மக்களவைக்கு ஒரு கடிதம்-12; காக்காத காப்பீடுகள் காக்கட்டும் இனிமேல்!
உங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு நீங்கள் மருத்துவக் காப்பீடு வைத்திருக்கிறீர்கள்? இன்றைய சூழலில் மருத்துவக் காப்பீடுகள் எல்லோரிடமும் இருக்க வேண்டிய ஒன்றாகிவிட்டது என்பதை உணரவேணும் செய்திருக்கிறார்களா?
சமீபத்தில் எனக்குத் தெரிந்த போலீஸ்காரர் ஒருவருக்கு வேலையில் இருந்தபொழுது தனியாக இருந்த சமயத்தில் ஸ்ட்ரோக் வந்து மயங்கி கிடந்திருக்கிறார். அவரை சில மணித்துளிகளுக்குப் பின் கவனித்த மற்றொரு பெண் போலீஸ் கண்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
இப்பொழுது,போலீசுக்காரரின் சிகிச்சைக்கு அவரிடம் இருந்த காப்பீட்டு அட்டையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அட்டையைக் காண்பித்த பிறகு தான் அதன் வரம்புகள் பற்றி தெரியவந்தது.
தமிழகக் காவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் பெயரளவிலேயே உள்ளது; அது குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே கவரேஜ் அளிக்கிறது, மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் மற்ற தீவிர நோய்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தருவதில்லை என்று கூறி, மொத்த செலவில் 2 சதவீதம் மட்டுமே பெற முடியும் மற்ற செலவுகள் காப்பீட்டின் கீழ் வாராது என்றுவிட்டார்கள். சரி, செய்கிற செலவுகளை செய்துவிட்டு claim செய்துகொள்ளலாம் என்கிற ஏற்பாட்டின் படி செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்கள். அதன்படியும் கூட மொத்தமான செலவான 25 லட்சங்களில் அதிக பட்சம் 8 லட்சம் வரை தான் பெற்றுக்கொள்ள முடியும், அதுவும் அங்கிங்கு சென்று ஆறு மாதம் கழித்துத் தான் கிடைக்கும் என்றுவிட்டார்கள்.
அரசுப் பணியாளருக்கே இந்த நிலை. அப்பா அரசுப் போக்குவரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார், அவருக்கும் ஒன்றும் பிரத்யேகமாகக் காப்பீடு இருந்ததாகத் தெரியவில்லை. அரசு அமைப்புக்குள் இருந்தாலும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் அரசுத் துறைகளில் தினக்கூலியாகவோ ஒப்பந்த அடிப்படையிலோ பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நிலை இன்னும் மோசம். இவர்களுக்கு முறையான, முழுமையான மருத்துவப் பாதுகாப்பு என்பது இன்றும் கானல் நீர்தான்.
காப்பீடு விஷயத்தில் காவலர்களுக்கே சிக்கலான நிலை இருக்கிற பொழுது, சிறிய நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களின் நிலையும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலையும் பற்றி விவரித்துச் சொல்ல வேண்டியதில்லை. அதுதான் அரசு காப்பீடு இருக்கிறதே என்று கேட்கலாம். அது எல்லோருக்கும் இருக்கிறதா? எல்லா விதமான சிகிச்சைக்கும் பயன்படுகிறதா என்றால் இல்லை.
சரி, காப்பீடு எடுத்துக்கொண்டவர்களுக்கு அது சரியான நேரத்தில் சரியாக உதவுகிறதா என்றால் இல்லை. நம் பெயரில் கடன் வாங்கும் பொழுது இப்பொழுதெல்லாம் ஒரு காப்பீட்டையும் நம் தலையில் கட்டி விடுகிறார்கள். அது என்ன விதமான காப்பீடு என்கிற முழுவிவரம் நமக்குச் சரியாகத் தருவதில்லை. ஒரு சமயம் அம்மாவின் பெயரில் கடன் வாங்கிய பொழுது, அவர் பெயரில் ஒரு காப்பீடு வாங்கச் சொன்னார்கள். சில நாட்களில் அம்மாவை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது.
