ங்களுக்கு எப்போதேனும் போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிறதா? இப்படியொரு கேள்வியை யாரேனும் முன்வைத்தால், முதல் பதிலாக வாழ்க்கையே போராட்டமாகத் தான் இருக்கிறது என்கிற சிந்தனை தான் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மனதில் தோன்றும். அதற்கடுத்து கொஞ்சம் நிதானித்து போராடலாம் தான், போராடினால் நம் வேலையை யார் செய்வது? அவசரத்துக்கு லீவு கேட்கவே மேலாளரிடம் அரை மணி நேரம் பேசவேண்டியிருக்கிறது என்கிற பதில் வரும்.

மணிவண்ணன் உள்ளதை அள்ளித்தா சொல்வது போல, வேலையிருக்கிறவனுக்கு எங்கு அநியாயத்தைத் தட்டி கேட்க நேரமிருக்கிறது! அவன் தான் மணி அடித்ததும் சரியாக வேலைக்கு போகணுமே! இது தான் இங்கு எதார்த்தம்.

இன்னொரு எதார்த்தம் இருக்கிறது. ஒருமுறை மும்பை செல்லவிருந்த நண்பன் ஒருவனை வழியனுப்ப ஓசூர் ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தோம். அங்கே போலீஸ்காரர்களும் தயார் நிலையில் இருந்தார்கள். ஒரு கூட்டமும் கொடியோடு தயார் நிலையில் இருந்தது. அதோடு பத்திரிகையாளர்களும் கேமராவுடன் குவிந்து இருந்தார்கள். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ரயில் ஒரு ஐந்து நிமிடத்தில் வந்திருக்கும், வந்த ரயில் முன் இந்தக் கொடி பிடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் சென்று நின்று இரண்டு முறை கோஷம் போட்டார்கள். தயாராக இருந்த போலீஸ் அவர்களை வரச் சொல்லிக் கைது செய்தது. அவர்களும் போலீசார் அழைத்தும் வரிசையாக வேனில் ஏறிவிட்டார்கள். ரயில் கிளம்ப வேண்டிய நேரத்திற்கு கிளம்பியும் விட்டது. இது என் வாழ்நாளில் நான் நேரில் கண்ட ஒரு ரயில் மறியல் போராட்டம். இதை நீங்கள் செய்திகளில் பார்த்திருந்தால் உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?!

ரொம்ப காலமாகவே போராட்டம் அரசியல் ஆதாயங்களுக்கானதாக இருக்கிறது . என்னை கேட்டால் காந்தி காலத்தில் இருந்தே அப்படித்தான்.

உங்களுக்கு இந்தக் கேள்விகள் எல்லாம் எழுந்திருக்கிறதா என்று சிந்தியுங்கள்? வ.உ.சிதம்பரனார் அளவிற்கு காந்தியடிகளுக்கு ஏன் கடுமையான தண்டனை வழங்கப்படவில்லை?இருவரும் வேறு வேறு காலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் நினைத்துப்பாருங்கள், காந்தி காலத்திலும் செல்லுலார் சிறையில் இருந்தவர்களும் செக்கிழுத்தவர்களும் இருக்க காந்தியும் நேருவும் எப்போதும் ஒரு அரசியல் இருந்திருக்கிறார்கள்.

சுபாஷின் வழியை ஏற்காத காந்தி இந்தியர்களை ஆங்கிலேயர்களுக்காகப் போர் புரியச் செய்திருக்கிறார், ஏன் என்று எப்போதேனும் சிந்தித்து இருக்கிறீர்களா? பாகிஸ்தான் பிரிந்ததும் அவர்கள் நம் மீது போர் தொடுக்கிறார்கள். காந்தி உடனே அவர்களுக்கு கொடுக்க வேண்டிய 55 கோடியை கொடுங்கள் என்று பிடிவாதம் பிடிக்கிறார். ஒரு அஹிம்சைவாதி, நாம் அவர்களைத் திருப்பித் தாக்காமல் அஹிம்சையான அரசியல் வழியில் அவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவோம் என்று சொல்லியிருக்க வேண்டும். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கில் ஒரு பகுதியை நிறுத்தி வைக்கலாம் என்று சொன்ன தலைவர்களின் யோசனையை ஏற்றிருக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளில் தலையிட்டிருக்கக் கூடாது. ஆனால், அதெல்லாம் காந்தி செய்தார் ஏன் செய்தார்?

ஒரு “அகிம்சைவாதி” தன் நாட்டு மக்கள் தாக்கப்படுவதைத் தடுக்க நிதியை நிறுத்தி வைக்கும் அரசின் முடிவை ஆதரிக்காமல், எதிரிக்கு நிதியைத் தர வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தது தர்க்க முரண் இல்லையா ?

காந்தியாகவே இருந்தாலும் அவரின் பிழைகளை ஏன் நாம் கேள்வி கேட்கக் கூடாது? இந்திய அரசியலும் அரசியல்வாதிகளும் கேள்வி கேட்கக் கூடாது என்று நம்மை பழக்கியிருக்கிறது.

அன்றைய காந்தி முதல் இன்றைய அரசியல்வாதிகள் வரை யாராக இருந்தாலும், அவர்களின் செயல்களை உணர்ச்சிவசப்படாமல், தர்க்கரீதியாக நாம் எடைபோட வேண்டும். அரசியல்வாதிகள் தூண்டும் உணர்ச்சிகளால் சுயசிந்தனையை இழந்து கூட்டத்தோடு கோஷம் போடும் பொம்மைகளாக நாம் மாறிவிடக்கூடாது.

நான் என் அப்பாவிடம் கேட்டேன் காமராஜர் எம்.ஜி.ஆர். எல்லாம் சிறந்த முதலமைச்சர்கள் என்றால், நம் நாடு ஏன் இப்படியொரு நிலையில் இருக்கிறது ஆரம்பத்தில் அவர்களிடம் சரியான தொலைநோக்கு திட்டம் இருந்திருந்தால் நாடு வேறு மாதிரியான ஒரு வடிவம் பெற்றிருக்குமே என்று.

மக்கள் சாப்பிட வழியில்லாமல் இருந்த சமயத்தில், எம்.ஜி.ஆர். சாப்பிட வழி செய்தார். படிக்க வழியில்லாமல் இருந்த சமயத்தில் காமராஜர் படிக்க வைத்தார் அதனால் கொண்டாடுகிறோம் என்றார் அப்பா. கொண்டாடுவதற்கு அது தான் காரணம் என்று நான் ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் குறித்து எனக்கிருந்த விமர்சனத்தை நான் மாற்றிக்கொள்ளவில்லை.

நாட்டைச் சரியாக வடிவமைக்கும் ஒரு சரியான திட்டம் அப்போதிருந்த எந்த தலைவர்களிடமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். இரண்டாம் உலகப்போருக்குப் பின் லண்டனும் கூடத் திவால் ஆகும் நிலைக்கு அருகில் தான் இருந்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் இருந்த நிலையை நாம் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டால் ஊழல் எல்லாம் இருந்தாலும் கூட நம்மை விட பல நாடுகள் தங்களுடைய நாட்டை மிகச்சரியாகக் கட்டமைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

நாம் சுதந்திரம் பெற்ற அதே காலகட்டத்தில் அல்லது அதற்குப் பின்பு சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, சீனா போன்ற நாடுகள் இந்தியாவை விட மிக மோசமான நிலையில் இருந்து இன்று உள்கட்டமைப்பிலும் தரமான கல்வியிலும் இந்தியாவை விடப் பன்மடங்கு முன்னேறியுள்ளன.

நம் நாடும் அப்படி வளர்ந்திருந்தால், நம் வாழ்க்கை போராட்டமாகியிருக்காது.

தினமும் போராடிக்கொண்டிருக்கிற நாம் எப்படி போராட்டத்தை விரும்புவோம். கல்லூரி சென்றுகொண்டிருந்த பொழுது செய்திகளில் இலங்கை போர் பற்றி கேட்டதும், “நாம் பயமில்லாமல் கல்லூரி சென்றுகொண்டிருக்கும் இந்த நேரத்தில் அங்கு என் வயதை ஒத்த ஒருவன் அடுத்த நொடி எங்கு என்ன நடக்கும் என்கிற பதற்றத்தோடு தானே இருப்பான்” என்று தோன்றியது. நீங்களும் அப்படி நினைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நாம் எல்லோரும் அப்படித்தானே கஷ்டப்படுகிறவர்களைக் கண்டால் மனமிரங்குகிறவர்களாக தானே இருக்கிறோம்.

ஒரு நிமிடம் மனம்இரங்குகிறோம்அடுத்த நொடி இந்த அரசியல்வாதிகளும் அரசியலும் நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் தாக்கம் காரணமாக சந்திரமுகியாக மாறிவிடுகிறோம். போரின் தாக்கத்தினால் நேரடி பாதிப்புகளை சந்தித்த முரளிதரன் போர் முடிந்தது குறித்துத் தன்னுடைய அசுவாசத்தை வெளிப்படுத்தியதற்கு நாம் இங்கே சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு பழித்துக்கொண்டிருந்தோம். நாம் நல்லவர்கள் தான் ஆனால், பாருங்கள் தமிழ், மொழி இனம், அதுஇது என்று  ஓட்டு வாங்க ஏதோ ஏதோ பேசிவிடுகிறார்கள். உடனே நமக்கு உணர்ச்சி வந்து அறிவும் இரக்கமும் குறைந்து விடுகிறது. பின்னாளில் போரின் நீண்டகால பாதிப்புகளில் ஒன்றாக அந்த நாடு திவாலான பொழுது தமிழ் மக்களும் தான் பாதிப்பைச் சந்தித்தார்கள். அப்பொழுது நம்முடைய தமிழ் உணர்வு ஒன்றும் செய்யவில்லை. இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், இலங்கை தமிழர்களிடம் மானாவாரியாகப் பேசி கிரிக்கெட் சண்டை போட்டுகொண்டு இருக்கிறோம். போர்களுக்கும் போராட்டங்களுக்கும் பின்னால், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே சாமானியர்கள் புரிந்து கொள்ள முடியாத அதிகாரச் சண்டை இருந்து வந்திருக்கிறது இப்போதும் இருக்கிறது.

நிகழ்காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஜல்லிக்கட்டு நடத்துவதால் மனிதர்கள் எப்படி இறந்து போகிறார்கள் என்று நாம் நகையாடி வந்தோம். சன் செய்திகளில் சிறப்பு பார்வை என்கிற பெயரில் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்கிற ஆவணப்படம் எல்லாம் போட்டார்கள். விவேக் ஜல்லிக்கட்டை மூடத்தனம் என்று பொழுது கைதட்டி சிரித்தோம். திடீரென்று ஒரு நாள் நமக்கெல்லாம் மண், மாடு, மனுஷன் என்கிற உணர்வு வந்துவிட்டது. ஜல்லிக்கட்டைக் காப்பாற்றாமல் விட்டால் நாட்டு மாடு அழிந்துவிடும் என்று கிளம்பினோம். பெரிய வெற்றி! ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ளலாம் என்றுவிட்டார்கள். வெற்றிபெற்ற அடுத்த கொஞ்ச நாளில் மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தோம். மாட்டை வளர்ப்பதே தின்பதற்குத் தான் என்று அரசியல்வாதிகள் வசனம் பேசச் சிலிர்த்துப் போய்க் கைதட்டினோம். தட்டவில்லை என்றால் நாம் தற்குறி, சாங்கி மாட்டு மூளை கொண்டவன் என்று விடுவார்கள்.பிராய்லர் கோழி போன்று மாட்டுக்கறி பின்னால் இருக்கும் பொருளாதாரமும் சந்தையும் ஆட்டுவிக்கிற ஆட்டம் இது.

இதில் என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். யாரோ எங்கோ எதையோ கொளுத்திப் போடுகிறார்கள். நாம் அதில் நம்மையே இரையாக்குகிறோம். அதில் கொளுத்திப்போட்டவர்கள் குளிர்காய்கிறார்கள்.

என்னுடைய பார்வையில் ஜனநாயக நாட்டில், போராட்டம் என்பது அபத்தமானது.இது என்னுடைய தனிப்பட்ட பார்வை இதில் நீங்கள் வேறுபடுவதால் ஒன்றும் குறையில்லை.

கணினியில் வைரஸ் வந்திருக்கிறது என்றால், அதற்காகக் கணினியைச் சுத்தியலால் அடித்து உடைக்க மாட்டோம்; மாறாக ஆன்டி-வைரஸ் (Anti-virus) மென்பொருளைத்தான் நிறுவுவோம். ஜனநாயக அமைப்பில் உள்ள குறைகளைச் சரிசெய்யப் போராட்டங்களை ஆயுதமாகக் கையில் எடுப்பதும் சுத்தியலால் கணினியை உடைப்பதற்குச் சமம் தான்.

அரசியல் காரணங்கள் இருந்தாலும் காந்தி காலத்தில் போராட்டம் என்பது ஆளும் ஆங்கிலேயர்களுக்கு(outsiders) எதிரானதாக இருந்தது. இன்று நீங்கள் ஒரு சாலை மறியல் போராட்டம் செய்கிறீர்கள் அது உங்களைப் போன்ற ஒருவனைத் தான் பாதிக்கிறது. நிஜமாகவே ஓடும் ரயிலை நிறுத்தியெல்லாம் ஜல்லிக்கட்டிற்காக போராடினோம் , அந்த ரயிலில் அவசரமாக வீட்டிற்கு செல்ல வேண்டிய தவிப்போடு நம்மை போன்ற ஒருவனாவது இருந்திருக்க மாட்டான்?

போராட்டக்கூட்டங்களில் கரூரில் நடந்தது போன்ற கூட்டநெரிசலில் (Stampede) சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டால், அதையும் போராட்டத்திற்கான தவிர்க்க முடியாத ‘இழப்பு’ (collateral damage) என்று கடந்து சென்று மீண்டும் அரசையே குறை சொல்ல முடியுமா?  ஜனநாயக வழியில் உள்ள அனைத்துத் தீர்வுகளையும் முயன்று பார்த்துவிட்டு, வேறு வழியே இல்லாத போதுதான் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும் .என்பது தான் நம் நிலைப்பாடு. அப்படி முன்னெடுக்க போராட்டங்களிலும் கூட ஒரு ஒழுங்கும் தெளிவும் இருக்க வேண்டும்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்! என்ற தேசத்தில் நடக்கும் போராட்டங்கள்  யாரோ ஒரு தனிமனிதனை ஏதோ ஒரு வகையில் அவனுடைய அன்றைய பிழைப்பை அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.

காவேரி நீருக்காக சினிமா இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து ஐ.பி.எல் போட்டி நடக்கக் கூடாது என்று போராடியது நினைவிருக்கிறதா? ஏன் எந்த சினிமா இயக்குனர்களும் ஒரு மாதத்திற்கு எந்த சினிமாவும் வெளிவராது என்று போராடவில்லை? அன்று போட்டியை காண ஒரு நூறு பேர் ஒரு ஆட்டோவைத் தேடியிருக்க மாட்டார்களா? அந்த நூறு ஆட்டோக்காரர்களின் பிழைப்பில் மண்ணைப்போட்டு என்ன நடந்துவிட்டது?

இன்றைக்கு இந்த சமூகத்தின் எண்ணம் ஏன் இப்படி கீழ்நோக்கி செல்கிறது? என்று நொந்துகொள்கிறேன் நான். டெல்லியில் போராட்டம் நடக்கிறது. அநேகர் நேபாளம் மாதிரி இங்கு நடக்க வேண்டும் பங்களாதேஷ் போன்று இங்கு நடக்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஐரோப்பாவில் குப்பைகளை எப்படி மேலாண்மை செய்கிறார்களோ அது போல என் நாட்டில் நடக்க வேண்டும். சீனாவில் பெரிய பெரிய கட்டுமானங்களை வேகமாக முடிக்கிறார்கள் அது போல என் நாட்டில் நிகழ வேண்டும் என்றெல்லாம் நாம் ஏன் சிந்திப்பதில்லை.

இது ஒரு முரண் என்றால். அதை விடப் பெரிய முரண், 30 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கின்ற திமுகவினர், “ஐயகோ! என் தமிழ்நாடு இப்படி ஆகிவிட்டது! ஜனநாயகத்திற்காக இல்லாமல் ஜனநாயகனுக்கு ஏங்கி கொண்டிருக்கிறது” என்றெல்லாம் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். முப்பது பாராளுமன்ற உறுப்பினர்களால் புடுங்க முடியாத மலையை முப்பது நாள் உழைத்து ஒருநாள் திரையரங்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவனும் ஜனநாயகன் படத்திற்காக காத்திருந்து கொண்டாடுகிறவனும் தான் வந்து தான் புடுங்க வேண்டுமா?

நடக்கும் இந்தப் போராட்டத்தைப் பற்றி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இங்கே பலர் கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன நடக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் எது இங்கே சரிசெய்யப்படவேண்டும் என்பது பற்றியெல்லாம் கவலை இல்லை. அவர்களுக்குப் பிடிக்காத கட்சி ஆட்சியில் இருந்தால் எதிரான கருத்துக்களைப் பேசுவார்கள், பிடித்த கட்சி ஆட்சியில் இருந்தால் தேன் வடிய பேசுவார்கள். நாமும் அப்படித்தானா! இல்லையே! நமக்குத் தான் அறிவு இருக்கிறதே! நமக்கு இவர்களால் எந்த அரசியல் ஆதாயமும் கிடைக்கப்போவதில்லையே!

ஜந்தர் மந்தரில் அண்ணா ஹசாரே காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் செய்தார். காங்கிரஸ்க்கு எதிரான அந்த போராட்டத்தில், நானும் மக்கள் போராட்டத்தில் இருக்கிறேன் என்று தலையை காண்பித்து விட்டு வந்தார் விஜய். இந்தியாவில் ஊழல் ஒழிந்து விட்டதா? நீட் வினாத்தாள் கசிவு என்பதும் ஊழல் தானே!

என்னடா நீ இப்ப ஜனநாயக நாட்டில் போராட்டமே பண்ணக்கூடாது என்கிறாயா? நிச்சயமாக இல்லை. எதற்காக போராடுகிறோம் எப்படி போராடுகிறோம். நம்முடைய கேள்விகள் சரியானதாக இருக்கிறதா? யார் கொளுத்திப் போட்டார்கள் என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து தான் போராடுகிறோமா என்றெல்லாம் கவனிக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

இந்தச் சோனம் வாங்சுக் 3 லட்சம் பேர் இருக்கும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு ஒரு போராட்டம் செய்கிறார். அரசு அவரின் FRCA உரிமத்தை ரத்து செய்கிறது. மறுபக்கம் ஆம் ஆத்மி கட்சியில் வேலை செய்த ஒருவர் கரப்பான் பூச்சி கட்சி என்கிற வலைப்பக்கத்தை தொடங்குகிறார். அவர் காசு செலவழிக்காமல் அவரின் வலைப்பக்கம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்றால்நிச்சயமாக அது பற்றித் தெரிந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதையும் கொண்டு சேர்ப்பதற்கு இங்கே ஒரு விளம்பரம் தேவைப்படுகிறது. அந்த விளம்பரத்திற்குப் பின் இயல்பாக அது சென்றடைவது என்பது இரண்டாம் கட்டம். இந்த முதல் கட்ட விளம்பரத்திற்குப் பெறுமதியான தொகை செலவழிக்க வேண்டும். இவர்கள் இவரோடு, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவரணியைச் சேர்ந்த மருத்துவப் படிப்புகளுக்குச் சம்பந்தம் இல்லாத பல்கலைக்கழகங்களில் இருந்து படித்து முடித்தவர்களைத் தலைவர்களாய் கொண்ட மாணவ இயக்கங்கள் சேர்ந்து கொள்கிறது.

சோனம் வாங்சுக் வினாத்தாள் கசிவை சுட்டி, சீர்திருத்தங்கள் கொண்டு வர கேட்டு லடாக்கில் இருந்து டெல்லி வந்து போராடுகிறார் அவரோடு இந்த ஆம் ஆத்மி கட்சியில் வேலை செய்தவரும். கம்யூனிஸ்ட் மாணவரணியும். தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கேட்டு ஆரம்பித்த போராட்டம். அந்தப் போராட்டம் இப்பொழுது திசை மாறி, 370 நீக்கம் திரும்பப் பெற வேண்டும் என்கிறது. தேசத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறது.

நாமோ அந்த போராட்டத்தில் மாணவர்களை அடிக்கிறார்கள் என்றெல்லாம்  இங்கிருந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கிறோம். என்ன மாதிரியான சீர்திருத்தம் வேண்டும்?யாருக்கு தெரியும்?

இங்கே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நம் முதல்வர் பேசியிருக்கிறார். தேர்வு முறையில் சீர்திருத்தம் கேட்டு போராட்டம், இங்கோ தேர்வே வேண்டாம் என்கிற கோஷங்கள். இந்த தேர்வு வேண்டுமா வேண்டாமா என்கிற வாக்கெடுப்பு நடத்தினால், நிச்சயமாக தமிழகத்தின் பல நடுத்தரக் குடும்பங்கள் தேர்வு வேண்டும் என்று தான் வாக்களிக்கும்.

நிச்சயம் இது, எப்போதும் போல் அரசியல் ஆதாயங்களுக்காக மக்களைக் கேடயமாகக் கொண்டு நடத்தப்படுகிற போராட்டம் தான். ஆமா! வந்துட்டான் பாஜகவிற்கு ஆதரவு சேர்க்க என்று சிலர் நினைப்பீர்கள். நான் உங்களுக்கு அண்ணா ஹசாரே போராட்டத்தை நினைவு படுத்தியதை இங்கே மீண்டும் நினைவூட்டுகிறேன். உங்களுக்கு பாஜக தான் பிரச்சனை என்றால் வாருங்கள் எல்லோருமாகச் சேர்ந்து பாஜகவை அழித்துவிடுவோம் அழித்துவிட்டு அடுத்து என்ன செய்வோம் என்பதைச் சொல்லுங்கள். இங்கே திமுக அதிமுக ஒழிந்தால் போதும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருந்தது. அந்த இரு கட்சிகள் வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையில் என்ன நிகழ்கிறது அந்தக் கட்சியில் இருந்தவர்கள் த.வெ.க. பக்கம் சாய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

நாம் பாஜகவை அழிக்கின்ற பொழுதும் அது தான் நடக்கும். போராட்டங்களை உணர்ச்சித் தீவிரத்தால் ஆதரிப்பது என்பது அறிவார்ந்த சமூகத்திற்கு அழகல்ல. நாம் எப்போதாவது, இந்த நீட் தேர்வு தான் பிரச்சனை என்றால், ஏன் அனைத்து மாநில முதல்வர்களும் முதலமைச்சர் மாநாட்டில், மாநில கோட்டாவை மாநில தேர்வின் அடிப்படையிலும் தேசிய கோட்டாவை நீட் தேர்வு மூலமாகவும் நிரப்பிக்கொள்ளலாம் என்று முன்மொழியவில்லை என்று கேட்டிருக்கிறோமா? விளம்பரம் செய்து போராட்டத்தை முன்னெடுக்கத் துணிகிற அளவிற்குப் பணபலமும் படைபலமும் கொண்டவர்கள் நீதிமன்றத்திடம் இது போன்ற ஒரு முன்மொழிவை வைத்து அரசை பதில் சொல்ல நிர்ப்பந்தித்து இருக்கிறார்களா ? இல்லை. கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகப்போகிறது. நீட்டிற்குப் பதிலாக மாநிலங்கள் ஏற்கும் வேறு வடிவிலான நுழைவுத்தேர்வு இருக்கும் என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராட்டத்தில் படுத்துக்கொண்டிருந்ததற்குப் பதில் நாடாளுமன்றத்தில் அப்படியொரு முன்மொழிவை வைத்திருக்கலாமே அவர் ஏன் செய்யவில்லை என்று கேட்டோமா? 30 உறுப்பினர்களைக் கொண்ட திமுக இது தொடர்பாக ஒரு தனிநபர் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கலாம் அதை செய்யவில்லை ஏன் என்று கேட்டோமா? இல்லை.

இப்படியான அணுகுமுறைகள் எல்லாம் தோல்வியடையந்த பின் தான் நாம் ஏற்கனவே நசுங்கியிருக்கும் டெல்லியை மேற்கொண்டு கூட்டம் சேர்த்து நசுக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக பேசுகிறோமா?

பாஜக ஆளட்டும் அல்லது காங்கிரஸ் ஆளட்டும் ஒரு அறிவார்ந்த சமூகம், சிக்கல்களைச் சரியான கோணத்தில் அணுக வேண்டும். இங்கே அரசியல்வாதிகளுக்கும் கூட ஒரு நிர்ப்பந்தம் இருக்கிறது இப்படியெல்லாம் ஏதேனும் ஏமாற்று வேலைகள் செய்தால் தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்கிற நிர்ப்பந்தம். அப்படியான நிர்ப்பந்தத்திற்கு நம்முடைய அறியாமை தான் காரணம்.

மேலே குறிப்பிட்டது போல எத்தனையோ வழிகள் இருந்தும்,  அதை செய்ய முடிந்தவர்களை அதைச் செய்ய வைக்க நாம் எந்த நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்தவில்லை. மாறாக இப்படியான போராட்டங்களைக் கொண்டாடி ஊக்குவித்துக்கொண்டிருக்கிறோம்.

பென்னிக்ஸ் ஞாபகம் இருக்கிறதா? அந்த சமயத்தில் போலீஸ்காரர்களையும் எடப்பாடியையும் திட்டுவதோடு திருப்திப் பட்டுக்கொண்டோம். விஜய்யின் ஆட்சி வரை லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாம் திட்டுவதிலும் உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கி அந்தந்த சமயத்தில் நம் மீது திணிக்கப்படும் அரசியல் கருத்துக்களுக்கு ஏற்ப ஆடுவதை நிறுத்திச் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.நம்முடைய கேள்விகளும் அணுகுமுறையையும் சரியானதாக இருக்க வேண்டும்.அப்படியிருந்தால், சிஸ்டம் தன்னை சரி செய்து கொண்டிருக்கும் மீண்டும் மீண்டும் ஒரே தவறு நிகழாது.முதலில் நாம் தான் அந்த சிஸ்டம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

வினாத்தாள் கசிவு என்பது ஸிஸ்டத்தின் மற்றுமொரு கோளாறு என்றாலும் மாநில அளவில் அதிகாரம் கொண்டவர்கள் தான் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். மத்திய அமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டார். எதிர்காலத்தில் கணினி உதவியோடு தேர்வு நடத்தப்படும் என்கிற தீர்வை நோக்கிச் சென்றுவிட்டார்கள்.வேறு என்ன செய்யலாம் என்பதை நாம் பேசலாம்!

சிலர் இங்கே கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்று போராடிக்கிறார்கள் என்று பேசுவார்கள். கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. புதிய கல்வி கொள்கை வேண்டாம் என்று அதையே பிரதியெடுத்துப் பட்டிப்பார்த்துத் தனியாக ஒரு கல்விக் கொள்கை திமுக உருவாக்கியது போல் உருவாக்க எல்லோருக்கும் இங்கே அதிகாரம் இருக்கிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள் கல்வியில் சமத்துவம் என்று சமச்சீர் கல்வி முறை வந்ததும் என்ன நடந்தது. சமூகம் சி.பி.எஸ்.ஈ (CBSE) முறை நோக்கி நகர்ந்தது.

இப்பொழுது மீண்டும் சிந்தியுங்கள் இங்கே நாம் எதற்குப் போராட வேண்டும் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் .

சரி! நீட் தேர்வை ஒழித்துவிட்டோம் பாஜகவையும் ஒழித்துவிட்டோம். என்ன நடக்கும்? ஒரு காலத்தில் மெட்ரிகுலேஷன் மாணவர்களோடு போட்டி போட்டுக்கொண்டிருந்த அடித்தட்டு கிராமப்புற மக்கள் இனி இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.ஈ மாணவர்களோடு போட்டி போட்டுக்கொண்டிருப்பார்கள்.

நான் இந்தச் சமூகத்தின் எண்ணங்களும் கேள்வி கேட்கும் முறையும் மாற வேண்டும் என்றுதான் பிரயத்தனப்பட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். அறிவைத் திறந்து இதை வாசித்தவர்கள் அதுகாறும் சிந்திப்பார்கள். அவர்களுக்கு மீண்டும் என்னுடைய அன்பும் நன்றிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *