ரு நாள், வீட்டில் சேனல்களை வரிசையாக மாற்றிக்கொண்டே வந்த பொழுது, சட்டென்று வந்த ஒரு முகம் , “என்ன சேனலை மாற்றிக்கொண்டே இருக்க? என்னைப் பார்” என்பது போல்  என் கவனத்தை  ஈர்த்து நிறுத்தியது. அன்றிலிருந்து அந்த முகம் எங்கு தோன்றினாலும், “இவன் இருக்கானா! என்ன பண்றான்ன்னு பாப்போம்” என்று அந்த அவனை கவனிக்க தொடங்கினேன்.

 

பின்பு ஒரு நாள், ஒரு படத்துடைய போஸ்டர் ஒன்றை எதேச்சையாக பார்க்க நேரிட்டது.

 

வெள்ளை நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ்,இறக்கி விட்ட மீசை, காற்றில் பறக்கும் அடர்த்தியான முடி, ஒரு சாயலில் அந்த போஸ்டரில் இருந்த அந்த அவர், ரஜினி போலவே தான் இருந்தார். அந்த particular தோற்றத்தில்.

 

சாதாரணமாக சின்னத்திரையில் entertaining boy ஆக  யாரோ ஒரு அவனாக மட்டுமே இருந்த; தெரிந்த அந்த முகம்; சினிமாவில் manly ஹீரோவாக நமக்கு பரீட்சியப்பட்ட ரஜினியின் சாயலை கொஞ்சமாக காட்டியது அந்த படத்தில் தான். (what a change over மாமா!)

 

சிவகார்த்திகேயன் நம் எல்லோர் மனதிலும் இப்படியாகவே தான் கூடாரம் போட்டு கோலோச்ச தொடங்கினார்.

என்னமோ தெரில இந்த சிவகார்த்திகேயனை எல்லார்க்கும் பிடிக்குது! ரஜினியிடம் இருக்கும் ஏதோ ஒரு வசீகரம். ஒரு ஆரா(aura) நிச்சயமாய் சிவகார்திகேயனிடமும் இருக்கவே செய்கிறது.

 

சாதாரணமாக நம்மிடம் பேச யோசிப்பவர்களும் கூட, சிவகார்த்திகேயன் படம் பார்த்துவிட்டு வந்தாக சொன்னால், படம் எப்படி இருக்கு? என்கிறார்கள்.

 

எல்லோருக்கும் பிடித்த சிவகார்த்திகேயன் படத்தின் மாவீரன் டீஸர் வெளியாகி இருந்தது. சிவப்பு நிற சட்டை பின்னாடி வால் விட்டது போன்ற அந்த ஹேர்ஸ்டைல். நிச்சயமாக எல்லோருக்கும் தளபதி ரஜினியை நினைவுபடுத்தியிருக்கும்.

 

 

பிடிச்ச சிவகார்த்திகேயன் பிடிச்ச ரஜினி மாதிரி.கேட்கவே நல்லா இருக்கு ல.

 

சில மாதங்களுக்கு முன் மண்டேலா திரைப்படம் பார்த்தேன். சமூகத்தின் தவறுகளை, சாதிய கொடுமையை சுட்டிக்காட்டிய படம். இது ஜாதி படம் என்று சுட்ட முடியாத படம்.

 

எம் முந்தைய கட்டுரைகளில் விமர்சனங்களில் இதை குறிப்பிட்டதாக நினைவில்லை.குறிப்பிட்டு இருந்தாலும் இங்கு மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன் பொறுத்துக்கொள்ளுங்கள்.

 

“ஒரு கதாநாயகன், அவனை வில்லன் துரத்துகிறான்” இது தான் கதை; இவ்வளவு தான் கதை என்றால், இந்த கதை அந்த பெரிய திரையில் எப்படி காட்சிகளாக காட்டுகிறார்கள் என்பது தான் திரைக்கதை.கதாநாயகன் கார் கதவை திறக்கின்றான் அப்போது வில்லன் பத்தடி தூரத்தில் அவனை நெருங்க போகும் சமயத்தில் அந்த கதவு திறக்கிறது. உள்ளே உட்கார்ந்து, கியர் போடுகிறான், அந்த காரின் சக்கரங்கள் நின்ற நிலையில் இருந்து வேகமாக சுத்த ஆரம்பிக்கிறது.கதாநாயகன் கார் நகர்கிறது. அந்த கார் நகர்ந்த நேரத்திற்கு சரியாக வில்லன் அந்த இடம் வந்து சேர்கிறான். இதை படிக்கும் பொழுது நம் மனதில் காட்சிகளாக எப்படி விரிகிறது.அப்படியா இல்லையே!என்றெல்லாம் நினைக்க கூடாது. ஒரு flow ல போய்கிட்டு இருக்கா இல்லையா?🤣🤣

கதை சாதாரணமாக எழுதிவிடலாம். திரைக்கதைக்கு ஒரு detailing தேவைப்படுகிறது.திரைக்கதை தான் காட்சி அமைப்புகளின் அடிப்படை. அந்த காட்சிஅமைப்புகள் தான் பார்ப்பவர்களை கதையோடு ஒன்றச் செய்கிறது.

இந்த detailing பற்றிச்சொல்ல இன்னொரு உதாரணம் சொல்லலாம். தினத்தந்தியில் கன்னித்தீவு என்கிற தொடர் கதை வந்து கொண்டிருந்தது. அதைப்பற்றி என் தமிழாசிரியர் நகைச்சுவையாய் ஒன்று சொல்வார்.

“இந்த கன்னித்தீவு கதை  ரொம்ப வருஷமா எழுதிட்டு இருக்காய்ங்க! டாமல், டிஸ், டும் தொடரும் போட்டு ஒரு எபிசோட் கேட்டா சண்டை போடுறாய்ங்களாம்” என்று நக்கலாக சொல்வார்.ஒரு திரைக்கதையை எழுதி படித்தால் அப்படித்தான் இருக்கும்.

 

மடோன் அஸ்வின்- அவரின் முதல் படம் மண்டேலா. அந்த படத்தின் திரைக்கதையும் காட்சியமைப்புகளும் அப்படித்தான் இருந்தது!

எப்படி! அதான் சொன்னேனே அப்படி. அதான் இப்படி கீழே சொல்றேன் படிங்க.

அவசரமான ஒரு வேலைக்காக அவசரமாய் நாயகனை அழைக்க காரில் வந்தவர். அதே காரில் நாயகனை ஏற்ற மறுத்து, காரில் ஏறி உள்ளே உட்கார்ந்ததற்கு ‘கீழ் ஜாதிக்காரன் எப்படி கார் ல ஏறி உட்காரலாம்’ என்கிற மமதையில்,  நாயகனை அடித்து கீழே இறக்கியிருப்பார்.

 

அதே கதையில் , நாயகனின் ஒரு வாக்கு அந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிக்க போகிறது என்றவுடன் நாயகனைத் தேடி ஊரே வந்து நிற்கும்.எல்லோரும் நாயகனுக்கு கீழே நிற்பார்கள். நாயகன், மேலே மரத்தில் தொட்டில் கட்டி தூங்கிக்கொண்டு இருப்பான்.நாயகனை எழுப்புவார்கள். எல்லோரும் வந்திருப்பதை  உணர்ந்து அந்த தொட்டிலில் இருந்து இறங்க  நாயகன் இறங்க தொட்டிலில் இருந்து குதிக்க முற்படும் பொழுது, கவனமாக இறங்க சொல்லி, காரை கொண்டு வந்து நிறுத்துவார்கள். நாயகன் அந்த காரின் மேலே குதித்து இறங்கும் தருணத்தில் அந்த திரை முழுதும் அந்த காரின் மேற்பரப்பும் நாயகனின் கால் மட்டுமே தான் தெரியும் அந்த கால் அந்த காரின் மேற்பரப்பில் பதிந்த அந்த தருணத்தில்  என் நினைவை மீறி என்னை அறியாமல் என் கண்களை மீறி துளி கண்ணீர் வடிய காத்துகொண்டு இருந்தது.

முழுக்க முழுக்க metaphorical visual நிறைந்த காட்சி. அதை புரிந்து கொள்ள உலக சினிமா அறிவெல்லாம் தேவை இல்லை. உணர்வு இருந்தால் போதும்.

ஜாதி பணம் என்று ஏதோ காரணங்களுக்காக மற்றவர்களை அடிமைப்படுத்தும் வர்க்கத்தின் தலைமீது ஏறி மிதிப்பது போன்ற உணர்வை ஒரு காட்சியால் ஏற்படுத்த முடியும். அது தான் திரைக்கதையின் வலிமை. metaphorical shots வைக்கிறேன் என்கிற பெயரிலும் குறியீடு வைக்கிறேன் என்கிற பெயரிலும், கதைக்கு metaphorical shots ஆ வச்சு பார்வையாளர்களில் ஒரு சாராரை சோதிக்காமல்.இது உலக சினிமா உங்களுக்கு புரியாது என்று இல்லாமல்,மண்டேலா படத்தின் திரைக்கதையும் காட்சி அமைப்புகளும் அத்தனை பிரமாதமாகவும் எளிமையாகவும் கதைக்குள் பொருந்தும் படியாக அமைத்திருந்தார் மடோன் அஸ்வின்.

 

எல்லாருக்கும் பிடிச்ச சிவகார்த்திகயேன்; எல்லார்க்கும் பிடிச்ச நமக்கும் பிடிச்ச ரஜினி மாதிரி தோற்றத்தில் ; மண்டேலா மாதிரி அருமையான படத்தை எடுத்த இயக்குனர்.படத்தின் பெயர் மாவீரன். அறிவிப்பு வந்த நாளில் இருந்து, முதல் நாள் படம் பார்க்கிறோம் என்கிற தீர்மானத்தோடு இருந்தேன்.

 

அந்த தீர்மானத்தில் உறுதியாகவும் இருந்து, ஒரு நான்கு பேரை கூட்டு சேர்த்துக்கொண்டு படத்திற்கு போகலாம்  என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே திட்டம் கைவிடப்பட்டு.மனம் பொறுக்காமல் கடைசி நேரத்தில் ஒரு நாலு பேர் சேர்ந்து 9 மணி காட்சிக்கு கடைசி ஆளாக டிக்கெட் புக் செய்து கிளம்பினோம்.

 

படத்துக்கு போறோம்!படத்தை பற்றி செமையா எழுதுறோம்! நல்லதா எழுதுறோம் என்கிற முன்முடிவுகளோடும் தீர்மானத்தோடுமே தான் திரையரங்கிற்குச் சென்றேன்.அது நடந்ததா என்பது தான் கதையின் முடிவு.

 

அப்பறம் ஏன் ஒரு நாள் வரை எழுதவில்லை என்று கேட்பீர்கள்?படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் வீட்டிற்கு வராமல், அந்த வழியில் இருந்து அப்படியே திரும்பி  தங்கச்சி வீட்டில் வாவல் மீனை வறுத்து வைத்த விருந்தை இருந்து உண்டு சிறப்பித்து விட்டு வந்ததால் இந்த தாமதம்.

கன்னித்தீவு மாதிரி கதை எழுதிக்கொண்டிருக்கின்ற கதாநாயகனின் கதை.

சமீபத்தில் எஜமான் திரைப்படம் பார்த்தேன், மனைவி கண்ணில் இருந்து கண்ணீர் வந்தால் அவன் (அந்த கணவன்) ஒரு ஆம்பளையே இல்லை என்று மற்றவர்களுக்குச் சொல்லி அதே போன்று வாழும் கதாநாயகன். நம்ம ரஜினியே தான். அந்த திரைப்படத்தில் கதாநாயகி மீனா இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது ரஜினியிடம்,”நான் அழுதுருவேன்ன்னு  பாக்கறீங்களா மாமா!” என்று சொல்லும் பொழுது நமக்கும்  அழுகை வந்துவிடும்.

 

அந்த  “நான் அழுதுருவேன்ன்னு  பாக்கறீங்களா மாமா” என்று ஒலிக்கும் குரல் சரிதாவுடையது.

Dubbing- நடிப்பில் 60 சதவீதம் முக்கியத்துவத்தை பெறுவது அது தான்.ஒரு  வசனத்தை எப்படி பேச வேண்டுமென்பது தான் நடிப்பின் முக்கிய அங்கம். திரையில் அதிகம் தோன்றாத சரிதாவின் குரல் அதே திரையில் அதிகம் ஒலித்திருக்கின்றது.இந்த படத்தில் அவர் திரையில் தோன்றி வாழ்ந்து இருக்கின்றார். மகனை நினைத்துப் பெருமைப்படுவது ; பிள்ளைகளுக்காக வரிந்து கட்டுவது; பரிந்து பேசுவது; கெஞ்சவுது; கோபம் கொள்வது;தன் ஏமாற்றத்தை பிள்ளைகளிடம் வெளிப்படுத்தி சலித்துக்கொள்வது என்று எல்லார் வீடுகளிலும் இருக்கின்ற எல்லா அம்மாக்களிடமும் இருக்கின்ற பொதுவான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றார் . அது சரி அவளும் பெண் தானே என்பது போல். பெண்கள் யாரும் அம்மாவாக நடிக்க வேண்டியதில்லை. இயற்கையிலேயே அவர்கள் அம்மா தானே.

 

சிவகார்த்திகேயன், பல frame களில் ரஜினியை நினைவூட்டுகிறார். அவர் ரஜினியை imitate செய்ததாக தெரியவில்லை.இந்த திரைப்படத்தில் அவரின் தோற்றமும் அவரை காண்பித்த விதமும் ரஜினியையே தான் நினைவூட்டியது.குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால்,அவர் முதுகை காண்பித்த காட்சிகளிலும் low angle shot களிலும் எல்லோர் கண்களுக்கும் ரஜினியே தான் தெரிந்து இருப்பார்.

 

நம் எல்லோருக்குள்ளும் வெளிப்படுத்த முடியாத கோபம் இருக்கவே செய்யும். அந்த கோபம் வெளிப்படுத்த முடியாமல் சமயங்களில் சமாதி நிலை எய்தி விடுகிறது. கோபம் மட்டும் இல்லை, இன்னும் பல உணர்வுகள் நம்மால் வெளிப்படுத்த முடியாமல் இருப்பதுண்டு.

 

வெளிப்படுத்த முடியாத உணர்வுகளில் முதன்மையானது காதலும் கோபமும்.இந்த வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை ஒரு கலைஞன் தன் கலை மூலமாக வெளிப்படுத்திவிடுகிறான். அவனுக்கு அது தான் அவன் உணர்வுகளின் வடிகால். யாரிடமும் சொல்ல முடியாததை அவன் அவனுடைய கலையிடம் கொட்டிக் முடிக்கிறான்.

 

சாமானியர்களால் வெளிப்படுத்த முடியாத காதல் கோபம் போன்ற உணர்வுகளை ஒரு கலைஞன் தன் எழுத்தின் மூலமோ ஓவியத்தின் மூலமோ திரைப்படத்தின் மூலமோ வெளிப்படுத்தி விடுகிறான்.

 

அவன் வெளிப்படுத்தும் அந்த உணர்வுகள் உண்மையாக நடந்தால் எப்படி இருக்கும்!

 

கொள்ளை அடிச்சுருக்கான்(ர்) தெரிஞ்சும் அந்த கொள்ளைக்காரருக்காக அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து ஆதரவு தெரிவிச்சு ஒத்து ஊதும் பொழுது, “இவர்களையெல்லாம் நிற்க வைத்து  கொளுத்திவிட்டா என்ன” என்கிற அளவிற்கு கோபம் வரும்.ஆனால், அதை செய்ய நாம் யாரும் துணிவதில்லை. ஆனால், அந்த கோபம் நம் எல்லார் மனதிலும் இருக்கும். அதுக்கு உயிர் கொடுத்து கதையாக எழுதும் கதாநாயகன் அவன் எழுதும் கதையில் அவனே நாயகன் ஆகும் கதை  தான் மாவீரன்.

நாம் வெளிப்படுத்த துணியாத கோபம் நம்மை மீறி வெளிப்படும் தருணங்களில் நாம் எல்லோருமே மாவீரர்கள் தான்.

 

வித்தியாசமா இருக்கு ல. வித்தியாசமான கதை தான்.இந்த வித்யாசமான கதை சிவகார்திகேயனுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கதை போல இருந்தது.Tailor Made for siva.

 

“நான் பயப்படுவேன் தான் ஆனா,பயந்துட்டே இருக்க மாட்டேன் எனக்கு என் வாழ்க்கை முக்கியம் தான் ஆனா ஒரு அநியாயம் நடக்கும் பொழுது எனக்குள்ளயேயும் ஒரு கோபம் வரத்தான் செய்யுது”என்கிற சாதாரணமான இளைஞனின் கதை.

 

ஒரு கதையோடு ஒவ்வொருவரும் தங்களை தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் பொழுது தான் அந்த கதை பெரும் வெற்றி அடைகிறது.மாவீரன் கதையும் அப்படித்தான். Many can relate to them emotionally.

 

கதை நெடுகிலும் கதைக்குள்ளாகவே கதையாகவே இருக்கும் நகைச்சுவை.யோகி பாபு வந்த முதல் இரண்டு காட்சியில் எப்போதும் போல் நான் மட்டுமே தான் சத்தமாக சிரித்துக்கொண்டு இருந்தேன்.அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் யோகி பாபு வந்த போதெல்லாம் எனக்கு போட்டியாக எல்லோரும் சத்தமாக சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.நம்முடைய aura அப்படி ன்னு நினைக்கிறேன்.அதென்ன சிரிக்காம ஒரு சிரிப்பு காட்சியை பார்க்கிறது. எல்லார் வெட்கங்களையும் நம் சிரிப்பு உடைத்து இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன் . ஆனால், என் பக்கத்தில் இருந்தவர் தான் பாவம், “இவன் பக்கத்துலையா உட்கார்ந்தோம்” என்று இருந்திருப்பார். என்னுடைய சிரிப்பிற்காகவே அவர் அந்த நகைச்சுவைகளை வெறுத்திருக்க கூடும்.

 

சண்டைக்காட்சிகளில் ஒலித்த பின்னணி இசை, எழுந்து இரண்டு பேரை அடிக்க தூண்டியது. முன் சீட், இடிக்கும் அளவு சின்ன அரங்காக இருந்ததாலும், அதெல்லாம் செய்தால் புடிச்சு உள்ள வச்சுருவாங்க என்பதாலும். கைதட்டி கூச்சல் போட்டதோடு நிறுத்திக்கொண்டேன். எழுந்திருக்கவும் இல்லை யாரையும் அடிக்கவும் இல்லை.

 

டீசரில் காண்பித்த காட்சி எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன். எதிர்பார்த்துக்கொண்டு மட்டுமே தான் இருந்தேன். அன்ஹ்! சிவப்பு சட்டை வந்துருச்சு அந்த காட்சி வரப்போகுது என்று காத்திருந்த குழந்தையை ஏமாற்றிவிட்டார்கள்.கதையின் one line ஐ காட்சி படுத்தியிருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் அந்த டீஸர்.

 

கதையை பற்றியும் படத்தை பற்றியும் நல்லதாக மட்டுமே தான் எழுத வேண்டும் என்கிற தீர்மானத்தோடு மட்டுமே தான் படத்திற்கு சென்றேன்.

 

படத்தில் எல்லாம் நன்றாகவே தான் இருந்தது. பாடல்களுக்கு கதைக்குள் இடம் இருந்தது.ஒரு 2மணி நேரத்தில் ஒரு மணி நேரம் எல்லோரையும் சிரிக்க வைப்பது,அவ்வப்போது சிலிர்க்க வைப்பது எல்லாம் சாதாரணமான விஷயமில்லை. கத்திய வைத்து யாரோ ஒருவர் யாரையோ குத்த வரும் பொழுது பார்ப்பவர்களுக்கு தங்களையே தான் குத்த போவது போன்ற உணர்வை தருகின்ற காட்சிமைப்புகள் (படத்திற்கு சென்று கத்தியை தேடாதீர்கள். அது மாதிரி காட்சி அமைப்பு என்று சொல்ல எடுத்துக்கொண்ட எடுத்துக்காட்டு அது).

 

இப்படி எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டு கடைசியாக, படத்தில் எல்லாமே நல்லா தான் இருந்தது என்று சொல்லி முடிக்கத் தான் ஆசைப்பட்டேன். ஆனால், எனக்கும் ஒரு குரல் கேட்டுக்கொண்டு இருக்கின்றது, “மாவீரன் கதை சொல்லும் குரலில் ஒரு வீரமும் இல்லை; இந்த வித்யாசமான கதை இப்படி முடிந்திருக்க கூடாது.உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்த வீரம் கடைசியில் உணர்வுகளுக்கு அவசியமில்லாமல் நீள்கிறது. இதெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த படம் வேறு ஒரு உயரத்தை தொட்டு இருக்கும். ஆனால், இப்படி ஆகி விட்டதே! கதையை கொஞ்சம் முன்னதாக முடித்திருக்கலாமா? இல்லை வேறு மாதிரி முடித்திருக்கலாமோ! நல்ல கதை  ஆனா இப்படி முடிந்து விட்டதே!” என்றெல்லாம் அந்த குரல் புலம்பிக்கொண்டே இருக்கின்றது.

 

 

அப்பறம் என்ன ஆச்சு?

 

வறுத்த வச்ச வாவல் மீனை சாப்பிட்டுட்டு. மாவீரன் write up போஸ்ட் பண்ணிட்டு தூங்கிட்டேன். புலம்பிகிட்டே வா இருக்க முடியும்.

சிவகார்த்திகேயன் மீது இருக்கும் எதிர்பார்ப்பு தந்த அழுத்தம் தான் கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் இப்படி முடிக்க காரணமாக இருந்திருக்கும்.But still your kids will like him and his fight scene. You will laugh at those comedies(சத்தியமா சொல்லு இதை நீ எல்லார்க்கும் சொல்றீயா இல்ல. படம் எப்படி ன்னு கேட்ட அவங்களுக்கு சொல்றீயா🤣🤣)

 

But  This story deserved better ending . நிஜமாவே நல்ல story சார் ஆனா இப்படி முடிச்சுட்டாய்ங்க சார்.அந்த BGM மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கு வேற….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *