நன்றி நெல்சா!

இதுதான் இன்று எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நன்றி நெல்சா!

2011-ம் வருடம், பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுதே காதில் விழுந்த செய்தி, வீட்டிற்குள் நுழைகிறேன், சன் தொலைக்காட்சி செய்தியில் அந்தச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. செய்தியைப் பார்த்தபடியே மாமாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் ஒரே எண்ண அலைவரிசையில், அவர் மீண்டும் படம் நடிக்காமல் போனால்கூட பரவாயில்லை, நல்லபடியாக நலமாகத் திரும்பி வர வேண்டும் என்று பேசிக்கொண்டோம். சில வருடங்கள் கழித்து ஜெயா தொலைக்காட்சியில் தலைவர் அளித்த பேட்டி ஒன்றில், ரசிகர் ஒருவர் எழுதிய கடிதம் குறித்துச் சொன்னார். அந்த ரசிகர், “தலைவா! நீ அரசியலுக்கும் வர வேண்டாம்! படமும் நடிக்க வேண்டாம், திரும்பி வந்தா போதும்” என்று எழுதியிருந்ததாகச் சொன்னார்.

நானும் மாமாவும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தது பற்றி அந்த ரசிகருக்குத் தெரியாது; அவர் கடிதம் எழுதியது எங்களுக்குத் தெரியாது. ஆனால், ஒருமித்த ஒரு உணர்வு இருந்தது. காலம் அந்த ஒருமித்த உணர்வை எல்லா மனங்களிலும் ஏற்படுத்தியிருந்தது. தலைவர் மீண்டும் நலமாகத் திரும்ப வேண்டும் என்பதுதான் அந்த உணர்வு!

இன்று மீண்டும் அப்படியொரு ஒருமித்த உணர்வு வெளிப்படுகிறது. இதற்கு முன்னெப்போதும் படம் பார்த்து வெளியே வருபவர்கள் படத்தையும் அதில் நடித்தவர்களையும் புகழக் கேட்டிருக்கிறோம், இயக்குநரைப் புகழக் கேட்டிருக்கிறோம். இயக்குநருக்கு நன்றி சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? மொத்த தமிழகமும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறது. நானும் இன்னமும்கூட எனக்குள் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

Thank you Nelson! இதை எக்ஸ் தளத்தில் எழுதிய பொழுதும், இப்பொழுது எழுதும் பொழுதும்கூட கண்கள் நீர் தேக்குகின்றன. இந்த உணர்வு, இந்த மகிழ்ச்சி ஏன் இத்தனை கனமாக இருக்கிறது?

ஏன் எங்கும் நன்றி நெல்சா ஒலிக்கிறது?ரஜினிகாந்த் என்னும் ஒற்றை மனிதனின் வெற்றியை ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியாகவே பார்க்கிறார்கள். ராமனின் வாழ்க்கை மாதிரி ரஜினியின் வாழ்க்கை வெற்றிகள் நிறைந்ததுதான்; அதே வேளையில் வெற்றிகளுக்கிடையே ராமன் கண்ட துயர்கள் அதிகம். இந்தத் துயரங்களைத் தாண்டி, தர்மம் வழுவாது ஒருவன் தொடர்ந்து வெற்றி அடைந்துகொண்டே இருக்கும் பொழுது, அவனை இந்த மக்கள் தங்களில் ஒருவனாகப் பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அவன் வேறு அவர்கள் வேறு என்று அவர்கள் நினைப்பதில்லை.

நாம் எத்தனை சாதாரணமான வாழ்க்கை வாழ்கிறோம்; நம்மைச் சுற்றியும்கூட பொறாமை, வெறுப்பு எல்லாம் இருக்கிறது. இத்தனை வெற்றிகளை அடைந்துகொண்டே இருப்பவன் மீது ஏன் அப்படியான பொறாமை, வெறுப்புகள் எல்லாம் வேலை செய்வதில்லை?

ஒருவனின் தோல்வியைப் பெரும்பான்மையினர் காத்திருந்து எதிர்நோக்கும் இதே ஊரில், ரஜினியின் வெற்றியை மட்டும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ரஜினியைப் போன்று அன்பை வளர்க்கிறவர்கள் வெறுப்பை வளர்ப்பவர்களிடம் இருந்து இப்படியாகத்தான் வேறுபடுகிறார்கள்.

தனக்குள் இருக்கும் இறைவனை எல்லோருள்ளும் காணும் ரஜினியை எல்லோருள்ளும் இருந்து இறைவன் வாழ்த்துகிறார். எல்லோருள் இருந்தும் அவனை மேம்படுத்துகிறார். அன்புதான் இறைவன் என்கிறார்கள். எல்லோருள்ளும் அன்பைக் காண்கிறவன் எல்லோருடைய அன்பையும் பெறுகிறான். ரஜினி மீதிருக்கும், படர்ந்திருக்கும் அத்தகைய அன்பின் வெளிப்பாடுதான் நன்றி நெல்சா!

பாபா படம் தோல்வி அடைந்ததும், ரஜினியே குறிப்பிட்டது போல, அவ்வளவுதான் ரஜினியின் கதை முடிந்தது என்று பேசினார்கள்; சந்திரமுகி என்னும் வெற்றியோடு வந்தார்.

எந்திரன் படம் வெளியான பொழுது, இதற்கு மேல் ஒரு வெற்றியை ரஜினியாலும் அடைய முடியாது; இதோடு ரஜினி படம் நடிப்பதை நிறுத்திக்கொள்ளலாம் என்கிற பேச்சுகள் வந்தன. கபாலி என்னும் பெரு வெற்றியோடு வந்தார். அதை வெற்றிப் படம் என்று ஒப்புக்கொள்வதில் இன்று வரை பலருக்குப் பலவகையான சிக்கல் இருக்கிறது. அதற்கு மேல் என்ன செய்யப்போகிறார் என்று இருந்த நேரத்தில், உடல்நிலை மீண்டும் சரியில்லாமல் போன பொழுதுகூட 2.0 வெற்றியோடு வந்தார். அதை அனிமேஷன் படம் என்றார்கள்.

எப்போதும் எல்லோரிடமும் சொல்வதை இங்கே மீண்டும் எழுதுகிறேன். 2017-க்கு முன்பு வரை ஒரு முறைகூட அரசியலுக்கு வரப்போகிறேன் என்றோ கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்றோ அவர் சொன்னதில்லை. 2017-க்குப் பிறகு அவர் சொன்ன “எழுச்சி வரட்டும், வருகிறேன்” என்றதையேதான் அவர் 90-களில் இருந்தே சொல்லி வந்தார். “எனக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. நான் வந்தால் அரசியல் மாறாது. மக்களிடம் ஒரு புரட்சி வந்து அரசியல் மாறும் பொழுது வேண்டுமென்றால் என்னை அரசியலுக்கு அழையுங்கள்” என்று சொன்னவரை, படத்தை ஓட்டுவதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டுகிறார் என்று பேசினார்கள்.

இனிமேல் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொன்ன பின் ஜெயிலர் என்னும் பெரு வெற்றியோடு வந்தார். படத்தை ஓட்டுவதற்காகத்தான் அரசியல் பேசுகிறார் என்றவர்களிடம் அரசியல் பேசாமலேயே ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டார் என்றால், அவர் சும்மா நடந்தார்; மோகன்லால் இருந்தார்; கார் இருந்தது; வீடு இருந்தது; இவர் வந்து போனார் என்று கதை சொன்னார்கள்.

இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று நினைத்த பொழுதெல்லாம் அந்த மனிதர் அதற்கு மேல் ஒன்றைச் சாத்தியப்படுத்திக்கொண்டிருந்தார். இன்னமும் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கிறார். இங்கே பைபிளின் வசனம் ஒன்று எனக்கு நினைவிற்கு வருகிறது.

மத்தேயு 19:26: இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

இந்த வசனம் நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறது. மனிதர்களின் குறுகிய மனம் பற்றிப் பேசுகிறது. மனிதர்கள் தங்கள் புத்திக்கு எது தெரியுமோ அது மட்டிலும் தம்மைக் குறுக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் அனுபவத்தைத் தாண்டி ஒன்றை அவர்களால் சிந்திக்க முடிகிறதில்லை. அவர்கள் அனுபவத்தைத் தாண்டி யாரேனும் ஏதேனும் ஒன்றைச் சொன்னால் அவர்கள் அதை நம்புவதும் இல்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை.

சாதாரணமாக நாம் சில விஷயங்கள் இப்படி மட்டும்தான் சாத்தியப்படும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் நினையாத பல வழிகளில் அது சாத்தியப்படலாம். மரணப்படுக்கையில் இருந்து ஒருவர் மீண்டு வர முடியுமா என்கிற சந்தேகத்தை நம் அறிவும் அனுபவமும் தருகின்றன. பெரிய தோல்விக்குப் பின் இவன் எங்கு மீண்டு வருவான் என்கிற சந்தேகத்தை அறிவும் அனுபவமும் தருகின்றன. ஒரு பெரிய வெற்றியை அடைந்த பின் இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்கிற சந்தேகத்தை அறிவும் அனுபவமும் நமக்குத் தருகின்றன.

மரணப்படுக்கையில் இருந்து ஒருவர் மீண்டு வர முடியும். மீளமுடியாத தோல்வியில் இருந்து மீண்டு ஒருவன் பெரு வெற்றியை அடைய முடியும். இதற்கு மேல் வெற்றி அடைய என்ன இருக்கிறது என்பதைத் தாண்டி ஒரு பெரு வெற்றியை அடைய முடியும். இப்படி எல்லாமும் முடியும் என்பதற்குச் சாட்சியாக ரஜினி இருக்கிறார்.

அந்தப் பைபிள் வசனம், நாம் எப்படி நம் அறிவைக் கொண்டு நம்மைக் குறுக்கிக் கொள்கிறோம் என்று குறிப்பிடுவதாகவே நான் பார்க்கிறேன். நம் கலாச்சாரத்தில் இறைவனைப் பேரறிவு என்கிறார்கள்; அவனால் எதுவும் சாத்தியம். அவன் எல்லோருள்ளும் இருக்கிறான். “உங்களுக்குள் இருக்கின்ற இறைவனை நம்புங்கள்; நீங்கள் நம்ப முடியாத நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும்” என்று உங்களுக்கு நான் சாதாரணமாகச் சொன்னால், “எங்க நடக்குது” என்று நீங்கள் சலித்துக்கொள்வீர்கள். இத்தனை தூரம் படித்த பிறகு உங்களுக்கே ஒரு நம்பிக்கை துளிர்விட்டிருக்கும்.

ரஜினியைப் பற்றி யாரேனும் தவறாக அவதூறு பேசும் பொழுதெல்லாம் நான் சீற்றம் கொள்வதற்கு ரஜினி மீது இருக்கும் அன்பு மட்டும் காரணம் இல்லை. அது ஒரு அறச்சீற்றம்.

இலங்கை ஜெயராஜ் ராமனைப் பற்றிப் பேசுகிற இடத்தில் இப்படிச் சொல்கிறார்: “ராமனைத் திட்டுவதெல்லாம் ஃபேஷனாகிப் போனது. நல்லவர்களைத் தூற்றுவதால் அவர்களைத் தாழ்த்திக்கொண்டு இருந்தால், இவனைப்போல் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகத்திற்கு யாரைக் காட்டுவீர்கள்?” என்று கேட்டார்.

“தேவனாலே எல்லாம் கூடும்” என்கிற பைபிள் வசனத்திற்குச் சாட்சியாக என்னால் இந்தச் சமூகத்திற்கு ரஜினியைக் காண்பிக்க முடிகிறது. “பணியுமாம் பெருமை” என்கிற திருக்குறளுக்கு ரஜினியை எடுத்துக்காட்டிப் பேசினார் சாலமன் பாப்பையா.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்கிறார் வள்ளுவர். தெய்வங்கள் இந்தச் சமூகத்திற்கான நினைவூட்டல்கள். எது நல்லது என்று எடுத்துரைக்க நிற்கும் வழிகாட்டிகள்.

கூட்டத்தில் இன்னும் நூறு பேர் ரஜினியைப் போன்று இருக்கலாம். எல்லோரும் பார்க்கின்ற உயரத்தில் இருப்பவர்களைத்தான் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும்.

இப்படி நல்லவைகளுக்காக எடுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒருவனை, பலகாலும் பல்வேறு தரப்புகள் தங்கள் சுயலாபத்திற்காகக் கீழ்மைப்படுத்திக்கொண்டிருந்தன.

“இந்தாளு அரசியலுக்கு வந்தால், நம் பிழைப்பு கெட்டுவிடும்” என்று நினைத்த அரசியல்வாதிகள், ரஜினியுடன் சிரித்தபடி கைகோர்த்துக்கொண்டு மூன்றாம் தர அடிவருடிகள் மூலமாய் ரஜினி மீது வெறுப்புகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தீர்மானமாய் ரஜினி சொன்னதும் அவர்கள் எல்லாம் பெருமூச்சு விட்டு மாறிவிட்டார்கள்.

வளரும் வரை ரஜினியின் காலைப் பிடித்து வளர்ந்துவிட்டு, வளர்ந்ததும் சம்பளத்திற்கு ஆள் வைத்து அவரை வசை பாடிக்கொண்டிருந்தது ஒரு கூட்டம். பேசிவிட்டுப் போகட்டும் என்று அவரும் விலகியே இருந்தார்.

ஆனால், இந்தக் கடந்த ஐந்து மாதங்களில், ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று பயந்த கட்சிகள் செய்ததைவிடவும் மோசமான வசவுகள் அவரை நோக்கித் திட்டமிட்டு எய்யப்பட்டன.

90-களில் இருந்தே தனக்குப் பதவி வேண்டாம் என்றவர், கட்சி ஆரம்பித்தாலும் தான் பதவிக்கு வரப்போவதில்லை என்பதைத் தமிழருவி மணியனைச் சந்தித்த முதல் நாளிலேயே சொன்னவரை, விஜய் முதல்வர் ஆனதால் ரஜினிக்குப் பொறாமை என்று பேசியதைவிட ரஜினியைக் கீழ்மைப்படுத்த ஒன்றும் செய்ய முடியாது. நல்லவர்களை இப்படியான பொய் அவதூறுகள்தான் உடைத்துவிடும்.நரிகளையும் ஓநாய்களை விட விஷப்பாம்புகளை கண்டு தான் அச்சம் கொள்ள வேண்டி இருக்கிறது.

