நடக்கப்போவதை முன்கூட்டியே நமக்கு காட்டும் அறிகுறிகளை நாம் சகுனம், நிமித்தம் என்றெல்லாம் சொல்கிறோம். நல்லது நடக்கப் போவதை காட்டும் அறிகுறிகளை சகுனம் என்றும் கெட்டதை உணர்த்தும் அறிகுறிகளை உத்பாதம் என்றும் சொல்கிறோம்.
எதிர்காலத்தில் நடக்கப்போவதை குறிப்பது சகுனம் என்றால் இயல்பாக நடந்த ஒரு விஷயத்தில், நாம் நாமாக நம்முடைய கற்பனைகளையும் காரண காரியங்களையும் ஏற்றிச் சொல்வதற்கு பெயர் தான் தற்குறிப்பேற்ற அணி.
அநேகர் எதிர்பார்க்காத ஒன்று நடந்து விட்ட பின் அதற்கு காரண காரியங்கள் கற்பிப்பதை தான் இப்பொழுது தமிழகத்தின் அநேக கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன.
யாரும் எதிர்பாராமல் விஜய் ஜெயித்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் இன்னமும் சில திமுக ஆதரவாளர்கள் வாக்கு பதிவு இயந்திரத்தை குறை சொல்லிக் கொண்டும் பாஜக ஆதரவு என்றும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருந்தால் வெற்றி எப்போதும் கிடைக்காமல் போய் விடும். தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் சாக்கு சொல்லும் திமுக அதை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க நமது அமைச்சர் புஸ்ஸியார், சட்டமன்றத்தில் தற்குறிப்பேற்றமாக ஒரு கருத்தை சொல்லியிருந்தார்.
முதலில் தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் தானே!
கண்ணகி கோவலன் கதை நடந்து முடிந்துவிட்டது. இளங்கோ அதை காவியமாக செய்கிறார். அப்படி செய்யும் இளங்கோவிற்கு காவியத்தை தொடங்கிய பொழுதே முடிவு என்னவென்று தெரியும். முடிவை தெரிந்து காவியம் எழுதிய இளங்கோ, கண்ணகியும் கோவலனும் மதுரைக்குள் வரும் பொழுது மதுரையின் கோட்டை வாயிலில் பறந்து கொண்டிருந்த கொடி கண்ணகியையும் கோவலனையும் மதுரைக்குள் வராதீர்கள் என்று கையசைப்பதை போன்று பறந்தது என்று எழுதியிருப்பார்.
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப்.
கோட்டை வாயிற்கொடி எந்நேரமும் பறந்து கொண்டு தான் இருக்கும். ஒரு வேளை கண்ணகிக்கும் கோவலனுக்கும் மதுரையில் எந்த அநீதியும் இழைக்கப்படாமல் இருந்திருந்தால், இளங்கோ அப்படி எழுதியிருக்க மாட்டார். கொடி பறந்த சாதாரணமான நிகழ்வோடு அது கோவலன் கண்ணகியை வர வேண்டாம் என்று எச்சரித்தது போல் இருந்தது என்று சொல்வது தான் தற்குறிப்பேற்ற அணி.
இப்பொழுது புஸ்ஸியார் என்ன பேசினார் என்பதற்கு வருவோம்.
சர்க்கார் திரைப்பட போஸ்டர்களை, பேனர்களை கிழித்ததால் தான் அதிமுகவால் மீண்டும் ஆட்சி வர முடியவில்லை நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம். சர்க்கார் திரைப்பட போஸ்டர்களை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் என்பது போன்ற கருத்தை சட்டமன்றத்தில் பேசியிருந்தார். முதலில் இந்த கருத்து தேவையில்லாத ஆணி.சட்டமன்றத்தில் நிறைய தேவையில்லாத ஆணிகளை பற்றிய பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்கிறது.
“நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” – மத்தேயு 24:44
மேலே குறிப்பிட்டுள்ள பைபிள் வசனம் நமக்கு சொல்லும் முக்கியமான விஷயம், நாம் எப்போது, எதற்கு ஆயத்தமாக இருக்கிறோமோ நம்மை அதற்கு ஏற்ற இடத்தில் கடவுள் கொண்டு வைப்பார் என்பது தான் அந்த வசனம் என்று நான் புரிந்து கொள்கிறேன்.உடல் அளவில் மனதளவில் எல்லா வகையிலும் நாம் எதற்கு ஆயத்தமாக இருக்கிறோமோ அதை அதற்கான நேரம் வரும் சமயத்தில் நாம் அடைந்தே தீருவோம்.
விஜயை பொறுத்தவரையில் விஜய்யின் தந்தை விஜயை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது நோக்கி தான் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அதில் கடைசி சில ஆண்டுகள் மட்டும் தான் அநேகர் கண்களுக்கு வெளிச்சமாக இருந்தது.
காலம் சரியான சூழலையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்த நேரத்தில் விஜய் ஆயத்தமாய் இருந்தார் ஆட்சியை பிடித்தார்.
அதை சர்க்கார் பட போஸ்டரை கிழித்ததால் வீறு கொண்டு எழுந்து அதிமுகவை வீழ்த்தி ஜெயித்தது போன்று ஒரு கருத்தை நிறுவ முயல்வது ஏமாற்று வேலை. இப்படியான ஏமாற்று வேலையை சினிமா காலத்தில் இருந்தே விஜய் தரப்பு செய்து வந்ததை விஜய்யின் தந்தை உட்பட பலர் பல சமயங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணம் அதிகார சண்டை, திமுகவின் வீழ்ச்சிக்கு காரணம் அதீத விளம்பரம் திமிரான அணுகுமுறை, புதியவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்கிற கட்சி கட்டமைப்பு எல்லாவற்றிற்கும் மேலாக திமுக அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டு, எதற்கெடுத்தாலும் மத்தியில் ஆட்சியில் பங்கு கொள்ளாத சமயங்களில் மட்டும் மத்திய அரசுடன் மோதல் என்று இருந்தது என்று அந்தந்த கட்சிகளிடம் இருந்த குறை அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது.
இப்படி சூழலில் பல காலமாக அரசியலில் நுழையும் திட்டத்தோடு செயல்பட்டு தன்னை தயார்படுத்திக்கொண்ட விஜய் வெற்றி பெற்றார்.
இதெல்லாம் நடந்து முடிந்த பிறகும். ஏன் இவர்கள் தற்குறிப்பேற்ற கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கிறார்கள்? மழை பெய்து அணை திறந்தால் விஜய் தான் காரணம் என்கிறார்கள். சர்க்கார் பட பிரச்சனை தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்று பேசுகிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? அரசியல் என்று இல்லை எல்லா துறையிலும் வெற்றி என்பது ஒரு தொடர் பயணம். இதற்கு பின் விஜய் என்னும் பிம்பத்தை கட்டமைக்க சினிமா பயன்பட போவதில்லை. அரசியலில் பெற்ற வெற்றியை நிலைநிறுத்திக்கொள்ள விஜய் என்னும் பிம்பத்தை இன்னும் பெரிதாக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறதுஅந்த தேவையை எப்படி பூர்த்தி செய்வது.
விஜய்யின் அப்பா நெடுங்காலமாக விஜய்யை அரசியலுக்குள் நுழைக்க வேண்டும் என்றே தான் காய் நகர்த்தினார் விஜயும் பல சந்தர்ப்பங்களில் தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். பல ஆண்டு தவம் மற்றும், திமுக அதிமுகவின் மோசமான செயல்பாடுகள், கூட்டணி குழப்பங்கள், உட்கட்சி பூசல் , லாட்டரி பணம் எல்லாம் சேர்ந்து தான் வெற்றியை தந்தது என்று சொன்னால் சற்று தொங்கல் போல் இருக்கும். இதுவே ஒரு திரைப்பட போஸ்டரை கிழித்ததால் அதிமுக விஜய்யால் வீழ்ந்தது என்று சொல்லிப் பாருங்கள் பிரமாண்டமாக இருக்கும் புல்லரிக்கும்.
விஜய் தரப்புக்கு நிர்வாக அரசியல் தான் தெரியவில்லையே தவிர தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளும் அரசியல் சினிமா காலம் தொட்டே கைவந்த கலையாக இருக்கிறது.
சினிமா காலத்தில் விஜய் தரப்பு செய்த அதே அரசியலை இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித் விஜய் என்று இருந்ததை விஜய் அஜித் என்று மாற்ற வைத்தார்கள்.
அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்கிற கருத்துக் கணிப்பை எடுக்க வைத்தார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு ரஜினிக்கு விஜய் தான் போட்டி என்று கொண்டு நிறுத்தினார்கள்.
விஜயின் வெற்றி படமான கத்தி திரைப்படத்தை விட அதே ஆண்டு வெளியான ரஜினியின் தோல்வி படமாக அறியப்பட்ட லிங்கா அதிக வசூல் செய்திருந்தது. 68 படங்கள் மட்டுமே நடித்த விஜய்க்கே கூட தெரியும் 100 படங்களுக்கு மேல் நடித்தது இன்னமும் திரைக்கு வெளியேயும் முடி சூடா மன்னனாக இருக்கும் ரஜினியின் இடத்தை அரசியல் வெற்றியும் கூட தனக்கு தராது என்று. அவரே கூட அப்பா சட்டை போட்டு பார்க்கும் ஆசை இருப்பதில் தவறு இல்லை யானைக்கு குறி வைத்து தோற்பது பெருமை தான் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
ஆனாலும் விஜய் தரப்பு, விஜய் ரஜினி போட்டி என்கிற பிரச்சாரத்தை கையிலெடுத்தார்கள். காரணம், அங்கே விஜய்க்கு மற்ற நடிகர்கள் யாரும் போட்டியில்லை என்கிற கருத்து தானாக நிறுவப்பட வேண்டும் என்று அதனை செய்தார்கள். அவர்கள் நினைத்தது போலவே அது நடந்தது.
அதே யுக்தியை அரசியலிலும் கையிலெடுத்தார்கள். சீமான் கட்சித் தொடங்கிய காலம் முதல், மூன்றாவது அணியோடு தான் மோதிக்கொண்டிருக்கிறார். விஜயகாந்த் கமலஹாசன் விஜய் என்று புதிதாக யாரும் கட்சி தொடங்கினால் அவர்களை தாக்குவது தான் முதன்மை வேலையாக வைத்திருந்தார்சீமான் தேர்தல் வெற்றி அடையாமல் இருக்க இதுவும் ஒரு காரணம்.
மாறாக விஜய் மிகத்தெளிவாக மற்றவர்கள் போட்டியே இல்லை என்றார். இதெல்லாம் கவுண்டமணி சொல்வது போல், பின்னாளில் பாடமாக வைத்து அரசியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற முயல்கிற மாணவர்கள் நோட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டிய வியூகம். திமுகவிற்கு த.வெ.கவிற்கும் தான் போட்டி என்று பேசிக்கொண்டிருந்தவர்கள். இப்பொழுது மோடியோடு போட்டிபோட்டு கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவில் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கும் திமுகவும் மம்தாவும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் அழுதுகொண்டிருக்கையில், அடுத்த பிரதமர் விஜய் என்கிற கருத்தை நிறுவிக்கொண்டிருக்கிறார்கள்.இதுவும் ரஜினி விஜய் கதை தான்.
போட்டியை முதல் இடம் நோக்கி வைத்திருக்கும் பொழுது, நாம் முதல் இடத்தில் இருக்கிறவர்களை வீழ்த்த வேண்டியது இல்லை. முதலிடத்தில் இருப்பவர்கள் ஓய்வு கொள்ளும் நேரம் ஆசுவாசம் கொள்ளும் நேரம், விலகிக்கொள்ளும் நேரம், வீழும் நேரம் தானாக நாம் முதல் இடத்தில இருப்போம். விஜய் அதை தான் செய்து கொண்டிருக்கிறார்.
எப்படி விஜய்க்கு ரஜினி தான் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார் என்பது தெரிந்து இருந்ததோ எப்படி ரஜினியின் நீண்ட கால உழைப்பை வெற்றியை செல்வாக்கை விஜய்யின் வெற்றியோடு ஒப்பிட முடியாதோ அதே தான் அரசியலில் மோடியின் செல்வாக்கு வெற்றி உழைப்பு இவற்றை விஜயோடு ஒப்பிட முடியாது என்பதும் விஜய்க்கு தெரிந்து இருக்கும். ஆனாலும் அந்த ஒப்பீட்டை விஜய் தரப்பு செய்கிறது.
சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, தமக்கு நிகரானவர்களுடன் (அஜித், சீமான்) சண்டையிடுவதைத் தவிர்த்துவிட்டு, உச்சத்தில் இருப்பவர்களுடன் (ரஜினி, மோடி) நேரடியாகத் தன்னை நிறுத்திக் கொள்ளும் உளவியல் வியூகத்தை (Psychological Strategy) விஜய் கையிலெடுத்தார்.அதையே தான் இப்பொழுது தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கருத்து கணிப்பை நடத்த வைத்தது போல, அடுத்த பிரதமர் யார் என்கிற கருத்து கணிப்பை நடத்த வைத்திருக்கிறார்கள் தானாக அப்படி ஒரு கருத்து கணிப்பு நடைபெறவில்லை. ஒரு கருத்தை பேச்சை உருவாக்கி இப்படியொரு கருத்து கணிப்பு நடத்த உந்து சக்தியாக இருந்திருக்கிறார்கள்.
அதை செய்வதன் மூலம் திமுக விஜய்க்கு ஒரு பொருட்டே இல்லை என்கிற கருத்தை நிறுவிக்கொண்டிருக்கிறார்கள்.
கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்தும் ஸ்டாலினும் திமுகவும் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை பேசியும் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்த்தும் மக்களை சலிப்படைய செய்திருக்கிறார்கள். இன்னமும் பாஜகவை விஜய் எதிர்க்கவில்லை என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசியலில் இருக்கும் ஒரு பிராந்திய கட்சி தலைவர் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை கொண்ட ஒரு கட்சியை எதற்கெடுத்தாலும் எதற்கு எதிர்த்து கொண்டே இருக்க வேண்டும். தேசிய அளவில் காலூன்ற முடிகிறதோ இல்லையோ அதற்கான முனைப்பை காட்டுவதன் மூலம் மாநில கட்சிகள் எனக்கு போட்டியே இல்லை என்கிற கருத்தை அவர் நிறுவிக்கொண்டிருக்கிறார் என்பதாவது இந்த திராவிட அரசியல்வாதிகளுக்கு புரிய வேண்டாம் (புரிந்து இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு புரியாமலேயே இருக்கட்டும்).
இப்படியான தந்திரங்களை நான் விஜய்யின் திரைப்படங்களை ரசித்ததை விட அதிகம் ரசிக்கிறேன். மறுபக்கம், “என்னடா எல்லாமே போலியாக இருக்கிறதே!” என்றும் தோன்றுகிறது. பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் என்பதை போல, விஜய்யின் அரசியல் நாடகங்களால் நன்மை விளைந்தால் நல்லதே தான். தொடர்ந்து கவனிப்போம்.