ஒருநாள் ஜோதிடம் சார்ந்த புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டிருந்த பொழுது, குறிப்பிட்ட கிரக அமைப்பு ஒருவர் ஜாதகத்தில் இருந்தால் அவர் முனி வாழும் காலம் வரை வாழ்வார் என்று இருந்தது. இந்த முனி வாழும் காலம் என்பது மனிதனின் சராசரி வயது என்று இப்போது இருக்கும் சராசரியை விட மிக அதிகமாக நம்ப முடியாததாக இருந்தது. ஆயிரக்கணக்கில் எழுதி வைத்து இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்?

இதை படிக்கும் பொழுது நமக்கு என்ன தோன்றும்? பொய் புரட்டுகளை எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தோன்றும். இதற்கு மேல் நாம் கேள்வி எழுப்பாமல் சிந்திக்காமல் இது பொய் என்று நின்றுவிட்டால் நாம் பெரியாரியவாதி.

ஆனால், இதற்கு மேல் சிந்தித்து விடை தேடுகிறவர்கள் ஆன்மீகவாதி.

கதிர்விஜயம் தளத்தை பெரியாரியவாதிகள் படிப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் எங்கேனும் யாராவது சொல்லியதில் பெரியார் படம் போட்டு பத்து ரூபாய்க்கு விற்கும் புத்தகத்தை சிலிர்த்து படித்துக்கொண்டிருப்பார்கள்.

சிந்தித்து பாருங்கள்! ஆட்சியை பிடிக்க வேண்டும்; தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் இல்லாத காலகட்டத்தில், சுய தம்பட்டம் சார்ந்த பொய்களாக அல்லாமல், மனித வாழ்க்கையை பிரித்து மேய்ந்து, எது எப்பொழுது எப்படி நடக்கும் என்று எழுதி வைத்திருப்பது எப்படி பொய்யாக இருக்க முடியும்? அதையும் தான்தோன்றித்தனமாக எழுதாமல் நட்சத்திர மண்டலங்கள் குறித்து ஆய்ந்தறிந்து கிரகங்களின் சுழற்சியை கணக்கில் கொண்டு எழுதியிருக்கிறார்கள். பொய்யாய் ஒன்றை எழுதுகிறவன் ஏன் கணக்கு பாடத்திற்குள் எல்லாம் செல்ல வேண்டும் என்று சிந்திக்கிறவன் அறிவாளி, அப்படி சிந்திக்காதவன் அறிவாலய வியாதி.

சரி! ஆயிரம் வருடம் ஒருவர் எப்படி வாழ முடியும்? முடியும் என்கிறார் திருமூலர். எப்படி? மூச்சை கட்டுப்படுத்தி யோகத்தில் நிலை நின்றால் முடி கூட நரைக்காமல் உடலில் உயிர் நாம் சொல்லும் வரை இருக்கும் என்று சொல்கிறார்.

திருமூலரும் பொய் சொல்லிருக்கலாம் இல்லையா? என்று அறிவாலய வியாதி நம்முள் சந்தேகத்தை எழுப்பும். இதற்கு சாட்சியங்கள் இருக்கிறதா? இருக்கிறது. திருமூலர் அவரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் உடலில் இருக்க விருப்பமில்லாமல் இறைவன் பற்றி உலகிற்கு சொல்ல இருந்தேன் என்று சொல்லி, யோகக்கலையை பற்றி தமிழில் எழுதி வைத்து இருக்கிறார். சமஸ்கிருதத்தில் இன்னும் சில நூல்கள் இருக்கிறது. அவரே மூச்சை கட்டுப்படுத்தினால் அதிக காலம் வாழலாம் என்று சொல்லி அவரே நான் இத்தனை காலம் வாழ்ந்தேன் என்று சொல்வதை எப்படி நம்புவது?

நம்ப வேண்டாம். மதுரை கிளம்புங்கள், பேருந்து நிலையத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் பாண்டி முனீஸ்வரர் கோவில் என்று ஒன்று இருக்கும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் சிலையை கவனித்தீர்கள் என்றால், அவர் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.

அவரைப்போன்று யோகத்தில் நிலைபெற்று நீண்ட காலம் வாழ்ந்து இன்னும் அருவ நிலையில் நம்மோடு இருக்கின்றவர்களை தான் முனிகள் என்று நாம் சுட்டியிருக்கிறோம். இன்றைக்கு மூச்சு பயிற்சிக்கும் மெட்டபாலிசத்திற்கும் (metabolism) உள்ள தொடர்புகளைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மவர்கள் எழுதி வைத்து வாழ்ந்து காட்டி சென்றதோடு அல்லாமல், அப்படி வாழ்ந்தவர்களை தெய்வமாக வணங்கச் செய்திருக்கிறார்கள்.

பல இடங்களில், பல்வேறு பெயர்களில் யோக முனீஸ்வரர், பாண்டி முனீஸ்வரர் என்று முனீஸ்வரர்கள் யோக நிலையில் தான் இருக்கிறார்கள். முனீஸ்வரர்கள் மட்டும் இல்லை, ஐய்யனார்களும் யோக நிலையில் தான் இருக்கிறார்கள். ஊரை விட்டு ஒதுங்கி காட்டுக்குள் யோகம் பயின்றவர்களை எல்லாம் காவல் தெய்வம் ஆக்கி வைத்திருக்கிறோம். அதில் ஒன்றும் பிழையில்லை, இப்படியானவர்கள் ஊரை காக்கும் போதிதர்மர்களாக தான் இருந்திருக்கிறார்கள்.

பயனில்லாமல் பகவானுக்கு கூட பத்து ரூபாய் போடத் தயங்கும் மனித மனம் சும்மா ஒன்றும் இவர்களுக்கு கோவில் எழுப்பி வைக்கவில்லை.

இப்படி யோகம் பயின்று அதில் உன்னத நிலை எட்டி சக்தி நிலையில் நிலைபெற்று அந்த சக்தியை மற்றவர்கள் நலனுக்கும் பயன்படுத்தியவர்களை தான் நாம் தெய்வங்களாக வழிபட்டு கொண்டிருக்கிறோம்.ஒரு தலைப்பட்சமாக மதசார்பின்மை பேசுகிறவர்களுக்கு புரிகிற படி சொல்ல வேண்டுமென்றால், இயேசுநாதர் சொஸ்தமாக்கியது போல இவர்களும் மக்களுக்கு ஆன்மிக மூலம் கிடைக்கப்பெற்ற பலன்கள் மூலம் உதவியிருக்கிறார்கள்.

கருப்பசாமி, மதுரை வீரன் போன்றவர்கள் எல்லாம் நடுகல் வழிபாட்டு முறை வகையறாக்கள்.இவர்கள் இந்த யோகம் சார்ந்த சட்டகத்தில் வரமாட்டார்கள்.

இங்கே முரண் என்னவென்றால், சைவ வகையறாவில் வரும் முனீஸ்வரர்கள், ஐய்யனார்களுக்கெல்லாம் கிடா வெட்டுவதும் சேவலை பலி கொடுப்பதும் தான். இது ஏன் இப்படி?

கண்ணப்பர் சிவனை வணங்கியது போலத் தான். இவர்களை யாரெல்லாம் வணங்க ஆரம்பித்தார்களோ அவர்கள் எப்படி வணங்குவது என்று தெரியாமல் இப்படியெல்லாம் பலி கொடுக்க ஆரம்பித்து அது வேண்டுதல் சடங்கு கணக்கில் சேர்ந்து கொண்டது.ஒரே கருப்புசாமிக்கு ஒரு ஊரில் சக்கரை பொங்கலும் ஒரு ஊரில் சேவல் ஆடு பலியும் கொடுப்பதை பார்த்து இருக்கிறேன்.

அப்படியென்றால் முனீஸ்வரர்களுக்கு இது போன்று பலி கொடுப்பது தவறா?

நிச்சயமாக இல்லை. வேதங்களை தொகுத்தளித்தவர்களில் ஒருவராக அறியப்படும் வேதவியாசர் எழுதிய மகாபாரதத்திற்குள் அவர் பகவத் கீதை என்று ஒன்றை எழுதுகிறார். கண்ணதாசன் எப்படி திருக்குறள் திருமந்திரத்தையெல்லாம் கொண்டு வந்து சினிமா பாடல்களுக்குள் திணித்தாரோ அப்படி வேத சாரங்கள் திணிக்கப்பட்ட பகவத் கீதை என்ன சொல்கிறது? ஒருவர் தனக்கு முனீஸ்வரர் தான் பிடித்தமான தெய்வம் என்று நினைத்து மிகுந்த நம்பிக்கையோடு அவரை வணங்குகிறார் என்றால் அந்த நம்பிக்கையும் கூட இறைவனாலேயே தான் நமக்குள் உருவாகிறது என்கிறது.

ஒருவர் வளரும் சூழலுக்கு ஏற்ப இப்படியான நம்பிக்கைகள் உருவாகிறது. ஒரு தெய்வத்தையோ அல்லது தேவதையோ நாம் நம்பி ஒன்றை கேட்கிறோம் என்றால் அதை அந்த தெய்வத்தின் அருளால் நமக்கு கிடைக்கச் செய்வது போல், அதை நமக்கு தருவது உருவமற்ற ஒரே ஏக இறைவன் தான் என்கிறது. கடவுளே இல்லை என்று நம்புகிறான் என்றால் அதுவும் கடவுளால் தான் என்கிறது கீதை.

மாணிக்கவாசகரும் இதை சொல்கிறார். “வேண்டத்தக்கது அறிவோய் நீ” என்கிற திருவாசக பாடலில் நாம் என்ன கேட்க வேண்டும் என்பதையும் இறைவனே தான் தீர்மானிக்கிறார் என்று. கம்பரின் கடவுள் வாழ்த்து பாடலில் உள்ளது தான் கீதையிலும் இருக்கிறது.இறைவன் இருப்பதாக நம்புகிறவருக்கு இருக்கிறான். இல்லை என்று நம்பினால் இல்லை. ஆனால், இரண்டும் இறைவனாலேயே தான் நிகழ்கிறது.

எத்தனை ஆழமான விஷயங்களை சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் கலாச்சாரத்தில். நாம் எத்தனை ஆழமான தீர்க்கமான முறைமைகளை ஒழுக்கமாக பின்பற்றி வந்திருக்கிறோம்?

மேலே சொன்ன எல்லா விஷயங்களை உள்ளடக்கியது தான் சனாதன தர்மம்.

இப்படித் தான் கடவுளை வணங்க வேண்டும் என்பதில்லை எப்படியும் வணங்கலாம் எந்த தெய்வத்தையும் வணங்கலாம். யோகப் பயிற்சியில் மேம்பட்டால் உயர் சக்தி நிலையை அடையலாம் என்றெல்லாம் எடுத்துச்சொல்கிற சுதந்திரமான கலாச்சாரம் தான் சனாதன தர்மம்.

இங்கே ஒரு கூட்டம் தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை என்று பிதற்றும். சனாதன தர்மத்தை தான் அழிக்க வேண்டும் என்று பேசினோம், ஹிந்து மதத்தை அல்ல என்று சப்பைக்கட்டு கட்டும்.

தமிழர்களின் நடுகல் வழிபாட்டு முறையான கருப்பசாமி, சீலைக்காரி, மதுரை வீரன் வழிபாடெல்லாம் எதில் இருக்கிறது? இன்று ஹிந்து மதமாக அறியப்படுகிற சனாதன தர்மம் என்கிற பாரத கலாச்சாரத்தில்.

அண்ணா அரசியலுக்குள் வரும் பொழுது எடுத்துச் சொன்ன, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதை அண்ணா எங்கே இருந்து எடுத்தார்? திருமந்திரத்தில் இருந்து. இந்த திருமந்திரம் சைவத்தில் இருக்கிறது.சைவம் எதற்குள் இருக்கிறது? ஹிந்து மதமாக அறியப்படுகிற சனாதன தர்மம் என்கிற பாரத கலாச்சாரத்தில்.

யோகம் பயின்று தியானத்தில் நிலைபெறுகிறவர் சிவனாகவே ஆகலாம் என்றும் அப்படி இருந்தவர்களை சிவனாகவும் முனீஸ்வரர்களாகவும் வழிபடும் முறை எதில் இருக்கிறது? ஹிந்து மதமாக அறியப்படுகிற சனாதன தர்மம் என்கிற பாரத கலாச்சாரத்தில்.

இதைப் பற்றியெல்லாம் உளுந்து அளவும் அறிவில்லாதவர்கள் மற்றவர்களை மூடர்கள் என்பது தான் அபத்தம்.

பலமுறை நாம் எழுதியிருக்கிறோம் வேதமும் கீதையும் திருமந்திரமும் எந்த வேற்றுமையை கற்பிக்கவில்லை. கீதை எல்லோரையும் சமமாக கருதுகிறவனை தான் இறைவனுக்கு விருப்பமானவன் என்கிறது.

அதே வேளையில் உலக இயல்பை பேசுகிற பொழுது செயல்கள் மற்றும் குணங்களை பொறுத்து சிறப்புகள் வேறுபடுவதை பற்றி சொல்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஆனால் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். செய்தொழில் என்பது நம் தொழில் மட்டும் இல்லை. நம் செயல்கள். நம் செயல்கள் என்பது குணங்களின் வெளிப்பாடு. கீதை பேசுவது வள்ளுவரும் எடுத்துச் சொன்ன உலக இயல்பின்படியான வகைப்படுத்தல் தானே தவிர வேற்றுமை புகத்தல் இல்லை.

இங்கே ஜோதிடம் போன்ற அறிய நூல்களில் அரிச்சுவடி கூட படிக்காத வன்னியரசு போன்றவர்கள் முதல்வர் விஜய் யாரோ ஜோதிடரை நியமித்தது குறித்து விமர்சிக்கும் பொழுது ஜோதிடத்தை விமர்சிக்கிறார். அரசியல்வாதிகள் குதிரை பேரம் நடத்துகிறார்கள் என்பதற்காக அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பை நாம் மூட நம்பிக்கை என்று விடலாமா? யாரோ மரத்தடியில் அரைகுறையாக எதையோ பிழைப்பிற்காக தெரிந்துகொண்டு பேசுவதை வைத்துக்கொண்டு ஜோதிடம் போன்ற கலாச்சார பொக்கிஷங்களை எல்லோருக்குமான அவையில் பழித்து பேசுவது எப்படி மாண்பாகும்? இவர்களையெல்லாம் மாண்புமிகு உறுப்பினர் என்று வேறு அழைக்கிறார்கள் கேட்டால் சபை மரபாம்.

மத வெறுப்புகள் குறித்து பேசுவதை சட்டம் அனுமதிக்கவில்லை. அரசியலமைப்பின் படி நடக்கும் சட்டமன்றத்திற்குள் உதயநிதி சட்டத்திற்கு புறம்பாக குறிப்பிட்ட நம்பிக்கையை பழித்து அதை அழிக்க வேண்டும் என்று பேசுகிறார். சபா நாயகரோ முதல்வரோ அதை கண்டிக்கவில்லை.இவற்கெல்லாம் சமூகநீதி காவலர்கள்

சமத்துவம் சமூக நீதி என்றால் என்ன? இருக்கின்ற எல்லோரும் இஸ்லாமியர்களாகவும் கிறிஸ்துவர்களாகவும் இருந்து ஒரே ஒருவன் மட்டும் ஹிந்துவாக சனாதன தர்மத்தை பின்பற்றுகிறவனாக இருந்தாலும் அவனுடைய நம்பிக்கையையும் மதிப்பதற்கு பெயர் தானே சமத்துவம் சமூக நீதி. இந்தியாவில் அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த அரசியலமைப்பின் படி தானே அரசு நடந்துகொண்டிருக்கிறது. ரிக் வேதத்தின் படியோ கீதையின் படியோ நடக்கிறதா? அவைக்கு சம்மந்தம் இல்லாத வார்த்தைகளைத் தான் உதயநிதியும் வன்னியரசு பேசியிருந்தார்கள்.

இந்த விஷயத்தில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், முதல்வர் வேண்டுமென்றால் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ளட்டும் அரசு பதவி வேண்டாம் என்பதோடு நிறுத்திக்கொண்டார், அவருக்கு தெரியாத ஜோதிடம் பற்றி பிழை சொல்லவில்லை சனாதனத்தை இழுக்கவும் இல்லை.

எல்லோருடைய உணர்வுகளையும் மதித்து கவனமாக பேச வேண்டிய உறுப்பினர்கள் அனாவசியமாக குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கில் பேசுவது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. ஜாதியை ஒழிப்போம் என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஹிந்து மதம் தான் சாதிய பாகுபாடிற்கு காரணம் என்கிறார்கள். மற்ற மதங்களில் இருக்கும் சாதிய பாகுபாடுகளை ஊக்குவிக்கிறார்கள். மதம் மாறினாலும் சாதிய சலுகை வேண்டும் என்று தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியது, அதையே விஜய் வாக்குறுதியாக கொடுத்து இருக்கிறார். இது தான் இவர்கள் சாதி ஒழிக்கும் முறை.

அவைக்கு சம்மந்தம் இல்லாமல் குறிப்பிட்ட நம்பிக்கைகளைப் பற்றி வெறுப்புரைகளை எடுத்து வைக்கும் பொழுது தான் மற்ற நம்பிக்கைகள் ஒழுங்கா அதைப்பற்றி உதயநிதி பேசுவாரா என்கிற சத்தம் எழும். அப்படி வெறுப்புக்கள் பரவ வேண்டும் என்றே தான் அவர் மீண்டும் மீண்டும் அதை பேசுகிறார்.

யார் என்ன பேசினால் என்ன? திருமந்திரம், பகவத் கீதை, முனீஸ்வரர், ஐயனார் எல்லாம் இந்த மண்ணின் கலாச்சாரம் என்னும் ஆலமரத்தின் விழுதுகள். மரம் கொத்தி பறவைகள் கொத்தி ஆலமரம் வீழாது. ஒரு மரம் கொத்தி பறவை 12 ஆண்டுகள் தான் வாழுமாம். நம்முடைய கலாச்சாரமான இந்த சனாதன தர்மம் என்கிற ஆலமரம் கோடான கோடி காலம் இருந்துகொண்டே தான் இருக்கும். படையெடுப்புகளையும் பெரியாரியவியாதிகளையும் கடந்து முனீஸ்வரர்கள் யோகத்தில் ஆழ்ந்து இருக்கும் வரை இவர்களால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *