டிஜிட்டல் இந்தியா மட்டுமல்ல, உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. தகவல்கள் எல்லோருக்கும் கிடைக்கின்றன; செய்திகள் எண்ண ஓட்டத்தின் வேகத்தில் பரவுகின்றன. இதில் கண்காணிப்புப் பணி பெரும் பங்கு வகிக்கிறது. அநேகமான இடங்களில் கண்காணிப்புக்காகக் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் எப்படி கையாளப்படுகின்றன, எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி நாம் அலச வேண்டியுள்ளது. அது சார்ந்த விதிகளையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில், நம் மாநிலத்தையே உலுக்கிய போலீஸ் காவலில் ஏற்பட்ட இளைஞர் அஜித்தின் மரணம் பற்றி எல்லோரும் ஓரளவிற்கு அறிந்திருப்பீர்கள். இந்த வழக்கு சார்ந்த விசாரணை காணொளி என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை நாம் பார்த்தோம். அதில், அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர், சி.சி.டி.வி (CCTV) ஆதாரங்களை ஓர் உயர் காவல் துறை அதிகாரி சென்று கையகப்படுத்தியிருக்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்.

அந்தக் காணொளி உண்மையானதா என்பது பற்றி நாம் ஆராயவில்லை. அது உண்மையானது என்று எடுத்துக்கொள்வோம். வழக்கு போலீசுக்கு எதிரான வழக்கு; ஆதாரங்கள் எல்லாம் செல்போன் கேமரா பதிவுகளும் சி.சி.டி.வி பதிவுகளும்தான். அதில் குறிப்பிட்ட சி.சி.டி.வி பதிவுகளை ஓர் உயர்மட்டக் காவல் துறை அதிகாரி ‘விசாரணை’ என்கிற பெயரில் கையகப்படுத்துகிறார் என்றால், அதை அவர் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம். ஆதாரங்களை அழிக்கவும் கூட வாய்ப்பு இருக்கிறது.

ஒரு கண்காணிப்பு கேமராவின் நோக்கம் இங்கே அடிபட்டுப் போகிறது. இந்தியாவில், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும், சி.சி.டி.வி கேமராக்களை எப்படி வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம் என்கிற நிலை இருக்கிறது. அதோடு, அப்படியான கேமராக்களில் ஏதேனும் சம்பவங்கள் பதிவாகிவிட்டால், அதைச் சட்ட ஆய்வுக்கு உட்படுத்துவதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் அதனைப் பிரபலப்படுத்தி (Viral) விடுகிறார்கள்.

மக்கள் அதிகம் கூடும் ஒரு கடை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த கடையில் ஒரு கண்காணிப்பு கேமரா இருக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அங்கிருக்கும் ஏற்கனவே பகையாக இருக்கிற இரண்டு பேர் அந்த கடையில் சந்தித்துக்கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோமே; அவர்கள் இருவருக்கும் ஒரு வாக்குவாதம் நடந்து ஒருவர் ஒருவரை அடித்துவிட்டால், அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமரா ஆதாரம் எப்படி அணுகப்படும்? அது சமூக வலைதளங்களில் பரப்புவது சரியா? அது தனிநபர் உரிமைக்கு முரண்பாடானது இல்லையா? அதுவே அந்தக் கடையில் வேலை செய்யும் ஒரு ஊழியரை, கடையின் முதலாளி தாக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்; முதலாளி அந்த கண்காணிப்பு கேமரா ஆதாரங்களை நேர்மையாகக் கொடுத்துவிடுவாரா? நிச்சயமாக இல்லை. இந்த முதலாளித்துவ மனநிலையைத்தான் அஜித்குமார் வழக்கில் அவர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டுகிறார்.

எங்கள் வீட்டின் அருகில் ஒரு கடை இருக்கிறது. சுற்றுச்சுவர் கிடையாது, சுற்றிலும் தகரத் தகடுகளால் அமைக்கப்பட்ட ஒரு கடை. ஒரு நாள் அந்தக் கடைக்குச் சென்றேன். எங்கள் தெருவில் நடப்பது, அவர்கள் கடையில் உள்ள ஒளித்திரையில் (Monitor) ஓடிக்கொண்டிருந்தது. கடையின் வாசல் சாலையை நோக்கி இருக்கிறது, தெரு கடையின் வலது பக்கத்தில் இருக்கிறது. இவர்கள் எங்கே கேமரா வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களின் தகரச் சுவற்றின் நாலாப்புறமும் வைத்திருக்கிறார்கள். இப்போது வலது பக்கமும் இடது பக்கமும் இருக்கும் தெருவின் வீட்டு வாசலில் யாரோ சில பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் அது பதிவாகும். அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அந்தப் பெண்களுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருக்கலாம் – ஒரு கேமரா நம்மைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்று.

கண்காணிப்பு கேமராக்களால் கவனிக்கப்படுகிற இடங்களில், அங்கே ஓர் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு இருக்க வேண்டும். நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா? கேமரா என்பது கண்காணிக்கப்பட்ட பிறகு அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அந்த அறிவிப்பு தவறு செய்பவர்களுக்காக இல்லை; அது சாமானியர்களின் தனி உரிமையைக் (Privacy) கருத்தில் கொண்டு வைக்கப்படும் அறிவிப்புப் பலகை. இந்த அறிவிப்புப் பலகை இல்லாமலும் கூட பல இடங்களில் கேமரா வைக்கப்படுகிறது.

தங்கள் கடையின் நான்கு திசைகளையும் கண்காணிக்க வேண்டும் என்கிற நோக்கம் சரியானது. ஆனால், கேமராவின் பார்வை எல்லை எதுவரை இருக்க வேண்டும் என்கிற நிர்ணயம் தேவைப்படுகிறது. மேலே சொன்ன சம்பவங்களை வைத்து, இந்தக் கண்காணிப்பு கேமராக்களுக்குத் தேவையான ஒழுங்குமுறையைக் கொண்டு வந்து, அதை எல்லோரும் பின்பற்றுவதைச் சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.

இதுபோன்ற கண்காணிப்பு கேமராக்களை நிறுவித்தரும் செயல்பாட்டாளர் நிறுவனங்களுக்கு என்று பிரத்யேக உரிமம் கொடுக்க வேண்டும். அவர்கள் எங்கு, யாருக்கு, எப்போது கண்காணிப்பு கேமரா பொருத்திக் கொடுத்தார்கள் என்பதைப் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும். அதை அரசின் பதிவேட்டில் ஏற்ற வேண்டும்.

பொது இடங்களில் வைக்கப்படுகின்ற கேமராக்களை – அது தனியாரின் இடமாக இருந்தாலும், மக்கள் பயன்பாட்டில் இருக்கின்ற இடங்களைக் கவனிக்கிற தனியார் கேமராவாக இருந்தாலும் – அதனை அரசின் பொது சர்வரோடு இணைக்க வேண்டும். இப்படிச் செய்யும் பொழுது, ஆதாரங்களை அதிகாரங்களாலும், அதிகாரிகளாலும், முதலாளிகளாலும் அத்தனை எளிதாக அழித்துவிட முடியாது. பொதுவில் இருக்கும் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கண்காணிப்பு கேமரா பதிவுகளை எவரும் தன்னிச்சையாகச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தடுக்கும் வலுவான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். தனியார் வசம் இருக்கும் பொது இடங்களைக் கண்காணிக்கும் கேமராக்களின் பதிவு பொது சர்வரில் மட்டும் இருந்தால் போதும். தேவைப்பட்டால் அந்தத் தனிநபரோ அல்லது நிறுவனமோ சர்வரில் இருந்து எந்த நிகழ்வையும் பார்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். தரவிறக்கம் செய்யும் அதிகாரம் தனிநபர்களிடம் இருக்கும் பொழுதுதான், இத்தகைய காணொளிகள் பொறுப்பின்றிப் பரப்பப்படுகின்றன.

வீட்டுக்குள் இருக்கும் கேமராக்கள் எந்த ஒரு பொது சர்வரோடும் இணைக்க வேண்டியதில்லை. ஆனால், வீட்டு வாசலில் சாலையை நோக்கி இருக்கும் கேமராக்கள் பொது சர்வரோடு இணைக்கப்பட வேண்டும். பொது இடங்களில் இப்படி கண்காணிப்பு கேமரா வைக்கப்படும் பொழுது, அறிவிப்பு வைப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

உண்மையில், இங்கே கண்காணிப்பு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது. எல்லா கார்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தச் சொல்லலாம்; பொதுப் போக்குவரத்திலும் கண்காணிப்பு கேமரா இருப்பதை கட்டாயமாக்க வேண்டும். எல்லாம் பொது சர்வரோடு இணைக்கப்பட்டு, அந்த சர்வரில் உள்ள பதிவுகள் தனிநபர் உரிமையைப் பாதிக்காமல், அதே சமயம் குற்றச்செயல்களில் ஆதாரங்களாகவும் இருக்கும் வகையில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு சட்டத் தெளிவைக் கொண்டு வர வேண்டும்.

இங்கே, ஒருவரின் தனிப்பட்ட வாழ்வை அனுமதியின்றிப் படம்பிடிப்பது அடிப்படை உரிமை மீறல். அது தினசரி கண்காணிப்பாக மாறும் பொழுது அதைச் சட்டம் எப்படி அணுக வேண்டும் என்பதற்குச் சட்டத் தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இங்கே ஒருவரின் டிஜிட்டல் தரவை (வீடியோ உட்பட) சேகரிக்கும் போது முறையான நோக்கம் மற்றும் பாதுகாப்பு இருக்க வேண்டும். தவறாகப் பயன்படுத்தினால் பெரும் அபராதம் உண்டு என்கிறது சட்டம். ஆனால் மிகச் சாதாரணமாகக் கண்காணிப்பு கேமரா பதிவுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. அபராதங்களால் மட்டும் இதை நாம் எப்படித் தடுக்க முடியும்?

பெண்களை அவர்கள் அறியாமல் படம்பிடிப்பது (Voyeurism) கடுமையான குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவரின் அந்தரங்கப் பகுதிகளை அவர் அனுமதியின்றிப் படமெடுத்துப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது சட்டம். ஓரிடத்தில் கண்காணிப்பு கேமரா இருக்கிறது; அது தெரியாமல் யாரோ ஒருவர் தன்னுடைய உடையைச் சரி செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அது கேமராவில் பதிவாகிறது. கேமராவை நிறுவியவருக்கு அது தெரியாது போனது என்று வைத்துக்கொள்வோம், அந்தப் பதிவு யாரோ வேறொருவர் கையில் சிக்கி அவர் மூலம் வெளியாவதை எப்படித் தடுப்பது? இதுதான் ஒரு தீவிரமான முறைப்படுத்துதலை அவசியமாக்குகிறது.

ஆதாரங்களை அழிப்பது சட்டப்படி குற்றம். ஆனால், ஆதாரங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாகச் சட்டம் இன்னொரு ஆதாரத்தைக் கேட்கும்; இது பாதிக்கப்பட்டவருக்கு இழைக்கும் அநீதி அல்லவா? சட்டம் அந்த ஆதாரம் அழியாது இருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற இலக்கைக் கொண்டிருக்க வேண்டாமா?

ஏற்கனவே இருக்கும் சட்டங்களோடு புதிய சில நெறிமுறைகளை வகுத்துக் கண்காணிப்பு கேமரா சம்பந்தமான சட்டங்களை நாம் சீக்கிரம் மேம்படுத்த வேண்டும்

எல்லா கேமராக்களையும் அரசு சர்வரோடு  இணைக்க எல்லா கேமராக்களையும் அரசு சர்வரோடு இணைக்க வேண்டுமென்றால் அது ஒரு சலசலப்பை உண்டாக்கலாம்; அது ஆளும் கட்சிக்குச் சாதகமாக அமையலாம் என்கிற அச்சம் எழலாம். அப்படியெல்லாம் இல்லாமல், அதன் தரவுகளைத் தேவைப்படுகிற நேரங்களில், தேவைப்படுகிற அளவில், சம்பந்தப்பட்ட இருதரப்பின் ஒப்புதலோடு மட்டும் பெற முடியும் வகையிலான ஒரு ஒழுங்குமுறையைக் கொண்டு வரலாம்.

இந்த விஷயங்களை நாம் இன்னும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, சட்டத்தை விரைவில் மேம்படுத்த வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *