ஸ்டாலின் அவர்களின் 5 கட்டளைகளும்! நிர்வாக சிக்கல்களும்

ஒரு நிறுவனத்தில் ஒருவர் விட்டுச்செல்லும் பணியை மற்றொருவர் தொடரும் போது அங்கே எந்த விதமான ஆர்பாட்டங்களும் இருப்பதில்லை. அதுவே அரசாங்கம் என்று வரும் போது ஒரே பணியை அடுத்ததாக ஆட்சிக்கு வரும் கட்சி தொடரும் போது அது, பெயர் மாற்றம்; அதீத விளம்பரம்; அல்லது முன்பு ஆட்சியில் இருந்த கட்சிகளால் எதிர்க்கப்படுவது; என்று இப்படி ஏதேனும் ஒரு ஆர்பாட்டங்களுக்குள் சிக்கித்தவிக்கிறது.

நம்முடைய 23 ம் முதல்வர் அவர்கள் தன்னுடைய பணியை ஆரம்பித்திருக்கின்றார். அவர் சார்ந்த கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆரம்பித்திருக்கின்றார் என்றெல்லாம் ஊடங்களில் செய்திகள் நிரம்பிக்கிடக்கின்றது.

அவர், இட்ட முதல் 5 கையெழுத்துக்களையும் அவர் சார்ந்த கட்சியின் சில வாக்குறுதிகளையும் பற்றி அலசுவோம்.

  1. அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய்

அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கும் முயற்சி பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஆறுதலான செய்தியே. மொத்தம் 2.01 கோடி அரிசி குடும்ப அட்டைகள் இருப்பதாக தெரிகிறது அதில் 1.15 கோடி அட்டைகள் PHH வகையை சார்ந்தது 86 லட்சம் குடும்ப அட்டைகள் NPHH (சர்க்கரை மட்டுமே வாங்க முடிந்த) வகையை சார்ந்தது NPHH இல் வரும் குடும்பத்தாரர்கள் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் இந்த திட்டத்தால் பயன் பெற இயலாது. எல்லா அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் வழங்கினால் அரசின் நிதி சுமை அதிகரிக்கும் என்பதனால் இது நிர்வாக ரீதியாக ஓரளவு நல்ல முன்னெடுப்பாகவே தெரிகிறது.

2. ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பு

பால் விற்பனை விலை குறைப்பு சம்மந்தமான அரசாணை என்று பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது

ஆக , 6 ரூபாய் உயர்த்தாமல் 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்றே பொருள் கொள்ள முடிகிறது.3 ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

இப்படியான ஒரு குழப்பம் ஏற்படும்படியாகவே அநேகமான செய்திகளில் அரசாணையில் குறிப்பிட்டதை அப்படியே வெளியிட்டிருக்கிறார்கள்.

இதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து வந்த விளக்கம் என்று நக்கீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்   “அ.தி.மு.க வின் ஆட்சி காலத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதோடு விற்பனை விலையும் உயர்த்தப்பட்டது (6 ரூபாய் உயர்த்தப்பட்டது) அதிலிருந்து தற்போது புதிய அரசு 3 ரூபாய் குறைத்திருக்கின்றது” என்று இருக்கின்றது.

கொரோனா காலத்தில், தனியார் பால் விற்பனையாளர்கள் பால்  கொள்முதல் செய்வதை குறைத்துக்கொண்டதன் விளைவாய் ஆவின் பால் கொள்முதல் அளவு 31 இலட்சம் லிட்டரில் இருந்து 40 இலட்சம் லிட்டர் ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்க செயலாளர் இந்தியன் எக்ஸ்பிரஸ் க்கு அளித்த பேட்டியில்  தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கூட்டுறவுகளுக்கு கொடுக்க வேண்டிய தொகைகளை கொடுக்க முடியாமல் நிறுத்தி வைத்திருந்ததாகவும் அப்படி நிறுத்தி வைத்திருந்த தொகை 350 கோடி அளவு ஆகிவிட்டதாகவும் தெரிகிறது.கொள்முதல் விலையில் மாற்றம்  ஏற்படாமல் விலை குறைப்பு நடவடிக்கை எடுப்பது பால்  உற்பத்தியாளர் கூட்டமைப்பை பெரிதும் பாதிக்கக்கூடும். அவர்களுக்கு ஏற்பட இருக்கும் வருவாய் பாதிப்பை சரிகட்ட அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்பலாம்.

 தேர்தல் வாக்குறுதியின் படி 3 ரூபாய் விலை குறைப்பு என்பது நிறைவேற்றப் பட்டிருந்தாலும். இந்த விற்பனை விலையை எதிர்காலத்தில் உயர்த்தாமல் பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு சுமை ஏற்படாத வண்ணம் கையாள்வது அரசிற்கு பெரிய சவாலாக அமையும்.

3. மகளிர் அனைவரும், பணிக்கு செல்பவர்கள் , படிக்கும் மாணவிகள் என்று அனைவரும் சாதாரண கட்டண நகர் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

மகளிர் அனைவரும், பணிக்கு செல்பவர்கள் , படிக்கும் மாணவிகள் என்று அனைவரும் சாதாரண கட்டண நகர் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். இதனால் ஏற்படும் 1200 கோடி அதிக நிதி சுமையை மாநில அரசாங்கம் ஏற்கும் என்று.

பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்கனவே மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கின்றது, அதோடு பள்ளி மாணவ மாணவியருக்கான இலவச பேருந்து பயண அட்டையும் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றது. முதியோர்களுக்கான இலவச  பஸ் டோக்கன் (மாதத்திற்கு 10 முறை ) வழங்கும் திட்டமும் செயற்பாட்டில் இருக்கின்றது. மாற்று திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்கும் நடைமுறையும் ஏற்கனவே இருக்கின்றது, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் என்று நடைமுறையில் இருக்கும்  இலவச பேருந்து பயண சலுகைகள் இன்னும் ஏராளம். இப்படியிருக்க தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டம் என்பது போக்குவரத்து கழகத்தின் நிதி சுமையை அதிகரிக்கும். தேர்தல் வாக்குறுதியில் சாதாரண கட்டண பேருந்து என்று குறிப்பிடவில்லை ஆனால் அரசு ஆணையில் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவச பயணத்திற்கு அனுமதி என்று இருக்கின்றது. மதுரை திருச்சி போன்ற நகரங்களில் சாதாரண கட்டண பேருந்து என்பது அரிதாகிவிட்ட நிலையில் இந்த திட்டத்தை பற்றிய அதீத விளம்பரம் காலப்போக்கில் இந்த அரசிற்கும்  ஆளும் கட்சிக்கும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கின்றது.

போக்குவரத்து கழகம் தமிழக  அரசால் நிர்வகிக்கப் படுகிறதே தவிர இன்னமும் தனித்தனி corporation களாகவே இயங்குகிறது. இந்த சூழலில் இதுவரை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் இலவச பேருந்து பயண திட்டத்திற்கான எந்த ஈடு தொகையையும் தமிழக அரசு சம்மந்தப்பட்ட corporationகளுக்கு வழங்கியதாக தெரியவில்லை. இது போன்ற ஆணைகள் அரசின் நிதி சுமையை அதிகரிக்கும் என்பதை விட போக்குவரத்துக்கு கழகத்திற்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும். மக்களால் மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் நிறுவனங்கள் திவாலாகி பின் தனியார் மயமாக்க காரணம் இப்படியான அணுமுறைகளே. எத்தனை பேர் இலவசமாக எத்தனை முறை பயணம் செய்திருக்கின்றார்கள்  என்று கணக்கு வைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அரசு சார் நிறுவனகமாகவே இருந்தாலும் அதற்கான ஈடு தொகையை வழங்கும் நடைமுறை இருப்பதாகவும் தெரியவில்லை.

4.தொகுதிகளில் உள்ள குறைகளைக் கேட்க தனித் துறை அமைக்க ஆணை

தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருப்பது போலவே தொகுதிகளில் உள்ள குறைகளைக் கேட்க தனித் துறை அமைக்க ஆணை பிறப்பித்திருப்பது பாராட்டுக்குறியதே. துறை அமைக்கப்பட்ட பின்னரே அதன் செயல்பாடுகளை பற்றி பேச முடியும்.

5.முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவனைகளில் கொரோன சிகிச்சை பெறலாம்

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவனைகளில் கொரோன சிகிச்சை பெறலாம் என்னும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாக தெரிகிறது.ஏற்கனவே இருக்கும் திட்டத்தின் படி முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளர்கள் தனியார் மருத்துவமனையில் கொரோன சிகிச்சைக்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jun/04/tn-to-cover-covid-19-treatment-in-private-hospitals-under-cms-health-insurance-scheme-2152269.html


தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அரசாணை ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டத்தின் நீட்சியா அல்லது இன்னும் அதிகமானோர் பயன்பெறும் வகையில் பழைய திட்டம் முறைப்படுத்தப்பட்டு புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றதா என்பது போன்ற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *