தலைப்பை படித்தததும், “பீகார் கல்வியில் எங்கு இருக்கிறது? தமிழகம் கல்வியில் எங்கு இருக்கிறது? இங்கு எத்தனை பேர் பட்டப்படிப்பு முடித்து இருக்கிறார்கள்? நாங்களெல்லாம் உனக்கு தற்குறியா?” என்று சீற்றம் கொள்ளத்தேவையில்லை. பீகார் எங்கோ இருக்கட்டும். நானும் தமிழகத்தில் தான் இருக்கிறேன்.
எந்தவொரு வாக்கியத்தையும் நிகழ்வையும் வரலாற்றையும் எப்படி அணுக வேண்டும், அது சொல்ல வரும் செய்தியை எப்படி சரியாக புரிந்து கொள்வது என்பதில், தமிழகம் பலவீனமான ஒரு சமூகமாக இருக்கிறது.’த.வெ.க. இல்லை தமிழகமே தற்குறி தான்!’ என்பதை கட்டுரையின் போக்கில் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
ஒரு வாக்கியத்தை எப்படி அணுகினாலும் ஒரு உண்மையை தானே அது தரும்?என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.
ஒரு நாள்,கல்லூரியில் இருந்து, பயணிகள் ரயிலில் நண்பர்களோடு ஊருக்கு கிளம்பினேன். அதற்கு முன் அதிகமாக நான் ரயிலில் பயணித்தது இல்லை. எங்கள் ஊர் ரயில் நிலையத்தை சில முறை பகலில் பார்த்து இருக்கிறேன். நாங்கள் அன்று பயணித்த அந்த இரயிலில் பெரும் கூட்டம் ஒன்றும் இல்லை.கூட்டமில்லாத பேருந்திலும் கூட்டமில்லாத ரயிலிலும் பயணிப்பதை போன்ற ஒரு அனுபவம் சொகுசு கார்களிலும் கூட கிடைக்காது.நட்ட நடு ராத்திரியில் எங்கள் ஊர் இரயில் நிலையத்தில் அந்த ரயில் வந்து நின்றது. நாங்கள் பத்து பேர் அவர்களோடு இன்னும் பத்து பேர் இவ்வளவு பேர் மட்டுமே தான் அந்த பிளாட்பாரத்தில் இறங்கினோம். ரயில் நிலையத்தில் பெரிய பரபரப்போ ஆரவாரமோ இல்லை. ஒரு உணர்ச்சியில் நான் “இது மதுரை ரயில் நிலையமா“என்று கேட்டு விட்டேன். அன்று தான் முதல்முறை மதுரை வந்த என் நண்பர்கள். “உன் ஊர் ரயில்வே ஸ்டேஷனையே இன்னிக்கு தான் பாக்குறீயா?” என்று கேட்டு என்னை பரிகாசம் செய்தார்கள். நான் வளர்ந்த மதுரை இரவிலும் கூட பரபரப்பாக தான் இருந்திருக்கிறது. பேருந்துநிலையம் மார்க்கெட் என்று பொது இடங்களில் இரவை மதிக்காத இயங்கிக்கொண்டிருக்கும் கூட்டம் எப்போதும் இருக்கும், ரயிலில் இருந்து இறங்கிய இருபது பேரை தவிர்த்து ஒருவரும் இல்லாத ரயில் நிலையத்தை கண்ட உணர்ச்சியில், நான் உதிர்த்த வார்த்தைகள் நண்பர்களால் வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டது.அன்று நான் என்ன விளக்கம் சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆங்கிலத்தில் இதை perception என்கிறார்கள்.இதைப்பற்றி திருக்குறளும், கீதையும் கூட பேசுகிறது.

ஏது நீ உன் நண்பர்களோடு ஊர் சுத்தற கதையையா? இல்லை.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
இதையே கீதை எப்படி சொல்கிறது என்றால், ஒருவன் வளரும் சூழலுக்கு ஏற்ப அவனுக்குள் ஏற்படும் நம்பிக்கைகளை நானே வளர்க்கிறேன் என்கிறார். ஒருவன் எத்தனை கற்றாலும் அவன் கர்ம வினை பயனாக பெற்ற அறிவு தான் மிகும் என்கிறது அந்த குரல். இரண்டுமே ஒன்றை எப்படி பார்க்கிறோம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில் நம்முடைய புறச்சூழல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி பேசுகிறது.
என்னுடைய நண்பர்கள் மதுரையை கண்டதில்லை,வெளியில் அதிகம் சுற்றாத ஒருவனாக தான் என்னை அவர்கள் அறிந்து வைத்து இருந்தார்கள்.இந்த காரணிகள் எல்லாம் தான் நான் சொன்ன அந்த வார்த்தையை அவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்பதை தீர்மானிக்கிறது.
சாதாரணமாக நண்பர்களுக்கிடையிலான பேச்சிலோ அல்லது வீட்டிலோ ஒரு வாக்கியம் என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பதில் இருந்து பிறழ்ந்து அர்த்தம் கொள்ளப்படுவது எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், எல்லார்க்கும் பொதுவான அரசியலில் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுகிறது.
இலங்கை ஜெயராஜ் அவர்கள், இதைப்பற்றி பேசியிருக்கிறார், கம்பனில் பிரமாணங்கள் என்கிற தலைப்பில் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறன், பிரமாணங்கள் பற்றி அவர் நூலும் எழுதியிருக்கிறார். அவரின் அந்த பேச்சும் நூலும், உண்மையை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை அழகாக நமக்கு விளக்குகிறது.

எந்த ஒரு வார்த்தையையும் வாக்கியத்தையும் யார் சொல்கிறார்கள் எதனால் சொல்கிறார்கள் எந்த இடத்தில் சொல்கிறார்கள் என்ன நோக்கத்தில் சொல்லப்பட்டது என்பதையெல்லாம் கொண்டு அதன் உண்மையை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
நாம் அதைத்தான் செய்கிறோமா என்றால் இல்லை. ஒரு வார்த்தை போதும், அதை அப்படியே எடுத்துக்கொண்டு பெரிதாக்கி விடுகிறோம். அரசியல் களத்தில் இது ஆபத்தானது. அரசியல் களத்தில் தானே நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று நினைக்கக்கூடாது. நாம் எல்லோரும் அரசியல் களத்தில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பாவிட்டாலும் அது தான் நிஜம்.
விஜய்யின் பாண்டிச்சேரி கூட்டம் பற்றிய ஒரு உரையாடல் நம் ஆசிரியர் குழுவில் நடந்தது. விஜய் பேசாமல் இருந்தால் கூட, ஒரு பத்து ஓட்டு அதிகம் வாங்குவார், பேசி கிடைக்கின்ற பத்து ஓட்டை கெடுத்துக்கொள்வார் போல என்கிற எண்ணத்தை தருகிற மாதிரியான பேச்சு.

உண்மையை எப்படி அணுகுவது என்று ஆரம்பித்து விஜய்க்கு வந்துவிட்டோம். ஏன் என்று சொல்கிறேன். பாண்டிச்சேரி சென்ற விஜய் , அங்கே அவரின் கூட்டத்திற்கு சரியான பாதுகாப்பு கொடுத்ததற்கு புதுவை முதல்வரை பாராட்டி தமிழக முதல்வரை கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார். அந்த பேச்சு பெரும் கேலிக்குள்ளானது. யூனியன் பிரதேசங்களில் காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டுக்கு கீழ் வருவது இல்லை. கொஞ்சம் பின்னால் சென்றால், கரூர் சம்பவத்திற்கு முன்னதாக கூட கூட்டத்தில், காவல் துறைக்கு விஜய் நன்றி தெரிவித்து இருந்தார். விபத்துக்கு பின் அதுவும் விமர்சனத்திற்கு உள்ளானது.
கரூர் சம்பவத்திற்கு முன்பு, தமிழக காவல்துறையை பாராட்டியதோ நன்றி தெரிவித்ததோ, அவர்கள் சிறப்பாகவும் சரியாகவும் பாதுகாப்பு கொடுத்தார்கள் என்பதை நிறுவும் கூற்று இல்லை. மரியாதை நிமித்தமாக காவல்துறையின் பணி சிறப்பாக இருந்ததோ இல்லை, காவலர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக சொல்லப்பட்ட நன்றி. ஆனால், அதுவே விபத்திற்கு பின், அரசின் காவல்துறையின் கூட்ட மேலாண்மைக்கு எதிரான விமர்சனத்திற்கு கேடயமாக ஆனது. அதை நம் சமூகம் அனுமதித்தது. என்ன விதத்தில் அந்த நன்றி சொல்லப்பட்டது என்பதை மடைமாற்றி விபத்திற்கு காவல்துறையின் பொறுப்புக்குறைபாடுக்கும் சம்பந்தம் இல்லாதது போல அந்த நன்றி அர்த்தம் கற்பித்தும் தற்குறித்தனம் தான்.
