நிர்வாகரீதியிலான அரசியல் அணுகுமுறை என்று வருகிற பொழுதும் அநேக சமயங்களில் வெளிப்படும் போலித்தனங்கள் என்று வருகிற பொழுதும் விஜய் மீது இன்றளவும் நமக்கு விமர்சனங்கள் இருக்கிறது. விஜய் மாறாமல் நாம் அந்த விமர்சனங்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

அதே சமயத்தில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான அரசியல் அணுகுமுறை என்று வருகிற பொழுது, நிகழ்கால அரசியல் தலைவர்களால் சமாளிக்க முடியாத ஆளுமையாகத்தான் விஜய் இருக்கிறார் என்பது குறித்து எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தோம் அதற்கு இன்று நேரம் கூடி வந்திருக்கிறது.

ஆம்! விஜய் நிர்வாகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்! என்ன செய்யப்போகிறார்! அவரிடம் போலித்தனம் இருக்கிறதா இல்லையா? என்கிற வாதங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர் கொஞ்சம் வேகமாகவும் விவேகமாகவும் தான் செயல்படுகிறார் என்பது புலப்படும்.

ரஜினியிடமும் காமராஜரிடமும் இல்லாத ஒன்று விஜய்யிடம் இருக்கிறது. அரசனாக இருக்கின்றவனுக்கு அது தேவையும் கூட. இலங்கை ஜெயராஜ் அவர்கள் ஒரு சமயம் அவரின் சொற்பொழிவின் இடையில் இவ்வாறு சொல்கிறார், “சாத்வீக குணம் கொண்டவர்களால் அரசியலில் நிலைக்க முடியாது அரசியலில் நிலைக்க ரஜோ குணம் முக்கியம்”.

காமராஜர் ரஜினி இவர்கள் இருவரையும் கவனித்தவர்களுக்கு இலங்கை ஜெயராஜ் அவர்கள் சொன்னதின் ஆழமான அர்த்தம் விளங்கும்.

காமராஜரிடம் சென்று நம் ஆட்சியின் சாதனைகள் குறித்து ஒரு விளம்பரம் படம் எடுத்தால் அது நமக்குத் தேர்தலில் சாதகமாக அமையும் என்றதற்கு அந்தக் காசில் நாலு பேரைப்படிக்க வைக்கலாம் என்றாராம். ரஜினியைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் நினைக்கவே வேண்டாம் தலையசைத்திருந்தால் போதும் முதலமைச்சர் பதவியோ, ஆளுநர் பதவியோ ஜனாதிபதி பதவியோ எதுவாகினும் கொடுக்கிறோம் என்று அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அவர் வாசலில் காத்துக்கிடந்தும், சோ போன்ற அரசியல் நோக்கர்கள் வலியுறுத்தியும் பதவி வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தவர். அவரே கட்சி தொடங்கிய பொழுதும் கூட நாற்காலியில் நான் அமர மாட்டேன் என்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி திறமையான ஒருவனை அதில் அமர்த்துவேன் என்றார்.

காமராஜர் செய்ததும் பெரும் பிழை ரஜினி செய்ததும் பெரும் பிழை. ஒரு அரசன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் கைப்பற்றிய அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் விடுவதன் விளைவாய் அதிகாரம் கயவர்கள் கைகளுக்குச் சென்றால் அப்பொழுதும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் தானே என்கிற எண்ணம் அரசனுக்கு இருக்க வேண்டும்.

ரஜினி பதவி வேண்டாம் என்று மட்டும் நினைக்கவில்லை யாரையும் விமர்சிக்காமல் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதும் தீர்வு காண்பதும் தான் என் அரசியல் வழி என்றார். இதெல்லாம் நல்லது தான், ஆனால் அநியாயத்திற்கு நல்லது. நிகழ்கால அரசியலிலும் சரி! மன்னர் கால அரசியலிலும் சரி யாரையும் கொஞ்சிக்கொண்டு அரசியல் செய்ய முடியாது. அதை விஜய் புரிந்துகொண்டிருக்கிறார் என்றே தான் நம்புகிறேன்.

மகாபாரதப் போருக்கு என்ன காரணம் என்று கேட்டால், அநேகர் பாஞ்சாலியை அவமதித்தது என்பீர்கள். ஆனால், ஒரு ரிஷியிடம் இருந்து பசுவைத் திருடியவர்கள் பெற்ற சாபத்தின் விளைவாய்ப் பிறந்த பீஷ்மர் தந்தைக்காகத் திருமணம் செய்யாமல் விட்டதில் தொடங்குகிறது போருக்கான காரணம். அப்படி விஜயைப் பொறுத்தவரையில், விஜயை அரசியலில் நுழைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவரின் தந்தைக்குத் தொடக்கம் முதலே இருந்து அதன் நோக்கமாகவே தான் அவர் காய்களை நகர்த்தி வந்தார்.

