நான் பைபிள் வாசிக்க தொடங்கிய காலத்தில், அதில் உள்ள பல வசனங்கள் படித்த நொடியிலேயே மனதை தொட்டு ஆழமாகப் பதிந்துவிடும். அப்படி ஒரு வசனம் தான், “கேட்பதற்குக் காது உள்ளவன் கேட்கக்கடவன்”. திருக்குறளை விட சிறிய சீர். கேட்பதற்கு இல்லாமல் சாப்பிடுவதற்காகவா காது பெற்று இருக்கிறோம்? எல்லோருக்கும் காது கேட்பதற்காகத் தானே இருக்கிறது! ஆனால், எல்லோரும் கேட்பதில்லை.நாம் முன்முடிவுகளோடு சில விஷயங்களை நம்பிக்கொண்டிருந்து,சில உண்மைகளை யார் பேச வந்தாலும் தடை வார்த்தைகளை கொட்டி விடுகிறோம்.

கதிர்விஜயம் தொடங்கிய பொழுது, யார் படிப்பார்கள்?! இத்தனை நல்ல விதமாய் எழுதுவதையெல்லாம் பெரிதும் யாரும் வாசிக்க மாட்டார்கள் என்றவர்களிடம் நான் சொன்ன பதில்: ஏசுவையும் நபிகளையும் யாரும் கேட்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை. யாரெல்லாம் கேட்டார்களோ அவர்களிடம் எல்லாம் இயேசு பேசினார். அதே போல், நாம் எழுதுவதையும் சிலர் படிப்பார்கள் அப்படி படிக்கிறவர்கள் சிந்திப்பார்கள் என்றேன். நாம் அதிகம் பார்வையாளர்களை பெற மீம் போன்றவற்றை உருவாக்க வேண்டும் என்றார்கள், சில விஷயங்களை விவரித்து தான் சொல்ல வேண்டும். மீம் பார்க்கிறவர்கள் சிந்திக்கமாட்டார்கள் என்று எழுதுவதில் தீர்மானமாக இருந்தேன். அவ்வப்பொழுது மனதில் படும் எண்ணங்களை மீம்களாக பதிவிடவும் செய்கிறோம். அதையும் கண்ணியத்தோடு செய்கிறோம். நான் எழுதுவதை முதன்மையானதாக கொண்டு இருக்கிறோம். காரணம், வாசிப்பதற்கு பொறுமையற்ற அறிவிற்கு சிந்திப்பதற்கு நேரமிருக்காது. சிந்திப்பதற்கு இடமில்லாத இடங்களில் உங்கள் சிந்தனைகளை கொட்டி என்ன செய்ய?!

நாம் இந்த சமூகத்தில் ஒவ்வொருவராகவேனும் மாற வேண்டும் என்று தான் எழுதிக்கொண்டு வருகிறோம். இப்பொழுது மட்டும் ஏன் ரஜினி பதில் சொல்கிறார் என்கிற பழைய சலசலப்புகள் மீண்டும் ஒலிக்க தொடங்கியதில், ஆசிரியர் குழுவில் இருந்த ஒருவரும் அதே கேள்வியை எழுப்பவும் இந்த கட்டுரையை எழுதலானோம்.

ரஜினிக்கு வக்காலத்து வாங்க நீ வந்துவிட்டாய், அதற்கு உட்கார்ந்து ஒரு கட்டுரையை தூக்கிகொண்டு வருகிறாய் என்று நினைப்பீர்கள். அதில், உங்களுக்கு தேவையான காரணம் இருக்கிறது. குழந்தைகளை கூட்டிக்கொண்டு திருவிழாக்களுக்கு சென்று இருப்பீர்கள். உங்களை சுற்றியும் கூட்டமாக இருக்கும், அந்த கூட்டத்தில் நல்லவர்கள் கொஞ்சம் கெட்டவர்கள் எல்லோரும் இருக்கலாம். அந்த கூட்டத்திற்கு நடுவே கூட்டத்தை விட கொஞ்சம் உயரமான சப்பரத்தில் வைத்தோ தேரில் வைத்தோ சாமியை கொண்டு வருவார்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளை தூக்கி உயரமான இடத்தில் இருக்கின்ற சாமியை காண்பிப்பீர்கள். அந்த சாமிக்கு ஒரு கதை இருக்கும், அந்த கதையோடு அந்த சாமி என்ன நம்மையெல்லாம் செய்தது, நன்மை செய்கிறவர்கள் எப்படி அந்த சாமியோடு இணைந்து அந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் உங்கள் குழந்தைக்கு சொல்வீர்கள். குழந்தைகளுக்கு இப்படியாக தான் நாம் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிப்போம்.