அப்படியென்றால், த.வெ.க.வும் விஜயையும் ஆகச் சிறந்த அரசியல் ஞானிகளா? அவர்கள் செய்வதையெல்லாம் ஏற்கிறாயா? அவர்களை ஆதரிக்கிறாயா என்றால் நிச்சயமாக இல்லை.
தனிப்பட்ட முறையில், தலைவர் ரஜினியின் பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிறது. தலைவரின் பிறந்தநாளின் பொழுது, இவர்கள் செய்த கீழ்த்தரமான தனிமனித(ரஜினியின் மீது) தாக்குதல்களில் இருந்து வெளியில் வர இரண்டு நாட்கள் போதாது. ஆனால், அரசியல் என்பதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கடந்தது.

விஜய் அரசியல் ஞானி இல்லை தான். ஆனால், அவரிடம் ஒரு பேரார்வம் இருக்கிறது. வட்டார வழக்கில் சொல்லவேண்டுமென்றால் ஒரு அடக்கமான ஆர்வ கோளாறு. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற ஆர்வமோ? அல்லது அதிகாரத்தின் மீதான ஆர்வமோ? அதை அவர் அ.தி.மு.க.விற்கு அணிலாக வேலை செய்ததற்கு முன்னமே வெளிப்படுத்தியிருக்கார். அதிகாரத்தின் மீது இருந்தாலும், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதில் இருந்தாலும் எதுவாக இருந்தாலும், அவரிடம் இருக்கும் ஆர்வத்தை பிழையாக சொல்வது நியமாகாது.
அவரையும், அவரை பின்பற்றுகிறவர்களையும் தற்குறி என்று முத்திரை குத்தாமல், அவரின் செயல்களை வேறு ஒரு கோணத்தில் அணுகினால், இங்கே இருக்கும் ஒரு பெரிய அரசியல் பிரச்சனை நமக்கு புலப்படும்.
விஜய் நெடுங்காலமாக அரசியலில் எந்த கதவை திறக்கலாம் என்று ஒவ்வொவொரு கதவாக தட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. கட்சி எல்லாம் தொடங்குவதற்கு முன்பிருந்தே ஆரம்ப கட்டத்தில், தி.மு.க.விடம் கொஞ்சம் நெருக்கம் காட்டிப்பார்த்தார், தே.மு.தி.க. வின் கதவுகளை தூரமாக இருந்து அவதானித்து வந்தார். அ.தி.மு.க.விற்கு அணில் வேலை செய்தார். காங்கிரஸ்க்கு எதிராக ஜன் தன் மந்தரில் நடந்த போராட்டத்திற்கு சென்று அங்கு ஏதேனும் கதவுகள் திறக்காத என்று பார்த்தார். மோடியை ஆதரித்தார். பின் மோடி அரசின் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு எதிராக அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.கவை ஆதரிக்கும் வண்ணம் கருப்பு சிவப்பு சைக்கிளில் சென்று வாக்களித்தார்.ஆனாலும், வீட்டில் இருந்தே சைக்கிளில் செல்லுப்போகும் செய்தியை கசிய விட்டு எல்லோரையும் பின் தொடர்விட்டு ஒரு உள்நோக்கமும் இல்லை என்று சொல்லி, இப்போது வந்து தி.மு.க.வை நாங்கள் ஆதரித்தோம். ஆனால், தி.மு.க.விற்கு நன்றியுணர்வு இல்லை, என்கிறார்கள்.
மேலோட்டமாக பார்க்கும் பொழுது, விஜயின் செயல்களில் பல முரண்கள் தெரியலாம். அதையே வேறு ஒரு கோணத்தில் அணுகும் பொழுது, அது வேறு அர்த்தங்களை தருகிறது.
அதிகாரத்தின் மீது ஆர்வம் கொண்டதாகவே வைத்துக்கொள்வோம், இங்கே அரசியல் வாய்ப்பு யாருக்கும் வெளிப்டையானதாக இல்லை. அரசியலில் இருப்பவர்களுக்கும் கூடவே அந்த வாய்ப்பு அரியதாக இருக்கிறது.இங்கே அரசியல் கட்சிகளுக்கும் தனிநபர்களுக்கும் பல நிர்பந்தங்களை ஏற்படுத்துகிறது. அந்த சூழலில் எது சரியோ அதை செய் என்று அரசியல் கட்சிகளை தனிநபர்களை அது நிர்பந்தப்படுகிறது.
தமிழகத்தில், திராவிட கட்சிகள், அரசியல் களத்தை பூந்தோட்டமாக வைத்திருக்கவில்லை அது ஒரு ரத்த பூமி, கலைஞருக்கு டாக்டர் பட்டமா ? எண்டு எதிர்த்து போராடிய மாணவன் ஒருவன் காணாமல் போகிறான், கல்லூரியில் ஒரு சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆனால், அது அந்த மாணவனுடைய இல்லை என்று வழக்கு முடிகிறது. காணாமல் போன அந்த மாணவனும் கடைசி வரை கிடைக்கவில்லை.
சட்ட ரீதியாக எந்த ஒரு தலைவர்களும் மீதும் கட்சி மீதும் வன்முறை சம்மந்தமான குற்றசாட்டுகளை நாம் வைக்க முடியாது. இப்படி நிலையில், எடப்பாடி போன்றவர்கள் காலில் விழுவதும், தவிழ்ந்து சென்றதும் எல்லாம் அரசியல் சூழல்கள் ஏற்படுத்தும் நிர்பந்தங்களே. நினைத்துப்பாருங்கள், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது இரண்டு குடும்பங்கள் அல்லது இரண்டு குடும்பத்தின் உறவுகள். இவர்களோடு இருந்து கொண்டே இவர்களுக்கு எதிராக இருப்பது என்பது நடக்காத காரியம், அப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சினிமாத்தனமானது.
இங்கு அரசியல் களத்தில் இருக்கின்ற எல்லோரும் ஒரு சக்கர வியூகத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அருகில் இருப்பவர் எதிரியா நண்பனா என்று புரிந்து கொள்ளமுடியாத விசித்திரமான சக்கர வியூகம்.
அரசியல் பேரார்வம் கொண்ட விஜய், இங்கு இருக்கும் அரசியல் சூழல் ஏற்படுத்தி வைத்திருக்கும் நிர்பந்தங்களை எல்லாம் பூட்டின் சாவிகள் என்று நினைத்துக்கொண்டு எல்லா சாவிகளையும் கையில் எடுத்துக்கொண்டு நிற்கிறார்.
இங்கே பெரியாருக்கு எதிராக பேசினால், தமிழன் இல்லை என்பார்கள் என்கிற ஒரு நிர்பந்தம் இருக்கிறது, சரி!பெரியாரை வைத்துக்கொள்வோம். அம்பேத்காரை சேர்க்காவிட்டால் சிறுபான்மையினர் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், அவரையும் சேர்த்துக்கொள்வோம். முக்குலத்தோர் வாக்கை பெற ஒரு அரசியல் அடையாளம் தேவைப்படுகிறது.இப்படி களமும் மக்களும் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற நிர்பந்தத்துக்குள் சிக்கி அவர் எல்லா சாவியையும் கையில் வைத்துக்கொண்டு எந்த கதவை திறக்க வேண்டும் என்று தெரியாமல் திணறுகிறார். அரசியல் கட்சிகளால் நீட் தேர்வு பற்றி ஒரு எதிர்மறையான எண்ணம் பரப்பட்டு இருக்கிறது. நீட் வேண்டாம் என்பது தான் மக்களின் நிலைப்பாடும் என்று அவர் நம்புகிறார். ஆனால், இங்கே மக்களுக்கும் கூட எது சரி எது தவறு என்று சரியாக தெரிந்து இருக்கிறதா என்றால் இல்லை.
குடியுரிமை சட்டத்திருத்தம் சட்டமாக வருவதற்கு முன்பு தி.மு.க போராட்டத்தில் உதயநிதி பேசிய வார்த்தைகள், “இந்த சட்டம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என்றார். ஆனால், அது சட்டமானது 2024 இல் தான்”. விஜயை கேட்டால் அவரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரானவராக தான் தன்னை காட்டிக்கொள்வார்.
புதுவை காவல்துறை யார் கட்டுபாட்டில், இருக்கிறது என்பது அவர் சொல்ல வந்த கருத்து இல்லை, புதுவை காவல்துறையின் ஏற்பாடுகள், தமிழக காவல் துறையை விட சிறப்பாக இருந்தது என்பதுதான் அவர் சொல்ல வந்த விமர்சனம். அதெல்லாம் சரி! ஆனால், இந்த விவரங்கள் விஜய்க்கு தெரியவில்லை தானே என்றால் தெரியவில்லை தான், விஜய்யின் ஆதரவாளர்களுக்கும் அரசியல் தெரியவில்லை தான் . த.வெ.க.பெண் ஒருவர் பேட்டி அளிக்கும் பொழுது விஜய் முதல்வரானால் தான் அவர் நாடாளுமன்றத்தில் பேச முடியும் என்கிறார்.இதை கேட்டததும் அந்த பெண்ணின் அறியாமையை கேலி செய்து சிரிக்க நன்றாக இருக்கும். ஆனால், நாம் ஒரு தலைமுறை இப்படியானதற்கு காரணம் என்ன என்பதை சிந்தித்து வருந்த வேண்டும்.
விஜய்கோ அல்லது அவரை பின்பற்றும் இன்றைய இளம் தலைமுறையினருக்கோ அரசியல் தெளிவில்லை தற்குறி என்றால், அது யாருடைய பிழை? அரைநூற்றாண்டாக ஆட்சி செய்து, அரசியல் நிர்வாகம் பற்றிய கல்வியை மறுத்தது யாருடைய பிழை. இங்கே ஊடகங்களும் மக்களும் பிரச்சனைகளை எப்படி அணுகுகிறது.நாமும் கூட நம் மீது திணிக்கப்படும் கருத்துக்களையே தான் நம்முடைய தன்னிச்சையான கருத்துக்களாக நினைத்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றி பழகிவிட்டோம். நான் படித்த காலத்தில், விலாவாரியான வரலாற்று பாடங்களும், குடிமையியல் பாடங்களும் மெட்ரிகுலேஷனில் படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமான கல்வி. சமச்சீர் கல்வி வந்ததும் அதுவும் இல்லை என்றானது.
விஜய் போன்ற செல்வாக்கான பணம் படைத்த ஒருவருக்கே அரசியல் சக்கர வியூகத்திற்குள் எந்த கதவை திறந்து எப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கி வெற்றி அடைய வேண்டும் என்பதில் பெரிய சிக்கல் இருக்க சாமானியர்களை நினைத்து பாருங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போன்று விஜயின் தடுமாற்றங்கள் மிக சாதாரணமான அரசியல் ஆர்வம் கொண்ட ஒரு சாமானியனின் தடுமாற்றமே தான். இங்கே நாம் விஜயையும் விஜய்யை பின்பற்றும் இளம்தலைமுறையையும் தற்குறி என்கிறோம் என்றால்.நாம் எல்லாம் யார் ?
அமல்படுத்தப்படுத்தாத குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகளின் கைப்பாவையாக போராடிவிட்டு, இன்று சட்டம் அமல் படுத்தப்படும் சும்மா இருக்கிறோமே? நீட் தேர்வு தான் அனிதா மரணத்திற்கு காரணம் என்று பேசிக்கொண்டு எப்படியான தேர்வுகளையும் எதிர்கொள்கிற திறன் வாய்ந்த மாணவர்களை நம் கல்வி உருவாகவில்லை என்பதை மறந்து போகிறோமே. நீட் வந்த பின் வந்த உள்ஒதுக்கீடு,நீட் வருவதற்கு முன் தனியார் பள்ளி மாணவனோடு போட்டி போட்ட கிராமத்து அரசு பள்ளி மாணவனுக்கு கிடைக்கவில்லையே என்று நாம் சிந்திக்கவில்லையே.
நம்மை போன்றவர்கள் ஆர்வத்தில், கட்சி தொடங்கினால், பொதுவாக அரசியல் கட்சிகளால் நமக்குள் விதைக்கப்பட்டு இருக்கிற கருத்துக்களை தான் அப்படியே பிரதிபலிப்போம். பொதுவாக இங்கு என்னவெல்லாம் கருத்து பரப்பப்பட்டு இருக்கிறது. எடப்பாடி தவழ்ந்து வந்தார். ஆனால், அது ஒரு அரசியல் சூழலின் நிர்பந்தம் அப்படியேனும் அந்த கட்சியில் தொண்டனாக இருந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்கிற ரீதியில் நாம் அதை அணுக மறுக்கிறோம். எடப்பாடியை நாம் ஒன்றும் காமராஜர் என்று சொல்லவில்லை. அரசியல் எதார்த்தை புரிந்துகொள்ளவே அவரின் சூழலை எடுத்துரைத்தோம். அடுத்த கருத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சரி செய்து விடுலாம், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், எப்படி ஆட்கள் சேர்க்கிறார்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும்? என் தாத்தா காலத்தில், பல பேர் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள், அடுத்த தலைமுறைக்கு அந்த வாய்ப்பு ஏன் கிடைக்கவில்லை என்று சிந்தித்து இருக்கிறோமோ, நம்முடைய கவனம் பா.ஜ.க. உள்ள வரக்கூடாது. நீட் கூடாது. இந்து கோவிலுக்கல்களுக்கு ஆதரவாக 3 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளை இந்த அரசு பின்பற்றவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதியை மதவெறி பிடித்தவன் என்று தூற்றுவதிலும் அவரை தகுதி நீக்கம் செய்வது தான் நாம் வாக்களித்து அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் முதற்கண் வேலை.என்று பாராட்டுவதிலும் தான் இருக்கிறது என்றால். யார் தற்குறி? வளர்ச்சி அரசியல் தேவையா என்று கேட்ட முதல்வரின் நாடாளுமன்ற செல்ல பிள்ளைகள், நாடாளுமன்றத்தில், வளர்ச்சி பற்றி விவாதிக்காமல், அவருடைய அப்பாவின் புராணம் பாடி,பாரத ரத்னாகேட்கிறார்கள். இதைத்தான் வளர்ச்சி அரசியல் என்று குறிப்பிட்டீர்களா கேட்க துணிவில்லாத ஒவ்வொருவரும் தற்குறி தான்.
இங்கு திராவிட கட்சிகள் சொல்லும் பல விஷயங்களை; அவர்கள் உருவாக்கும் கதைகளை நாம் அப்படியே நம்பி பழகிவிட்டோம், அப்படி பழகிவிட்டு அவர்களேயே எதிர்க்கவும் செய்கிறோம். விஜய் செய்வதை போல. திராவிட கட்சிகள் பொதுவில் ஏற்படுத்திய முரணான பொய்யான கருத்துக்களை அப்படியே ஏந்திக்கொண்டு அவர்களையே எதிர்க்கிறேன் என்கிறார் விஜய். விஜயை போன்றே தமிழகமும் இருக்கிறது.அரைநூற்றாண்டில், திறன்மிகுந்த எளிமையான பின்னணியை கொண்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நிர்வாக அரசியல் பற்றி அனுபவங்களை தந்து அவர்களை தலைவர்களாக்கிய ஒரு கட்சி இங்கு இருக்கிறதா? கிடையாது. சமூகத்தை அரசியல் படுத்தாமல்,நூல் பொம்மைகளாக ஆட்டுவித்தவர்களை விட்டுவிட்டு நம்மில்(மக்களில்) ஒரு சாராரையே நாம் தற்குறி எனச் சுட்டுவது தான் தற்குறித் தனத்தின் உச்சம்.
அரசியல் மீதான நம் பார்வை அணுகுமுறை புரிதல் இவையெல்லாம் மாறாமல், இந்த சமூகத்தில் இருந்து வருகிற தலைவர்கள் இந்த அரசியல் சக்கரவியூகத்தில், வாசல் எது ஜன்னல் எது என்கிற தெளிவற்றவர்களாக தான் இருப்பார்கள்.
இங்கு தினமும் நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அரசியல் குறைபாடுகள் தான் காரணம் என்று நாம் புரிந்துகொள்ள தொடங்கவேண்டும்.கட்சிகளால் மையப்படுத்தப்படுகிற பிரச்சனைகளை சரியான கண்ணோட்டத்தில், அணுக வேண்டும். கட்சிகள் உருவாக்கும் கதைகளை ஆழமான அறிவோடு அணுக வேண்டும்.இவையெல்லாம் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. இப்போதே நடந்தால் நல்லது.