மருத்துவர்களாலேயே என்ன நோய் என்று உடனடியாகக் கண்டறிய முடியவில்லை; சிகிச்சையும் பலனளிக்கவில்லை. ஆனால் காப்பீட்டு நிறுவனமோ, ‘இது தீவிரமான நோய் இல்லை’ என்றும், ‘காப்பீடு எடுத்து 30 நாட்கள் (Cooling period) முடிவடையவில்லை’ என்றும் கூறி இழப்பீட்டை நிராகரித்துவிட்டது. எல்லா நோய்களின் அடைகாக்கும் காலமும் (Incubation period) 30 நாட்கள் தானா? சில நோய்கள் சில நாட்களிலேயே தீவிரமடைந்து உயிரிழப்பை ஏற்படுத்திவிடுமே? மருத்துவர்களே நோயைக் கண்டறியத் தவறும் பட்சத்தில், அதை எப்படித் தீவிர நோய் இல்லை என்று காப்பீட்டு நிறுவனங்கள் முடிவெடுக்கலாம்?
அதைவிடக் கொடுமை என்னவென்றால், நோயாளி இறந்துவிடுவார் என்று தெரிந்தவுடன், மருத்துவமனைகள் தங்கள் இறப்பு விகிதத்தைக் குறைத்துக்காட்ட, நோயாளியை ‘Against Medical Advice (AMA)’ என்று எழுதி டிஸ்சார்ஜ் செய்யச் சொல்கிறார்கள். இதனால் காப்பீட்டுச் சலுகையும் நோயாளிக்கு முழுமையாக நிராகரிக்கப்படுகிறது.
இரண்டு விதமான சூழ்நிலைகளை நீங்கள் வாசித்திருப்பீர்கள். மூன்றாவது ஒரு சூழல் ஒன்று இருக்கிறது.
இந்தியாவில் நாம் தனியாக வாங்கும் மருத்துவக் காப்பீடுகள் எதுவும் வெளி நோயாளிகள் (OPD) சிகிச்சைக்கு ஈடு செய்வதில்லை. அப்படியே சில நிறுவனங்கள் கொடுத்தாலும், அதைப் பெறுவது நடைமுறையில் சாத்தியமில்லாமல் உள்ளது. ஏனென்றால், பல சிறிய கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களில் முறையான ரசீதுகள் (GST Bills) வழங்கப்படுவதில்லை.அது அல்லாமல் நேரடியாக CASHLESS ஏற்பாடு படி அந்த காப்பீட்டின் பயனை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. முதலில் பணத்தை கட்டிவிட்டு ஆவணங்களை சமர்ப்பித்து காத்திருக்க வேண்டும்.
நீங்கள் சிந்தியுங்கள், இங்கே அநேகமான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பல மருத்துவப் பிரச்சனைகளுக்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. பல சமயங்களில் அதற்கு அவசியம் இருப்பதும் இல்லை. என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்கச் செய்யும் பரிசோதனைகளே ஆயிரங்களிலும் லட்சங்களிலும் முடிந்துவிடுகிறது. இதெல்லாம் மருத்துவமனையில் சேர்ந்து செய்யும் பரிசோதனைகள் இல்லை. வெளிநோயாளிகளாக நாம் செய்து கொள்ளும் பரிசோதனைகள். சில பிரச்சனைகளுக்கு நாம் வெளிநோயாளிகளாகவே தான் சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம். அதற்கான செலவே சமயங்களில் லட்சத்தைத் தொட்டுவிடுகிறது.
இதற்கெல்லாம் தீர்வே இல்லையா? இருக்கிறது நாம் அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை பேசுவதும் இல்லை.
முதலில்,’ஒரு இந்தியா ஒரு ரேஷன் கார்டு’, ‘ஒரு இந்தியா ஒரு நுழைவுத் தேர்வு’ என்பதையெல்லாம் விட, ‘ஒரு இந்தியா ஒரு காப்பீடு’ (Universal Health Coverage) என்கிற திட்டத்தை நாம் கொண்டு வரவேண்டும். வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ அல்லது முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் இருக்கலாம். ஆனால் வரி கட்டும் நடுத்தர வர்க்கத்திற்கும் சேர்த்து, சிங்கப்பூரில் உள்ள ‘Medisave’ திட்டத்தைப் போல, ஒவ்வொரு குடிமகனின் வருமானத்திலிருந்தும் ஒரு மிக மிகக் குறைவான தொகையை மருத்துவச் சேமிப்பாக அரசே கட்டாயப் பிடித்தம் செய்து காப்பீடு வழங்க வேண்டும். அதோடு, பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை அவர்களின் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு கொடுப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளர்களை ஒன்றிணைக்க அரசு ஒரு தளத்தை உருவாக்கி அது ஒரு நிறுவனம் போல் செயல்பட்டு அமைப்புசாரா தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் காப்பீடு சரியான வகையில் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
அரசின் கட்டாயக் காப்பீடு, வேலை செய்யும் நிறுவனங்கள் தரும் காப்பீடு இரண்டும் போக, ஒருவர் தனியாக அவருக்கென்று ஒரு காப்பீடு வாங்கிக்கொள்கிறார் என்றால், மூன்றும் ஒரு சேர மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த எல்லா செலவுகளுக்கும் பயன்படும் வகையில் சட்டமியற்ற வேண்டும். ஒருவரிடம் இரண்டு மூன்று காப்பீடுகள் இருந்தால், ஒன்றில் க்ளைம் செய்தபின் மற்றொன்றைப் பயன்படுத்த ‘No Claim Certificate’ கேட்பது போன்ற நடைமுறைச் சிக்கல்களை நீக்க வேண்டும். மேலும், சிகிச்சைச் செலவை விட மருத்துவமனை அறை வாடகை (Room Rent) போன்ற செலவுகளே அதிகமாக உள்ளது. இவற்றை நிறுவனங்கள் ஏற்பதில்லை. எனவே, ஒருவரிடம் பல காப்பீடுகள் இருந்தால், எவ்வித அலைக்கழிப்பும் இன்றி ஒன்றன்பின் ஒன்றாக அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும், அறை வாடகை உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் வரம்பின்றி (No Sub-limits) ஈடு செய்யப்படும் வகையிலும் கடுமையான காப்பீட்டுச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
அதேபோன்று, காப்பீடு எடுத்த நாளில் இருந்தே அது செல்லுபடியாக வேண்டும். முதல் நாள் எல்லா பரிசோதனைகளிலும் எல்லாம் சரியாக இருக்கிறவர்களுக்கு அடுத்த நாள் ஏதேனும் பிரச்சனை வரலாம் அது உடனே சரியாகலாம். இப்படியிருக்கக் காத்திருக்கும் நேரம் என்பது இருக்கக் கூடாது.
ஒருவருடைய மருத்துவம் சார்ந்த அடிப்படைத் தரவுகள், அரசு தற்போது கொண்டுவந்துள்ள ABHA ID (ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு) போன்ற மையப்படுத்தப்பட்ட (Centralized) அமைப்பிற்குள் முழுமையாகக் கொண்டுவரப்பட வேண்டும். அதன் மூலம் ஒரு நபர், அரசு மற்றும் நிறுவனக் காப்பீடு போகத் தனியாகத் தனது சொந்தச் செலவில் ஒரு காப்பீட்டை எடுத்தால் அல்லது வேறு நிறுவனத்திற்கு மாற்றினால் (Portability), பழையபடி 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே எழாது. ஏனெனில் அவர் ஏற்கனவே அடிப்படைத் தேசியக் காப்பீட்டிற்குள் இருப்பார் அதோடு அவரின் மருத்துவ சிகிச்சை விவரங்களும் மையப்படுத்தப்பட்ட (Centralized) அமைப்பிற்குள் இருக்கும். இது சரியாக பின்பற்ற பட்டால் 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய (WAITING PERIOD)தேவையே இருக்காது
கதிர்விஜயம் வாசகர்கள் ஏதேனும் பிரச்சனைகளை பற்றி நம் தளத்தில் எழுத வேண்டும் என்று நினைத்தால், கமெண்ட் செய்யுங்கள்.