது.

டாக்டர் சித்ரா அவர்களை எல்லா பரிசோதனைகளையும் மீண்டும் செய்து வரச்சொன்னார்கள். எல்லாவற்றையும் முடித்து அவர்கள் திரும்பிய பொழுது, அங்கே ராஜா கீர்த்தனா மட்டுமே தான் இருந்தார். வீராவிற்கு ஏக சந்தோசம், “பேசாம நான் wait பண்ணியிருந்தா ஒரு டாக்டரை கல்யாணம் பண்ணியிருப்பேன்” கபினியை வம்புக்கு இழுத்தான் வீரா.

“நீ என்ன கல்யாணம் பண்ணி நான் மாசமா இருக்கேன் ன்னு செக் அப் கூட்டிட்டு வந்ததால தான் பார்த்த இல்லாட்டி எப்படி பாத்து இருப்ப?” கபினியும் விடவில்லை.

“ஆனா பாரேன் விதி வழிய வந்து என்னை இங்க கொண்டு வந்து விட்டு இருக்கு” வீராவின் குதூகலம் அடங்கவில்லை.

“நேத்து அங்க நீ கோபப்பட்டு வந்துட்டு விதியை சொல்லு”என்று கபினி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அறையில் இருந்து வெளியில் வந்த ராஜ கீர்த்தனா, “கபினி!” என்று சத்தமாக சொல்லி தேட.கபினியும் வீராவும் எழுந்தார்கள்.

உள்ளே சென்றதும்,ரிப்போர்ட்டை எடுத்துக்கொடுக்கும் பொழுது,’a r a n i ‘ என்று பாதி name badge வீராவின் கண்ணில்பட்டது. “ராணி? மஹா ராணியா பேரு?வெளில ராஜ கீர்த்தனா ன்னு இருக்கு” வீரா தனக்குள் பேசிக்கொண்டான்.

“நீங்க அங்க உட்காருங்க” மருத்துவரின் மேசையில் இருந்து கொஞ்சம் தூரமாக இருந்த ஒரு நாற்காலியில் வீராவை அமரச்சொன்னார்கள்.

“எல்லாம் ok!”என்றதும். கபினியிடம் வீரா ஏதோ சொல்ல, மஹாராணி நிமிர்ந்து கண்களுக்கு நேராக வீராவைப் பார்க்க வீராவின் கண்கள் முழுதும் மஹாராணியின் கண்களும் நெற்றியும் நிரம்பியிருக்க, உறைந்த போக இருந்த வீரா “என்ன?” என்கிற சத்தம் கேட்டதும் “சித்ரா மேம் தண்ணி கம்மியா இருக்கு இன்னிக்கு ஸ்கேன் பண்ண பிறகு பார்க்கலாம் சொன்னாங்க” என்று கபினி பதிலளித்தாள்.

“காலையில நம்மை விட பெரிய பெரிய அண்ணன் கிட்ட எல்லாம் casual அ ரொம்ப சாதாரணமா பேசிட்டு இருந்தாய்ங்க நம்மகிட்ட என்ன கேட்கிறதையே மிரட்டுற மாதிரி கேட்குறாய்ங்க” வீராவின் மனதில் இப்படி ஓடிக்கொண்டிருந்த பொழுது மஹாராணி எழுந்து நான் டாக்டர் கேட்டுட்டு வரேன் என்று சொல்லும் பொழுது வீராவின் கண்கள் பூமியை பார்த்துக்கொண்டிருந்தது அந்த மகாராணியின் கால் விரல்களும் கூட அதிசயமாய் ஷாராவின் கால் விரல்கள் போலவே இருந்தது.

“நீ பார்த்தியா? அதே attitude; பேச்சு; கால் விரல் கூட similar எப்படி டா! அதே மாதிரி சிம்பிளா dress பண்ணறது” வீடு திரும்பும் பொழுது கபினியிடம் கேட்டுக்கொண்டு வந்தான் வீரா.

“இதெல்லாம் ஓவர் மாமா! uniform சிம்பிளா தானே இருக்கும்!” என்று கபினி வீராவைப்பார்த்தாள். வீரா திரும்பிக்கொண்டான்

“ராஜ கீர்த்தனா ன்னு நினச்சேன் அப்பறம் பார்த்தா trainee போல, மஹாராணின்னு இருந்தது” நமக்கு தெரிந்த யாரோ ஒருவர் போல் யாரோ ஒருவர் இருந்தாலே நாம் ஒரு பரவச நிலைக்கு சென்று விடுவோம். வீரா பார்த்தா மஹாராணி, ஷாராவை போலவே இருந்ததால், அதிலும் அவன் பால்ய வயது நினைவுகளை கிளறும் ஷாரா போலவே அவள் இருந்ததால் வீரா பரவசம் தாளாமல் பேசிக்கொண்டே வந்தான்.

“அந்த பொண்ணு பேர் மஹாராணி இல்லை உமா ராணி” என்று கபினி முழுதாக அந்த name badge ஐ பார்த்த கபினி சொன்னாள்.

“உமா ராணியா? பேர் புதுசா இருக்கு ல?” என்ற வீராவிற்கு “என் கூடவே இதே பேர் ல ரெண்டு பேர் படிச்சருக்காங்க” என்றாள் கபினி.

 

“உங்களை மாதிரியே ஒருத்தரை பார்த்தேன் அவ்வளவு similarities” வீராவிற்கு உடனே ஷாராவிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது.ஆனால், அவன் சொல்லவில்லை.

மூன்று மாதங்களுக்கு பிறகு அவர்கள், அங்கு சென்ற பொழுது, “இன்னிக்கு அட்மிட் ஆகிக்கோங்கம்மா எப்ப வேணுன்னாலும் குழந்தை பிறந்துரும்” என்றார் டாக்டர் சித்ரா.

கபினியை அங்கு சேர்த்த பிறகு அந்த பெயர் பலகையில் இருந்த எல்லா மருத்துவர்களும் ஒவ்வொரு நேரத்திற்கு வந்து பரிசோதனை செய்தார்கள். சில நேரங்களில் அந்த மருத்துவர்களோடும் சில நேரங்களில் தனியாகவும் பரிசோதனை செய்ய உமா ராணியும் வருவதுண்டு.

“அம்மா!” கபினியின் அலறல் சத்தத்தில் பயந்த உமாராணி, “சாரி ப்பா சாரிப்பா ” என்று பதட்டதுடன் கைகளை எடுக்க கபினி அமைதியானாள்.

“நீ கவனிச்சியா பெரிய doctor எல்லாம் என்கிட்டயும் வந்து ஸ்டேட்டஸ் சொன்னாங்க உமாராணி ஒரு ஆள் தான் பேசல” வீரா கபினியிடம் சொன்னான்.

“correct மாமா! நானும் சொல்லணும் ன்னு நினைச்சேன்! அந்த புள்ள உன்னை என்னன்னு  கேட்டப்ப மிரட்டுற மாதிரி இருந்தது சொன்ன ல? அதுக்கும் பேச இருந்த தயக்கம் தான் அந்த modulation என்ன?ஆனா கொஞ்சம் பெரியவங்கன்னா பேசுது” கபினி ஆமோதித்தாள்.

ராஜ கீர்த்தனா, மஹா ராணி, உமா ராணி என்று தன்னுடைய அப்பா தனக்கு பெயர் தேடிக்கொண்டிருந்ததை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குழந்தை அன்று இரவே சுகமாக பிறந்தது. அத்தனை மகிழ்ச்சியிலும் வீராவிற்கு ஒரு குறை; அந்த நேரத்தில் உமாராணியும் இருந்திருக்கலாம் என்பது தான் அது. அப்படி இருந்திருந்தால் அவனுக்கு ஷாராவே உடன் இருந்தது போல இருந்திருக்கும்.

கபினியின் நலத்தையும் குழந்தையின் நலத்தையும் பேணிய எல்லா மருத்துவர்களுக்கும் செவியிலர்களுக்கும் ஒரு கடிதமும் பரிசும் கொடுத்துக்கொண்டிருந்த வீரா, உமா ராணியை தேடிக்கொண்டிருந்தான். மறுநாள் பகலில் வந்த உமாராணி அவன் கொடுத்த கடிதத்தோடு இருந்த பரிசை வாங்கிக்கொண்டு “இதில என்ன சத்தம் எல்லாம் கேக்குது? எனக்கு வேணாம்ப்பா நானே இங்க படிக்கிறேன், சாக்லேட் மட்டும் எடுத்துகிறேன் மொத்தமா கூட எடுத்துகிறேன் ” என்று தயங்கி, “பாப்பாவ போட்டோ எடுக்கலாமா?” என்று கபினியிடம் கேட்டாள். கபினியும் உமாராணியும் புதிதாக பிறந்த மஹாராணியும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

தூரமாக நின்று கொண்டிருந்த வீரா அந்த காட்சியை ரசித்துக்கொண்டிருந்தான். அந்த அறையில் அத்தனை முகங்களிலும் அத்தனை நிறைவான புன்னகை. அவன் நேசத்திற்கு பாத்திரமான இரண்டு நிஜங்களும் ஒரு நிழலும் அங்கே இருப்பது போன்ற உணர்வு அவனுள்.

வீராவிற்கு அந்த புகைப்படத்தை ஷாராவிடம் காட்டி,”இங்க பாருங்க உங்களை மாதிரியே ஒருத்தர் to be exact நீங்க முன்னாடி இருந்த மாதிரி ஒருத்தர்.” என்று சொல்ல வேண்டும்.

ஆனால், அந்த புகைப்படம் இருப்பதோ உமாராணியின் போனில்.அதை  எப்படி கேட்பது?

வீராவிற்கு அந்த புகைப்படம் கிடைத்ததா? வீரா  அதை ஷாராவிடம் காட்டினானா?

 

தொடர்ந்து படியுங்கள்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *