நம் மண் சார்ந்த எல்லா பண்டிகைகளைச் சுற்றி திராவிட அரசியலும் இடதுசாரி அரசியலும் பல சர்ச்சைகளைக் கிளப்பி வைத்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் கிளப்பியிருக்கும் சர்ச்சைகளில் முதன்மையானதாகத் தீபாவளியைச் சொல்லலாம்.

நரகாசுரன் தமிழன், கிருஷ்ணன் ஆரியன், இதுவும் ஆரியத் திணிப்பு என்றெல்லாம் கூட ஒரு கூட்டம் இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறது. புராணங்களைப் புரட்டிப் பார்த்தால், கிருஷ்ணனும் இராமனும் கருமை நிறத்தவர்கள். பாரத மண்ணின் ஆழமான பிணைப்புகளைப் புரிந்துகொள்ளாமல், நிறத்தை வைத்து இனம் பிரித்த ஐரோப்பிய ஆய்வாளர்களின் கணக்குப்படி பார்த்தாலும் கூட, அது அவர்கள் சொல்லும் “திராவிட” நிறம்தான்.

நரகாசுர வதத்திற்கு முன்னரும், இராமன் அயோத்திக்குத் திரும்பிய நிகழ்விற்கு முன்னரும் கூட இந்த மண்ணில் தீபாவளித் திருநாள் இருந்திருக்கிறது.

வணிகம் செய்ய வந்தும், வாளும் துப்பாக்கியும் ஏந்தி வந்தும் திணிக்கப்பட்ட கலாச்சாரங்கள் மீது இங்கே எந்த வன்மமும் கொட்டப்படுவதில்லை. மண் சார்ந்த பண்டிகைகள் மீதுதான் எல்லா வன்மங்களும் கொட்டப்படுகின்றன. என்ன சர்ச்சைகள் இருந்தாலும், எல்லோரும் இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடத் தவறுவதில்லை.

தீபாவளி வந்தால் விடியும் முன்னரே அப்பா நம்மை எழுப்பி விடுகிறார். எண்ணெய்க் கிண்ணத்தை நீட்டிக் குளிக்கச் சொல்கிறார். முதல் நாளே செய்து வைத்த பலகாரங்களைத் தெய்வங்களுக்குப் படைக்கிறோம்.

நரகாசுரனைக் கண்ணன் வதம் செய்த கதையை எங்கேனும் யாரேனும் ஒருவர் தீபாவளியை ஒட்டி நினைவுகூர்கிறார். ஒரு பக்கம் இது இராமன் மீண்டும் அயோத்தி வந்த நாள் என்று கொண்டாடுகிறார்கள்.

இந்த ஒரு நாள், ஒரு பண்டிகை; இதைச் சுற்றி எத்தனை கதைகள்; எத்தனை சடங்குகள், நடைமுறைகள். சில நடைமுறைகள் முன்னோர் வழிபாட்டை ஒத்திருக்கின்றன.

கதையாகவே இருந்தாலும் இங்கே ஒரு கதைதானே இருக்க வேண்டும். ஒன்று நரகாசுர வதமாக இருக்க வேண்டும் அல்லது இராமன் அயோத்தி திரும்பியதாக இருக்க வேண்டும். தீபங்களின் வரிசை, தீப ஒளித்திருநாள் என்றெல்லாம் சொல்கிறோமே. பின்னர் ஏன் தனியாகக் கார்த்திகை தீபம் கொண்டாடுகிறோம்?

இதையெல்லாம் சிந்தித்து இருக்கிறீர்களா? முன்முடிவுகளின்றி இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் தேடினால், இங்கே ஒரு கலாச்சாரம்தான் சிறு சிறு வேறுபாடுகளோடு பாரதத்தின் எல்லா மூலைகளிலும் இருந்தது என்பது புரியும்.

நம்முடைய முன்னோர்கள், இங்கே நம்முடைய முன்னோர்கள் என்பதில் நம் பாரத தேசத்து முன்னோர்களை மட்டும் என்று குறுக்கிவிட முடியாது. பல்வேறு மதங்கள் மதங்களாக உருவாகி வளர்வதற்கு முன்பு வரை, தற்போது பல இனங்களாக இருக்கும் உலகின் எல்லா இனத்தவரின் முன்னோர்களும், வானத்தைப் பார்த்துக் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் நகர்வுகளை அனுசரித்தே பண்டிகைகளைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். பாரதத்தில் இன்னும் தொடர்கிறது.

ஒவ்வொரு மாதத்தின் அமாவாசையும் பௌர்ணமியும் ஏதேனும் வகையில் சிறப்பு பெறுகிறது. சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், புரட்டாசி மஹாளய பட்சம், ஐப்பசி சதுர்த்தசி, ஐப்பசி அமாவாசை, கார்த்திகை மாதப் பௌர்ணமியில் வரும் கார்த்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், இப்படி நட்சத்திரங்களின் நகர்வுகள், சந்திரனின் சுழற்சி இதை ஒட்டியே மனித குலம் அனுசரித்து வந்த வழக்கங்களும் பண்டிகைகளும் இருந்தன. அதைப் பாரதம் தொடர்ந்து கொண்டு வந்தது. அதில்தான் இல்லாத ஆரியத் திணிப்பு போன்ற கட்டுக்கதைகளைக் கொண்டுவந்து இவர்கள் திணிக்கிறார்கள்.

தீபாவளி என்பது நிச்சயமாக சமஸ்கிருதச் சொல்தான். ஆனால், இந்தப் பண்டிகையின் மூல காரணமும் வழக்கங்களும் எல்லா மொழியினருக்கும் பொதுவானவை. சமஸ்கிருதமும் தமிழும் கூட பாரத சமூகத்தின் பொதுவான மொழிகள்தான் என்பதை நாம் முந்தைய பதிவுகளில் சுட்டியிருக்கிறோம். சரி! எப்படி இது பொதுவான பண்டிகை?

சூரியனைச் சுற்றி வரும் இந்தப் பூமி குளிரையும் நீண்ட இரவுகளையும் எதிர்கொள்ளப் போகும் கால மாற்றத்தின் துவக்கம்தான் இந்தத் தீபாவளிப் பண்டிகை. இங்கே இரண்டு நாட்காட்டிகள் இருந்ததைப் பற்றி நாம் எழுதியிருக்கிறோம்.

யுகாதியை ஒட்டி அனுசரிக்கப்படும் புத்தாண்டு, வசந்த காலத் தொடக்கத்தில் வரும் சந்திரனின் முதல் சுழற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் பிரதமையில் வருகிறது. பூமியை மையமாக எடுத்துக்கொண்டு சூரியன் சுழல்வதாகக் கணக்கிட்டு, சூரியன் மேஷத்தில் நுழையும் நாளை இன்னொரு புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். விஷுவும் பைசாகியும் இதே சூரியக் கணக்கில் வருவன. பருவம் ஒன்றுதான்; கணக்குதான் வேறு. ஒன்று சூரியனின் சுழற்சி (அதாவது பூமியின் சுழற்சி) மற்றும் சந்திரனின் சுழற்சியைக் கணக்கில் கொள்கிறது. மற்றொன்று சூரியனின் சுழற்சியை (பூமியின் சுழற்சியை) மட்டும் கணக்கில் கொள்கிறது.

பாரதத்தில் இதே போன்றதொரு வேறுபாடு தீபாவளிக் கொண்டாட்டத்திலும் இருந்தது; இப்போதும் இருக்கிறது. சிலர் குளிர்காலத் தொடக்கத்தை அமாவாசைக்கு முதலில் இருந்து தொடங்கினார்கள்; சிலர் அமாவாசை முடிந்து பௌர்ணமியில் இருந்து தொடங்கினார்கள். இன்று இரண்டையும் அநேகமான பாரத சமூகம் கொண்டாடுகிறது; ஒன்றைத் தீபாவளி எனவும் மற்றொன்றைக் கார்த்திகை தீபம் எனவும் கொண்டாடுகிறோம்.

யுகாதிக்கும் சித்திரைக்கும் இடையே இருக்கும் அதே போன்ற மாறும் இடைவெளியை நீங்கள் தீபாவளிக்கும் கார்த்திகை தீபத்திற்கும் இடையே பார்க்கலாம்.

கணக்கீடுகள் வேறுதான். ஆனால், இரண்டும் ஒரே சமூகத்தில் இருந்து வந்த கணக்கீடுகள். எல்லாக் காலங்களிலும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களும் கூட ஒரே விஷயங்களை ஒரே மாதிரியாகக் கடைப்பிடிப்பதில்லை. அப்படியாகத்தான் நாட்காட்டியைப் பின்பற்றும் விதத்தில் இந்தச் சமூகம் குழுக்களாகப் பிரிந்திருக்கிறது.

எப்படி முன்னாள் முதல்வர் கலைஞர், நடந்ததா என்பதே கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு 1921 அறிஞர்கள் மாநாட்டை ஆதாரமாகக் காட்டி, தமிழ்ப் புத்தாண்டை அவர் போக்கிற்கு மாற்றியமைத்தாரோ, அப்படி அரசர்கள் மற்றும் சிற்றரசர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளும் விருப்பங்களும் மக்கள் எந்த நாட்காட்டியைப் பின்பற்ற வேண்டும் என்பதிலும், எந்தெந்தப் பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடுவார்கள் என்பதிலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கும். அப்படித்தான் ஒரே கலாச்சாரம் வேறு வேறு கணக்குகளை நிலம் சார்ந்து இங்கே பின்பற்றத் தொடங்கியிருக்கிறது.

எப்படி யுகாதியும் சித்திரையும் ஆண்டுத் தொடக்கத்தைச் சொல்லும் ஒரு சமூகத்தின் வெவ்வேறு கணக்கீடுகளோ, அதே போலவேதான் தீபாவளியும். ஒரு குழுவினர் கார்த்திகை மாதப் பௌர்ணமியை எடுத்துக்கொண்டார்கள், ஒரு குழுவினர் அதற்கு முந்தைய அமாவாசையை எடுத்துக்கொண்டார்கள். நோக்கம் ஒன்றுதான், நீண்ட இரவுகளின் தொடக்கமான குளிர்காலத்தை விளக்கேற்றி ஆரம்பிக்கும் நடைமுறை. வெவ்வேறு கணக்கீடுகளைப் பின்பற்றியதால் நாம் வேறு வேறு இனங்களாகிவிட மாட்டோம். பக்கம், அண்டை என்கிற இரண்டு வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகள்தான்; இரண்டும் தமிழ்தான். இந்த ஒரே தமிழின் வேறு வேறு சொற்களைப் பயன்படுத்தும் சென்னைவாசியும் மதுரைவாசியும் வேறு வேறு ஆட்கள் ஆகிவிடுவார்களா என்ன?

விளக்கேற்றிக் கொண்டாடும் இந்த முறை பற்றி சங்க இலக்கியங்களில் பாடல்கள் எல்லாம் இருக்கின்றன.

“மதி நிறைந்து, அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்” — முழுநிலவு நிறைந்து, அறுமீன் எனும் கார்த்திகை நட்சத்திரம் சேரும் நள்ளிரவில், தெருவெங்கும் விளக்கேற்றி, மாலை தொங்கவிட்டு, ஊரே கூடிக் கொண்டாடிய விழாவை நக்கீரர் அகநானூற்றில் (141) பாடுகிறார். திருஞானசம்பந்தர் மயிலாப்பூர்ப் பூம்பாவைப் பதிகத்தில் (2.47.3) கபாலீச்சரத்தில் நடந்த தொல் கார்த்திகை விளக்கீட்டைக் காணாமல் போவாயோ பூம்பாவாய் என்று கேட்கிறார்.

நீண்ட இரவுகளை விளக்கேற்றி ஆரம்பிக்கும் வழக்கம் இங்கே ஒன்றுதான். உயரமான மலைகளில் விளக்கேற்றுவதும் இங்கே ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் வழக்கம்தான். அதெல்லாம் ஆரியத் திணிப்பு என்று அதற்கு எதிராகக் கொடிபிடித்துக்கொண்டிருக்கிறார்கள் இடதுசாரிகள்.

ஐப்பசி சதுர்த்தசி தொடங்கி (அமாவாசைக்கு முந்தைய நாள்) கார்த்திகை மாதப் பௌர்ணமி வரை விளக்கேற்றும் சடங்கும் வடக்கிலும் இருக்கிறது. அதிலும் கார்த்திகை பௌர்ணமி அன்று காசியின் கங்கைக் கரைப் படித்துறைகள் லட்சக்கணக்கான விளக்குகளால் ஒளிரும் தேவ தீபாவளி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாள் இறைவன் ஈசன் முப்புரம் எரித்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. முப்புரம் எரித்தது என்பது மும்மல காரியங்களை எரித்த செயல் என்கிறார் திருமூலர். யோகத்தில் நிலைபெற்று மும்மலங்களை வென்ற நாளாகவும் கார்த்திகை தீபம் அனுசரிக்கப்படுகிறது.

மழைக்காலம் முடிந்து நீண்ட இரவுகளின் தொடக்கமான குளிர்காலத்தைத் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடும் வழக்கம் பாரதம் தாண்டி தென்கிழக்காசியாவின் பல நாடுகளிலும் இருக்கிறது.

மியான்மரில் தசாங்டைங் — தசாங்மோன் மாத முழுநிலவில், மழைக்காலம் முடியும்போது கொண்டாடப்படும் விளக்கு விழா. அதற்கு ஒரு மாதம் முன் வரும் முழுநிலவில் தடிங்க்யூட் என்ற இன்னொரு விளக்கு விழா. தாய்லாந்தின் லாய் கிராத்தோங்கும் கார்த்திக பௌர்ணமியை ஒட்டியே நீரில் விளக்கு மிதக்கவிடும் விழா; அதன் இன்றைய பெரும் வடிவம் இருபதாம் நூற்றாண்டில்தான் வளர்ந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். இவை இன்று பௌத்த விழாக்கள். நிலங்கள் கடந்து, மதங்கள் கடந்து நின்றாலும் அதே பருவம், அதே முழுநிலவு, அதே விளக்கு என்று காலச் சுழற்சியை ஒட்டி மனித இனம் அனுசரித்த பெருவிழாதான் இந்தத் தீபாவளி. இதைத்தான் ஆரியம், திராவிடம் என்று பிரித்து அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இருள் வரும் காலத்தில் விளக்கேற்றினாலும் அவர்கள் மனம் இருளிலேயேதான் இருக்கிறது.

நட்சத்திரங்களையும் கோள்களையும் அனுசரித்து இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனித இனத்தின் பொதுவான பண்டிகை இது. இஸ்லாமுக்கு முந்தைய அரேபியாவை எடுத்துக்கொண்டால், அங்கும் சிலை வழிபாடு இருந்தது. அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத் போன்ற தெய்வங்களும், குலத்துக்குரிய தெய்வங்களும் இருந்தன — நம் குலதெய்வ மரபுடன் இது ஒத்துப்போகிறது. அவர்கள் நாள்காட்டியும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. அங்கும் இதே போன்ற ஒரு விழா குளிர்காலத் தொடக்கத்தில் இருந்திருக்கலாம் என்பது நம் ஊகம். இதைப் பதில் தேடி அறிந்துகொள்ளப்பட வேண்டிய கேள்வியாக இங்கே விடுகிறேன்.

இங்கே பாரதம் கடைப்பிடித்த, கடைப்பிடிக்கின்ற சடங்குகள், பண்டிகைகள் எல்லாம் ஒரே இனத்தின் ஒரே வழக்கத்தின் வெவ்வேறு வடிவங்கள். ஒரே கடலில் இருந்து வரும் வெவ்வேறு அலைகள் போன்றவை. இது இடையில் அரசர்களுக்கிடையேயான சண்டைகளால் பிரிந்திருந்தது; மீண்டும் அரசர்களின் படையெடுப்புகளாலும், பிரிந்து கிடந்த வழிபாட்டு மரபுகளை ஷண்மதமாக ஒன்றிணைத்த ஆதிசங்கரர் போன்றவர்களாலும் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆக, தீபாவளியும் கார்த்திகை தீபமும் ஒரே கடலின் இரண்டு அலைகள்.

விஜயநகரப் பேரரசின் வருகைக்கு முன்பு வரை, பௌர்ணமிக் கணக்கைப் பின்பற்றிய தென்னக மக்களுக்குக் கார்த்திகை தீபமே தீபாவளியாக இருந்தது. விஜயநகரப் பேரரசின் காலத்தில்தான் சதுர்த்தசித் தீபாவளியும் இங்கே கொண்டாடப்படத் தொடங்கியது என்றே தோன்றுகிறது.

ராமன், கண்ணன் பற்றிய கதைகள் பொய்யா? கால மாற்றத்தின் தொடக்கத்தை அனுசரித்த பண்டிகையை த்தான் மற்ற புராண நிகழ்வுகளோடு சேர்த்துக்கொண்டது இந்தச் சமூகம். அதை வைத்துக்கொண்டுதான் நரகாசுரன் தமிழன் என்றெல்லாம் ஒரு கூட்டம் கதை பேசிக்கொண்டிருக்கிறது.

கதைகளில் நாயகனின் வருகையை அல்லது வெற்றியை ஒரு பண்டிகையோடு இணைத்துச் சொல்வதுதானே சுவாரசியம். புராணங்களை ஒட்டியே புனையப்பட்டிருந்தாலும் கிருஷ்ணரின் வெற்றியும் ராமரின் வருகையும் சதுர்த்தசியில் கொண்டாடப்படும் தீபாவளிக்குத் தனிச்சிறப்பைத் தந்துவிட்டன. நரகாசுர வதம் பாகவதம் (10.59), விஷ்ணு புராணம் (5.29) ஆகியவற்றில் வருகிறது. ஆனால் அது எந்தத் திதியில் நடந்தது என்று அவை சொல்லவில்லை. சதுர்த்தசியுடன் இணைப்பது மரபுவழிக் கதைகளில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம்.

இந்த விளக்கேற்றும் மரபில் மற்றொரு நம்பிக்கையும் இருக்கிறது. மகாளய பட்சத்தில் வந்த முன்னோர் திரும்பிச் செல்ல வழிகாட்ட, இந்த அமாவாசை இரவில் ஒளிப்பந்தம் (உல்கா தானம்) காட்டும் மரபும் உண்டு என்கிறார்கள்.

அதிகாலை எண்ணெய்க் குளியலை எடுத்துக்கொண்டால், தர்ம சிந்து போன்ற நூல்கள், நரக சதுர்த்தசி என்கிற குளிர்காலத் தொடக்கத்தில் நரக பயம் நீங்க இந்த எண்ணெய்க் குளியல், மற்றும் மாலையில் விளக்கேற்றும் சடங்குகள் செய்ய வேண்டியது பற்றிச் சொல்கின்றன. ஒரு பக்கம் சிவன் முப்புரம் என்கிற மும்மல காரியங்களை எரித்ததாகச் சுட்டிக் கொண்டாடுகிறோம். மறுபுறம் நரக பயம் நீங்கச் சடங்குகள்; அதுவே கூட நரகாசுர வதமாக அறியப்படுகிறதோ என்னவோ? இயற்கை நம்மை வெப்ப காலத்தில் இருந்து குளிர்காலத்திற்குக் கொண்டு செல்லுகிற பொழுது உடலை நாம் தயார் செய்து கொள்வதற்காக இந்த அதிகாலைக் குளியல் சடங்குகளாக ஆக்கப்பட்டிருக்கலாம். இந்த அதிகாலைக் குளியல் இந்தக் குளிர்கால மாதங்களை ஒட்டியேதான் ஒரு சடங்காகவே பின்பற்றப்பட்டிருக்கிறது.

இந்த எண்ணெய்க் குளியல் ஒரு நாளோடு முடிவதில்லை. ஐப்பசியில் துலா ஸ்நானம்; கார்த்திகையில் வடக்கே கார்த்திக ஸ்நானம். மார்கழியில் “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்” என்று ஆண்டாள் அழைப்பு; சங்க இலக்கியத்தில் தை நீராடலைப் பற்றிக் குறிப்பு இருப்பது என்று, இருண்ட, குளிர்ந்த காலம் முழுவதும் விடியலில் எழுந்து நீராடும் வாழ்வியலோடு இயைந்த சடங்கு இருந்தது தெரிகிறது.

இந்தத் தீபாவளியைச் சிலர் காளியின் வழிபாடாகப் பார்க்கிறார்கள். ஒரு வகையில், முன்னோர்களை விளக்கேற்றி வழியனுப்பும் நம்பிக்கையும், நாம் பலகாரங்கள் செய்து தெய்வங்களுக்குப் படைப்பதும் முன்னோர் வழிபாட்டிற்கும் தீபாவளிக்குமான தொடர்பைக் காட்டுகின்றன. நாம் வணங்கும் தெய்வங்களில் பாதிக்கும் மேல் நம்முடைய முன்னோர்கள்தான். அதிலும் துர்க்கை போன்ற அம்மன் வடிவங்கள் எல்லாம் வடக்கே பார்த்து இருக்கின்றன. அந்த அம்மனை நாம் தெற்கு பார்த்துதான் வணங்குகிறோம். அதுதான் முன்னோர்களை நோக்கி நாம் வழிபடும் திசையாக இருக்கிறது.

தீபாவளி பல விஷயங்களை அனுசரிக்கும் இயற்கையோடு ஒன்றிய பண்டிகை; இது யாருடைய திணிப்பும் இல்லை. இந்தப் பண்டிகை தெற்காசியா, தென்கிழக்காசியாவின் பல பகுதிகளில் வெவ்வேறு விதமாக அனுசரிக்கப்படுகிறது.

இப்படி இயற்கை சார்ந்தேதான் நம் வாழ்வியலும் பண்டிகையும் இருந்திருக்கிறது. ஆனால், இன்றோ பட்டாசு வெடித்துதான் என் மதத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றுவேன் என்று கொடி பிடிக்கும் நிலையில் இருக்கிறோம். இருள் காலத்தில் மேற்கொண்டு புகையைக் கிளப்பி என்ன செய்யப்போகிறோம்?

இதுவும் கூட நம் வழக்கங்களின் பரிணாம வளர்ச்சியாக இருக்கலாம். ஆனால், நம்முடைய கலாச்சாரத்தின் எந்தவொரு அனுசரிப்புகளும் இயற்கைக்கு எதிராக இருந்ததில்லை என்று நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கிறிஸ்து பிறந்து, கிறிஸ்துவம் உருவாகி, அது பரவி வெகு காலத்திற்குப் பின்னர்தான் சாண்டா கிளாஸ் கதைகள் உருவாயின. அப்படித்தான் தீபாவளியும் பட்டாசும். என்னைக் கேட்டால் பட்டாசு முக்கியமில்லை, வாழ்வியல் முக்கியம். இதெல்லாம் என்னவென்றே தெரியாமல் மூடநம்பிக்கை, ஆரியத் திணிப்பு என்று பேசுகின்ற கூட்டங்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்வது முக்கியம்.

தமிழர்கள், திராவிடர்கள், ஆரியர்கள் என்றெல்லாம் இல்லை. மனித குலம் முழுமைக்கும் நம்முடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நாம் சொன்னது போல், மதங்கள் மதங்களாகித் தலையெடுப்பதற்கு முன் நிச்சயம் மனித சமூகம் மொத்தமும், குளிர்காலத் தொடக்கத்தில் விளக்கேற்றும் ஒரு சடங்கை நிச்சயம் கொண்டிருந்திருக்கும்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *