இறைவனால் இறை தூதர் மூலம் மனிதர்களுக்குத் திருக்குர்ஆன் கிடைத்த மாதம் தான்- முழுக்க முழுக்கச் சந்திரனை அடிப்படையாக கொண்ட ஹிஜ்ரி வருடத்தின் இந்த புனித ரமலான் மாதம்.
எந்த மதத்தவராக இருந்தாலும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டுப் புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளையும் வாழ்வியல் பாடங்களையும் பின்பற்றி நடக்கும் எமது இந்தியச் சகோதரர்களுக்கும், உலக குடிமக்கள் அனைவருக்கும் எமது இனிய ரமலான் வாழ்த்துகள். அந்த எல்லாம் வல்ல இறைவன்—அல்லாஹ், ஈஸ்வரன், இப்பிரபஞ்சத்தின் உருவமற்ற நித்திய ஆற்றல்—நம் அனைவருக்கும் நல் ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பை வழங்கட்டும் என்று வேண்டிக்கொண்டு இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.
இந்த தேசத்தை ஆண்டவர்கள் இங்கே பல குழப்பங்களைச் செய்தார்கள். அவர்களின் வேலையை இங்கே அதிகார பசி கொண்டிருந்த சிலர் எளிமையாக்கினார்கள்.
இங்கே எப்படி அரசியல் ஆதாயங்களுக்காக ஆரிய வந்தேறிகள் தான் பிராமணர்கள் ஹிந்துக்கள் என்று சிலர் அம்பேத்கர் போன்ற அறிஞர்கள் நிராகரித்த பொய்யான தியரிகளைப் பேசிக்கொண்டு திரிகிறார்களோ அது போன்று ஆப்கான் துருக்கி போன்று மேற்காசியாவில் இருந்து படையெடுத்து வந்தேறியவர்கள் தான் இஸ்லாமியர்கள் என்கிற வாதங்களைக் கருத்துக்களை நாம் எப்போதும் முன்வைக்க விரும்புவதில்லை.
ஆங்கிலோ இந்தியர்களை கூட நாம் அப்படி சொல்லக்கூடாது என்கிற பொழுது, இஸ்லாமியர்களை நாம் எப்படி சொல்ல அனுமதிப்போம்.
ஆங்கிலோ இந்தியர்களைக் கூட நாம் அப்படிச் சொல்லக்கூடாது என்கிற பொழுது, இஸ்லாமியர்களை நாம் எப்படி சொல்ல அனுமதிப்போம். படையெடுத்து வந்த பதான்கள் சுல்தான்கள் அல்லாமல், கந்தசாமியாகவும் ராமசாமியாகவும் இருந்து ஏழ்மை காரணமாகவோ அதிகாரத்தின் மீதிருந்த அச்சம் காரணமாகவோ சமூக விடுதலை காரணமாகவோ அல்லது குரானை புரிந்து கொண்டதன் காரணமாகவோ வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்த பூர்வ குடிகளை எப்படி அப்படி சொல்ல முடியும். எப்படி அப்படி சொல்ல முடியும்! இன்று இந்தியர்களாகவே இருக்கும் பதான்களையும் சுல்தான்களையும் கூட அப்படி சொல்லக்கூடாது என்பதே நம் கருத்து
எப்படி நாம் தமிழகத்தில் உள்ள எல்லோரும் தமிழக மக்களே தான் என்று பார்க்க சொல்கிறோமோ அப்படியாக தான் எல்லோரையும் அணுக வேண்டும். அதன் பொருட்டே ஆரிய வந்தேறிகள் என்கிற வாதத்திற்கு எதிராக ஆப்கானிய வந்தேறிகள் என்கிற வாதங்களை யாரும் வைக்க விரும்புவதில்லை.
பதான்களும் சுல்தான்களும் என்று இஸ்லாமியர்கள் நம் தோளோடு தோள் நின்று ஆங்கிலேயர்களால் தேசிய இறையாண்மைக்கும் முகலாய ஆட்சிக்கும் பங்கம் நேருகிறது என்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக நம்மோடு சுதந்திரப் போரில் ஈடுபட்டார்கள்.
இங்கே முகலாயர்கள் காலத்தில், வேற்று மதத்தினருக்கு வரி விதிக்கும் போக்கு இருந்தாலும், சில கோவில்கள் இடிக்கப்பட்டு இருந்தாலும், இந்த நாடு ஹிந்துஸ்தானமாகத் தான் இருந்தது. நாட்டின் இறையாண்மைக்கு ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஒப்பிடும் பொழுது பெரிய பங்கம் ஏற்படவில்லை. முகலாயர்களிடம் அடிமைகள் முறை இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இந்த மண்ணை அவர்கள் அடிமைகளின் மண்ணாக கருதவில்லை.
தந்திரமாக நாட்டைப் பிடித்து, அதன் கலாச்சார வேர்களைச் சீர்குலைத்து அவர்கள் எழுதிய வரலாறுகள் நம்மைப் படிக்க வைத்த ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு எதிராக முகலாய மன்னர்களும் பூர்வீக இந்திய மன்னர்களும் ஒன்று கூடியதை விரும்பவில்லை. அதன் பொருட்டு அவர்கள் நம்மைப் பிரித்து ஆளவே விரும்பினார்கள்.
நம்மை வேண்டிய வகைகளில் எல்லாம் பிரித்து வைத்தார்கள். தெரிந்தோ தெரியாமலோ அரசியல் லாபங்களை எதிர்நோக்கியிருந்த அன்றைய காங்கிரஸும் அதன் சில தலைவர்களும் இந்தப் பிரித்து ஆளும் போக்கிற்குச் சாதகமாகச் செயல்பட்டார்கள்.
இந்திய மண்ணைத் தன்னுடையதாகக் கருதி சுதந்திரப் போரில் ஈடுபட்ட ஜின்னா, (ஒருகாலத்தில் ‘இந்து–முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்‘ என்று சரோஜினி நாயுடுவால் புகழப்பட்டவர்) ஒரு கட்டத்தில் லண்டன் பயணம் முடித்துத் திரும்பிய பின் இது நம்முடைய மண் என்கிற எண்ணம் மாறி இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்கிறார்.
இஸ்லாமியர்களாக இருக்க ஆசைப்பட்டவர்களோடு அப்போதிருந்த கடினமான சூழல் ஏற்படுத்திய நிர்பந்தத்தால் சில இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள் ஆனார்கள். ரஜினி ஒரு பேட்டியில் குறிப்பிட்டது போல, என்ன நடந்தாலும் இது என்னுடைய மண் என்னுடைய நாடு நான் இங்கு தான் இருப்பேன் என்றவர்கள் இந்தியர்களாகவே இருந்தார்கள். அப்படியான இந்தியர்கள் பிரிவினை பேசும் அரசியல்வாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு ஹிந்து மதத்தை அந்நிய மதம் என்று பேசினாலோ பிராமணர்களை ஆரிய வந்தேறி என்று பேசினாலோ பதிலுக்கு நீங்களும் ஆப்கானிய வந்தேறிகள் தானே என்று எப்படிக் கேட்க முடியும்!
இங்கே திராவிட சித்தாந்தம் போன்று ஆங்காங்கே மாநில அரசியலின் அதிகாரத்திற்கு நடந்த போட்டியில் தேசிய கட்சிகளை வீழ்த்த சில அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட பிரிவினை அரசியல் இன்று சில இஸ்லாமியர்களிடம் இருக்கும் தேசிய உணர்வை மழுங்க செய்துவிட்டது என்பதற்காக எப்படி நாம் அவர்களை ஒரு வாதத்திற்கு கூட அந்நியர்கள் என்று பேச முடியும். நாம் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டோம்.
ஆனால், அவர்களிடம் கேட்பதற்கு நாம் நிறைய கேள்விகள் இருக்கிறது. ஏன்‘ண்ணே ஏன்? என்று அவர்களைப் பார்த்து நாம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்.
சமீபத்தில், தெலுங்கானா சட்டப்பேரவையில் வந்தே மாதரம் ஒலிக்கப்பட்ட பொழுது AIMIM கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளியில் சென்றுவிட்டுப் பாடல் முடிந்த பின் உள்ளே வந்து இருக்கிறார்கள்.
இதுபோன்று நிறைய விஷயங்கள் நடக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தால், அதை இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று இங்கே இருக்கின்ற இஸ்லாமிய சொந்தங்களில் சிலர் கொதித்தெழுகிறார்கள். உங்களுடைய நாட்டிற்கு எதிரான ஒரு நாடு, உங்களைப்போல் அல்லாமல் நாட்டை விட மதத்தை முன்னிலைப்படுத்திய நாட்டினரால் நமக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மை தானே! அதை ஏன் நாம் மதத்திற்கு எதிரானதாகப் பார்க்க வேண்டும்? நாட்டிற்கு எதிரானது என்று தானே பார்க்க வேண்டும்!
குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வந்த பொழுது, இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று போராடுகிறீர்கள். பிரிவினைக்கு முந்தைய இந்தியா என்பது நேபாளம் பங்களாதேஷ் பாகிஸ்தான் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியது தானே! பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகள் மதம் சார்ந்த நாடுகள் என்பது உண்மை தானே! அங்கே மற்ற மதத்தினருக்கு எதிரான அச்சுறுத்தல் இருப்பது உண்மை தானே! அதன் பொருட்டு, இந்தியாவிற்குள் வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை ஏன் கொடுக்கக் கூடாது. இன்னும் வரைவு கூட செய்யப்படாத NRC-யுடன் CAA-வை இணைத்துச் சிலர் உங்களை அச்சுறுத்துகிறார்கள். இந்தியாவில் உள்ள 15 முதல் 20 கோடி இஸ்லாமியர்களை ஒரு நாடு வெளியேற்றிவிட முடியுமா? அப்படி வெளியேற்றினால் எந்த நாடு அவர்களை ஏற்றுக்கொள்ளும்? இது எந்த அளவு சாத்தியம் என்கிற சாதாரண தர்க்கத்தைக் கூட யோசிக்க விடாமல், அரசியல்வாதிகள் உங்களை வெறும் வாக்கு வங்கிக்காகப் பயமுறுத்தி நம்ப வைத்தார்களே, அப்படி எதுவும் நடந்ததா? இன்று வரை அப்படியொன்றும் நடக்கவில்லையே! சமீபத்தில் 33 பங்களாதேஷிகள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் இஸ்லாமியராகப் பார்க்க வேண்டுமா? பங்களாதேசிகளாப் பார்க்க வேண்டுமா?
உங்கள் மதத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றை இங்கிருக்கும் அநேகமான அரசியல்வாதிகள் உங்கள் வாக்குகளுக்காக மட்டும் பயன்படுத்தி உங்களை ஆட்டுவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அவர்களின் ஆட்டுவிப்பால் நீங்கள் அடைந்திருக்கும் நிலை தான் ஒரு இஸ்லாமிய கட்சியைத் தேர்ந்த உறுப்பினர்களால் தேசிய அடையாளங்களில் ஒன்றான வந்தே மாதரம் பாடலை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.
இங்கே தாஜ்மஹால் இந்திய அடையாளம் இல்லை என்றால், ஆம் அது முகலாயக் கட்டிடக்கலையின் அடையாளம் என்று ஏற்றுக்கொள்கிற உங்களின் மனப்பக்குவத்தை இந்த அரசியல்வாதிகள் குழைத்து இருப்பது உங்களுக்குத் தெரிகிறதா?
நீங்கள் அரசியலை மதக்கண்ணாடி போட்டு அணுகுவதால் மோடி என்றாலே நீங்கள் வெறுக்கிறீர்கள் என்பதைச் சிந்தித்து இருக்கிறீர்களா? மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கிறார். இந்த தேசத்தில் இஸ்லாமியர்களுக்கு என்ன பாதகம் நடந்துவிட்டது. வக்ப் வாரிய சட்ட மசோதா வக்ப் வாரிய சொத்துக்கள் மூலம் சரியான முறையில் வருமானம் ஈட்டப்பட்டு சரியான நபர்களுக்குப் பயன்கள் கிடைக்க வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டது. முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவான சட்டம் தானே! இல்லை என்று எத்தனை இஸ்லாமிய பெண்கள் சொல்வார்கள்.
மத ரீதியாக நீங்கள் அரசியலை அணுகி, ஒரு கட்சி என்ன ஊழல் செய்திருந்தாலும் உங்களை வாக்கு வங்கியாகப் பார்த்து “அவனால் உங்களுக்கு ஆபத்து இவனால் உங்களுக்கு ஆபத்து” என்று உங்களை அச்சுறுத்தி நாங்கள் தான் உங்களுக்குப் பாதுகாப்பு என்று சொன்னால், அந்தக் கட்சி பஞ்சமாபாதகமே செய்தாலும் ஆதரிப்பதற்குப் பெயர் தானே அரசியல் மதச்சார்பு. அது உங்களிடம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிகிறதா?
ஜமாத் போன்ற சமூக கட்டமைப்பை நீங்கள் அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்குப் பயன்படுத்த அனுமதித்து விட்டீர்கள். அது அப்படியே தொடர, அவர்கள் தேசத்திற்கு எதிரான சிந்தனைகளை உங்களுக்குள் விதைத்து விட்டார்கள். நாடார் சமூக கட்டமைப்புகள் போன்ற சில அமைப்புகள் சமூக மேம்பாட்டுக்கு மட்டுமே தான் அதிகம் பயன்படுகின்றன. அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும், கூடிப் பேசி ஒட்டுமொத்தமாக ஒரே கட்சிக்கு ஓட்டுப் போடுவதற்கும் அவை பயன்படுவதில்லை என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். எப்படி இருந்த இஸ்லாமியர்கள் எப்படி ஆகிவிட்டார்கள் என்று பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
இந்த நாடு என்னுடையது என்று எண்ணம் கொண்டிருந்த இஸ்லாமியர்கள், ஆட்சிக்கு எதிரான கருத்து என்கிற பெயரில் நாட்டிற்கு எதிரான கருத்துகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆட்சிக்கு எதிரான கருத்து என்று நாம் விவாதித்தால் எந்தக் கட்சியைச் சேர்ந்த அரசாக இருந்தாலும் அது கொண்டு வரும் திட்டங்களில் எடுக்கும் முடிவுகளில் சாதக பாதகங்கள் இருக்கும். எதெல்லாம் சாதகம் எதெல்லாம் பாதகம் என்று நாம் பேசுவதே இல்லை. மோடி என்றால் எதிர்ப்போம், தமிழகத்தில் ஸ்டாலின் என்றால் ஆதரிப்போம் என்கிற நிலையில் இருக்கிறீர்கள்.
இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி ஜின்னாவுடன் சென்றால் பதவிகள் கிடைக்க வாய்ப்பு இருந்தும் இந்தியா தான் என் தேசம் என்றிருந்த இஸ்லாமியர்கள், பாகிஸ்தானுடன் போர், காஷ்மீர் பிரச்சனை என்றால் அதை ஒருதலைப்பட்சமாக அணுகுகிறார்கள்.
இங்கே திராவிட சித்தாந்த இயக்குனர்கள் அமீர், கோபி நைனார் போன்றவர்கள், தங்களை மத நம்பிக்கை இல்லாதவராகக் காட்டிக்கொள்ளும் மனுஷ்ய புத்திரன் போன்றவர்கள், இந்திய ராணுவத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிப்பார்கள், கோவில் கருவறைக்குள் ஜனாதிபதியே கூட போக முடியாது என்று பேசுவார்கள். இஸ்லாமிய நம்பிக்கைகளில் சில விஷயங்கள் பெண்களைக் கட்டுப்படுத்தும் படி இருக்கிறது அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பேச மாட்டார்கள். புல்வாமா தாக்குதல் குறித்துப் பேச மாட்டார்கள். ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவை எதிர்த்து இந்தியாவில் உடனடியாகப் போராட்டம் நடத்தும் சில இஸ்லாமிய அமைப்புகள், மும்பை தாக்குதலோ அல்லது புல்வாமா தாக்குதலோ நடந்த போது பாகிஸ்தானுக்கு எதிராக அதே வீரியத்துடன் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா என்கிற கேள்வி எழுகிறது.
திராவிட கட்சி தலைவர்கள் இந்தியா என்பது நாடே இல்லை என்று பேசுகிற பொழுது, அந்தக் கட்சியோடு கூட்டணியில் இருக்கின்ற இஸ்லாமிய கட்சிகள் அதற்குக் கண்டனம் தெரிவிக்கிறார்களா? இல்லை. மற்ற மதங்களின் மீது அவதூறு பேசும்பொழுது அதை இஸ்லாமிய சொந்தங்கள் கண்டிக்கிறீர்களா? இல்லை. தேசம் பற்றிய விவாதங்களில் மதம் உங்கள் கண்ணை மறைக்கிறது என்பதை எப்போது உணர்வீர்கள்?!
அரசியலமைப்பை உருவாக்கும் பொழுது, மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவருவது குறித்த விவாதத்தில், அந்த விவாதத்தில் பங்குகொண்ட தஜ்ஜமுல் ஹுசைன், பேகம் ஐசாஸ் ரசூல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் நாங்கள் தேசிய இனத்தோடு ஒன்றாக இருப்பதற்கே விரும்புகிறோம், மதச்சார்பற்ற இந்தியாவில் இது தேவையற்றது, இது இந்தியாவில் இஸ்லாமியர்களைத் தனித்து விடும் என்றெல்லாம் சொல்லி அந்தக் கருத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள்
தேசிய சிந்தனையில் ஊறிப்போய்க் கிடந்த இஸ்லாமியர்களிடம் தேசிய உணர்வு குறைந்து கொண்டே வருகிறதோ என்று தோன்றுகிறது. சமயங்களில் மொழிப்பற்று என்கிற பெயரில், அமீர் மனுஷ்ய புத்திரன் போன்று திராவிட உணர்வுகள் பின்னால் ஒளிந்துகொண்டும், ஆட்சிக்கு எதிரான கருத்து தேசத்திற்கு எதிரான கருத்து இல்லை என்கிற பொருத்தமற்ற வாதங்களோடும் இங்கு அநேகமான இஸ்லாமியர்கள் தேச உணர்வுக்கு எதிராகத் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அரசியலில் கட்சிகளைச் சீர்தூக்கி பார்க்கும் பொழுது, அரசின் சரியான முடிவுகளைக் கூடச் சமயத்தில் வெறுக்கிறீர்கள். அந்த நிலைக்கு அரசியல்வாதிகள் உங்களைத் தள்ளியிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். இந்திய இஸ்லாமிய சொந்தங்கள் மீண்டும் தேசிய உணர்வோடு வந்தே மாதரம் பாடலை நேசிக்க வேண்டும். வேற்று நாட்டினர் இங்கே சட்ட விரோதமாகக் குடியேறுவதற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை, மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளாகப் பார்க்கக் கூடாது. புல்வாமா தாக்குதல் போன்ற தேச விரோதச் செயல்களைப் பகிரங்கமாக எதிர்க்க வேண்டும்.
இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கும் தி.மு.க போன்ற கட்சிகள் செய்யும் தவறுகளைக் கண்டித்து, அவர்களுக்கு எதிராக வாக்களிக்கும் ஜனநாயகத் தெளிவைப் பெற வேண்டும். பா.ஜ.க. போன்ற கட்சிகளை மதத்தின் பெயரால் மட்டும் கண்மூடித்தனமாக எதிர்க்காமல், அவர்களின் திட்டங்களில் உள்ள சாதக பாதகங்களை விவாதிக்க வேண்டும்.
தங்களின் ஆதரவைப் பெற வேண்டுமென்றால், அரசியல் கட்சிகள் மற்ற மதத்தினர் மீது அவதூறு பேச வேண்டும் என்ற நிலையை மாற்றி, அப்படிப் பேசும் கட்சிகளைக் கண்டிக்கும் துணிவைப் பெற வேண்டும். மொத்தத்தில், ஆழமான தேசப் பற்று கொண்ட இந்தியர்களாக, தங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் ‘இந்தியர்‘ என்கிற அடையாளத்தை அவர்கள் மீண்டும் கண்டடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தேசப்பற்று கொண்ட என் இஸ்லாமிய சொந்தங்கள் அரசியல் பகடைக்காய்களாக ஆகி ஒரு மத குழுவாக தங்களை சுருக்கி கொண்டிருப்பதை கண்டு அதை சுட்டிக்காட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. இதை நீங்கள் சரியான கண்ணோட்டத்தோடு அணுகி உங்களை வெறும் மதக்குழுவாக சுருக்கி கொள்ளாமல் தேசப் பற்றுள்ள இந்தியர்களாக நீங்கள் மீண்டும் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே நம் எண்ணம். அல்லா அந்த எண்ணத்தை ஈடேற்றுவார்.