தாவீது – கோலியாத் கதை படித்து இருக்கிறீர்களா? தமிழர்கள் நிச்சயம் படித்திருப்பார்கள். தமிழில் தான் எல்லா சமய நூல்களும் இருக்கிறதே. அதிலும் தாவீது கோலியாத் கதையில், வீரமாமுனிவரின் இந்தச் செய்யுளைப் படித்த யாரும் அதை மறந்திருக்க மாட்டார்கள்.
கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக் கல்
ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர்;
இடிக்கும் செல்லை ஒத்து அன்ன சிலை நுதல் பாய்தலும்,
அன்னான் எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும் கண்டார்.
நம் ஊர் திரைப்படங்களில் வரும் நாயக பிம்ப கட்டமைப்புக் காட்சிகளுக்குச் சற்றும் குறைவில்லாத காட்சியை அதே தோரணையில் விவரிக்கும் செய்யுள். நாயகன் எப்போது அடித்தான் என்பது தெரியாது. ஆனால், எதிரி விழுந்ததைக் காண்பிப்பார்கள். அப்படியான ஒரு காட்சியை விவரிப்பதுதான் அந்தச் செய்யுள்.
கவண் என்றால், நம் ஊரில் காக்கை குருவிகளை அடிக்கச் சிலர் பயன்படுத்திப் பார்த்திருப்பீர்களே அந்த ஆயுதம் தான். கீழே உங்களுக்காகப் படத்தையும் கொடுத்துள்ளேன்.

ஏலா (Elah) பள்ளத்தாக்கில் இஸ்ரவேல் படையும் பெலிஸ்தியப் படையும் போர்முனையில் இருக்கிறது. பெலிஸ்தியர்களிடம் ராட்சசன் போன்ற ஒன்பது அடிக்கும் மேல் பெரிய உருவம் கொண்ட ஒரு வீரன் இருந்தான். அவன் பெயர் தான் கோலியாத். போர்முனையில் இரண்டு படைகளும் இருக்க, கோலியாத் அவனோடு சண்டையிட ஒரேயொரு வீரனை அனுப்புங்கள், வெற்றி யாருடையது என்று தீர்மானித்துக் கொள்ளலாம் என்று சவால் விடுகிறான். நாற்பது நாட்களுக்கும் மேல் அவனின் சவாலை ஏற்க இஸ்ரவேல் படையில் இருந்து ஒருவரும் முன்வரவில்லை.
போருக்குத் தேவையான திடமான உடல் வலு (strength) மற்றவர்களை விடத் தன்னிடம் அதிகம் இருந்தது குறித்து கோலியாத்துக்கு ஒரு ஆணவமும் பெருமிதமும் இருந்திருக்க வேண்டும். அவன் இஸ்ரவேல் படையையும் கடவுளையும் நிந்தனை செய்கிறான். கேலி செய்கிறான். அந்தச் சமயத்தில், தண்ணீர் கேன் போட வந்த பாலகன் தான் தாவீது. ஆங்கிலத்தில் டேவிட். இஸ்ரவேல் படையில் இருந்த தன் சகோதரர்களுக்கு உணவு கொண்டு வந்த ஆடு மாடு மேய்க்கும் பாலகனான தாவீது கோலியாத்தின் அறைகூவலையும் இறை நிந்தனையையும் கேட்கிறான். “யாருடா இவன் இறைவனையே நிந்தனை செய்கிறான், அவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது போல் அறைகூவல் விடுகிறான்” என்று நினைத்தான் தாவீது.
கோலியாத்தை எதிர்க்கத் துணிகிறான். அரசர் தாவீதிடம், கவசங்களைப் போட்டுக் கொள்ளச் சொல்கிறார். தாவீது அதெல்லாம் போட்டுக்கொண்டால் என்னால் வேகமாக ஓட முடியாது என்று கவசங்களும் கூட இல்லாமல், இறைவனை மட்டும் கவசமாகக் கொண்டு கோலியாத்துடன் சண்டையிடத் தயாரானான். அந்தச் சண்டை எப்படி ஒரு பக்கச் சண்டையாய் முடிந்தது என்பதைச் சொல்வது தான் அந்தச் செய்யுள். வேகமாக கோலியாத்தை நோக்கி ஓடிய தாவீது, கல்லைக் கவணில் ஏற்றி கோலியாத்தின் நடு நெற்றியை குறிவைத்து அடிக்க, அத்தனை பெரிய கோலியாத் நிலை தடுமாறிக் கீழே விழுகிறான். விழுந்ததும் அவன் கத்தியைக் கொண்டே அவனுடைய தலையை வெட்டுகிறான் தாவீது.
இங்கே நடந்தது என்ன? கோலியாத்தை வீழ்த்தியது எது? நம்முடைய பலங்களைக் கொண்டு பலவீனமானவர்களோடு போட்டி போடக்கூடாது. அது தரும் ஆணவம் நம்மை வீழ்த்திவிடும். அப்படித் தன் உடல் பலத்தின் முன் யாரும் நிற்க முடியாது என்று நினைத்துக்கொண்டு இறைவனைச் கூட நிந்தித்த கோலியாத்தின் ஆணவம் தான் அவனை வீழ்த்தியது. சரி! யாருக்கும் வராத வீரமும் தைரியமும் ஏன் ஒரு சிறுவனுக்கு வரவேண்டும்?
அவன் கோலியாத்தின் உருவத்தை விடவும் இறைவனே பெரியவர் என்று நினைத்தான். எல்லாமே இறைவன் தானே நடத்துகிறார். இந்த நம்பிக்கையை அங்கிருந்த போர் வீரர்கள் யாருக்கேனும் கொடுத்திருக்கலாமே! போர் வீரனால் கோலியாத் வீழ்த்தப்பட்டிருந்தால் அது மிக சாதாரணமானதாக இருந்திருக்கும். அப்படியொரு வீழ்ச்சி கோலியாத் என்னும் பருவுடலைத் தான் வீழ்த்தியிருக்கும்; வீழ்த்த வேண்டியது ஆணவத்தை. ஒரு சிறுவன் அத்தனை பெரிய உருவத்தை வீழ்த்தி விட்டான் என்பது தான் ஆணவத்தின் வீழ்ச்சி.
நாற்பது நாள் யாரும் எதிர்க்கத் துணியாத பெரிய சூரனை ஒரு சிறுவன் எதிர்த்து வெற்றியடைகிறான். என்ன நடக்கும்? தாவீது இஸ்ரவேலின் நாயகனானான். பின்னாளில் அவன் மன்னனாகவும் ஆகிறான். கோலியாத்தை வீழ்த்தி அரசனான தாவீது பின்னாளில் என்ன ஆனான்? அரசனான தாவீது ஜெருசலேமைக் கைப்பற்றி அதைத் தலைநகராக்குகிறான். பிரிந்து கிடந்த இஸ்ரவேல் கோத்திரங்களை ஒன்றிணைக்கிறான். சுற்றியிருந்த அனைத்து எதிரி நாடுகளையும் வென்று, நாட்டிற்கு அமைதியையும் செல்வத்தையும் கொண்டு வருகிறான்.
இப்படி இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களைச் செய்து வெற்றியும் புகழும் கொண்டிருந்த தாவீது, அவனுடைய பிள்ளைகள் அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வது கண்டு இறுதிக் காலத்தில் வேதனையோடு மரணமடைகிறான்.
கடவுளை நம்பிய தாவீதுக்கு ஏன் இப்படி நடக்கவேண்டும்? வளரும் புகழ் வருவதற்கு முன் இறைவனே கதி என்று கோலியாத்துடனான முதல் போரில் அவன் எடுத்த கடவுள் முழக்கம் அவன் பெரிய அரசனாகும் வரை தொடர்ந்தது. பெரிய அரசனானதும் சோம்பேறியாகிறான். இறைவன் மீதான பக்தி குறைகிறது. அரசனாக அவனே போர்களை முன்னின்று நடத்தாமல், வீரர்களைப் போர்முனைக்கு அனுப்பிவிட்டு அரண்மனையில் சொகுசாகக் காலம் கழிக்கிறான். அந்தச் சமயத்தில் அவனுக்கு விசுவாசமான ஒரு வீரனின் மனைவியை அபகரிக்கிறான். ஒரு மாபெரும் அரசராக, தான் எதைச் செய்தாலும் கேட்க ஆள் இல்லை என்ற எண்ணம் அவனுக்குள் வந்தது. தாவீது அவனுடைய ஒரு பாவச்செயலை மறைக்க இன்னொரு பாவச்செயலைச் செய்கிறான்.
ஒரு கட்டத்தில், ஒரு தீர்க்கதரிசி தாவீதின் தவறுகளை அவனுக்கு உணர்த்துகிறார். இறைவன் அவனை மன்னித்தாலும் தாவீது அவன் செய்த வினைகளின் பயனை அனுபவிக்கவே செய்தான். அவன் பாவங்களின் விளைவு தான் அவனுடைய பிள்ளைகள் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டது.
ஆடு மேய்க்கும் சிறுவனாக இருக்கிற பொழுது இருக்கின்ற இறை நம்பிக்கை, செல்வாக்கு, பதவி, அதிகாரம் வந்ததும் மறந்து போகிறது. எத்தனை வளர்ந்தாலும் இறைவனை மறக்காமல் இருந்தால் நாம் பெரிய பாவச்செயல்களில் ஈடுபடப் போவதில்லை.
இறைவனை அருள் மிகுந்தவன் என்கிறார்களே! தாவீதின் வீழ்ச்சி இப்படி இருந்திருக்க வேண்டுமா? இறைவன் இந்த உலகம் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு என்று சில இயற்கை நியதிகளை வைத்துள்ளார்; அது அதிலிருந்து மாறுபடுவதில்லை. அவரே அந்த இயற்கைக்குள் உருக்கொண்டு அவதாரமாக வந்தாலும் அவரும் அந்த விதிகளுக்கு உட்பட்டுத் தான் செயல்பட முடியும் என்கிறது கீதை.
இஸ்ரவேலின் தாவீது – கோலியாத் கதை போன்று ஒரு பெரிய சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்த ஒரு சிறுவனின் கதை நம்மூரிலும் இருக்கிறது. இஸ்ரவேல் கதையை விடப் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது.
பிரகலாதனின் பேரன் பலியின் கதை. பிரகலாதன் விஷ்ணு பக்தன் என்பதைத் திரைப்படத்தில் கூடப் பார்த்து இருப்பீர்கள். ஆனாலும், அவன் அசுர குலத்தைச் சேர்ந்தவன். அவனுடைய மகனுக்கும் தேவர்களுக்கும் போர் வருகிறது. அந்தப் போரில் பிரகலாதனின் மகன் தேவர்களால் கொல்லப்படுகிறான்.
இப்பொழுது கதையில் மகாபலி வருகிறார். தந்தையைக் கொன்ற தேவர்களைப் பழிவாங்கக் கிளம்புகிறார். அசுர குருவின் உதவியோடு பெரிய யாகங்கள் நடத்திப் பெரிய ஆற்றல் பெற்று மூன்று உலகையும் வென்று விடுகிறார். தேவர்கள் என்ன செய்கிறார்கள்? ஐயா! சாமி! போரில் எங்களை வெற்றிகொண்டு எங்களை அடித்துத் துரத்திவிட்டான், அவனை ஒழித்துக்கட்ட உதவி செய்யுங்கள் என்று மகாவிஷ்ணு காலில் விழுகிறார்கள்.
விஷ்ணு அதற்கு முன்பு மகாபலி தேவர்களை வென்ற போரிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். காரணம், தேவர்கள் பக்கம் தவறு இருந்தது; அதோடு அவர்களுக்கும் ஆணவம், யார் தங்களை வெற்றிகொண்டு விடுவார்கள் என்று. அதனால், விஷ்ணு அமைதியாக இருந்து விட்டார்.
இப்பொழுது தஞ்சம் அடைந்த தேவர்களின் கோரிக்கையையும் விஷ்ணு ஏற்றுக்கொள்ளவில்லை. மகாபலி நல்ல மன்னன், தர்மத்தின்படி அரசு புரிகிறான், அவனை ஏன் அழிக்க வேண்டும் என்று விஷ்ணு தேவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இயற்கை ஒழுங்கை மீண்டும் கொண்டு வர வேண்டும், அதாவது நானே ஆளுநர், நானே ஜனாதிபதி, நானே பிரதமர் என்று இருக்க முடியாதில்லையா? எல்லாவற்றிற்கும் ஒரு ஒழுங்கு இருக்கிறது, அதை மீண்டும் கொண்டு வர எண்ணி, மகாபலியின் ஆணவத்தை மட்டும் அழித்தால் போதும் என்று வாமன அவதாரம் எடுக்கிறார் விஷ்ணு.
குள்ளமான பிராமணச் சிறுவனாக (வாமனர்) உருவெடுத்த விஷ்ணு, நர்மதை ஆற்றங்கரையில் மகாபலி நடத்திக் கொண்டிருந்த யாக சாலைக்கு வந்தார். மகாபலியிடம் தன் காலடியால் மூன்றடி மண் மட்டுமே தானமாகக் கொடுக்கச் சொல்லிக் கேட்டார். வந்தது சாட்சாத் மகாவிஷ்ணு என்பதை உணர்ந்த குரு சுக்கிராச்சாரியார், தானம் கொடுக்க வேண்டாம் எனப் பலியைத் தடுத்தார். ஆனால், “வந்திருப்பது இறைவனே என்றாலும், கொடுத்த வாக்கை மீற மாட்டேன்” என்று கூறிப் பலி தானம் கொடுக்க ஒப்புக்கொண்டார். வாமனர் முதல் அடியில் ஒட்டுமொத்த பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணுலகத்தையும் அளந்தார்.
குள்ளன் என்று தானே நினைத்தாய், இரண்டடியில் நீ வென்று வைத்திருந்த மொத்தத்தையும் அளந்துவிட்டேன் என்கிற தொனியில், இனி மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்டதும் தான் இவனுக்கு உரைக்கிறது. மூவுலகங்களையும் வென்றாலும், யார் என்ன கேட்டாலும் கொடுக்க முடிகிற பெரிய அரசனாக இருந்தாலும், நம்மை விட எப்போதும் இறைவனே பெரியவன் என்று அவனுக்கு உரைக்கிறது. மூன்றாவது அடியை அவன் தலை மீது வைக்கச் சொல்கிறான். மகாபலியின் ஆணவம் அழிந்தது, அவனுக்கு இறைவன் வரம் கொடுத்தார் என்று கதை அடுத்த கட்டத்திற்கு நீள்கிறது.
வளரும் வரை கடவுள் கடவுள் என்று கடவுளின் பெயர் சொல்லி வளர்ந்து, பெரிய புகழை, செல்வங்களை, வெற்றிகளை அடைந்துவிட்டு, வளர்ந்ததும் புகழ் போதையில் இறைவனை மறந்து, காரண காரியமின்றி ஆசைகளின் உந்துதலால் பாவங்களைச் செய்த தாவீது அதன் பலன்களை அனுபவித்தான். கோலியாத்தின் ஆணவத்தை அழிக்க இறைவன் தாவீதைப் பயன்படுத்தியதால் தாவீது பெரிய நாயகன் இல்லை, அவனும் அவனுடைய பாவங்களுக்கான விளைவுகளை ஒரு நாள் சந்திப்பான் என்பது தான் நமக்குப் பாடம். அசுர குலத்தில் இருந்து வந்திருந்தாலும், தன்னுடைய தந்தையின் மரணத்திற்கான நியாயம் வேண்டித் தேவர்களோடு போர் புரிந்து வெற்றி பெற்றாலும், ‘தான்’ என்கிற அகம்பாவம் கொண்டிருந்ததைத் தவிர்த்துத் தர்மத்தின் வழி நின்ற மகாபலி எந்த மோசமான விளைவுகளையும் சந்திக்கவில்லை. இறைவன் அவனுடைய ஆணவத்தை அழித்ததோடு நிறுத்திக்கொண்டார்.
நாம் எத்தனை வெற்றிகள் கொண்டாலும் அகம்பாவம் கொண்டாலும் மகாபலி போன்று தர்மம் வழுவாமல் இருக்கப்போகிறோமா? இல்லை தாவீது அவனுடைய பாவங்களுக்கான விளைவுகளைச் சந்தித்தது போன்று சந்திக்கப் போகிறோமா?
இந்தக் கட்டுரையைப் படித்த நம் ஆசிரியர் குழு ஆசிரியர் ஒருவர், இது ஆன்மீகக் கட்டுரைதானா என்று சந்தேகம் எழுப்பினார். ஏன் என்று கேட்டதற்குத் தற்போதைய அரசியல் நிகழ்வுகளுடன் இது ஒத்துப் போகிறது என்றார்.
எப்படி என்று கேட்டேன்? “தங்களை யாரும் வீழ்த்த முடியாது என்று நினைத்த திராவிடக் கட்சிகள் கோலியாத்தாகவும், வளரும் வரை ரஜினியின் பெயர் சொல்லித் துதிபாடிவிட்டு இப்பொழுது ஆள் வைத்து ரஜினியைத் தூற்றி, அதிமுக திமுக பிரமுகர்களை இணைத்துக்கொண்டு திமுக செய்த manipulation வேலைகளை இன்னும் திறன்படச் செய்துகொண்டிருக்கும் விஜய் தாவீதாகவும் தெரிகிறார். வாமனர் போல் சாத்வீக வழியில் தன்னை எதிர்ப்பவர்களின் ஆணவத்தைக் கையாளும் ரஜினி இருக்கிறார்” என்றார்.
ஜோசப் அம்மா வயிற்றில் முட்டையாக இருந்த பொழுதே ரஜினி வளர்ந்து விட்டார். ரஜினி பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே தாவீதின் கதை எழுதப்பட்டு விட்டது. அதற்கும் பல்லாயிரம் வருடங்கள் முன்பாகவே வாமன அவதாரம் பற்றிய கதைகள் நமக்குச் சொல்லப்பட்டுவிட்டது. அரசியல் சாக்கடைக்குள் ஆன்மீகத்தை நுழைக்க முடியாது. இரண்டையும் குழப்பிக்கொள்ளாதீர்கள் என்றேன். உங்கள் யாருக்கும் அப்படித் தோன்றினால் உங்களுக்கும் பக்தி இல்லை என்று தான் கொள்ளவேண்டும்.
தாவீதோ, யோசேப்போ வினைப்பயன் குறித்தும், வளரும் வரை கைபிடித்துக் கொண்ட இறைவன் குறித்தும் எப்போதும் கவனம் கொண்டு செயல்பட வேண்டும். ஆணவம் கொண்டு செயல்பட்டால் வினை சுடும். இதை நானோ, ஹிந்து மதம் என்கிற சனாதனமோ சொல்லவில்லை; வள்ளுவர் சொல்கிறார்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்