விஜய் கூடப் பல சந்தர்ப்பங்களில் அதிகாரத்தின் மீது தனக்கிருந்த ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். சும்மா நேற்று கட்சி ஆரம்பித்து இன்று ஜெயித்துவிட்டார் என்பது பாஞ்சாலியை அவமதித்தது போருக்குக் காரணம் என்பது போன்றது. இரண்டு தலைமுறையினரின் தவம். காத்திருந்து காய்களை நகர்த்தி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் யாரும் மறுக்க முடியாது. நிச்சயமாக இதில் அவரின் முயற்சியும் காத்திருப்பு மட்டும் காரணம் இல்லை என்றாலும் தேர்தல் சூழல், அதிமுக கூட்டணியில் இருந்த குழப்பங்கள், திமுக மீதிருந்த வெறுப்பு, எல்லாவற்றிக்கும் மாற்றாக மக்கள் ஒன்றைத் தேடுகிற சமயத்தில் தேடலின் முடிவாக விஜய் ஆயத்தமாக இருந்தார்.He Was Prepared and ready for that moment.

ஆறு மாதங்கள் கழித்து இந்த ஆட்சி கலைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. திமுக சாதாரண அரசியல் கட்சி இல்லை என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த பொழுது திமுகவாலேயே சமாளிக்க முடியாத படி அரசியல் விளையாட்டை விளையாடத் தொடங்கியது த.வெ.க.

அரசியலை கவனித்துக்கொண்டிருந்தவர்களுக்குத் தெரியும். கட்சி அதிகார நிலையில் த.வெ.க. தரப்பு தன் மூன்றாம் கட்ட படையைக்கொண்டு , ஓரிரு மாதத்திற்குள் அத்தனை பொய்களைக் கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தது. எப்பொழுதும் பொய்களையும் உண்மைகளை வைத்துப் பொய்களையும் அதிகாரமாக நிறுவிக்கொண்டிருக்கும் தி.மு.க.காரர்கள், த.வெ.கவின் பொய்களை மறுத்துக்கொண்டிருப்பதில் பரபரப்பாக இருந்தார்கள்.

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கச் சில்லறைக் கட்சிகள் எல்லாவற்றையும் தன் வசப்படுத்தியது த.வெ.க. அந்தக் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பெரியதா சிறியதா என்பது முக்கியம் இல்லை. அந்த கட்சிகளில் இருந்த தலைவர்களின் குரல் மக்களுக்குக் கேட்கும் அளவிலான பெரிய குரல்கள். அந்த குரல்கள் இன்று த.வெ.க.விற்குத் தாலாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறது. தூக்கம் கலைக்க வருகிறவர்களைப் பார்த்துக் கர்ஜிக்கிறது.அது தான் ரஜோ குணத்தின் தந்திரம்.

விசிகவின் ஒரு தரப்பு திமுகவிற்கு மறுதரப்பு த.வெ.க.விற்கு என்று ஆகி அந்த கட்சி தன் சுயத்தை இழந்துகொண்டிருக்கிறது. சரியான விமர்சனங்களைச் சரியாகவே வைத்தாலும் மிக நாகரீகமாகவும் ராஜ்யசபா சீட் கொடுக்காமல் விட்டிருந்தால் நானும் அந்த பக்கம் வந்திருப்பேன் தம்பி என்பது போலவுமே தான் விமர்சனங்களை வைக்கிறார் அண்ணியார் பிரேமலதா. தவிர்க்க முடியாத சூழலால் தான் திமுகவோடு இருக்கிறோம் என்பது போலத் தான் இருக்கிறது தே.மு.தி.கவின் நிலை.

நாளொரு வண்ணம் நானூறு விமர்சனங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்த அண்ணாமலையின் குரல் மாறிக்கொண்டிருக்கிறது அதோடு குன்றிக்கொண்டிருக்கிறது. அண்ணாமலை விஜயை விட திறமையானவர் நேர்மையானவர் என்பதெல்லாம் இந்த அரசியல் களத்தில் ஒரு பொருட்டாக இல்லை என்பதே நிதர்சனம்.

அதிமுகவும் தினகரனும் அடிக்கடி விமர்சனங்களை வைத்துக்கொண்டிருந்தாலும் அது அதிமுககாரர்களுக்கே கேட்பதில்லை அவர்கள் அந்த விமர்சனங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் முற்படுவதில்லை.

சில்லறைக் கட்சிகளைச் சேர்த்துக்கொண்டது, அதிமுகவை உடைத்தது, வைகோ போன்ற தலைவர்களைத் தன் வசப்படுத்திக்கொண்டது என்று எல்லா விஷயங்களிலும் பணம் போன்ற விஷயங்களின் தாக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தால் என்ன! இப்படியான அரசியல் களத்தில் அது தேவை தான் என்கிற பொழுது எந்த அரசனும் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள அதை செய்து தான் ஆக வேண்டும். அது தான் ரஜோகுணம் அது இல்லாமல் போனால் அரசியலில் நீடிக்க முடியாது என்கிற வகையில் தான் தற்போதைய களம் இருக்கிறது அது என்றும் மாறுமோ எப்படி மாறுமோ அது வரையில் இது தேவை தான்.

இது அல்லாமல் சவுக்கு சங்கர் போன்றவர்களையும் தனக்கு சாதமாக மாற்றி வைத்துக்கொண்டது த.வெ.க. திமுக கிட்டத்தட்ட நிராயுதபாணி போல் ஆகிவிட்டது. அவர்களைத் தற்காப்பு ஆட்டம் மட்டுமே ஆட நிர்பந்தித்துக்கொண்டிருக்கிறது த.வெ.க.

ஒருபக்கம் வழக்குகளைச் சந்திக்க வேண்டும். மறுபக்கம் கீழ்மட்ட அளவில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் பொய்களை உடைக்க வேண்டும். திமுக பொய்களைப் பரப்பிக்கொண்டிருந்த சமயங்களில் கூட இத்தனை வேகமாகவும் அதிகமாகவும் பரப்பவில்லை. திமுக ஆதரவு சமூக வலைத்தளப் பக்கங்கள் எல்லாம் த.வெ.க வின் பொய்களோடு சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறதே தவிர அவர்கள் சக்கரவியூகத்தின் மையத்தில் இருக்கும் த.வெ.க. தலைமையை நெருங்கவேயில்லை.

அதிமுகவும் தினகரனும் சரியான விமர்சனங்களை வைக்கிறார்கள் என்றாலும் அதை சரியாகக் கொண்டு சேர்க்க ஆளில்லை. திமுக என்ன விமர்சனங்கள் வைத்தாலும் ஐந்து வருடங்கள் நீங்கள் என்ன செய்தீர்கள் என்றும் ஏதேனும் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் நீங்கள் செய்யாததா என்கிற கோஷங்கள் எழுந்தும் திமுகவை அமுக்கிவிடுகிறது.

இரண்டு திராவிடக் கட்சிகளும் கையறு நிலையில் தான் இருக்கிறார்கள். என்ன செய்ய வேண்டும் என்கிற எத்தனிப்பால் ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் இப்பொழுது கீழ்த்தரமான விமர்சனம் ஒன்றை வைத்துக் கைதாகி இருக்கிறார் உதய்.

இப்படியான கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்துவிட்டுப் பேர் சொல்லவில்லை பூ வைக்கவில்லை பொட்டு வைக்கவில்லை என்று எப்போதும் போல் சட்டரீதியாகத் தப்பித்துக்கொள்ளலாம் என்று திமுக நினைக்கிறது. காலம் மாறிவிட்டதை திமுக இன்னும் உணரவில்லை. காலத்திற்கேற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ளத் தவறிய காங்கிரஸ் இன்னும் மீண்டெழவே இல்லை என்பதை திமுக புரிந்துகொள்வதற்கு திமுகவின் கதை முடிந்துவிடும் போலிருக்கிறது.

திராவிடக் கட்சிகளில் அடிப்படையில் இருந்தே ஒரு பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டு ஒரு பெரிய மாற்றம் ஏற்படாமல் அவர்களால் இனி விஜயை அசைக்கக் கூட முடியாது. அதை உணராமல், இப்படி விமர்சனங்களை வைத்து அரசியல் செய்வது அவர்களை அநேகர் எண்ணம் போல் இன்னும் படுபாதாளத்தில் தான் தள்ளும்.

‘அங்கிள்’ என்று விஜய் சொன்னதற்கே அநாகரீகம் என்று ஆடிய திமுக ஆதரவாளர்களும் மற்ற கட்சிகளும் அந்த கட்சிகளில் இருக்கும் பெண்களும் என்று ஒருவரும் உதய்யின் விமர்சனத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்யவில்லை. எனக்குத் தெரிந்து முதல் ஆளாக அக்கா தமிழிசைக் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் உதயநிதியின் கருத்துக்குக் கண்டனங்களை’த் தெரிவிக்க வேண்டும் என்று அழைத்திருந்தார்.

உதயநிதிக்கு அவர் வைத்த அந்த கீழ்த்தரமான விமர்சனம் குறித்துக் கிஞ்சித்தும் வெட்கம் இல்லை சிரித்துக்கொண்டே கைதாகிறார்; சட்ட ரீதியாகச் சந்திப்பேன் என்கிறார். திமுக எதைப் பேசினாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. காலம் ஏற்கனவே விஜய்யின் பக்கம் இருக்கும் பொழுது, சட்டரீதியாகத் தப்பித்தாலும் அரசியல் ரீதியில் இது திமுகவிற்குப் பெரிய பின்னடைவை தான் தரும் என்கிற உணர்வு கூட இல்லாத தலைமையைத் திமுக தற்போது பெற்றிருக்கிறது.

திமுக சில நாட்களுக்கு முன் நகைச்சுவை வளையொலி ஒன்றில் கோபி சுதாகர் செய்த நையாண்டிக்கு எதிராக குரல் எழுப்பி அந்த காட்சியை நீக்கச் செய்தார்கள். இன்றோ அரசியல் பழிவாங்கல் என்று திமிறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்கிற இந்த மனோபாவத்தில் இருந்து திமுக திருந்திவிடக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்வோம். (திருந்தினால் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் வந்துவிடுவார்கள்)

பகுத்தறிவு பேசும் பெண்களில் ஒருவர் கூட உதயநிதியைக் கண்டித்ததாகத் தெரியவில்லை. எல்லோரும் இது அரசியல் பழிவாங்கல் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். கழிக்கப் போனவரையா பிடித்துக் கைது செய்கிறார்கள். மோசமான கருத்தைப் பொதுவெளியில் வைத்ததால் கைது செய்யப் போனார்கள். இது எப்படி அரசியல் பழிவாங்கல் ஆகும்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாது போனாலும் திமுகவிடம் இருக்கும் பணபலத்திற்கும் படைப்பலத்திற்கும் திமுகவின் மீது ஒரு துரும்பை வீசுவது என்றாலும் மிக கவனமாகச் செய்ய வேண்டும் என்பதே சாமானியன் ஒருவனின் எண்ணமாக இருக்கும். விஜய்யோ தயங்காமல் இந்த தருணத்திற்காகவே காத்திருந்தது போல் திமுகவின் கன்றுக்குட்டியை திமுகவின் அரசனாக முடி சூட்டவிருந்த இளவரசனையே கைது செய்திருக்கிறார். இப்பொழுது உஸ்தாயில் பாடுங்கள், “இராவணன் மகன் டா!”

விஜய் நல்ல அரசியல்வாதியா என்றால் இல்லை என்று ஆயிரம் வாதங்களை நானே கூட வைப்பேன். ஆனால், விஜய் தேர்ந்த அரசியல்வாதி என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். அவரோடு எப்படி அரசியல் களமாடுவது என்று மற்ற கட்சிகள் விழிபிதுங்கிக் கிடக்கிறது. காரணம், நிர்வாக அரசியல் ரீதியில் அவர் மீது இருக்கும் குறைகளைப் பற்றி இவர்கள் விமர்சித்தால் அதைக் கேட்பதற்கு ஆளில்லை கேட்பவர்களும் நீங்கள் என்ன கிழித்தீர்கள் என்று முடித்துக்கொள்கிறார்கள்.

இப்படிச் சூழலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சீமானை நிறுத்த இருப்பதாக வெளிவரும் செய்திகள் உண்மையாக வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். உடனே என்னைச் சீமான் ஆதரவாளர் ஆக்கிவிடாதீர்கள். தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யை எதிர்த்து சரியான விமர்சனங்கள் எழுப்ப முடிகிற இதுவரை அதிகாரத்தில் இல்லாதவர் என்கிற ரீதியில் தார்மீக உரிமை பெற்றவராக சீமான் மட்டுமே இருக்கிறார். சீமானின் ஆயிரம் கருத்துக்களில் தொள்ளாயிரம் கருத்துக்களில் நாம் முரண்படுகிறோம். அவரது அணுகுமுறையில் முற்றிலும் முரண்படுகிறோம் என்றாலும் கூட தற்போதைய சூழலில் இடைத்தேர்தலில் சீமான் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்ல வேண்டிய அரசியல் தேவை இருப்பதாகவே தான் நாம் பார்க்கிறோம்.

விஜய் போகிற போக்கிற்கு அசைக்க முடியாதவராக அவர் உருவெடுத்துக்கொண்டிருக்கிறார் என்னும் பொழுது அவரையும் கேள்வி கேட்க ஒருவரேனும் வேண்டும் தானே!

பார்க்கலாம் காலம் என்ன வேண்டுமென்றாலும் செய்யும்! கண்ணுக்கெட்டிய தூரத்தில் எதிரிகளே இல்லை என்ற ஜெயலலிதாவிற்கு காலமே எதிரியானது. பத்து சீட் ஜெயிப்பாரா என்கிற நிலையில் இருந்த விஜயை அசைக்க முடியாத இடத்தில் கொண்டுவந்து அமர்த்தியிருக்கிறது. இதையெல்லாம் செய்கிற காலம் அரசியலில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் தேவலாம்.நம்பிக்கையோடு காத்திருப்போம். காலம் நல்ல மாற்றங்களையும் கொண்டு வரும் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *