வீட்டிலிருந்தபடி ஒரு லெட்டர்பேடை வைத்துக்கொண்டு கட்சி நடத்துகிறவர்களும், வாசலுக்கு வந்து பதாகை ஏந்திப் போராட்டம் என்ற நாடகங்களை அரங்கேற்றும் அரசியல்வாதிகளும் அநேகமான மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் மோசமான கருத்து, “ஒரு மாநிலத்திற்கு எதற்காக ஆளுநர்?” என்பது.
இப்படியான கூட்டங்களுக்கு வசனமும் கூட வைத்திருக்கிறார் கள்: “ஆட்டுக்குத் தாடி போல, நாட்டுக்கு கவர்னர்” என்பதுதான் இவர்களின் அறிவார்ந்த வாதம். இந்த அறிவாளிகளைப் பொறுத்தவரையில் இரண்டும் பயனற்றது. நம்மைப் போன்ற சாதாரணமானவர்களும் இந்த அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு, “அட ஆமாம், ஆளுநர் பதவி என்பது தேவையற்றதுதானே” என்பது போன்ற முட்டாள்தனமான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறோம். இதில் பெரிய முட்டாள்தனம் என்னவென்றால், இந்த எண்ணங்களையும் சிந்தனைகளையும் அறிவார்ந்த சிந்தனைகள் என்று நாமே நினைத்துக்கொள்வது.
நீச்சல் எப்படி அடிப்பது என்று நீங்கள் யாரைக் கேட்பீர்கள்? நீச்சல் அடிக்கத் தெரிந்தவர்களிடம் தானே கேட்பீர்கள்! ஒரு செல் (உயிரி) எப்படி வேலை செய்யும் என்பதை உயிரியல் படித்த ஒருவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதுதானே நியாயமாக இருக்க முடியும். போகிற போக்கில் அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல் நோக்கங்களுக்காகக் கிளப்பும் கருத்துக்களை எல்லாம் அறிவார்ந்த கருத்துகள் போன்று தோன்றினாலும், நாம் அதை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. நீச்சலை எப்படி நீச்சல் தெரிந்தவரிடம் கற்றுக்கொள்வீர்களோ, உயிரி பற்றி ஒரு உயிரியல் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர்களோ, அப்படித்தான் நம் முன் அரசியல்வாதிகள் எடுத்து வைக்கும் கருத்துக்களை நாம் அணுக வேண்டும்.
இயற்கையின் அறிவை—இறைவனை—நம் முன்னோர் ‘பேரறிவு’ என்கிறார்கள். அதில் தேவையில்லாத ஆணி என்று ஒன்றும் இருப்பதில்லை. ஆட்டுக்குத் தாடி தேவையானதா இல்லையா என்பதை கூகுள் செய்தாலே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்; ஆட்டுக்குத் தாடி எப்படியெல்லாம் பயன்படுகிறது என்று.
மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா இல்லையா என்கிற கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள நீங்கள் கூகுள் செய்வது சரியாக இருக்காது. காரணம், இங்கே மாநில அரசியல் என்பது பிரிவினை பேசுகின்ற அரசியல் ஆகிவிட்ட பின், பல தவறான கருத்துருவாக்கங்கள் செய்யப்பட்டுப் பல வடிவங்களில் மக்கள் மத்தியில் உலவவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நீங்கள் சிந்தியுங்கள்; ஒரு பக்கம் அம்பேத்கரைச் சட்ட மேதை என்று போற்றிப் புகழ்கிறார்கள், மறுபக்கம் அவர் தலைமையில் உருவான அரசியலமைப்பைக் கேலி செய்யும் விதமான எதிர்கருத்துக்களை உருவாக்கி, மறைமுகமாக அம்பேத்கரின் மேதமையைக் கேலிக்குள்ளாக்குகிறார்கள். நேற்று முளைத்த காளான் கட்சிகளும், காலம் காலமாகப் பிரிவினை பேசியே கட்சி வளர்த்த கட்சிகளும் இன்று ‘ஆளுநர் தேவையில்லை’ என்கிற கருத்துருவாக்கத்தை நம் மீது படரவிடும் பொழுது, நாம் அதை அப்படியே ஏற்கத் தொடங்கினோம் என்றால், அம்பேத்கர் என்கிற மேதைக்கு நாம் என்ன மரியாதை செய்கிறோம்? ஆளுநர் தேவையில்லை என்கிற கோஷம் நம் மனதில் வேரூன்றிவிட்ட பின், ஆளுநர் செய்யும் எதுவும் நமக்குக் கசப்பாக இருக்கிறது. இங்கே என்ன நடக்கிறது என்றால், அரசியல்வாதிகள் அவர்கள் உணரும் கசப்புச் சுவையை மக்களுக்குக் கடத்துகிறார்கள்.
ஆளுநர் ஒரு மாநிலத்திற்குத் தேவையா இல்லையா என்பதைப் பற்றிய விவாதம் அரசியலமைப்பை உருவாக்கும்பொழுதே நடந்து முடிந்துவிட்டது. இன்று பொதுவில் அரசியல்வாதிகள் நமக்குள் விதைத்துவிட்ட வெறுப்புரைகளை ஏற்று அரசியல் பேசுகிற கூட்டத்தை விடவும் அறிவில், கல்வியில், தேசிய உணர்வில் மேம்பட்டவர்கள் அந்தக்குழுவில் இருந்தார்கள். அரசியலமைப்பை உருவாக்கிய குழுவில் விவாதம் செய்தவர்கள் அனைத்துக் கோணங்களிலும் இதன் சாதக பாதகங்களை அலசிப் பேசியிருக்கிறார்கள்.
ஒரு பதவியை உருவாக்கி அதற்கு ஏன் பெயரளவில் எல்லா அதிகாரங்களையும் கொடுக்க வேண்டும்? மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் முதல்வரிடம் இருக்கும் பொழுது, பெயரளவில் அது ஆளுநரிடம் இருப்பதன் அவசியம் என்ன? மாநில அரசின் நடவடிக்கைகளுக்குச் சட்டபூர்வமான ஒரு அங்கீகாரத்தை வழங்குவதற்காக அப்படியொரு ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் பார்வையில், ஒரு அரசாங்க உத்தரவு என்பது வெறும் அமைச்சரால் எழுதப்பட்ட கடிதமாக மட்டும் இருக்க முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அமைச்சர்களும் எடுக்கும் முடிவுகளுக்கு அரசியலமைப்பைப் பொறுப்பாக்கும் ஒரு ஏற்பாடுதான் அரசியலமைப்பின் 166-வது பிரிவு.
அதன்படி, ஒரு மாநிலத்தின் அனைத்து அரசாங்க ஆணைகளும் “[மாநிலத்தின் பெயர்] ஆளுநரின் பெயரால் மற்றும் அவருடைய ஆணைப்படியும்” (By order and in the name of the Governor of [State]) வெளியிடப்பட வேண்டும். இது அந்த நடவடிக்கைக்கு அரசியலமைப்பு ரீதியான அதிகாரப்பூர்வ முத்திரையை (Constitutional Authority) வழங்குகிறது.
நீங்கள் சிந்தியுங்கள்; ஒரு கட்சி ஒரு சட்டத்தையோ அரசாணையையோ கொண்டு வருகிறது. பின் அந்தக் கட்சி தேர்தலில் தோற்று வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வருகிறது. இப்போது முந்தைய அரசு கொண்டு வந்த அரசாணைக்கு எதிராக ஒரு வழக்குத் தொடரப்படுகிறது என்றால், அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமா அல்லது முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் பொறுப்பேற்க வேண்டுமா? இந்தச் சிக்கலைத் தீர்த்து, எந்த ஒரு அரசு அதிகாரியும் அமைச்சரும் தனிப்பட்ட முறையில் அல்லாமல் அரசியலமைப்புக்கு உட்பட்டுச் செயல்படுவதையும், அவர்களின் செயல்களுக்கு அரசியலமைப்பின் படி ஓர் அதிகாரத்தைக் கொடுக்கவும்தான் ஆளுநருக்குப் பெயரளவிலான அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இது மட்டும்தான் அவர் வேலையா என்றால், இல்லை. ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டதன் இன்னொரு நோக்கம், இந்தத் தேசத்தில் பிரிவினை பரப்புகிறவர்கள் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் தேசவிரோதமான அரசு முறைகளைக் கையிலெடுக்க வாய்ப்பு இருக்கிறதை உணர்ந்து, ஆளுநர் என்பவரை நடுவணரசிற்கும் மாநில அரசிற்குமான இணைப்புப் புள்ளியாக இருக்க வேண்டும் என்பதுதான். அதோடு, மாநிலத்திற்கு வெளியிலிருந்து ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவதன் நோக்கம், மாநிலத்திற்கு உள்ளே நடக்கும் கட்சி சார் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு நடுவராக ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதுதான்.
இந்திய அரசையும், அரசியலமைப்பையும் பொறுத்தவரையில் நாடாளுமன்றம்தான் முதன்மையானது; அதன் உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். எல்லா மாநில மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தால், மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்க முடியும், புது மாநிலங்களை உருவாக்க முடியும். இங்கே தேசம்தான் முதன்மையானது; அரசு அமைப்பைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றம்தான் முதன்மையானது. சட்டசபை என்பது நிர்வாக அமைப்பில் நாடாளுமன்றத்தின் அடுத்த படிநிலையே தான். இந்தச் சூழலில் ஒரு மாநிலம் தன்னிச்சையாக அரசியலமைப்புக்கு எதிராகப் பிரிவினைப் போக்கை ஒரு அரசு கையிலெடுக்காமல் இருப்பதை கவனித்துக்கொள்ளும் படியான ஒரு நிர்வாக அமைப்புதான் கவர்னர் பதவி.
அதோடு, நீங்கள் நாளை முதல்வராகிவிடுகிறீர்கள், அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது, காவல்துறை உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் பதவி விலக மறுக்கிறீர்கள்; அப்போது உங்களை யார் கட்டுப்படுத்துவது? அந்தக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தத்தான் ஆளுநர் பதவியும் குடியரசுத் தலைவர் பதவியும். நாம் ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பின் படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த ஜனாதிபதிதான் ஆளுநரைத் தேர்வு செய்கிறார். நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும் அதிகாரம் தான், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர்களைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது. அவர்கள்தான் ஆளுநர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆளுநர் மற்றும் அதிபர் பதவிகளின் இன்னொரு அவசியம்: பங்களாதேஷ், நேபாளம் போன்ற சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு போராட்டக்காரர்களால் கவிழ்க்கப்படும் பொழுதோ, அல்லது வேறு அரசியல் காரணங்களால் ஒரு அரசு கவியும் பொழுதோ, அரசு இயந்திரத்தை ஓடச் செய்ய ஒரு பதவி தேவைப்படுகிறது. முன்னோர்கள் முட்டாள் இல்லை என்கிற வசனத்தை அதிகம் கேட்டிருப்பீர்கள். நான் சொல்கிறேன், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
இங்கே தமிழக ஆளுநரின் செயல்பாடுகளைக் கட்சி சார் அரசியலோடு நம்மைப் பொருத்திப் பார்க்கச் செய்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள். நாம் அவரின் செயல்பாடுகளைக் கட்சி சார் அரசியல் சாயம் பூச வேண்டியதில்லை. மாநில அரசின் நடுவராக, நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்குமான இணைப்புப் புள்ளியாக இருக்கும் ஆளுநருக்கு அரசு சார் விவகாரங்களில் முதலமைச்சரிடம் விளக்கம் கேட்கவும், கேள்வி கேட்கவும் அதிகாரம் இருக்கிறது. ஆளுநர் என்பவர் அரசு அரசியலமைப்பின் படி நடப்பதை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், கட்சி சார் விளம்பரமாக இருக்கும் ஆளுநர் உரைகளை அவர் மாற்றியமைக்கச் சொல்கிறார். அது அவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்றுதான். இதற்கு முன்னர் யாரும் அதைச் செய்யாததால் நமக்கு வித்தியாசமாகத் தெரிகிறது. எந்த ஆளுநர் உரையும் திராவிட