எனக்கு முன் விழிக்கும் என் பொழுது -இன்று

நீ விழிக்கும் வரை

‘விடியவில்லை இன்னும்’ என்று சொல்லி தூங்குதடி!

 

ஒன்பதரை மணிக்கு அவளிடம் இருந்து வந்த குட் மார்னிங் மெசஜை கண்ட குதூகலத்தில் வீரா எழுதிய கவிதை இது.

 

விடுமுறையில் மட்டும் தான் அவளிடம் பேச முடியும். அந்த விடுமுறையில் எத்தனை மணி நேரங்கள் இருக்கின்றதோ அத்தனை மணி நேரமும் அவளிடம் பேச வேண்டும். அதற்காகவே விடியற்காலையில் எழுந்து, விளையாடவதற்கு நண்பர்களுடன் வீரா கிளம்பிய பொழுதே வீரா, அவளுக்கு ஒரு குட் மார்னிங் அனுப்பியிருந்தான்.

 

அவளிடம் பேச ஆரம்பிப்பதற்கு முன்பு வரை விளையாட்டிற்கு இடையிடையில் போனை எடுத்துப் பார்த்துக்கொள்ளும் வழக்கம் வீராவிடம் இருந்தது இல்லை.

அன்று விளையாட சென்றிருந்த பொழுது, நிமிடத்திற்கு ஒரு முறை போனை எடுத்துப் பார்த்துக்கொண்டான்.

 

அவளிடம் பேச வேண்டும் என்பதைத் தாண்டி, ‘அவளைப் பார்த்துவிட முடியாதா!’ என்பதற்காகவே அவன் அந்த போனை நிமிடத்திற்கு ஒரு முறை எடுத்துப்பார்த்துக்கொண்டான்.

 

ஆம். ஷாராவும் வீராவும் தொடர்பில் இல்லாமல் இருந்த காலகட்டத்தில், ஷாராவின் குடும்பம் அவர்கள் இருந்த வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டில் குடிபெயர்ந்திருந்தார்கள்.இப்பொழுது வீரா விளையாடிக்கொண்டிருக்கும் அந்த மைதானத்திற்கு கொஞ்சம் பக்கமாகவே தான் ஷாரா உடைய வீடு இருக்கின்றது.

 

அதைத் தெரிந்தே தான் எப்போதும் விளையாடச் செல்லும் மைதானத்திற்கு செல்லாமல், தன் நண்பர்களை ஷாரா குடி பெயர்ந்திருந்த வீட்டின் பக்கமாக இருக்கும் மைதானத்திற்கு அழைத்து வந்து இருந்தான் வீரா.

 

அவள் எழுந்தவுடன் முதல் வேலையாக நாம் அனுப்பிய குட் மார்னிங் க்கு பதில் அனுப்புவாள். நாம் அவளைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணம் வீராவிற்கு.

 

ஐந்தரை மணியிலிருந்து ஒரு குட் மார்னிங் க்காக காத்துக்கொண்டு இருந்தவன். அதை கண்ட மாத்திரத்தில் குதூகலம் அடையத்தானே செய்வான்.

 

“எப்பவும்  நான் எந்திரிக்கிறதுக்கு முன்ன விடிஞ்சுரும். ஆனா, இப்ப எல்லாம் நீ எந்திரிக்கிற வரை எனக்கு விடிய மாட்டேனுது.”

அந்த குட் மார்னிங் கண்டு அவனுள் தோன்றிய இந்த எண்ணம் தான் அந்த கவிதையானது.

எனக்கு முன் விழிக்கும் என் பொழுது -இன்று

நீ விழிக்கும் வரை

‘விடியவில்லை இன்னும்’ என்று சொல்லி தூங்குதடி!

 

வீராவும் நண்பர்களும் கிளம்பப் போகும் நேரத்தில் வந்த குட் மார்னிங்  அது. அந்த குட் மார்னிங் கொஞ்சம் முன்னதாக வந்து இருந்தால், வீரா, நண்பர்களை விட்டுவிட்டு அவளைப் பார்க்க சென்றிருப்பான்

 

அந்த குட் மார்னிங் கண்டு அவன் எத்தனை மகிழ்ச்சியடைந்தானோ அதே அளவு கோபமும் கொண்டான், “எந்திரிக்க இவ்வளவு நேரமா? . அவள் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பது அவன் எண்ணமில்லை. அப்படி நடந்திருந்தால் பார்த்திருக்கலாம் இன்னும் ஒரு ஐந்து நிமிடம் அதிகம் பேசியிருக்கலாம்.

அவன்  அந்த செல்லமான கோபத்தையும் கூட அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை. எந்த காரணத்திற்காகவும் அவள் இவனிடம் பேசாமல் மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதில் வீரா கவனமாக இருந்தான்.

 

“உங்க வீட்டு பக்கம் தான் விளையாட வந்தேன், காலையிலேயே மெசேஜ் பண்ணா….” ஒரு கையில் ஷாராவிற்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான் வீரா.

 

“இப்ப தான் என்சேன்” அவள் அனுப்பிய இந்த பதிலை வீரா பார்த்துக்கொண்டு இருந்தபொழுது,”வீரா! ஒன்னு மெசேஜ் பண்ணு இல்லை சைக்கிள் ஓட்டு! இல்லாட்டி சைக்கிள் என்கிட்ட குடு!”   என்று குட்டி மனோஜ் கொஞ்சம் சலிப்போடு சொன்னான்.

 

“உனக்கு மெசேஜ் பண்ணிட்டு சைக்கிள் ஓட்டிட்டு இருக்கேன். கூட வர பையன் திட்டுறான்” இதை அவளிடம் சொல்வதில் அவனுக்கு கொஞ்சம் பெருமை. அதோடு அவளுக்கு மெசேஜ் அனுப்புவதும் அவளிடம் பேசுவதும் அவனுக்கு எத்தனை முக்கியம் என்று அவள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் அவன் அதைச் சொன்னான்.

 

“வீட்டுக்கு வா டா” சந்தோசம் மட்டுமே ஒருவனுடைய ஒவ்வொரு அணுவிலும் இருந்தால் எப்படியிருக்கும்! அந்த மெசேஜை பார்த்த வீரா அது போலவே தான் இருந்தான்.அவனைச் சுற்றி வெறும் வானம். கீழே இருந்த சாலையும் முன்னே செல்லும் வண்டிகளும் பின்னே இருந்த நண்பனும் என்று யாரும் அவன் கவனத்தில் இல்லை.அந்த கணத்தில், அவனுடைய உலகில் அவனும் அந்த மெசேஜும் மட்டுமே இருந்தது.அவன் மூச்சுக்காற்று நின்று நிதானமாய் புன்னகைகளை கட்டி இழுத்துக்கொண்டு வரும் பெருமூச்சாய் வெளிப்பட்டு அவன் வெளியை ஏதும் நெருங்காமல் பார்த்துக்கொண்டது.

அவனுடைய கற்பனை, ‘அவள் வீட்டிற்கு சென்றால் அங்கே என்ன நடக்கும்! அவங்க வீட்ல யாரெல்லாம் இருப்பா? வந்து கதவை திறக்கும் பொழுது முதல் வார்த்தையாக அவள் என்ன பேசுவாள்? அவள் இப்போது எப்படி இருப்பாள்? வீடு எப்படி இருக்கும்? அவங்க அம்மா என்ன கேப்பாங்க? அதுக்கு அவள் என்ன பதில் சொல்ல்வாள்?’ என்று இத்தனை கேள்விக்கான பதில்களை காட்சிகளாய் அத்தனை வேகமாய் ஓட்டிக்காட்டியது. கற்பனையில் இத்தனை அத்தனை வேகமாக ஓடியதில் அவன் இதைத் துடிப்பும் கூட கொஞ்சம் வேகம் எடுத்திருந்தது.

“வீட்டுக்கு வா டா”

அவளிடம் இருந்து இந்த பதில் வர வேண்டும் என்று தான் முதல் நாளே நண்பர்களிடம், அவர்கள் எப்போதும் விளையாட செல்லும் மைதானம் வேண்டாம் என்று இல்லாத காரணங்களைச் சொல்லி   “நாளைக்கு ரயில்வே கிரவுண்ட் க்கு போலாம் டா” என்று நண்பர்களையும் அவன் போக்கிற்கு சம்மதிக்க வைத்து இருந்தான்.

 

“என்ன! சைக்கிள நிப்பாட்டி சிரிச்சுட்டு இருக்க? ” மீண்டும் குட்டி மனோஜ்.

 

அதே சிரிப்போடு ஒரு பெரு மூச்சு விட்டுக்கொண்ட வீரா மனதில் ஆயிரம் எண்ணங்கள்.

 

இடது பக்கம் திரும்பினால் அவள் வீடு என்பது மட்டும் அவனுக்கு தெரியும், ஆனால், எந்த வீடு என்று தெரியாது. அவனுக்கு அப்படியே இடது பக்கமாக சைக்கிளை திருப்ப வேண்டும் போலிருந்தது.அவளைப்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொழுது பார்த்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.

 

அவன் நினைத்தது போலவே அவளே அவனை அழைத்தாள். அந்த அழைப்பு ஒரு, ஒரு மணி நேரம் முன்னதாக வந்து இருக்கலாம். குட்டி மனோஜ் அவனுடன் வராமல் இருந்திருக்கலாம்.இப்படியெல்லாம் அவன் மனதில் எண்ணங்கள் அலையாடிக்கொண்டு இருந்தது.

“பசங்களோட இருக்கேன். இல்லாட்டி வந்துருவேன்”

அவள் வீடு காலி செய்தது கூட தெரியாமல், அவளுடைய பழைய வீட்டின் பக்கம் மூன்று வருடங்கள் உலாத்திக்கொண்டு இருந்தவன். அவளைப் பார்க்க வேண்டும் என்று இத்தனை பிரயத்தனப் பட்டவன், அவள் அழைத்தும் இந்த பதிலை அனுப்ப ஒரு மண்ணாங்கட்டி காரணமும் இல்லை.

 

ஆனால், உண்மையில் அவன், அவனுடைய நண்பர்கள் யாருக்கும் அவளைப்பற்றி தெரியக்கூடாது என்று நினைத்து இருந்தான். அவனுடைய நண்பர்களுக்கு, அவள் பெயர் கூட இல்லாத யாரோ ஒருத்தி தான்.

 

“யார்ட்டா தான் பேசுற!” அதே குட்டி மனோஜ்.

 

“அவளுடைய பேர் கூட ஏன் சொல்ல க்கூடாது?” என்று கேட்பவர்களுக்கு எப்போதும் வீரா அளிக்கும் பதில்,”எனக்கு தான் பிடிக்கும்! நானா பேசுறதால அவ பேசுறா. இப்ப உங்களுக்கெல்லாம் யார் ன்னு தெரிஞ்சா வீரா ஆளுன்னு  பேச்சு வரும். சும்மா கூட யாரும் அவளை தப்பு சொல்ல கூடாது அதுக்கு நான் காரணம் ஆக கூடாது ”

 

ஆனால், அந்த பதிலை கூட அவன் குட்டி மனோஜ்க்கு  சொல்லவேண்டும் என்று  நினைக்கவில்லை. அவன் மனம் வேறு ஒரு உலகத்தில் இருந்தது.

 

நாம் நினைத்தது, நினைத்தது போலவே நடக்கும் பொழுது நம்முள் ஒரு தயக்கமும் பயமும் ஒட்டிக்கொள்ளும். அவன் நினைத்தது போலவே அவள் அவனை வீட்டிற்கு அழைத்தாள். அவனுள் ஒரு தயக்கம்.  ஒரு வேளை அன்று அவன் தனியாக வந்து இருந்திருந்தாலும் கூட  அவன் காரணங்கள் சொல்லியிருப்பான்.

 

“விளையாண்டுட்டு ஒரே வேர்வை வேற” அவளிடம்  அவன் இன்னும் காரணங்களை அடுக்கினான். அவனுடைய சைக்கிள்,  அவன் இதயம் சொன்னதை கேட்காமல்,  இடது பக்கம் திரும்பாமல், அவன் மனதில் இருந்த அத்தனை கணங்களையும் தாங்கிக்கொண்டு நேராக நகர்ந்தது.

 

அவனுக்கு அவளைப் பார்க்க வேண்டும். ஆனாலும் இப்போது வேண்டாம். ஏன் வேண்டாம்? தெரியாது.

 

அவள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவளிடம் பேசுவதற்காக எதையும் சட்டை செய்யாத அவனால் அவளிடம்  பேசுவதை மட்டும் நிறுத்த முடிவதில்லை.சைக்கிளும் பேச்சும் நிற்காமல் போய் கொண்டிருந்தது.

 

“சரி! நீ வீட்டுக்கு போயிட்டு பேசு!” என்று அவளாக அந்த பேச்சை முடித்து வைத்தாள்.

 

இப்படியான பேச்சுக்கள் முடியும் பொழுதெல்லாம், வீரா மனதில் ஒரு கவலை ஒட்டிக்கொள்ளும் மீண்டும் எப்பொழுது எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்கிற கவலை தான் அது. மீண்டும் அவளுக்கு ஒரு ‘HI’ அனுப்பிவிட்டு அவன் காத்திருக்க வேண்டும்.அதே நாளில் மீண்டும் அவனிடம் அவள் பேசுவாளா  என்கிற சந்தேகமும் அவனுள் ஒட்டிக்கொள்ளும்.

 

இப்படி அவளிடம் பேச தொடங்கியதில் இருந்து, அவள் பேச தொடங்கும் பொழுதுகளே வீராவிற்கு விடியும் பொழுதுகள் ஆனது.

 

எப்போதும், அவளுக்கு குட் மார்னிங் அனுப்பிவிட்டு, அவள் பதிலுக்காக காத்துக்கொண்டு இருப்பான்.

 

சரி!ஒரு நாள் கூட ஷாராவிடம்  இருந்து வீராவிற்கு, முதல் குட் மார்னிங் வந்ததில்லையா?

வந்தது.

அது எப்போது என்று தெரிந்து கொள்ள நீங்கள் இன்னும் சில பகுதிகள் வரை காத்திருக்க வேண்டும். ஷாராவிடம் இருந்து வந்த அந்த குட் மார்னிங் மெசேஜுக்காக  வீராவைப் போல் நீங்களும் காத்து இருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *