நீங்கள் சிதம்பரம் சென்று வந்து இருக்கிறீர்களா?
சிதம்பரம் செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசையாக இருந்தது. அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தும் அது நிறைவேறாமலேயே போனது.
அது ஏன் நீண்ட நாள் ஆசை? அப்படியென்ன அங்கே இருக்கிறது? அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
திருவாசகம் ஒரு காரணம், நம் தளத்தில் திருவாசகத் தொடர் படித்தவர்களுக்கு தெரியும். இறைவனின் திருப்பாதத்தை தன் தலை மேல் வைத்து எம்பெருமான் பெருமான் என்று கத்த ஆசைப்பட்டேன் என்று மாணிக்கவாசகர் எழுதிய வாசகத்தை சிறுவயதில் படித்தது முதல் அந்த வரி நினைவிற்கு வரும் பொழுதெல்லாம் நடராஜர் எடுத்த அந்தப் பாதத்தை என் தலைமீதும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை. மதுரை வெள்ளியம்பலத்தில் நடராஜர் சிலை பெரிதாக இருக்கும். நான் அதிகம் பார்த்த நடராஜர் அவர்தான். ஆனால், சிதம்பரத்தின் இந்த பொன்னம்பல திருக்கூத்தைத் தான் பலரும் பலவாறாக மெச்சியிருக்கிறார்கள். அங்கே இந்த நடராஜர் எப்படியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும், அவரின் அந்த பாதத்தை கண்டு அதைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் தோன்றியிருக்கிறது. இது ஒரு காரணம்.
எல்லா இடங்களுக்கும் ஒரு அதிர்வு இருக்கும், சில இடங்களில் சில எண்ணங்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்கும். ஒரு இடம் வாங்கிவிட்டு என் தம்பி ஒருவனுடனும் அந்த இடத்தைப் பார்க்கச் சென்றிருந்த பொழுது, வாங்கிய இடத்தில் சென்று நான் அப்படியே அந்த மண்ணில் உட்கார்ந்து சுற்றியும் நடப்பட்டிருந்த கற்களைப் பார்த்தேன். “சும்மா கிடக்கின்ற இடத்தைச் சுற்றி கல்லை நட்டு இது உன்னது இது என்னது என்று பிரித்து வைத்திருக்கிறோமே” என்று எனக்கு தோன்றியது. என் மனதில் பட்டதை என்னைக் கவனித்த என் தம்பி என்னிடம் அப்படியே சொன்னான். எனக்கு ஆச்சரியம் எப்படி இவனுக்கும் இதே எண்ணம் வந்தது என்று. இப்படிச் சில இடங்களும் சில நேரங்களும்தான் நமக்குச் சில எண்ணங்களைத் தரும்.
பெரியபுராணம் எழுதக் கேட்டு மன்னன் சேக்கிழாரைப் பணித்த பின், சேக்கிழார் நேராகச் சிதம்பரம் சென்று என்னால் இத்தனை பெரிய பணியை உன் துணையில்லாமல் செய்ய முடியாது என்று இறைவன் முன் உட்கார்ந்துவிட்டாராம். அப்படி உட்கார்ந்த பொழுது அவருக்கு தோன்றிய வரிதான் பெரியபுராணத்தின் முதல் பாடல். “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று இறைவனே அடியெடுத்துக் கொடுத்ததாகச் சொல்வார்கள். அதே இடத்தில் சென்று நானும் கொஞ்சம் நேரம் அமர வேண்டும் என்று ஆசை.
அடுத்த காரணம், நம்முடைய கமலஹாசனும் தசாவதாரம் படமும்.
சைவர்கள் எல்லாம் சேர்ந்து விஷ்ணுவின் கோவிலில் இருந்து விஷ்ணு சிலையை அகற்றப் பார்த்தது போன்று காட்சியமைப்பு. நேரடியாக அவர்கள் அப்படி சொல்லவில்லை. இருந்தாலும் விவரமறியாதவர்கள் அந்தத் திரைப்படத்தைக் கண்டால், ஏதோ விஷ்ணு கோவிலை சிவன் கோவிலாக மாற்ற அரசன் முயற்சித்தது போன்று இருக்கும். படத்தின் தொடக்கத்தில் கோபுரத்தைக் காட்டிக்கொண்டு கமல் என்ன கதை சொல்ல ஆரம்பித்தார் என்பது நினைவில் இல்லை. ஆனால், அந்தப் பாடலும் காட்சியமைப்பும் சிவனை வணங்குகிறவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து வைணவக் கோவில்களை சிவன் கோவிலாக மாற்ற முயற்சித்தது போன்று நம் மனதில் ஒரு தோற்றத்தை நம்முள் ஏற்படுத்தியிருக்கும்.
சிதம்பரம் சென்று பார்த்தால் உண்மையில் அது சிவன் கோவில், ஒரு சிவன் கோவிலுக்கான கட்டமைப்பைத் தான் அந்தக் கோவில் கொண்டிருந்தது. ஒரு சிவன் கோவிலுக்குள் தான் பள்ளிகொண்ட பெருமாள் சிலை இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது.
சிவன் கோவிலில் தானே பெருமாள் இருந்திருக்கிறார், இவர் என்ன இப்படிப் படம் எடுத்திருக்கிறார் என்று நினைத்த பொழுது, மணிவண்ணன் கமலைப் பற்றிப் பேசியது எனக்கு நினைவிற்கு வந்தது. “அந்தாளு ஐயங்கார் தசாவதாரம்ன்னு படம் எடுப்பான், சிவனைப் பற்றி எடுப்பானா?” என்பது போலப் பேசியிருப்பார். இந்த எண்ணங்கள் எல்லாம் வந்த பொழுது தசாவதாரம் திரைப்படமும்கூட ஒரு வகையான பிரச்சாரப் படம்தான் என்று தோன்றியது.
அந்தத் திரைப்படம் நம்மையறியாமல் நமக்குள் சில விஷயங்களைப் புகுத்தியது. சைவர்கள் கொடுங்கோலர்கள், பெருமாள் கோவில்களில் இருந்து பெருமாள் அப்புறப்படுத்தப்பட்டார். இறுதியில் கடலுக்குள் இருந்து வந்து பெருமாள் தான் நம்மை காப்பாற்றினார். இது இல்லாமல் இங்கே நாம் ஒரு கலாச்சாரமாக, ஒரு சமயமாக இருந்திருக்கவில்லை என்கிற ஒரு கருத்தை நம்முள் அந்தத் திரைப்படம் விதைத்தது.
சிவாலயத்திற்குள் தான் பெருமாள் சிலை இருந்திருக்கிறது அப்படியென்றால் கமல் பொய் சொல்லிவிட்டாரோ? இல்லை. சில விஷயங்களை அவர் மிகைப்படுத்தியிருந்தார், சில விஷயங்களை அவர் சொல்லாமல் விட்டார்.வெளிப்படையாக சிவன் கோவில் என்பதை காட்சிப்படுத்திருக்க மாட்டார், அந்த சம்பவம் நிகழ்வதற்கு பல நூறு ஆண்டுகள் ஒரே கோவிலில் சிவனும் விஷ்ணுவும் இருந்ததை சொல்லியிருக்க மாட்டார்.
சிதம்பரத்தில், நடராஜர் ஒரு பக்கமும் பள்ளிகொண்ட பெருமாள் ஒரு பக்கமுமாக இருந்திருக்கிறார்கள். அதில் பள்ளிகொண்ட பெருமாளைத் தான், சிவன் மீதும் சைவத்தின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக சிதம்பரம் கோவிலை முழுமையான சிவாலயமாக மாற்றி விரிவுபடுத்துவது என்று தீர்மானித்து, பெருமாள் சிலையை அப்புறப்படுத்த ஆணையிடுகிறார் இரண்டாம் குலோத்துங்க சோழன்.
அப்படியென்றால் இந்தக் கமலஹாசன், பெரியாரியவாதிகள் மற்றும் சீமான்கள் பேசிக்கொண்டிருப்பது போல் சனாதன தர்மம் என்பது ஒன்று இல்லை, சைவம் வைணவம் என்று வேறு வேறு சமயங்களாகப் பிரிந்திருந்தது தானா? நிச்சயமாக இல்லை.அந்த நிகழ்வு ஒரு சமய சண்டையாக உருவகப் படுத்தப்பட்டு விட்டது. சோழன் அப்படியிருந்திருநதால் பெருமாள் கோவில்கள் இல்லாமல் போயிருக்கும்.
அதைப் புரிந்துகொள்ள நாம் இரண்டாம் குலோத்துங்க சோழனின் காலத்திற்கு முன் செல்ல வேண்டும். அதோடு கோவில் என்ன முறையில் கட்டப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கோவில் சைவ ஆகம முறைப்படி கட்டப்பட்டு இருக்கிறது. இன்றைக்கு இருக்கின்ற அளவிலேயே அது முதலில் நிறுவப்படவில்லை. முதலில் அங்கே ஒரு சுயம்பு லிங்கத்தை வணங்கி வந்து இருக்கிறார்கள். அதற்குப் பிறகு மரத்தினால் கனகசபை நிறுவப்பட்டிருக்கிறது. அதற்குப் பின்னால் கோவிலாக நிர்மாணிக்கப்பட்ட பின், கோவிந்த ராஜ பெருமாள் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. பின் பல்லவர்கள் அதை விரிவுபடுத்தினார்கள். பல்லவர்கள் இதைச் செய்த காலத்தில் எல்லாம் சைவம் பெரிதா வைணவம் பெரிதா என்கிற வேறுபாடோ வெறுப்போ மக்கள் மனதில் இல்லை. அதோடு ஒரு சிவாலயத்தில் பெருமாள் சிலையை வைக்கக் காரணம் இருந்திருக்கிறது.
புராணங்களின்படி காளி தேவியைத் தோற்கடிக்கச் சிவன் ஆடிய ஆனந்தத் தாண்டவத்திற்குப் பெருமாள்தான் சாட்சியாக இருந்திருக்கிறார். இந்தச் செய்தியைப் பதியவே, பெருமாள் இறைவனின் ஆனந்தக் கூத்தைப் பள்ளிகொண்ட படி பார்க்கும் படியாகக் கோவிந்தராஜப் பெருமாளை நிறுவியிருக்கிறார்கள்.
சிவனின் ஆனந்தத் தாண்டவம் பெருமாளின் பாற்கடல் எல்லாவற்றிற்கும் பின்னால் தத்துவக் காரணங்கள் இருக்கிறது. அதற்குள் சென்றோமேயானால் இந்தப் பகுதியில் நாம் சொல்ல வந்ததைச் சொல்வதற்குள் கட்டுரை அனுமார் வால் போல நீண்டுவிடும்.
இங்குச் சனாதன தர்மம் என்கிற ஹிந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை, சைவம் வைணவம் என்று வேறு வேறு சமயங்களாக நீங்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டீர்கள் என்கிற கருத்தை நிறுவப் பார்க்கிறவர்கள் இப்படிச் சில விஷயங்களை லாவகமாக உதறிவிட்டு வரலாற்றில் இருந்து அவர்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள்.
சைவம் வைணவம் இரண்டும் ஒன்றுக்கொன்று தீண்டத்தகாததாக இருந்திருந்தால், ஒரு சிவாலயத்திற்குள் எப்படிப் பெருமாள் வந்திருப்பார்? சிவனின் திருக்கூத்திற்குப் பெருமாள் சாட்சியாக இருந்தார் என்று எப்படி எழுதியிருப்பார்கள்?
பின்னர் ஏன் இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளை அப்புறப்படுத்தினான்? இங்கே நம் மண்ணில் நாம் எதையும் இறைவனாக வணங்கலாம் எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்கிற கலாச்சாரமே தான் இருந்தது. வேதங்களும் புராணங்களும் அதைத்தான் நமக்குப்போதித்தது. அதிலிருந்து அவரவர் அவரவர் விருப்பத்திற்கேற்ற வழிகளைப் பின்பற்றி வந்தாலும், இது வேறு அது வேறு என்கிற எண்ணம் யாருக்கும் இல்லை. எல்லாம் ஒரு மூலத்தில் இருந்து வந்தது தான் என்கிற புரிதல் நம் மண்ணில் இருந்தது. இப்படிச் சமயத்தில், அப்போதைய பெரியாரியவாதிகளாக ஜைனம் எனும் சமணம் தோன்றுகிறது. வடக்கில் தோன்றிய அதைத்தான் இன்று பலர் தமிழர்களின் மதம் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சமணமும்கூட வேதத்தின் ஒரு வகையான புரிதல்தான்.பகவத் கீதையை பெரியரியவாதிகள் முன்முடிவோடு புரிந்து கொள்வதை போன்ற புரிதல் அது. சமண சமயத்தின் படி இறைவன் என்று யாருமே இல்லை. சமணத்தை வேத கருத்தில் இறைவன் உருவமற்றவர் தோன்றாதவர் என்கிற கருத்தில் இருந்து தனி மதமாகத் தோற்றுவித்தவர்கள் அதோடு நிற்கவில்லை. அவர்கள் இன்றைய சாதி சங்கங்கள் மற்றும் மிஷினரிகள் போன்று அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அவர்கள் கருத்தைப் பரப்புகிறார்கள். எல்லாமே ஒன்று தான் என்று இருந்த சமூகத்தில் நான் தனி என்று ஒருவன் கிளம்பவும், மற்ற கருத்துக்கள் தத்துவங்கள் எல்லாம் அழிந்துவிடக்கூடாதென்று மற்றவர்களும் சங்கங்கள் போன்று ஒரு அமைப்பை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
சைவ வைணவ மடங்கள் தோன்றுவதற்கு இது தான் காரணமாகிறது. சமணம் ஒரு பக்கம் இது மட்டும்தான் வழி என்று பிரச்சாரம் செய்து ஒரு மதமாக ஸ்தாபித்துக்கொண்டு மக்களை மாற்றிக்கொண்டிருக்கும் பொழுது மற்றவர்கள் நாமும் இதைச் செய்தே ஆகவேண்டும் என்கிற உணர்வுக்குள் தள்ளப்படுகிறார்கள். அப்படியான நிர்பந்தங்களுக்குப் பின்னால் நடந்த சண்டைகளைக் கடவுளை வணங்காத கமலஹாசன்களும் பெரியாரியவாதிகளும் கட்சி ஆரம்பித்த பொழுது கடவுள் இல்லை என்றுவிட்டு, தமிழ் இலக்கணத்தில் நிலங்களுக்குரிய தெய்வங்கள் இருக்கிறதே என்றதும் முருகன் முப்பாட்டன் என்று விட்ட சீமான்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
கடவுள் இல்லை என்று பேசிக்கொண்டிருந்த கூட்டம் தான் இன்று முருகனைத் தமிழ்க் கடவுள் என்று தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. நிலங்களுக்குரிய தெய்வங்களில் சிவன் ஒரு தெய்வமாக இல்லை பெருமாள் இருக்கிறார், இவர்கள் பெருமாளை விட்டுவிட்டார்கள்.சிவனையும் முருகனையும் மட்டும் பிடித்துக்கொண்டார்கள். காரணம், பெருமாள் இவர்கள் தோதிற்கு ஏற்றவாறு எல்லா இடங்களிலும் இருப்பதில்லை.
சைவ ஆகமங்கள் சமஸ்கிருதத்தில் இருக்கிறது. அதைச் சைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். எப்படி இரண்டாம் குலோத்துங்க காலம் வரை மட்டும் நாம் வரலாற்றைத் தோண்டினால் சைவம் வைணவம் வேறு வேறாகத் தெரிகிறதோ அப்படி நம்மை யாரென்றே தெரியாத ஆங்கிலேயர் ஆய்விற்குப் பின்னால் வந்த பெரியரியவாதிகள் காலத்தில் இருந்து வரலாற்றைத் தோண்டினால் முருகனும் கார்த்திகேயனும் வேறு வேறாக தான் தெரிவார்கள்;
முருகன் எங்களுக்கு மட்டுமான கடவுள் என்று இவர்கள் கொடி பிடித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.
தமிழில் கந்த புராணம் எழுதியவரைக் கேட்டால் அவர் சமஸ்கிருதத்தில் இருந்து தான் கந்த புராணத்தை மொழிபெயர்த்து எழுதினேன் அதையும் முழுமையாகச் செய்யவில்லை என்று ஒப்புக்கொள்வார். திருமுருகாற்றுப் படையும் கூட முருகன் வடக்கில் பிறந்ததை ஒப்புக்கொள்கிறது.
“வடக்கில் பிறந்து, நாட்டின் மையத்தில் வார்க்கப்பட்டுத் தெற்கை ஆண்டவர்” என்றதும்; “ஐயோ! அவர் எங்கள் தமிழ்க் கடவுள்; எங்களுக்கும் மட்டுமான கடவுள்” என்று போட்டிக்கு படமெடுக்க கிளம்புவதற்குப் பெயர் மதவாதம் இல்லை. இந்த தேசம் முழுவதற்குமான கடவுளாக முருகனைக் காண்பிக்கிறவர்; திருமுருகாற்றுப் படையில் சொன்னதை ஏற்றுக்கொண்டு வடக்கில் பிறந்தவர் என்று சொல்கிறவர்கள் மதவாதிகள், வரலாற்றைத் திரிக்கிறவர்கள்.
சைவமும் வைணவமும் வேறு வேறாக இருந்தது என்று 12-ம் நூற்றாண்டிற்குப் பின்னான கதைகளைக் கொண்டு வருகிறவர்களால், முருகன் சிலையைய்த் தமிழ்க் கடவுள் என்று சொல்லி மசூதிக்குள் வைக்க முடியுமா? 12-ம் நூற்றாண்டில் அப்புறப்படுத்தப்பட்ட பெருமாள் சிலை மீண்டும் விஜயநகரப் பேரரசின் காலத்தில் அதே கோவிலில் நிறுவப்பட்டிருக்கிறது. மூலமும் வேரும் ஒன்றாக இருந்ததால் அதைச் செய்ய முடிந்தது.
கடவுள் இல்லை என்கிறவர்கள் தமிழ் பற்றும் கொண்டிருப்பதாகத் தங்களைக் காட்டிக்கொண்டது தான் அவர்களுக்கு இப்படியொரு சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது. சீமான் போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் கடவுள் இல்லை என்றார்கள்; முருகன், மாயோன் என்று தமிழ் தெய்வங்கள் இருக்கிறதே என்று கேட்டதும்; “ஆம்! கடவுள் இல்லை தெய்வங்கள் இருக்கிறது முருகன் முப்பாட்டன்” என்று கிளம்பி விட்டார்கள்.
இவர்களில் ஒரு பயலும் திருமுருகாற்றுப்படை படித்திருக்க மாட்டான். ஒரு பயலும் கந்தபுராணமும் படித்திருக்க மாட்டான். கேட்டால் அதெல்லாம் இடைச்செருகல் என்பார்கள் இவர்கள். 1008 இசை சந்தங்களைக் கொண்ட திருப்புகழில் சம்ஸ்கிருத வார்த்தைகள் இருக்கிறது. திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, கந்தபுராணம் இதையெல்லாம் விட்டுவிட்டு முருகனைப் பற்றிப் பேச முடியுமா? தமிழின் பெருமை மிகு இந்த நூல்களையும்கூட ஆரியத் திணிப்பு என்று இந்தக் கூட்டம் பேசக் கூடும். ஆயிரம் ஆண்டு பழமையான நூல்களுக்கு எதிராகச் சில நூறு ஆண்டுகளுக்குள் இந்தக் கூட்டத்தில் ஊறிய மட்டை ஒன்று இவர்களின் ஆங்கிலேய ஐரோப்பிய முப்பாட்டன் எழுதிய கதைகளைக் கொண்டு எங்க முருகன் வேற உங்க முருகன் வேற என்று பிரிவினை பேசிக்கொண்டு திரியும், போட்டிக்கு நானும் முருகனை வைத்துப் படம் எடுக்கிறேன் என்று கிளம்பும். இதற்கு பெயர் பிரிவினை அரசியல் இல்லை.
இவர்கள் செய்வதெல்லாம் பிரிவினை இல்லை. இவர்களுக்கு இருப்பதற்குப் பெயர் வெறியில்லை. ஆனால், இவர்கள் எதிரியாக உருவாக்கிக்கொண்ட சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிற அனைவரும் மதவாதிகள். முருகன் வடக்கில் பிறந்தவர் என்பதை ஏற்கும் தமிழன் ஆரிய வந்தேறி. சமஸ்கிருத வார்த்தைகளைத் தமிழ் நூலில் பயன்படுத்திய அருணகிரி நாதரும் கூட இவர்கள் பார்வையில் ஆரிய வந்தேறி தான். ஆனால், பிருங்கி ரிஷியின் பெயரில் இருந்த பரங்கி மலையைப் போர்ச்சுகல் படையெடுத்து வந்த பின் தாமஸ் மவுண்டாக மாற்றிய கதைகளுக்குப் போட்டியாக எங்கள் அடையாளத்தைப் போர்ச்சுகல் பறித்துக்கொண்டது அது எங்கள் பரங்கிமலை என்று படமெடுக்க மாட்டார்கள், அப்படி ஒருவன் எடுத்தால் அவன்தான் மதவாதி, அவன்தான் பிரிவினைவாதி. பரங்கிமலை தாமஸ் மவுண்டாக ஆனால் பிரச்சனை இல்லை.
போர்ச்சுகல் இந்தியா வருவதற்கு முன்னம் இருந்தே இருக்கும் மலைக்கு பிருங்கி முனிவர் தவமிருந்ததாக நம் ஆயிரம் வருடங்களுக்கு மேல் அனுசரித்து வந்த மலைக்கு இவர்கள் கல்வெட்டு ஆதாரம் கேட்பார்கள். ஐரோப்பியர் அரேபியர் வந்து தான் அதற்கு பரங்கி மலை பெயர் வந்தது என்பார்கள். இங்கே வரலாறு வெறும் கல்வெட்டுகளாக மட்டும் இருந்திருக்கவில்லை மக்களோடு மக்களாகவும் இருந்திருக்கிறது.கல்வெட்டில் இல்லையென்றால் ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் கழிக்க போகவில்லை என்று ஆகாது.இந்திய வரலாறு என்பது மரபு செவிவழிச் செய்திகளையும் (Oral traditions), நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது.
கார்த்திகேயன், சரவணன், குகன், சுப்பிரமணியன், ஷண்முகன் என்கிற சம்ஸ்கிருத பெயர்களைக் கொண்ட முருகன் இந்திய மக்களுக்கான அதாவது நம் எல்லோருக்குமான கடவுள் என்று சொன்னால் தான் பிரச்சனை. சேயோன் என்று ஏன் முருகனைச் சொல்கிறார்கள்? சிவந்தவன் என்கிற அர்த்தத்திலும் குழந்தை வடிவில் வணங்கப்படுகிறவன் என்கிற அர்த்தத்தில் அப்படி சொல்கிறார்கள். இவர்களின் முப்பாட்டன் ஆங்கிலேயன் ஆய்வு படி திராவிடன் கரு நிறத்தவன்; இதில் முருகன் மட்டும் எப்படி சிவந்தவன் அதையும் கூட இல்லை என்பார்கள் இந்த பாதகர்கள். திராவிடர்களை கருத்தவர்கள் என்று ஏற்றுக்கொண்டு கருநிற ராமனை ஆரியன் என்றவர்கள் தானே இவர்கள்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட எந்தச் செய்யுளிலும் சிலையிலும் மீசை வைத்து மொடா குடிகாரன் போல் முருகனை உருவகம் செய்யவில்லை. இந்தக் கூட்டம் அதையும் செய்து எங்க முருகன் வேற என்கிற பிரிவினை பேசிக்கொண்டிருந்தது, ஆயிரம் வருடங்களாக இருக்கும் சாட்சியங்களை ஒதுக்கிவிட்டு ஆங்கிலேய முப்பாட்டன்களும் கடவுள் இல்லை என்கிற கூட்டம் எழுதி வைத்ததை சாட்சியங்களாக எடுத்துக்கொண்டு வருகிறது.
இராவணன் எப்படி தன் அகந்தையால், ஆசையால் அழிந்தானோ, அரசியலுக்காக நம்மை ஒரு சமுத்திரத்தில் இருந்து தனியாகப் பிரிக்கும் வேலையைச் செய்யும் இந்த ராவண அரசியல் தானாக மறையும்.