கலைஞர், ஜெயலலிதா என்று யார் முதல்வராக இருந்த பொழுதும் அவர்களைப் பற்றிய விமர்சனங்களை அவர்கள் இருக்கும் மேடையிலேயே வைத்தவர் ரஜினிகாந்த். அவரின் அந்தப் போக்கு ஸ்டாலின் வரை தொடர்ந்தது. அத்வானி போன்றவர்கள் மீதும்கூட தனக்கு இருந்த அதிருப்தியைப் பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நம்மைப் பற்றி எந்த விமர்சனமும் வைத்துவிடக் கூடாது என்கிற பயத்தின் விளைவாய், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் விஜய் மீது அவருக்குப் பொறாமை என்று பரப்பினார்கள்.

விஜய் முதல்வர் ஆனதில் இருந்து ரஜினியின் மீது அத்தனை கீழ்த்தரமான வசவுகள். அரசியலில் விஜய் அடைந்த வெற்றியைக் கொண்டாடுவதைவிட ரஜினியைக் கீழிறக்குவதில் இங்கே பலர் இன்பம் கண்டார்கள். பதவியேற்பு விழாவிற்கு யார் எங்கு உட்காருவார்கள் என்பது முதற்கொண்டு தீர்மானிக்கப்பட்டு, த்ரிஷாவின் பெயர் எழுதப்பட்ட நாற்காலியில் கமலும் ரஜினியும் பொறாமையில் வந்து உட்காரவில்லை என்று பேசினார்கள்.

அரசியலில் விஜய் அடைந்த வெற்றிக்கு அரசியலில் இல்லாதவரை இழுத்து இவர்கள் கேலி செய்ததெல்லாம், “நான் எட்டாம் கிளாஸ் பாஸ், நீங்க பத்தாவது பெயில்” என்கிற ரகம்தான்.

ஜெயிலர்-2 வெளியாவதற்கு முன்பு இந்தப் படம் தோல்வி அடையும்; அதோடு விஜய் வீட்டு வாசலில் ரஜினி முடித்துக்கட்டுவது என்பது போன்ற படங்களை வெளியிட்டார்கள். எல்லா இரங்கல் செய்திகளுக்குக் கீழும் இவர்கள் ரஜினியை இழுத்தார்கள். காலம் யாரை எப்போது அழைத்துக்கொள்ளும் என்பதை உணர்ந்தவர்களுக்குத் தெரியும்: ஐம்பதோடு, அறுபதோடு முடித்துக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்; நூற்றைத் தாண்டி வெற்றிகொண்டவர்களும் இருக்கிறார்கள் என்று.

படமே பார்க்காமல், “அதே பின்னணி இசையைத்தானே அனிருத் போட்டிருக்கிறார்; நடக்க மட்டும்தானே செய்கிறார்; படம் சரியில்லையாமே” என்று இவர்களின் வசவுகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. சினிமா, அரசியல் எல்லாம் தாண்டி அவர் அடைந்திருக்கும் உயரத்தை அடைய முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடு இது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளப் போவதில்லை. அத்தனை அறிவு இருப்பவர்களால் ஒரு பொழுதும் ரஜினியைக் கீழ்மைப்படுத்த முடியாது.

நம் மீது வெறுப்புகளையும் பொய்யுரைகளையும் வீசி நம்மை வீழ்த்தத் துடிப்பவர்களை நாம் பழிவாங்க வேண்டியதில்லை. நாம் ஒரு பெரிய வெற்றியை அடைந்துவிட்டால் போதும், அதுவே அவர்கள் தங்களைத் தாங்களே வீழ்த்திக்கொள்ளப் போதுமானதாக இருக்கும்.

ரஜினி விழ வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் சமூகத்தின் இந்த மோசமான புற்றீசல்களுக்கு நடுவே அவர் இன்னும் கம்பீரமாய் நிற்க வேண்டிய தேவை இருந்த சமயத்தில், நெல்சன் கொடுத்திருக்கும் இந்த வெற்றி தந்த மகிழ்ச்சி கனமாகத்தான் இருக்கும். நமக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் சமயங்களில் நாம்தான் இப்படித் தூக்கி நிறுத்த வேண்டியதாக இருக்கிறது. அதற்குத்தான் சமூகம் ஒருமித்த குரலில் “நன்றி நெல்சா!” என்கிறது.தேவனாலே எல்லா நன்மைகளும் நடந்து கொண்டே இருக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *