நம் தளத்தில் எல்லா தரப்பு அரசியல்வாதிகள் பற்றியும் விமர்சனங்கள் இருக்கும். ரஜினியைப் பற்றி பெரிய விமர்சனங்கள் ஒன்றும் இருக்கவில்லை. அது குறையாக இருக்கிறது. அதை குறையாகவே வைப்பானேன் என்று இதை எழுதுகிறோம்.
அரிதிலும் அரிதாக நான் ரஜினியை விமர்சித்து எழுதவும் செய்திருக்கிறேன். ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் “with great powers comes great responsibility” ஒருவரிடம் பெரும் ஆற்றல், சக்தி செல்வாக்கு இப்படி ஏதோ ஒன்று இருக்கிறது என்றால் அது ஒரு நன்மைக்கு அவர் மூலம் பயன்பட வேண்டும் என்று இருக்கிறது என்பது தான் அந்த வசனத்தின் பொருள். இந்த நிமிடம் அத்தனை பெரிய செல்வாக்கை ஆற்றலை வைத்துக்கொண்டு ஒருவர் ஒன்றுமே செய்யாமல் இருக்கிறார் என்கிற கோபம் இப்போதும் என்னுள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. மஹாபாரதத்தில் எப்படி நல்லவர்களின் அமைதி குருக்ஷேத்திரப் போருக்கு வழி வகுத்து பெரிய நாசத்தை செய்தது அப்படி தான் தமிழக ரஜினியின் அமைதி இப்போது வரை தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருந்தது. இனி என்ன நடக்கும் என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
கலாநிதி மாறன், இந்தியாவில் மத்திய மாநில அரசியல் தலைவர்கள் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் ரஜினி அழைத்தால் உடனே பேசுவார்கள் என்று சொன்ன பொழுது ஒரு பக்கம் பூரித்துக்கொண்டாலும், இருந்து என்ன செய்ய? ஒன்றுக்கும் ஆகாத அந்த செல்வாக்கை வைத்துக்கொண்டு என்ன செய்ய என்று நானே என் குடும்பத்தினரிடம் நொந்து கொண்டதுண்டு. அவர் வாழ்க்கை அவர் விருப்பம் கையைப் பிடித்து இழுத்து காலில் விழுந்து கெஞ்சியெல்லாம் மாற்றத்தை கொண்டு வர சொல்லி கேட்டிருக்க முடியாது.
இந்த ஒரு விஷயம் தவிர்த்து, வேறு எப்பொழுதெல்லாம் நான் ரஜினியை விமர்சித்திருக்க வேண்டும் சாடியிருக்க வேண்டும் என்று இப்பொழுது நினைக்கையில் பல நிகழ்வுகள் நினைவலையில் அருவியாக கொட்டுகிறது.
90களில் வெளியான தினத்தந்தி, விகடன் போன்ற பத்திரிக்கை நேர்காணலில் எல்லாம், அரசியலுக்கு வரும் விருப்பம் இல்லை ஒரு புரட்சி வந்தால்தான் அரசியல் மாறும் அப்போது வேண்டுமென்றால் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். முதல்வன் திரைப்படத்தின் கதை பிடித்திருந்தும், இதை அரசியலாக்கி நான் முதல்வராக வேண்டும் என்கிற வகையில் கொண்டு போவார்கள் என்றெண்ணி நடிக்க மறுத்தார் என்று சுஜாதா ஓரிடத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 2018க்கு முன் வெற்றிமாறன் சொன்ன ஒரு அரசியல் கதையில் நடிக்க மறுத்ததாக வெற்றிமாறன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். 2018க்கு முன்பு வரை அரசியலுக்கு வரும் விருப்பமில்லை என்பதை பல இடங்களில் சொல்லியும், “ஏன்டா எப்ப பார்த்தாலும் என்னை பார்த்தாலே அந்த கேள்வியை கேட்கறீங்க” என்று ஒருநாளும் இந்த பத்திரிகையாளர்களை கடிந்து கொள்ளாதது குறித்து நான் அவரை விமர்சித்திருக்க வேண்டும்.
முதல்வன் போன்ற படத்தில் நடிக்க மறுத்தது, அவரே தயாரித்த பாபா படத்திலும் கூட தகுதியானவர் தான் முதல்வர் பதவியில் இருக்க வேண்டும் என்று சொன்னது என்று ஆரம்பம் தொட்டே தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை சுட்டிவந்தும், அரசியலுக்கு வரேன் என்று இருபது முப்பது வருடமாக சொல்லி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என்று கேலி பேசிய பொழுது, “2017 டிசம்பருக்கு எப்போது நான் அப்படி சொன்னேன்” என்று கோபமாக ஒரு அறிக்கை விடும் அளவிற்கு கூடவா ஒரு மனிதனுக்கு ரோஷம் இருக்காது என்று நான் விமர்சித்திருக்க வேண்டும்.
பாபா முத்திரையை இல்லுமினாட்டி முத்திரை என்று பேசி ரஜினியை கடுமையாக சாடிய சரத்குமார் அதற்கு பிறகு ரஜினியை வீட்டில் சென்று சந்தித்த பொழுது சரத்துக்குமாரோடு அளவளாவிக்கொண்டிருந்ததை பார்த்து, “உனக்கு வெட்கமே இல்லையா யா?” என்று நான் கேட்டிருக்க வேண்டும்.
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்ததற்கு பின் அதைப்பற்றி டி.ராஜேந்தரிடம் கேட்ட பொழுது மிக காட்டமாக புடலங்காய் என்றெல்லாம் ஏதோ சொல்லிவிட்டு போன டி.ராஜேந்தர் சொல்லுகிறார், மருத்துவமனையில் இருந்த பொழுது அத்தனை முறை அவரை நலம் விசாரித்ததாக, நான் கோபமாக கேட்டிருக்க வேண்டும், “உனக்கெல்லாம் எப்படியா மனசு வருது”
சத்யராஜ் பற்றி சொல்லவே வேண்டாம், ரஜினி மீது அவருக்கு பொறாமையா என்று ஊடகங்கள் சிபிராஜிடம் கேட்கும் அளவிற்கு நடந்துகொண்டிருக்கிறார். கூலி படத்தில் அவர் உங்களுக்கு நண்பராக நடிக்கிறார் என்றதும் எப்படி மறுப்பு சொல்லாமல் ரஜினியால் முகம் காட்டி சத்யராஜோடு நடிக்க முடிந்தது என்று காட்டமாக கேட்டிருக்க வேண்டும்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகன் தவறான பாதையில் இருந்து திருந்துவதாக கதை அடுத்த படத்தில் சிகரெட்டு இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லியும். அவர்கள் கட்சியை வளர்த்தெடுக்க மிக மோசமாக ரஜினியை எதிர்த்த பா.ம.க தலைவரின் இல்லாத திருமண விழாவில் கலந்து கொண்டதைப் பார்த்து “அவர்களும் அழைத்திருந்தாலும் கூட எந்த முகத்தைகொண்டு அந்த திருமணத்தில் கலந்துகொண்டீர்கள்” என்று நான் ரஜினியை விமர்சித்திருக்க வேண்டும்.
சீமான், பெயரின் முதல் எழுத்து அளவிற்கு இறங்கி தன்னுடைய சுயலாபத்திற்காக ரஜினியை விமர்சித்த ஆத்மா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அந்த சீமானை நலம் விசாரிக்கவில்லை என்றால் என்ன கெட்டு விடப்போகிறது என்று அவரை சாடியிருக்க வேண்டும்.
ரஜினியை வைத்தே சம்பாதித்தவர்கள் பாதாளத்தில் இருந்த கட்சியை மூப்பனார் மூலமாக ரஜினியை வைத்து மீட்டெடுத்து புகழ் தேடிக்கொண்டவர்கள்.அப்படி குடும்பத்தில் பிறந்த ராஜா வீட்டு கன்றுக்குட்டி ‘உதை’ பெரியவர்கள் வீட்டில் இருங்கள் என்று வயது வித்தியாசம் பாராமல் மரியாதை இல்லாமல் பேசிய பின்னும் மீண்டும் ஊடகம் வெளிச்சம் வேண்டி அவன் பக்கத்தில் அமரும்படி ஏற்பாடு செய்கிறார்கள். “உதை சிறியவர் வெட்கம் இருக்காது, ரஜினி வயதிற்கு வெட்கம் இருந்திருக்க வேண்டாம்!?” மீண்டும் அதே அந்த சிறிய உதையை தம்பி என்று அழைக்க எப்படி வாய் வருகிறது என்று நான் கேட்டிருக்க வேண்டும்.
இந்த இயக்குனர் சேரன் இருக்கிறாரே, அவரின் பாண்டவர் பூமி, வெளியான சமயத்தில், படத்தை ரஜினி பாராட்டியதை சுட்டி போஸ்ட்டர்கள் ஒட்டி விளம்பரப்படுத்தியிருந்தார்கள். சேரன் அதற்கு பின்னர் ஒரு படம் நடிக்கிறார் ரஜினியை மறைமுகமாக சாடும் வகையில் காட்சிகள் வருகிறது. மீண்டும் சேரன் படம் இயக்குகிறார் மீண்டும் ரஜினி பாராட்டுகிறார். “இந்த மனுஷன் சாப்பாட்டுல உப்பு இருக்கா” என்று நான் கேட்டிருக்க வேண்டும்.
இந்த எஸ்.ஏ. சந்திரசேகர் இருக்கிறாரே நம் முதலமைச்சர் விஜய்யின் அப்பா. அவரும் அவர் மகனும் என்ன செய்வார்கள் என்றால், பட பூஜைக்கு ரஜினியை அழைப்பார்கள் அதை சொல்லி விளம்பரம் செய்வார்கள், ரஜினியின் ஆஸ்தான ரசிகன் போல் தன் மகனை பிரகடனப்படுத்தி கொஞ்ச நாளில் அடுத்த ரஜினி யார் என்று காசு கொடுத்து சர்வே எடுக்க வைத்து. 90களில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்றெல்லாம் பேசி, 2017 2018 சமயத்தில், நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும், வந்து தம்பிக்கு வழி விட வேண்டும் என்றெல்லாம் கேட்டு வைத்தவர். ரஜினி எனக்கு பதவி மீது ஆசை இல்லை நான் சாதாரணமானவர்களை தகுதியானவர்களை தேடி பதவியில் அமர்த்துவேன் என்று சொன்னதும் சந்திரசேகரனார் சிவனை விட பலமாக கோபம் கொண்டு ரஜினியை விமர்சிக்க தொடங்கினார். சரி வயதானால் உணர்ச்சிகள் கொஞ்சம் முன்பின் முரணாக தான் இருக்கும்.
நம்ம விஜய் இருக்கிறாரே, அவரும் அவரின் தேர்தல் ஆலோசனை கருத்து திணிப்பு குழுவும் செய்யாத அரிய வேலைகள் இல்லை.
வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்று பேச விட்டு அதற்கு பின் பேசிய மரியாதைக்கு கூட ஏதும் பேசாமல் விட்டு ரசிகர்களையும் ஆன்லைன் படையும் விட்டு விஷயத்தை ஊதி தன் செல்வாக்கை மேலும் வளர்க்க அஜித் ரசிகர்களை விட்டு தன் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களோடு மோத வேண்டும் என்று செயல்பட்டார். அதற்கேதுவாக பாதியில் எம்.ஜி.ஆர் ரசிகர் ஆனார். கேட்டால் ரஜினிக்கு விஜய் மீது வன்மம் என்று அவர் கூட்டம் பேசியது.
ஆந்திர அரசியலில் ஏப்ரல் 2023இல் ரஜினி சந்திர பாபு நாயுடுவை பற்றி நல்லவிதமாக பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து நடந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் எதிர்மறை விமர்சனங்களை காகம் என்றும் நாம் கழுகு போல உயரப் பறக்க வேண்டும் என்று சொன்னதை. விஜய் தரப்பு தானாக வந்து தலையை கொடுத்து நாங்கள் தான் காகங்கள் ஜெயிலர் திரைப்படத்தை தோல்வி படமாக்குவோம் என்று சூளுரைத்தார்கள். அல்லது அப்படி செய்ய வைக்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து ஜெயிலர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் HD காப்பி லீக் ஆனதும், விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டரில் வேகவேகமாக அதைப் பரப்பினார்கள். அந்த சமயத்தில் விஜய் தன் ரசிகர்களை கண்டிக்கவில்லை. மாறாக காக்கா கழுகு என்று பேசுவதற்காகவே லியோ வெற்றி விழா வைத்து நக்கலாக பேசி சிரித்தார். ரசிகர்கள் விஜய், ரஜினியை நக்கல் பண்ணிக் கலாய்த்ததாக ஆர்ப்பரித்தார்கள். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய அவசியமற்ற முரண்பாட்டை தீர்த்துவைக்க எதுவும் பண்ணாமல் அங்கேயும் வளரவிட்டார் விஜய். என்னவென்று கேட்டால் விஜய்க்கு ரஜினி மீது பொறாமை என்றார்கள்.
இந்த ரஜினி தான் சொரணையற்றவராக ஆகிற்றே “ஏன் டா தம்பி! பொதுவா பேசினதை நீயும் உன் கூட்டமும் உங்களை பேசினதா எடுத்துக்கிட்டதும் இல்லாமல் நக்கல் பண்ணி சிரிக்கிற” என்று கேட்க திராணியில்லாமல், லால் சலாம் ஆடியோ லோஞ்ச்சில் மிகவும் வெளிப்படையாகத் தன்னுடைய காக்கா – கழுகு கதை விஜய் குறித்தது இல்லை என்று குறிப்பிட்டு, விஜய்யின் வளர்ச்சியைப் பாராட்டி, அவரையும் தன்னையும் ஒப்பிடுவது அவருக்கும் மரியாதை இல்லை; தனக்கும் மரியாதை இல்லை என்று மிகக் கண்ணியமாகத் தெளிவுபடுத்தினார் இந்த ரஜினி அதற்கெல்லாம் இந்த மனிதன் கையில் கிடைத்தால் அடிக்கவே செய்திருக்கலாம்.
இத்தனைக்கு பிறகும் விஜய்யின் பின்னிருந்து வேலை செய்து கொண்டிருந்த குழு முன்னிருந்த படையை ரஜினிக்கு எதிராக தூண்டிவிட்டு கொண்டிருந்தது. அப்படியும் கூட விஜய்யின் அரசியல் வரவு குறித்து கேள்வியெழுப்புகிறார்கள், சிரித்துக்கொண்டே, “வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்” என்கிறார். உங்களுக்கெல்லாம் எப்படி சிரிப்பு வருகிறது.
இந்த பக்கம் சர்க்கார் படப் பிரச்சனை ரஜினி குரல் கொடுக்கிறார். பரிகாசத்திற்கு உள்ளான புலி படத்தின் நல்ல விஷயங்களை சுட்டி ரஜினி பாராட்டுகிறார். ஜனநாயகனுக்கு சென்சார் பிரச்சினை வந்தபோது சென்சார் குழுமத்தை எதிர்த்து விஜய்யே வாய் திறக்கவில்லை. ஆனால் ரஜினி கேள்விகேட்டார். ஜனநாயகன் படம் திருட்டுத்தனமாக லீக் ஆனபோது வருத்தம் தெரிவித்ததுமில்லாமல் இதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். ஆதவ் அர்ஜுனா தி.மு.கவிற்கு பயந்து அரசியலை விட்டு விலகினார் ரஜினி என்று பேசிய பொழுது, யாரையும் குற்றம் சொல்லாமல் ஆதரித்து பேசியவர்களுக்கு மட்டும் நன்றி சொல்கிறார்.
இந்த பக்கம் ரஜினி சினிமாவில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்ததை சுட்டி தலைவர்கள் எல்லோரும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அரசியல் தலைவர் ஆனது. ரிமைண்டர் வைத்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்த விஜய் ரஜினிக்கு மட்டும் வாழ்த்து சொல்லவில்லை. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பொழுதும் கூட வாழ்த்து சொல்லவில்லை. சரி! சர்க்கார் படப்பிரச்சனை போன்ற விஷயங்களில் ரஜினி குரல் கொடுத்ததற்கு எங்கேனும் நன்றி சொல்லியிருக்கிறாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை.
கரூர் சம்பவத்திற்கு ஒரு சதவீதம் கூட விஜய் பொறுப்பு இல்லை என்று பேசியவர்கள், யாரையும் குறை சொல்லாமல் ஒரு மனுஷன் வருத்தம் தெரிவித்ததும், இந்த ரஜினியை அந்த கிழி கிழித்தார்கள்.
என்னவென்று விசாரித்தால் ஆன்லைன் மாபியா கும்பல் ஒன்று ரஜினிக்கு விஜய் மீது வன்மம் என்றது.
இத்தனை நடந்த பின் அங்கிருந்து விஜய்யின் தேர்தல் வெற்றியை வாழ்த்த கிளம்பி வாழ்த்தியும் விட்டார் ரஜினி.இவருக்கு சூடு சொரணை வெட்கம் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.சரி தான், விஜய்யை தப்பு சொல்ல முடியாது, விஜய்யின் அறிவாக செயல்படுபவர்களை சொல்ல வேண்டும்.
பின்பு ஏன் இந்த விஜய் ரசிககூட்டம் ரஜினியை ஸ்டாலின் வீட்டு நாய் குட்டி என்று பேசாது. வீட்டில் வேலைக்குச் செல்லாமல் அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருந்த கூட்டம் ரஜினி விஜயை எத்தனை வாழ்த்தினாலும் எத்தனை முறை குரல் கொடுத்தாலும். ‘விஜய் நின்றார் ரஜினி ஒன்றும் பேசவில்லை; விஜய் இரண்டு அவுன்ஸ் சிறுநீர் கழித்தார் ரஜினி ஒன்றும் பாராட்டவில்லை” என்று ரஜினியை இகழத்தானே செய்யும் அது ஒன்றும் பிழையில்லையே
எல்லாவற்றிக்கும் காரணம் ரஜினிக்கு விஜய் மீது ஏதோ ஒரு வன்மம்.
வருடத்தில் 100 பேட்டி கொடுக்கும் அண்ணாமலை கூட சமயங்களில் நிருபர்களிடம் சலித்துகொள்வதை நாம் பார்த்து இருக்கிறோம். மனுஷன் விமானம் நிலையம் பக்கம் வந்தாலே மைக்கை நீட்டும் கூட்டம், இந்த ரஜினியிடம் போய் ஒரு முறைகூட ஊடகங்களை சந்திக்காத விஜய்யை பற்றி கேட்கிறது. சிரித்துக்கொண்டே கும்பிட்டு நகர்கிறார். இவருக்கு ப்ரசாதமா கொடுத்தார்கள். அங்கே விஜய் தரப்பு இன்னமும் ரஜினியின் பெயரை போட்டு கும்மியடித்துக்கொண்டிருக்கிறது, “ஏன் போற இடமெல்லாம் வருகிறீர்கள் விஜய்யிடம் போய் மைக்கை நீட்டுங்கள்” என்று சொல்லுகிற அளவிற்கு கூட இவருக்கு கோபம் வரவில்லை என்றால், இதெல்லாம் என்ன ஜென்மம். சமயங்களில் ஏலியனோ என்று கூட நினைத்து இருக்கிறேன்.
இப்படி பல சந்தர்ப்பங்களில் ரஜினியைத் திட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவரை வசைபாட நாம் நினைத்து, நாம் கேட்கின்ற கேள்விகள் அவரை விட அவரின் எதிர்தரப்புக்கே மிகச் சரியாகப் பொருந்துகிறது. இந்தக் கட்டுரையை மீண்டும் வாசித்துப் பாருங்கள்; உங்களுக்கும் அப்படித் தோன்றலாம்