சிலநாட்களுக்கு முன்பு ஓரிடத்தில் திருமாவளவன் அவர்கள் பேசிய பொழுது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற நிலையை எட்டிவிட்டோம் அடுத்து நாம் ஆட்சி அமைப்போம் என்று பேசியிருந்தார்.

மேடைப்பேச்சுக்கு பூ பொட்டெல்லாம் வைத்து என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். அப்படி பேசினால் தான் சுவாரசியமாக இருக்கும். ஆனால்,திருமாவளவன் அவர்கள் குறிப்பிட்ட ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்கிற நிலையை அடைய அவர் செய்தது என்னவென்று பார்த்தால், இத்தனை காலம் கட்சியை கட்சியாக தக்க வைத்திருந்தது மட்டுமேதான்.

காலச்சூழல், திமுக மீதான அதீத வெறுப்பு, அதிமுக தலைமையில் நிலவி வரும் குழப்பம், வீட்டுக்குள் இருந்தே ஜெயித்து விடலாம் என்று பிரச்சாரத்திற்கு மட்டம் போட்ட விஜய் என்று எல்லா காரணிகளும் சேர்த்து, யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் செய்தது. அப்படிப்பட்ட சூழலிலும்கூட தன் கட்சி சார்ந்த ஒரு முடிவை தன்னிச்சையாக எடுத்து அறிவிப்பதற்கு விசிகவிடம் எத்தனை தயக்கம் இருந்தது  எத்தனை குழப்பம் இருந்தது என்பதை நாம் எல்லோரும் பார்க்கத்தான் செய்தோம் . தீர்மானமாக முடிவை அறிவிப்பதற்கு திமுகவிடம் சொல்லிவிட்டு வந்தோம் என்றெல்லாம் சொல்ல வேண்டிய நிர்பந்தம் விசிகவிற்கு இருந்ததையும் நாம் பார்த்தோம் .நிலைமை இப்படியிருக்க, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற நிலை விஜய்யின் அரசியல் வரவால் காலம் தானாக ஏற்படுத்தி தந்த வாய்ப்பு தானே தவிர அதில் தன்னிச்சையாக உரிமை கொண்டாடி கொள்ள விசிகவிற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை என்றே நாம் கருதுகிறோம்.

திருமாவளவன் தனியொரு தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிலைநிறுத்தி வைத்திருந்ததிற்கு அவரை பாராட்டலாமே தவிர மற்றபடி கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்தும் நோக்கில் அவர் எதையும் செய்யவில்லை.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக பரவலாக அறியப்படும் திருமாவளவன் அவர்களால் அப்படி ஒடுக்கப்பட்ட மக்களையே முழுமையாக ஒரு குடைக்கு கீழ் திரட்ட முடியவில்லை எனில் அவரின் அரசியல் அணுகுமுறைகளில் பிழை இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

அவர், அவருடைய புரிதலையும் அணுகுமுறைகளையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே நம் கருத்து.

என்ன மேம்படுத்திக்கொள்ள வேண்டும்?

சாதாரணமாக ஒரு மிளகாய் பொடி விற்கிறவர்கள் கூடத் தங்களை எல்லோருக்கும் பொதுவானவராக முன்னிறுத்திக்கொள்வார். விஜய் அப்படி எல்லோருக்கும் பொதுவானவராக அறியப்பட்டதால் தான் அவரால் இரண்டே வருடங்களில் முதலமைச்சராக முடிந்திருக்கிறது. ஆனால், திருமாவளவன் இன்னுமும் அவரை எல்லோருக்குமான தலைவராக முன்னிறுத்திக்கொள்ளவில்லை.

அதை அவரின் தோல்வியென்றோ வெற்றியென்றோ நாம் வரையறுத்து சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் எல்லா கட்சிகளும் தனித்தொகுதியில் ஒடுக்கப்பட்டவர்களை நிற்க வைக்க வேண்டிய தேவை இருப்பதால், ஒடுக்கப்பட்டவர்களின் வாக்குகளும் எல்லா கட்சிக்கும் பிரிந்து விடுகிறது. மற்றொரு பக்கம், சில விஷயங்களை அதிகமான முதிர்ச்சியுடன் அணுகுகிற திருமாவளவன் பல விஷயங்களில் சார்பு நிலையோடு புரிதலற்ற அணுகுமுறையையே தான் கையிலெடுக்கிறார் அது அவரை எல்லா மக்களுக்குமான பொதுவான அரசியல் தலைவர் என்கிற இடத்தில் இருந்து தூரமாக தள்ளி வைக்கிறது.

இந்த விஜய்யின் பின்னால் திரண்ட கூட்டத்தை நாம் தற்குறிகள் என்கிறோம். நிச்சயமாக அரசியல் முதிர்ச்சியற்ற ஒரு கூட்டத்தின் முன்னெடுப்புதான் இந்த மாற்றத்திற்கு காரணம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

நிதானித்து ஒரு நொடி யோசித்தால், விஜய்யின் பின்னால் அணி திரண்டவர்கள் தற்குறிகள், அரசியல்படுத்தப்படாதவர்கள் என்றால்? மற்ற கட்சியில் மட்டும் ஞானிகளும் ரிஷிகளுமா இருக்கிறார்கள்?

நடிகர்கள் பின்னால் அணிதிரள்கிறவர்களை வசை பாடும் அரசியல்வாதிகள், நடிகர்கள் அவர்களின் ரசிகர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று பாடம் எடுக்கின்ற அரசியல்வாதிகள் யாரும் அவர்களின் தொண்டர்களுக்கு அந்த பாடங்களை எடுப்பதில்லை.

இதற்குச் சான்றாக, சமீபத்தில் ஆகஸ்ட் 17 அன்று தஞ்சாவூர் காந்தி சாலையில் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லலாம். திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளுக்கு அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பதாகையை மாநகராட்சி அகற்றியதற்கு, எந்த அனுமதியும் பெறாமல் அங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

சட்டமேதை அம்பேத்கரை தலைவர் என்று சொல்லிக்கொண்டு சட்டத்தை மதிக்காமல் சாக்கு போக்கு சொல்வது அரசியல்வாதிகளின் வாடிக்கை. விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் இல்லை. எல்லா அரசியல் கட்சிகளும் சட்டத்தை வளைப்பதையும் மீறுவதையுமே தான் வாடிக்கையாக்கி வைத்திருக்கிறார்கள்.

அந்த சாலை மறியல் போராட்டத்தின் பொழுது, இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் வழிவிடச் சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். நிலைமையை சரி செய்ய இரு சக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் லேசாக கன்னத்தில் அறைய, அவரோ பதிலுக்கு பலமாக காவலரை தாக்குகிறார்.

சங்கிலித் தொடர்போல், ஒரு தவறு எத்தனை தவறுகளுக்கு வித்திட்டு இருக்கிறது. சீருடையில் இருக்கின்ற காவலரை தாக்குவது பெருங்குற்றமே தான். ஆனால், ஒரு அரசியல் கட்சி சட்டத்தை மீறி அனுமதியில்லாமல் பதாகை வைக்காமல் இருந்திருந்தால், அதை அகற்றியதற்கு சாலையை மறித்து அவர்கள் போராடாமல் இருந்திருந்தால், அப்படி சட்டத்திற்கு புறம்பாக பொது மக்களுக்கு இடையூறு செய்த கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், காவலர் மீது பதில் தாக்குதல் நடத்தும் அளவிற்கு இது சென்றிருக்காது.

இந்தியாவில் இருக்கின்ற பெருங்குறை, இங்கே யாரும் சட்டத்திற்கு அஞ்சுவதில்லை. சட்டத்தை வளைக்க முடிந்தவர்களுக்கே எல்லோரும் அஞ்சுகிறோம்.

நான் நேரில் கண்ட ஒரு காட்சி: சாதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில், பல இளைஞர்கள் போதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்தார்கள் எல்லோரும் ஒரு சாலை சந்திப்பில் ஊர்வலத்தை நிறுத்தி வீர வணக்கம், வீர வணக்கம் என்று கோஷமிடுகிறார்கள். காவலர் ஒருவர் வந்து அந்த ஊர்வலத்தில் இருந்த பெரியவரிடம் கெஞ்சி கூட்டத்தை கலைக்கச் சொல்லி பின் வாகன நெரிசலைச் சரி செய்யும் பொழுது, வாகன ஓட்டிகளிடம் கடிந்துகொண்டார். இது நடந்து பல மாதங்கள் இருக்கும்.

இப்பொழுது தமிழக அரசியலில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்னுமும் அரசியல் கட்சிகளின் இப்படியான அணுகுமுறை மட்டும்  மாறவில்லை.

தற்பொழுது நடந்த இந்த பிறந்த நாள் பதாகை விஷயத்தில், அந்த இரு சக்கர வாகனத்தில் வந்து காவலரை தாக்கியவர் மீது வழக்கு பதியப்பட்டு அவரின் பழைய புராணங்கள் எல்லாம் கிளறப்பட்டது குறித்து செய்திகள் வந்தது.

ஆனால், ஆளும் கூட்டணி கட்சியின் அனுமதி பெறாத அனாவசியமான சாலை மறியல் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஒரு செய்தியையும் வந்ததாக தெரியவில்லை.

திருமாவளவனும் அவர் கட்சியினரும் இன்னமும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தங்களை குறுக்கி கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அம்பேத்கர் தலித்துகளுக்கு மட்டுமான சட்டத்தை இயற்றவில்லை அவர் எல்லோருக்குமான சட்டத்தை இயற்றினார்.கடுகளவு அதை மீறினாலும் அது அவருக்கு செய்யும் அவமரியாதை ஆகாதா? தற்காலிக பிரிவான 370 நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்று பல சந்தர்ப்பங்களில் இவர்களின் செயல்பாடுகள் அம்பேத்கரை அவமதிப்பதாக தான் இருந்திருக்கிறது.

ஒரு அரசியல் இயக்கத்தின் போராட்டம் என்பது அரசியலமைப்புக்கு சட்டத்திற்கும் உட்பட்டு இருக்க வேண்டாமா? அது தானே சட்டமியற்றியவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை

அம்பேத்கர் ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைத்ததை மெய்யாக்குவது குறித்து இருக்க வேண்டிய ஒரு தலைவரின் பயணம்.அதற்கு மாறாக இருப்பது குறித்து திருமாவளவன் அவர்கள் சிந்திக்க வேண்டும்..

“அடங்க மறு அத்து மீறு” என்று பல இடங்களில் சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து, படித்து உழைத்து இன்னமும் அதிகமானோர் அதிகாரத்திலும் நிர்வாகத்திலும் பங்கு கொள்கிற அளவு முதிர்ச்சியோடு எல்லா மக்களுக்கும் பொதுவான தலைவர்களை உருவாக்குவதையே முதல் இலக்காக கொண்டு இயங்க வேண்டும்

ஒரு இயக்கமாக ஒரு ஆசானாக ஒரு தலைவராக  திருமாவளவன் அது நோக்கி பயணப்பட்டு எல்லோருக்கும் பொதுவான கருத்துக்களை சிந்தனைகளை பேசினால் மட்டுமே தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சி அமைக்க முடியும்.

மாற்றத்தின் முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் கூட்டணி கட்சிகளின் இப்படியான போக்கை கண்டிப்பதோடு சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க வேண்டும். வரும் காலங்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *