வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும் !
“சாமிக்கு என்ன ஆகும்ன்னு சாமி உன்னை வச்சுக்கிட கேக்கலையே!” உணர்வுகளின் பிம்பம் தான் கலை; கதை; கவிதை. நாம் இந்த தொடரில் முன்பு குறிப்பிட்டது போல், திருவாசகம் கூட மாணிக்கவாசரிடம் இருந்த உணர்ச்சி தீவிரத்தின் விளைவு தான்.
தினமும் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த காலம். எவ்வித உத்தரவாதமும் இல்லாவிடினும் கூட, கேட்டால் கிடைக்கும் என்று இறைவனிடம் கேட்டுக்கொண்டே இருந்த காலம்.
சரி! நீங்கள் இறைவனிடம் என்னவெல்லாம் கேட்டு இருக்கிறீர்கள்.
“இன்னிக்கு maths மிஸ் school க்கு வரக்கூடாது!”
“நாளைக்கு இங்கிலீஷ் மிஸ் டெஸ்ட் வைக்க கூடாது!”
“மிஸ் என்னை எழுப்பி போர்டு ல கணக்கு போட சொல்லாம இருக்கனும்”
“Just பாஸ் க்கு எழுதி வச்சிருக்கேன் எப்படியும் பாஸ் ஆகிடனும்”
“சீக்கிரம் வேலை கிடைக்கனும்”
“அந்த பையனையே நான் கல்யாணம் பண்ணிக்கணும்”
“புருஷனுக்கு நல்ல புத்தி வரணும்”
என்ன வேண்ட வேண்டும் என்பதிலும் கூட நாம் வரையறை வைத்துக் கொள்கிறோம். ஒரு நாளும் ஆண்கள், “ஆண்டவா! என் பொண்டாட்டிக்கு நல்ல புத்திய கொடு” என்று வேண்டிக்கொள்வதில்லை. ஆண்களின் வரையறையின் படி,”அது ஆகுற காரியம் இல்லை”
(மாணிக்கவாசகர்: நம்மை பயலுக்கு இருக்கிற நாலு பெண்கள் ஓட்டும் போய்டும் போல )
இந்த வரையறைகளை நாம் தீர்மானிப்பதில்லை. இந்த வினைக்கடலில் மூழ்கியிருக்கும் நாம் அதன் அலைகள் இழுத்த திசையெல்லாம் இழுத்துச்செல்லப்படுகிறோம். எந்த திசையை நோக்கி செல்கிறோம் என்கிற எந்த உத்தேசமும் நமக்கு இருப்பதில்லை.
“சாமிகிட்ட வேண்டிகிட்டா நடந்துரும்”
“வியாழக்கிழமை வியாழக்கிழமை பாபா கோவில் போக ஆரம்பிச்சோன எல்லாம் நல்லா படியா நடக்குது”
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் நாம், நம் வேண்டுதல்களை எத்தனை அற்பத்தனமான எல்லைகளுக்குள் அடைத்துவைத்துக்கொள்கிறோம்.
“அந்தாளு தான் கேட்டா கொடுக்கிறாரு ல! அப்பறம் என்ன maths மிஸ் இன்னிக்கு வரக்கூடாது ன்னு வேண்டுறது; தக்காளி! mathsயே ban பண்ணனும் ன்னு வேண்ட வேண்டியது தான?” நாம் அப்படி செய்வதில்லை. ஏன் என்று நாம் யோசித்தும் இல்லை.
நான் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் கிறிஸ்துவ மார்க்கத்தை பின்பற்றும் ஒரு பெண்மணி, ஒரு நாள்,என்னிடம் வந்து, “ஏன் கவலை படுறீங்க! நான் உங்களுக்காக pray பண்ணிக்க சொல்றேன். அவங்களுக்கு நம்ம போன் ல சொன்னாலே போதும், அவங்க நமக்காக ஜபம் பண்ணுவாங்க: உங்களுக்கு எதாவது மனசுல இருந்தா கேளுங்க சொல்லுங்க அவங்க வேண்டிக்குவாங்க” என்றார்.
மிகுந்த நம்பிக்கையுடன் அந்த வார்த்தைகளை அவர் என்னிடம் சொன்னார். “இந்தியாவுடைய பிரதமர் ஆகும்ன்னு ஆசை மா வேண்டிக்க சொல்லுங்க! நிஜமா தான் சொல்றேன். எனக்கு அந்த ஆசை இருக்கு” என்கிற என் பதிலை கேட்ட அவர் முகம் கொஞ்சம் மாறிவிட்டது.
“ரொம்ப வருஷம் முன்ன முதலமைச்சரா ஆகும்ன்னு ஆசை இருந்துச்சு அப்ப இப்படி தான் ரொம்ப தீவிரமா ஜெபம் பண்ணுற friend கிட்ட கேட்டேன் அவன் இதெல்லாம் எப்படி டா நடக்கும்னு கேட்டான் நீங்களும் ஒரு மாதிரி பாக்குறீங்க” என்றெல்லாம் அவருக்கு சில விளக்கம் சொன்ன பின் அவரின் முகம் கொஞ்சம் பழைய நிலைக்கு திரும்பியது.
நாம் எல்லோரும் இப்படித்தான் இருக்கின்றோம். அது ஏன் அப்படி?!
சனாதனம் என்ன சொல்லுகிறது என்றால்? (மறுபடி சத்தமா படிங்க)
நம் பாரத கலாச்சாரம் என்ன சொல்லுகிறது என்றால். வினைப்பயன் அதன் படியே தான், யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்.
“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;” என்கிற பைபிள் வசனம் 100க்கு 1000 மடங்கு உண்மை. கேளுங்கள் அப்போது நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும்.
கடவுளை நம்பாதவர்களும் கூட கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றார்கள் ஆனால், கடவுளிடம் தான் கேட்கிறோம் என்று தெரியாமல் கேட்கிறார்கள்.
“ஆண்டவா! maths மிஸ் இன்னிக்கு லீவு போட்டு இருக்கனும்” இது கடவுளை நம்புகிறவர் கேட்கும் முறை.
“இன்னிக்கு maths மிஸ் இன்னிக்கு லீவு போட்டு இருக்கனும்” என்று பெறுநரின் பெயர் பதவி குறிப்பிடாமல் கேட்பது கடவுளை நம்பாதவர்கள் கேட்கும் முறை.
எப்படி சுற்றினாலும் கேட்டால் நடக்கும். பின் ஏன் நாம் கேட்பதில்லை. அது தான் வினைப்பயன் . எல்லாரும் இறைவனின் பிள்ளைகள் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் எல்லா பயனும் கிடைக்க வேண்டும் என்று ஒருவன் வேண்டி, அது அவனுக்கு கிடைத்தும் விட்டால்; எல்லா முயற்சிகளும் செய்கிறவனை இறைவன் ஏமாற்றுவது போல ஆகிவிடாது. அப்ப என்ன செய்யனும் அவன் வினைக்கு ஏற்பவே தான் அவன் கேட்க வேண்டும் அந்த அளவில் தான் அவன் சிந்திக்க வேண்டும்.
நல்ல முயற்சி செய்து பாடங்களை கவனித்தவன் என்ன வேண்டிக்கொள்வான்,”ஆண்டவா நூறு மார்க் வரணும்!” பெரிய முயற்சி இல்லாமல், பாடங்களை கவனிக்காதவன் என்ன வேண்டிக்கொள்வான், “என்னை பாஸ் மட்டும் பண்ணி விட்டுரு பால் குடம் எடுத்து வரேன்”
சனாதனத்தில் சொல்லப்பட்டிருக்கும் இதே வினைப்பயன் பற்றிய கருத்தை தான் வள்ளுவரும் சொல்கின்றார்.
தன்னறிவே மிகும் ஊழ்
“நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்”
ஒருவன் என்ன படித்தாலும், அவன் வினைப்பயனுக்கு ஏற்பவே தான் அவன் அறிவு வளரும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கின்றார்.
(மாணிக்கவாசகர்: அவைங்கள பார்த்தா வள்ளுவரையும் ஒழிச்சுடலாமா கேளு)
நம்முடைய வினைப்பயனுக்கு ஏற்பவே தான் அறிவு சிந்திக்கும். அதற்கு ஏற்பவே தான் நாம் என்ன வேண்டும் என்பதையும் இறைவனிடம் கேட்போம்.
“அதெல்லாம் இல்லங்க நான் பெரிய அறிவாளியாக்கும்” என்பீர்கள் என்றால் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று உலகில் இருக்கும் உயிரினங்களிலேயே பிரபஞ்சத்தை பிய்த்து மேய்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கும் மனித அறிவை நம் முன்னோர் சிற்றறிவு என்று வகைப்படுத்தியிருக்கின்றார்கள்.
இந்த மொத்த பிரபஞ்சமும் ஒரு ஒழுங்கில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால், அதற்கு ஒரு அறிவு இருக்கிறது என்று தானே அர்த்தம். திருமூலர் அறிவு என்கிற வார்த்தையை ஆற்றல் ஆன்மா (பரமாத்மா) என்னும் பொருளில் கையாண்டு இருக்கிறார்.அதாவது இறைவனுடைய அல்லது இயற்கையுடைய அறிவு தான் பேரறிவு, அது சிற்றறிவு எல்லாவற்றையும் உட்கொண்டது தான் அந்த பேரறிவு.
நம் உடம்புக்குள்ளும் இருக்கும் ஒவ்வொரு செல் க்கும் அறிவு இருக்கின்றது. தன்னளவில் எப்படி இயங்க வேண்டுமென்கிற அறிவு. ஆனால், ஒவ்வொரு செல்களும் மொத்தமாக (collective அ) எப்படி இயங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது நம் மூளை. அதே தான் அண்டமும்.
இதை எழுதும் பொழுது எனக்கே ஆச்சரியம் பொறுக்கவில்லை. how they simply wrapped it in a phrase, “அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு”
இறைவன் என்ன செய்வார்? அல்லது இந்த பேரறிவு என்ன செய்யும்? சிற்றறிவுகளிடம் இருந்து feedback வாங்கிக்கொள்ளும் அல்லது அது எப்படி இயங்க வேண்டும் என்று program செய்து இருக்கிறதோ அதன் படி அதை இயங்க வைத்திருக்கும்.அந்த இயக்கத்தின் படியே தான் சிற்றறிவுகள் feedback உம் கூட அனுப்பும்.
இது உரைக்காம நம்மை, இறைவனிடம் எப்படி வேண்டுவோம், “ஒரு வேலை மட்டும் கிடைச்சுட்டா போதும் எல்லா நான் பாத்துக்குவேன்”
இறைவன் இவன் வேலை தானே கேட்டான் என்று கொடுத்தும் விடுவார். ஒரு மாதம் கழித்து மீண்டும் கடவுளிடம் செல்வான், “ஆண்டவா வேலை ரொம்ப கஷ்டமா இருக்கு நல்ல வேலை வேணும்”
அதுவும் கிடைக்கும் மீண்டும் வருவான்,”ஆண்டவா அந்த increment”
நம் வினைப்பயன்படி நம் நல்ல நேரத்திற்கும் கெட்ட நேரத்திற்கும் ஏற்பவே தான் நாம் வேண்டிக்கொள்கிறோம். ஒரு பெரும் துயரத்தில் இருக்கும் பொழுது அதில் இருந்து மீண்டு வந்துவிட்டால் போதும் என்று வேண்டிக்கொள்வோம். அதன் பின்?
நம் இதிகாசங்களில் புராணங்களிலும் இறைவனிடம் வரன்கள் வேண்டி பெற்றவர்கள் எல்லாம் பேரறிவை out smart செய்ய பார்த்தவர்கள் தான்.
யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் அழிய வேண்டும் என்று வரம் கேட்டவன் , நமக்கு தலையில் ஒரு அரிப்பு தோன்றினால் என்ன செய்வோம் என்கிற அளவில் கூட சிந்திக்காதவன். அவன் தலையில் அவனே கை வைத்து மாண்டு போனான் என்று அந்த கதை முடியும்.
பேரறிவை outsmart பண்ணவே முடியாது.
(மாணிக்கவாசகர்: தம்பி நிறைய பட்டுருக்கும் போல!)
நிறைய அனுபவம் தான். facebook என்று ஒன்று கண்டுபிடிப்பார்கள் என்று தெரியாமல் நாங்கள் நண்பர்களாகவேனும் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டதன் பலனாய் முகம் மட்டும் தெரிந்த 300 நண்பர்களில் ஒருவராய் இருக்கிறோம்.
என் கதைக்கு வரேன்!
தினமும் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த காலம். எவ்வித உத்தரவாதமும் இல்லாவிடினும் கூட, கேட்டால் கிடைக்கும் என்று இறைவனிடம் கேட்டுக்கொண்டே இருந்த காலம்.
வாழ்வில் ஆயிரம் பிரச்சனைகள். தினமும் நூறு வேண்டுதல். நூறு வேண்டுதல்களில் ஒன்று கூட அப்பாக்கு எதுவும் ஆகிடக்கூடாது என்று வேண்டவில்லை.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அப்படி ஒரு நாள் தோன்றியது. “கேட்கலையே ஏன் கேட்கலை”
அந்த உணர்வு தீவிரத்தின் வெளிப்பாடு தான் அந்த வரிகள், “சாமிக்கு என்ன ஆகும்ன்னு சாமி உன்னை வச்சுக்கிட கேக்கலையே!” அப்பா என்ன ஆகப்போகிறது என்கிற அறிவின் மெத்தனம்.
உடல்கள் மறைவதும் கூட இறைவனின் அருள் என்கிறார்கள். ஒரு ஆன்மா தேய்ந்து போன ஒரு உடலில் இருந்து அழுந்துவதில் இருந்து இறைவன் தரும் விடுதலை என்கிறார்கள். அந்த அருளை நம் வேண்டுதல் தடுத்துவிடக்கூடாது என்று இறைவன் நினைத்து இருப்பர் போல.
அனுபவம் இத்தனை தூரம் உணர்த்திவிட்ட பின் இறைவனிடம் சென்று என்ன கேட்பீர்கள். கேட்கிறதே இல்ல அல்லது குறைத்துக்கொண்டேன். கோவில்களுக்கு செல்வதாக இருந்தாலும் பழமையான; பெரிய; கூட்டமில்லாத கோவில்களுக்கு செல்வது என்று வழக்கமாக்கி கொண்டேன். பல வருடங்கள் கழித்து சமீபத்தில் நம்ம மாணிக்கவாசகர் பிறந்த ஊருக்கு சென்றேன். அங்கே இருந்த கோவிலுக்குச் சென்று இறைவன் முன் அமர்ந்திருந்த பொழுது என் மனதில் தோன்றியது இது தான் “நான் ஒன்னு உன்கிட்ட கேட்கிறேன்ன்னா அது என்னுடைய எண்ணம் இல்லை என்ன நீ தான் கேட்க வச்சு இருக்க அப்ப நீ தான் அதை உண்மையாக்கனும் அதுக்கு அப்புறம் என் கூட இருக்கனும்” இப்படியெல்லாம் மனதில் நினைத்துக்கொண்டு வெளியில் வந்தால் அங்கே மாணிக்கவாசகர் சந்நிதி இருந்தது, வெளியில் ஒரு பலகையில் திருவாசகத்தில் இருந்து இரண்டு பாடல்கள் எழுதப்பட்டு இருந்தது இரண்டாவது பாடலில் ஒரு வரியை படித்த பொழுது கண்கள் கலங்கி விட்டது. அந்த வரி breaking point முதலாவதாக எழுதப்பட்டிருந்த பாடலும் இரண்டாவதாக எழுதப்பட்டிருந்த பாடலின் முதல் சில வரிகளும் முன்னமே மனதை பாதிக்கு மேல் உருக்கி இருந்தது. அந்த வரி ஒரு breaking point மட்டும் தான்.
சரி முதலாவதாக என்ன பாடல் இருந்தது.
“வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;
வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?”
இதை பேச்சு வழக்கில் மாணிக்கவாசகர் மனநிலையில் நினைத்துப்பாருங்களேன்.
“எனக்கு என்ன வேணும்ன்னு உனக்கு தெரியும்!,அது வேணும் ன்னு கேட்டா கொடுத்துருவ! நீ என்ன கொடுக்கப் போறீயோ அதை தான் கேட்க போறேன்.இது எதுவும் இல்லாமல்; நான் வேண்டும் பரிசு ஒன்று உண்டு எனில், அதுவும் உன் விருப்பம் தானே!”
காதலர்களுக்கு இடையிலான உரையாடல் போல இருக்கிறது.
“நான் என்ன நினைப்பேன்ன்னு உனக்கு தெரியாதா? நீ விரும்பறதை தான் நான் கேட்பேன்”
அப்படித்தானே இருக்கிறது.காதலர்கள் பேசிக்கொள்வது போல்.
உங்கள் அனுபவம் தந்த அறிவால்; உள்ளே இறைவனிடம் வேண்டும் பொழுது; நீங்கள் என்ன நிலையில் இருந்தீர்களோ; அதை ஒத்த நிலையில்; ஆனால், அதைவிட இன்னும் பெரிய நிலையில் இருந்து ஒருவர் அந்த realisation ஐ பாடலாக எழுதிவைத்திருந்து அதை படிக்கும் அந்த தருணத்தில் எப்படி இருக்கும்!
“வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?”“நான் கேட்டுட்டேன்; கேட்கிறேன்; அப்ப உன்னுடைய விருப்பம் இல்லாம எப்படி கேட்டு இருப்பேன்”
இதை தான் உள்ளே நான் இறைவனிடம் கேட்டேன். அதையே வெளியே மாணிக்கவாசகரின் பாடலாக படித்தால்!அந்த தருணத்தைப் பற்றி எழுதிக்கொண்டே இருந்தாலும் விளக்க முடியாது.
“நீ கொடுப்பது அல்லாமல் ஒன்றை யான் வேண்டுகிறேன் என்றால் அதுவும் உன் விருப்பம் தானே!”
மனம் இந்த இடத்திலேயே உருகி, கண்கள் இந்த வரிகளுக்கே கலங்கியிருக்க வேண்டும்.
அடுத்த பாடலாக கீழ்வரும் பாடலை எழுதியிருந்தார்கள்.
ஊனாய் , உயிராய் , உணர்வாய் , என்னுள் கலந்து,
தேனாய் , அமுதமுமாய் , தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்,
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!
ஊனாய் , உயிராய் , உணர்வாய் , என்னுள் கலந்து,
தேனாய் , அமுதமுமாய் , தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும், (I am pinished here ).
உங்கள் ஊன்; உயிர்; உணர்வு இதில் யாரேனும் கலந்து இருப்பதை உணர்ந்து இருக்கீர்களா?
அப்படி கலந்து உங்களுடன் இல்லாமல் இருப்பவர்களை உங்கள் மனம் தேடிக்கொண்டே இருக்கும்.
GVM படத்தில் வருவது போல, “இங்க என்ன சொல்லுது, ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா?” என்று ஊன் உயிர் உணர்வு மூன்றிலும் கலந்தவர்களை தேடும் பொழுது தான், மனம் அந்த பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்.
‘”டாடி! டாடி!” என்று தேடுவது;
அவர்கள் ஏன் பேசாமல் பிரிந்து சென்றார்கள் என்று மனதிற்குள் எப்போதும் ஒரு பெயர் ஒலித்துக்கொண்டே இருப்பது;
(மாணிக்கவாசகர்: அந்த பேர் மட்டும் சொல்ல மாட்ட அப்படித்தான?)
இரவு முழுதும் காதல் மனைவியிடம் பேசிவிட்டு உங்கள் கையெழுத்திற்கு பதிலாக மனைவியின் பெயரை எழுதுவது;’
இப்படியெல்லாம் உங்களுக்கு நடந்திருக்கின்றதா? இப்படியெல்லாம் யாரையாவது நீங்கள் நேசித்து, அதை உணர்ந்து இருக்கின்றீர்களா?
நமச்சிவாய! நமச்சிவாய! என்று சொல்லிக்கொண்டே இருந்த பொழுதெல்லாம் மாணிக்கவாசகர் தேடிக்கொண்டே தானே இருந்திருப்பார். “எங்கடா போன என்னை ஆட்கொண்டுவிட்டு; இப்போது என்னை தேட விட்டு “
அப்பா, அம்மா, முதல் காதல்,மனைவி, பிள்ளை என்கிற எல்லையில் நம் காதல் நிற்கிறது. நம் ஊனாய் , உயிராய் , உணர்வாய் அவர்களே தான் நம்முள் கலந்து இருக்கின்றார்கள். அவர்கள் பெயர் தான் நம் மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.மாணிக்கவாசகரின் ஊன் உயிர் உணர்வில் கலந்து ஒலித்துக் கொண்டே இருந்த பெயர்,நமச்சிவாய! நமச்சிவாய! நமச்சிவாய! நமச்சிவாய! நமச்சிவாய! நமச்சிவாய! நமச்சிவாய! நமச்சிவாய!
so, coincidence ஆக நான் பார்த்த,”வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!” பாடலும்;
“ஊனாய் , உயிராய் , உணர்வாய் , என்னுள் கலந்து,
தேனாய் , அமுதமுமாய் , தீம் கரும்பின் கட்டியும் ஆய்,”
என்கிற வாசகமும் என்னை முழுதும் உருக்கிவிட்டிருந்தது.அந்த நிலையில் அடுத்த வாசகத்தை படித்த நொடியில் அனந்தத் தழுதழுப்பில் கண்கள் கலங்கி விட்டது. The Breaking Point-“வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்”
simply that line is an excitement,அவ்வளவு பேர் இருக்காங்க why me! இதை இப்படியும் எடுத்துக்கொள்ளலாம், “அண்டம் முழுதும் அத்தனை பேர் இருக்க என்னை மட்டும் எப்படி ஆட்கொண்டாய்!” என்று .
வேறு மாதிரியும் பொருள் கொள்ளலாம், “வானத்தில் இருப்பவர்களை பூமியில் கொண்டு வந்து விட்டால் அவர்களுக்கு உன்னை அடையும் வழி தெரியாது. அந்த வழி நீ எனக்கு மட்டும் தான காண்பிச்ச!”என்று மாணிக்கவாசகர் குழந்தைத்தனம் ததும்ப, “அம்மா என்னை மட்டும் தான நீ கூட்டிட்டு போன” என்பது போல உள்ளது.
(மாணிக்கவாசகர்: தம்பி மத்தவங்களை விட்டுட்டு உங்களுக்கு மட்டும் சந்தனம் வச்சுவிட்ட கதை ?)
மாணிக்கவாசகர், பல இடங்களில் இதை பேசுகிறார். எல்லோரையும் விட்டுவிட்டு என்னை எப்படி தேர்ந்தெடுத்தாய் என்று. அதற்காக எல்லா கட்டுரைகளிலும் நாம் சந்தனம் இட்டு விட்ட கதையே பேசிக்கொண்டிருந்தால் யார் படிப்பார்கள்
(மாணிக்கவாசகர்: இப்ப எத்தனை பேர் தம்பி படிக்கிறாங்க?)
யார் இதை படிக்க வேண்டும்; படிப்பதில் யார் இதன் உள் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்;இவையெல்லாம் கூட இறைவனால்; வினைப்பயனால் பேரறிவால் தான் தீர்மானிக்கப்படுகிறது.எல்லோரையும் விட்டுவிட்டு மாணிக்கவாசகரை தேர்ந்தெடுத்ததும் அப்படித்தான்-வினைப்பயன்.
நாம் வேண்டிக்கொள்ளாதது நாம் வேண்டப்பெறுவதில்லை(கொடுத்த அப்பாவை ஒழுங்கா வச்சிருக்க முடியலை! so I take it back and I will not let you pray for that ).அதாவது நாம் எதை கேட்கவில்லையோ அது நம்முடையது இல்லை.வேண்டாதது வேண்டப்பெறுவதில்லை.
உணர்வுகளின் பிம்பம் தான் கலை; கதை; கவிதை. “சாமிக்கு என்ன ஆகும்ன்னு சாமி உன்னை வச்சுக்கிட கேக்கலையே!” இப்படி நம் உணர்தலும் (realization) உணர்வுகளும் உறவு என்கிற எல்லையில் நிற்கிறது. மாணிக்கவாசகரின் உணர்தலும் உணர்வுகளும் எல்லையில்லாத எல்லையில் இறைவனோடு இருக்கிறது.
now read those two hymns again
“வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;
வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?”
ஊனாய் , உயிராய் , உணர்வாய் , என்னுள் கலந்து,
தேனாய் , அமுதமுமாய் , தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்,
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!
இறைவன் விரும்பினால் இந்த தொடர் இன்னும் தொடரும்!