மாடல் அரசு, ஆரிய மாடல் அரசு என்று இருக்காது; ‘எனது (ஆளுநர்) அரசு’ என்று இருக்கலாம் அல்லது மாநிலத்தின் பெயரால் இருக்கலாம். அதை மாற்றச் சொன்னால் மாற்றாமல் விடுவது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களை எல்லாம் முதலீடுகளாக அரசின் உரையில் காட்டுவது தவறு என்று மாற்றச் சொல்கிறார். அரசு கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி உரையில் ஏதும் இல்லாமல் இருப்பது தொடர்பாகச் சுட்டிக்காட்டுகிறார். இதெல்லாம் ஒரு ஆளுநரின் வேலைதான். விளம்பரங்களில் வரும் ஷாம்பூ நுரை போன்று அரசு உரை இருப்பதை அவர் ஏற்கவில்லை. ஆளுநர் இப்படித்தான் இருக்க வேண்டும். “அந்த மாநிலத்தில் இப்படியில்லை, இந்த மாநிலத்தில் இப்படியில்லை” என்றெல்லாம் நாம் பேச வேண்டியதில்லை. இங்கு ஆளுநர் தன் பதவியை அரசியலமைப்புக்கு உட்பட்டுச் சரியாகப் பயன்படுத்துகிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்யும் பொழுது, அங்கே ஆளுநர் உரையில் சாமியார் மாடல் அரசு, ஆரிய மாடல் அரசு என்று இருந்து அதை ஆளுநர் அப்படியே வாசித்தாரா என்று பார்க்க வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எல்லாம் முதலீடுகளாகக் காட்டப்பட்டு அதை அந்தந்த மாநில ஆளுநர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
ஆளுநர் சில நிலைகளில் அரசு அரசியலமைப்பின் படி நடப்பதை உறுதி செய்யும் கடிவாளம்.
நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அதிகாரம் (Article 167) மற்றும் நவம்பர் 20, 2025 அன்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு (தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலானது), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கேள்விகளுக்கு (Special Reference No. 1 of 2025) அளித்த விளக்கத்தின் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருப்புரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், அரசு வழங்கிய உரையில் தவறான புள்ளிவிவரங்கள் (உதாரணமாக MOUs-களை முதலீடுகளாகக் காட்டுவது) அல்லது கட்சி சார்ந்த பிரச்சார நெடி இருந்தால், அதைத் திருத்தக் கோரவோ அல்லது தவிர்க்கவோ ஆளுநருக்கு தார்மீக மற்றும் சட்ட ரீதியான உரிமை உண்டு.
ஆளுநர் உரை என்பது ஆளுநரின் பெயரால் (Article 166) வழங்கப்படும் உரை. அதில் “தவறான தகவல்கள்” (Deceiving Information) இருப்பதை ஆளுநர் அறிந்தும் அதை வாசிப்பது, அவர் ஏற்றுக் கொண்ட அரசியலமைப்பு உறுதிமொழிக்கு முரணானது. எனவே, கொடுப்பதை வாசிப்பது தான் மரபு என்று “வெறும் மரபு” என்பதைக் காரணம்காட்டி ஒரு தவறான ஆவணத்தை வாசிக்க அவரை வற்புறுத்த முடியாது.
ஆளுநரும் அரசியலமைப்பை மீறி ஏதும் செய்ய முடியாது. அவரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாயம் பூசுவதற்கு முன்னால், அவரின் செயல்பாடுகள் அரசியலமைப்பை மீறியதாக இருக்கிறதா என்று நாம் ஆராய வேண்டும். அப்படி இருந்தால் நாம் நீதிமன்றத்தை அணுகலாம். அப்படி அணுகி ஆளுநர் முடிவை எதிர்த்த வழக்கில், கடைசியில் நீதிமன்றம் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அரசியலமைப்பு ஆதரவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிவிட்டது.
இங்கே பிரிவினைவாதிகள் தான் மற்றவர்களைப் பிரிவினைவாதிகள் என்கிறார்கள். “இது தேசம் இல்லை, துணைக் கண்டம்” என்கிறார்கள். ஆஸ்திரேலியா கூட ஒரு கண்டம்தான்; அதைத் தேசம் இல்லை என்று சொல்லிவிடுவார்களா? இன்று ஒரு தேசமாக இருக்கும் எல்லா நாடுகளிலும் பல சிற்றரசுகள் இருக்கத்தான் செய்தது. அதையெல்லாம் தனித்தனி நாடுகள் என்று சொல்ல முடியுமா? “தமிழர்கள் இந்துக்கள் இல்லை” என்று தேசிய கலாச்சாரத்தால் ஒன்றுபட்டிருக்கும் ஒரு பெரும் கூட்டத்தைப் பிரிக்கப் பார்க்கும் பிரிவினை கருத்துக்கள் பேசுகிறவர்கள் தான், மற்றவர்களை மதம் சார்ந்த பிரிவினையைச் செய்கிறவர்கள் என்கிறார்கள். அரசியலமைப்பை எரித்தவர்கள் தான், அம்பேத்கரை ஒரு பக்கம் போற்றிக்கொண்டு மறுபக்கம் இந்திய எதிர்ப்பை—வெறுப்பைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களின் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துக்களுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது.
ஒரு பதவியை உருவாக்கியவர்களின் (அரசியல் நிர்ணய சபையின்) தொலைநோக்குப் பார்வையை (Vision), தற்காலிக அரசியல் லாபத்திற்காகச் சிதைப்பது தேச நலனுக்கு எதிரானது.அம்பேத்கரின் மேதமையைப் போற்றுவது என்பது அவர் உருவாக்கிய விதிகளைப் பின்பற்றுவதே அன்றி, அவருக்குச் சிலை வைப்பது மட்டுமல்ல
இந்த தேசிய கீத பஞ்சாயத்துக்கு வருவோம். ஆளுநர், பாராளுமன்றத்தில் இருக்கும் வழக்கத்தை போன்று, ஆளுநர் உரைக்கு முன்னரும் பின்னரும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார் அவர் ஒன்றும் ஜெயலலிதா வாழ்க, அண்ணா வாழ்க பெரியார் வாழ்க போன்ற பஜனைகளை இசைக்க சொல்லவில்லை. தேசம் முழுதும் ஒரே மாதிரியான சில வழக்கங்களை முன்னெடுக்க பார்ப்பதாக தான் இது நமக்கு தெரிகிறது.
கேட்டால்,மாநில மரபு என்கிறோம். 1991க்கு முன்பு என்ன மரபு பின்பற்றப்பட்டது. அவர் ஒன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கூடாது என்று சொல்லவில்லையே.இந்திய அரசியலமைப்பின் படி இயங்குகின்ற ஒரு சட்டமன்றத்தில், ஆளுநர் உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைப்பதில் என்ன சிக்கல், இதை வேண்டாம் என்பது வெறுப்பு மனம்பான்மை இல்லையா? தேசத்தின் அநேகமான மரபுகளுக்கு எதிராக பகுத்தறிவு என்கிற பெயரில் கொடி பிடிக்கிறவர்கள் 1991க்கு பிறகு வந்த மரபில் ஒரு சிறிய மேம்பாடு செய்து கொள்ள தயங்குவது மூட நம்பிக்கையில்லையா?
ஆளுநர் செயல்பாடுகள் மீது அதிருப்தி இருந்தால், நீங்கள் அரசியலமைப்பைப் புரட்டிப் பாருங்கள்; அதில் ஆளுநர் எதை மீறுகிறார் என்று சிந்தியுங்கள். உங்கள் புரிதல் சரியாக இருந்தால் நீதிமன்றத்தை நாடுங்கள். அதை விடுத்து, தேச உணர்வுக்கு எதிரான கருத்திற்கும் போக்கிற்கும் ஆதரவளித்து, பிரிவினைக்கு எதிரான கூட்டம் என்று சொல்லிப் பிரிவினைக் கூட்டத்தோடே ஒன்றி விடாதீர்கள்.