கூட்டத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள், அவர்களை காண்பித்து இவர்களை போன்று நீ நல்லவனாக இரு என்று உங்கள் குழந்தைக்கு சொன்னால், கூட்டத்தில் அந்த நல்லவரை குழந்தை எங்கு தேடும்? அது போன்று தான், சமூகத்தில் உயர்ந்த இடத்தில் அதிகமான நற்குணங்களை கொண்ட ஒருவனின் நன்மையை உயர்த்தி எல்லோர்க்கும் காட்ட வேண்டும். ராமனை ஏன் நம் சமூகம் எல்லோருக்கும் உயர்த்தி காட்டுகிறது? சிந்தையிலும் பிற பெண்களை தொடமாட்டேன் என்று சத்தியம் செய்து வாழ்ந்தவன் என்பதாலும் இளவரசனாக பிறந்து காட்டுக்கு சென்று வாழும் வாழ்க்கையை தந்தை சொல்லுக்கு கீழ்ப்படிந்து ஏற்றுக்கொண்டதாலும் தான்.இந்த நற்குணங்கள் எல்லாம்
உன்னிடம் இருக்கிறதா என்று கேட்காதீர்கள். என்னிடம் இல்லை தான்.

ஆனால், நான் இங்கே ராமர் போன்றவர்களை தாழ்த்துவதில்லை. நாம்  நற்குணங்களையும் நல்லவர்களையும் எப்போதும் உயர்த்திப்பிடித்து காட்ட வேண்டும். நல்லவர்களை தாழ்த்தி கீழே போட்டு மிதித்தால் இந்த சமூக கூட்டத்தில், நல்லதுக்கு எடுத்துக்காட்ட எதுவும் மிஞ்சாது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறவரை தெய்வத்துள் ஒருவராக வைக்க சொல்லியிருக்கிறார் வள்ளுவர். நீங்கள் இந்தியாவில் ஒரு குழந்தை சயின்டிஸ்ட் ஆக வேண்டுமென்றால் யாரை சொல்கிறீர்கள் அப்துல் கலாம் மாதிரி என்கிறீர்கள். ஏன்! இங்கு எத்தனையோ விஞ்ஞானிகள் இருந்தார்கள் தானே!எல்லோருக்கும் தெரிகிற இடத்தில், எல்லோரும் பின்பற்ற வேண்டிய பல நற்குணங்களை கொண்ட ரஜினிகாந்திற்கு நாம் கெட்டவர்களாக இருந்தாலும் வக்காலத்து வாங்க தான் வேண்டும். அப்போது தான் நம் பிள்ளைகளுக்கு எது நல்லது என்று தெரியும்.

ரஜினி என்ன அவ்வளவு நல்லவரா? ரஜினி நல்லவரா கெட்டவரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், இந்தியாவில் நல்ல அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அரசியலில் இல்லாத ரஜினியை தான் சுட்டிக்காட்ட வேண்டியதாக இருக்கிறது.கட்டுரையின் ஓட்டத்தில் அவர் ஏன் நல்ல அரசியல்வாதி என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

ரஜினி பற்றி சிலர் சொன்ன வாக்கியங்கள்:

  • அவரை மாதிரி ஒருத்தர் வரணும் அது தான் அரசியலுக்கு நல்லது.

  • ரஜினி பொய் சொன்னாருன்னு பொய் சொல்றவனால கூட சொல்ல முடியாது.

  • யாரை பற்றியும் புறம் பேசியதில்லை.

இப்படியெல்லாம் இருக்கின்ற ஒருவரைப் பற்றி அவதூறு கிளப்பி தாழ்த்தும் பொழுது பேசாமல் இருக்க முடிவதில்லை. இங்கே விஜய் ரசிகர்கள், பி.ஆர். டீம் எல்லாம் சேர்ந்து கொண்டு, அப்ப பேசலை இப்ப மட்டும் பேசுகிறார் என்று ஏகத்துக்கும் ரஜினியை தாழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள். சினிமா சார்ந்த சண்டைகளின் பொழுதே அவர்கள் ரஜினியை சாடிக்கொண்டு தான் இருந்தார்கள். இதில் விஜய்க்கு தொடர்பு இல்லை என்று முழுமையாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன், அவரே கூட இதை ஊக்குவிக்கலாம் அப்படி இல்லாமலும் இருக்கலாம்.

இவர்களிடம் நாம் கேட்பது, எப்போது ரஜினி பேசவில்லை; இப்போது பேசுகிறார் என்று வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்கள்?

கலைஞர் முதல்வராக இருந்த பொழுது எல்லோரும் அரசியலுக்கு நல்லது செய்யத்தான் வருகிறார்கள். ஆனால், சிஸ்டம் சரியில்லை என்பதை 1998-1999 காலங்களில் கலைஞர் இருந்த விழாவிலேயே குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

கருணாநிதி இருந்த மேடையில் ஜெயலலிதாவை, ஜெயலலிதா இருந்த மேடையில் கருணாநிதியை பாராட்டி பேசிய ஒரே ஒரு ஆள் தமிழகத்தில் அவராக தான் இருக்க முடியும். காரணம், அவர் எங்கும் எப்போதும் மேடைக்காக பொய்யுரைப்பவர் இல்லை. என்னுடைய நினைவு சரியாக இருந்தால் திருவாசகம் சம்பந்தமாக ஏதோ ஒரு புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசியவர், புத்தகத்தை வாசிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டு பேசத்தொடங்குகிறார்.

ரஜினியின் மனவலிமை பற்றி பேசுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க கட்சியினர் இருக்கின்ற கூட்டத்தில் கலைஞர் பற்றி பேசும் பொழுது அவர் நானும் கலைஞரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு என்று சிலாகித்து பேசவில்லை. நான் அ.தி.மு.க.விற்கு ஓட்டு போட்டதை ஊடகங்கள் கேட்கவும் சொல்லிவிட்டேன். கலைஞர் படம் பார்க்க அழைத்தார் சங்கடமாக இருந்ததால் தவிர்க்க பார்த்தேன் என்று பேசுகிறார். தி.மு.க.விற்கு நான் வாக்களிக்கவில்லை என்கிற உண்மையை, ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க கூட்டத்தில் பேசமுடிவதற்கு பேர் மனவலிமை இல்லையா ? அல்லது எந்த கட்சியை ஆதரிக்கிறோம் என்பதை நேரடியாக சொல்லாமல் சைக்கிளில் வந்து வாக்களித்து, தி.மு.கவை எங்கள் தலைவர் ஆதரித்தார் அந்த நன்றி கூட தி.மு.கவிற்கு இல்லை என்று பரிதாபம் தேடுவது மனவலிமை இல்லையா ? விஜய் இருந்த கூட்டத்தில் ஆதவ் பேசியதை தான் நாம் இங்கே குறிப்பிடுகிறோம். ஒன்றும் இட்டு கட்டி எழுதவில்லை.

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே அவர்களுக்கு அவர்களாக நடத்திக்கொள்ளும் சினிமாத்தனமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வரின் நேரத்தை இப்படி வீணடிக்க கூடாது என்று பேசியது; இலவசங்கள் நம்மிடம் இருந்து வேறு வகையில் ஏதோ ஒன்றை பறிக்கும் முயற்சி என்று விமர்சித்தது; மிரட்டி அழைத்து வந்தார்கள் என்று பேசிய அஜித்திற்கு ஒற்றை ஆளாக எழுந்து ஆதரவு தெரிவித்தது; அதன் பின் அஜித்திற்கு தொந்தரவு தர கூடாது என்று கலைஞர் வீட்டிற்கு சென்று பேசிவிட்டு, கலைஞர் வீடு வாசலில் நின்றுகொண்டு “இதெல்லாம் தப்பு அஜித் உண்மையை பேசினார் அதனால் தான் அவரை ஆதரித்தேன் இல்லாட்டி நான் சப்போர்ட் பண்ணமாட்டேன்” என்று பேசியது என்று இதெல்லாம் மனவலிமை இல்லையா?

காவிரி பிரச்சனையில், கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்பட கூடாது என்று கர்நாடகத்திற்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்று கிளம்பிய நெய்வேலி போராட்டத்தை, பேச்சுவார்த்தை கட்டத்தில் இருந்த பொழுதே எதிர்த்து, அதன் பின் தனியாக உண்ணாவிரதம் இருந்தார். அங்க அடிச்சா இங்கே கடிப்பேன் ரக அரசியலை அவர் விரும்பவில்லை. அப்படி அரசியலால் தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கும் மைசூருக்கும் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் சென்று பாதிக்கப்பட்டவர்களில் என்னுடைய மாமா ஒருவர், சித்தப்பா ஒருவர், நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.இப்படி அனைத்து சூழலிலும் அனைத்து தரப்பையும் சிந்திக்கின்ற அரசியல்வாதிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

சீமான் முதலானவர்கள், ரஜினி அரசியலுக்கு வந்தது குறித்து, கலைஞர் இல்லை ஜெயலலிதா இல்லை என்று வருகிறாரா என்று சலசலப்பை உருவாக்கி தமிழகம் முழுவதும் அதுவே தான் பேசுபொருளாய் இருந்தது. ஆமாம்! சரியான தலைவர்கள் இல்லை அதனால தான் வரேன் என்றார்.

எந்த விமர்சனத்திற்கு அவர் பதில் சொல்லவில்லை? இவர் இப்படி பேசுவார் என்று எதிர்பார்காதவர்கள் சுடுகாட்டில் கூட வெற்றிடம் இருக்கிறது என்று பேசினார்கள்.

எம்.ஜி.ஆர். ரஜினியை கட்டி வைத்து அடித்தார் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். நான் மண்டபம் கட்டிய பொழுது உதவியது எம்.ஜி.ஆர் தான் என்று சொல்லி அந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட ஒருவரின் பெயரை சொல்லி அவர் இன்னும் இருக்கிறார் கேட்டு பாருங்கள் என்று பதிலளித்தார். எம்.ஜி.ஆர். தான் தன் திருமணத்திற்கு பெண் வீட்டாரிடம் சிபாரிசு செய்தார் என்றார்.

எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரே மறுத்த விஷயத்தை தான் இவர்கள் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அடி வாங்கியவர்களுக்கு அடியை பற்றிய நினைப்பு மட்டும் தானே இருக்கும்.

விஜய்யின் படம் சென்சார் ஆன பின்பும் வெளியிட பிரச்சனை செய்த பொழுது, விஜய் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார். நீங்களோ சென்சார் செய்யப்படாத படத்திற்கு ஆதரவாக பேசவில்லை என்று வருகிறீர்கள். புலி படத்தை பாராட்டி பேசிய நடிகர் அவராக மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

2017க்கு முன்னர் ஒரு முறை கூட அவர் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லியதில்லை. 1996க்கு பிந்தைய தேர்தலில் கலைஞர் ஆதரவு கேட்டும் கொடுக்கவில்லை விலகிக்கொண்டார்.அவரை தான் நாம் நாம் 80 90 களில் இருந்து அரசியலுக்கு வரேன் பேசினார் என்று பேசுகிறோம். ரஜினி நான் அரசியலுக்கு வருகிறேன் என்று 90களில் பேசிய ஒரு பேட்டியையோ பெட்டி செய்தியையோ கூட ஒருவராலும் காட்ட முடியாது.

அவர் குரல் கொடுத்ததும் பா.ம.க ஜெயித்தது என்று சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அரசியலை விட்டு விலகியிருக்க நினைத்த ரஜினி போன்ற சினிமா நடிகர்களோடு சண்டையிட்டால் தான் நாம் வெளியில் தெரிவோம் என்று தங்கள் இருப்பை உலகுக்கு காட்ட பா.ம.க செய்த பல அராஜகங்களின் பிள்ளையார் சுழி, தண்ணி அடிக்கிறது தப்பு திருந்தி வாழ்வது தான் சரி என்கிற பாபா கதைக்கு எதிராக பொங்கிய பா.ம.க வளர்ந்து பல வருடங்கள் ஆகிறது. சிகரட்டை ஒழித்து விட்டார்களா? அந்த தேர்தலை பொறுத்தவரையில், சாதி சங்கமாக இருந்து கட்டமைப்பை பலப்படுத்தி ஜாதி உணர்வுகளை தூண்டி ஒன்று சேர்த்து வெளிச்சத்திற்காக ரஜினியிடம் அவர்கள் மோதிய பொழுது, அவர் இப்படியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார். ஜாதி உணர்வு கண்ணை மறைத்தது என்றால் யாரும் மறுக்க முடியாது. அதோடு, ரஜினி கட்சி தொடங்கினாலும் நான் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று ரஜினி சொன்னதற்கு பாண்டே சொன்னது போல, ரஜினி கட்சி ஆரம்பித்து இருந்தாலும், ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால் வருகிற ஓட்டு ரஜினி கைகாட்டுகிற வேறு ஒருவருக்கு வந்திருக்காது.

நாம் தமிழர் கட்சியினர் தொடங்கி பலர் குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பான விஷயங்களில் விமர்சித்த பொழுது அந்த பிரச்சனைகள் குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார்.

தனிப்பட்ட தாக்குதல்களை பொறுத்தமட்டில் குறிப்பாக கமல் செய்த விமர்சனம் குறித்து ஒருமுறை  கேட்கப்பட்ட பொழுது, எனக்கு யாரும் எதிரி இல்லை மக்கள் பிரச்சனை தான் என் எதிரி என்று பேசினார். தி.மு.க.வின் வெளிப்படையான பி. டீம்- திராவிட கழகம் அவர் வீட்டு முன்பு போராட்டம் செய்த பொழுது, நான் உண்மையை தான் பேசினேன். சாரி! உண்மையை பேசினத்துக்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என்றார்.

சத்யராஜ், கமல், விஜய் போன்று திரைப்பட வெளியீட்டிற்காக கைகட்டி நின்றுகொண்ந்ததோ மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்ததோ கிடையாது. கர்நாடகாவில் படம் வெளியிடுவது குறித்து அம்மாநில அரசு பார்த்துக்கொள்ளும் மன்னிப்பு கேட்க முடியாது என்றார்.

இன்று அவரை தாழ்த்தி பேசுகிறவர்கள் அவரை மாதிரி நாம் உண்மையாக இருக்க வேண்டும், வெளிப்படையாக நேர்மையாக மனதில் இருப்பதை பேச வேண்டும் என்று நினைக்கிறார்களா? இல்லை. பாலசந்தர் கேட்கிறார், நீ உன் வாழ்க்கை வரலாறு எழுத வேண்டும், எல்லா உண்மைகளை சொல்ல முடிகிற நேரம் வரும் பொழுது செய்கிறேன் என்கிறார் ரஜினி. நம் வாழ்வில் நிறைய உண்மைகளை பல்வேறு காரணங்களால் நாம் பேச முடிவதில்லை என்பதும் உண்மை தானே.உண்மையில் உண்மை பேசுவதில் கருத்தாக இருப்பவரிடம் இருந்து தான் இப்படி பதில் வரும்.

இன்று வரை ஒரேயொரு கட்சி கூட, ரஜினி முன்மொழிந்த, “பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க கூடாது, குடும்பத்தில் ஒருவர் தான் கட்சி பொறுப்பில் இருக்கலாம்” என்பது போன்ற பல நல்ல கட்சி விதிகளை எல்லா காலத்திற்குமான நல்ல வழிமுறைகள் அது, அதை எங்கள் கட்சி இனிமேல் பின்பற்றும் என்று பின்பற்றுகிறார்களா? கிடையாது. சாமானியர்கள் அரசியலில் நிற்க முடியாத சூழல் இருக்கிறது, நான் அவர்களுக்கு பாலமாக இருப்பேன் அவர்களை தேடி தேர்தல் அரசியலுக்குள் கொண்டு வருவேன் என் செல்வாக்கு அப்படியானவர்களுக்கு பயன்படட்டும் என்றார். ஒரே ஒரு கட்சியாவது 100இல் 20 பேரையெனும் அப்படியானவர்களை தேர்தெடுத்து இருக்குமா? கிடையாது.

எல்லா காலங்களிலும்  சரியை சரியென்றும் தவறை தவறென்றும் பேசியிருக்கிறார். எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டு தான் வந்திருக்கிறார். ஆனால், சில விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே பலர் அப்படியான விமர்சனங்களுக்கு தான் ரஜினி பதில் சொல்லவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

சாலையில், வாய் பேச முடிந்த நாய் எல்லாம் ஒரு ஆணைப் பார்த்து நீஆம்பளையா என்று கேட்டால், அவர் எல்லா நாய்களுக்கும்  வேட்டியையும் கோவணத்தையும் திறந்து காட்ட வேண்டும் என்பதில்லை. ரஜினியும் அப்படியான கேள்விகளுக்கு எதையும் திறந்து காட்டவில்லை. பொது மகளிர் கூடத்தில் பிறந்த ஒருவன் உன் தாயும் அப்படித்தானா என்று கேட்டால் நீங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.

தரம் தாழ்ந்த தனிமனித வசைகளுக்கும், கீழ்த்தரமான விமர்சனங்களுக்கும் பதிலளிப்பது என்பது, சேற்றில் இறங்கிச் சண்டையிடுவதற்குச் சமம். ரஜினி அத்தகைய குப்பைகளைத் தவிர்ப்பதைத்தான் இவர்கள் ரஜினி அப்ப மட்டும் பேசினாரா என்று எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

இப்போது ஆதவ் கருத்துக்கு பதில் அளித்திருக்க வேண்டாம் என்று சிலர் பேசுகிறார்கள். பதில் அளிக்காமல் விட்டிருந்தால். தி.மு.க.விற்கு பயந்து தான் விலகியிருக்கிறார் அதனால் தான் ஆதவ் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்று பேசுவார்கள்.

விமர்சனங்களுக்கு அஞ்சாமல், எவன் செத்தா என்ன என்று என்னால் இருக்க முடியாது என்பதை ஒருவர் அரசியலுக்கு வராததற்கான காரணமாக சுட்டி தன்னிலை விளக்கம் அளித்த பின்னரும் கூட அவருக்கு பயம் மனவலிமை இல்லை, ஒரு கட்சி அவரை மிரட்டியது என்று பேசியதற்கு, ஆதவ் பேசியது உண்மைக்கு புறம்பான கருத்து இதில் எனக்காக பேசியவர்களுக்கு நன்றி அறிக்கை விட்டதில் ஒரு பிழையும் இல்லை.அந்த அறிக்கையில் எங்கும் யாரையும் அவர் எந்த குறையும் சொல்லவில்லை.

ஆனாலும், ரஜினியின் விரல் தான் இனிக்கிறது என்கிற ரீதியில், விஜய் பின்னால் இருக்கும் கூட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. விஜய் என்று இல்லை, தேர்தல் நேரத்தில், ரஜினி போன்ற ஒரு ஆளுமைக்கு எதிராக எந்த கட்சியின் வால் ஆடினாலும் அது அந்த கட்சியியின் தலையை தான் பாதிக்கும். அரசியல் தெரிந்த அரசியல் கட்சி அதில் சாதுரியமாக செயல்படும். இப்படி நேரத்தில், விஜய் ரசிகர்கள் நான்கு பேரோடு மாற்று கட்சியினர் இரண்டு பேர் சேர்ந்து கொண்டு விஜய் ரசிகர் என்கிற போர்வையில் ரஜினியை அவதூறு பேச வாய்ப்பு இருக்கிறது. அதை கருத்தில் கொண்டு விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஆந்திர அரசியலில் சந்திரபாபு நாயுடு அழைப்பின் பெயரில் ஒரு விழாவில் கலந்துகொண்டு அவரை ரஜினி பாராட்டி பேசியதற்கு எதிர்வினை ஆற்றிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த நடிகை ரோஜா பேசிய பேச்சிற்கு அங்கே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கெல்லாம் பின்னர் தான் காக்கா கழுகு கதை சொன்னார். அவர் வாழ்க்கையில் இப்படி பல காகங்களை பார்த்து இருக்கிறார். அதை கேட்டு நான் தான் அந்த காக்கா என்று ஆஜர் ஆவது  போல்
மேடையில் ஒரு சுற்று சுற்றிய திடீர் எம்.ஜி.ஆர் ரசிகர் விஜய் இந்த சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால், தேர்தலை கருத்தில் கொண்டேனும் அவர் அதை செய்து தான் ஆக வேண்டும்.

ரஜினியால் யாருக்கும் எந்த கட்சி பொறுப்பும் கிடைக்கப்போவதில்லை; பதவிகிடைக்கப்போவதில்லை, மன்றத்தையும் கலைத்து விட்டார். ஆனாலும், ஊடகங்களில் பாஜக ஆதரவு பாண்டே தொடங்கி தி.மு.க ஆதரவு ஊடகவியாளர்கள் வரை அவருக்கா மனவலிமை இல்லை, என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.அந்த ஒரு ஒரு ஊடகவியலாளர்களையும் லட்சம் பேர் பின்பற்றுவார்கள்.

தமிழகத்தில் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி வரை  எல்லா மாவட்டத்திலும் சொந்த செலவில் போஸ்டர்கள் அடித்து ரஜினிக்கு ஆதரவாக த.வெ.கவிற்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.விஜய் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, ரஜினியை நீங்கள் தாழ்த்த ஒரு அடி முயற்சிக்கும் பொழுது த.வெ.க வை நூறடி பள்ளத்திற்குள் இழுத்து கொண்டிருக்கிறீர்கள் என்பது தான்.என்னுடைய தாத்தா ஒருவர் அவரை யார் என்ன சொன்னாலும் பொறுமையாக இருப்பார். அவரை வசை பாடியவர்களையெல்லாம் காலம் அவர் கண்முன்னே தண்டித்துக்கொண்டிருந்தது.ரஜினியும் அப்படி ஒரு தாத்தா தான், அவரை பொய்யாய் வசை பாடியவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.காலம் இப்படி பதில் சொல்லிக்கொண்டே இருந்தாலும் செவிடர்கள் காதில் விழுவதில்லை.

விஜய்க்கு நாம் சொல்லிக்கொள்வது அரசியல் என்பது நீங்கள் ஆடும் நடனம் போன்றது, நெளிவு சுளிவு அறிந்து தாளத்திற்கு ஏற்ப நளினத்தோடு செய்ய வேண்டிய தியானம் எது பிசகினாலும் பைத்தியக்காரத்தனமாக தெரியும். உங்களை பின்பற்றுகிறவர்கள் பிசகினாலும் அதே தான்.நீங்கள் பைத்தியக்காரரா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *