நடிகர் விஜய் முதலமைச்சர் விஜய் ஆனதில் இருந்து சட்டமன்ற நிகழ்வுகளை அதிகம் பேர் கவனிக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. ஆனால், கவனிக்கிறவர்கள் விஜய் என்ன வசனம் பேசினார், எப்படி சிரித்தார் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதை மட்டும் கவனிப்பது தான் மாறவேண்டும். விமர்சிக்கிறவர்களும் கூட விஜய் தேமேன்னு உட்கார்ந்திருக்கிறார் என்கிற விமர்சனங்களை வைக்கிறார்கள்; அது தேவையற்றது. மற்ற உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தலையாட்டிக்கொண்டே இருக்க முடியாது.
எனக்குத் தெரிந்த வரையில் சபையின் அநேகமான நிகழ்வுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக தான் இருக்கும். பிரதான கேள்விகளும் கூட முன்னமே தெரிவிக்கப்பட்டுவிடும்.
இதில் ஒரு பக்கம் விஜய்க்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களையும் கேள்விகளையும் மட்டும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். மறுபக்கம் விஜய்யை மட்டும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்களாகிய நாம் இப்படி இருந்தால் சட்டமன்றங்களில் நடக்கும் விவாதங்கள் காலத்திற்கும் இப்படியே தான் இருக்கும்.
திராவிடக் கட்சிகள் காலத்தில் நடந்தேறிய அதே துதி பாடல்கள் இப்பொழுதும் நடக்கிறது. பிரச்சனை சார்ந்த விவாதங்களிலும் கூட நான் உன்னை எப்படி ஏளனம் செய்தேன் பார், எனக்கு ஒரு புள்ளி; பதிலுக்கு நீயும் ஒரு முறை ஏளனமாகப் பேசிவிட்டாய் எனக்கு ஒரு புள்ளி என்கிற ரீதியில் சட்டமன்ற இருப்பது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. இதேதானே முன்பும் நடந்தது. இது எப்படி மாற்றமாகும் என்கிற கேள்வியே தான் இங்கே எழுகிறது.
நேற்று நம் சகோதரர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அரசியல் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நீ என்ன’ப்பா விஜய்யை நம்புகிறாயா என்று கேட்டார்?
என்னுடைய பார்வையை முழுமையாக விளக்குவதற்குள் எங்கள் பேச்சு மடைமாறி விட்டது.
என்னுடைய பார்வையில் விஜய் பிரச்சனைகளின் ஆழங்களை புரிந்துகொண்டு, ஒரு பிரச்சனையை எல்லாக் கோணங்களில் இருந்தும் அணுகி புரிந்து கொள்ள முற்படுகிறவராக தெரியவில்லை.அவர் அப்படி ஒருவராக தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
காவேரி விவகாரம் சம்பந்தமான விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது. சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் குறித்து பேசினார்கள். கர்நாடகம் செல்வது அவமானத்தை தரலாம் என்கிறார் ஒருவர். முதல்வரோ தமிழக மக்களுக்காக அவமானப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என்கிறார். பா.ம.க உறுப்பினர் இரண்டு வழிகள் தான் அவர்களுக்கு அணை வேண்டும் நமக்கு வேண்டாம் என்று பேசுகிறார் அந்த பேச்சு ஏதோ விஜய்யை மடக்கிவிட்ட பேச்சு போல் ஒரு கூட்டம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
இரு மாநில முதல்வர்கள் ஒரு பிரச்சனை சம்பந்தமாக நேரில் பேசுவதை இவர்கள் பங்காளிகள் சந்திப்பை போலவும் மாமன் மச்சான் சந்திப்பை போலவும் எடுத்துக்கொள்கிறார்கள் போல.
கர்நாடகம் சென்றால் நமக்கு அவமானம் நேரலாம் என்கிறார் ஒருவர். இருந்தாலும் பரவாயில்லை என்கிறார் முதல்வர். (நாடகமாடா நடத்துறீங்க!) ஏழு மணி நாடகத் தொடர் போன்ற விவாதமாக தான் நான் இதைப் பார்க்கிறேன்.
நிர்வாகத்தை நிர்வாகக் கண்ணோட்டத்தில் அணுகுகிறவர்கள் இருக்கின்ற சபையில் நீண்ட காலமாக தொடரும் ஒரு பிரச்சனை குறித்த விவாதம் இப்படியாக இருக்காது. இப்படி இருக்கவும் கூடாது.
தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்றோம். அமைத்தாகி விட்டது. இருந்தபோதிலும் தீர்வு கிடைத்த பாடில்லாமல் தானே இன்னும் இதைப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
நீதிமன்றம் செல்ல வேண்டும் என்கிறார்கள் சில கட்சியினர். நீதிமன்றம் சென்றாலும் கூட எப்படி தீர்வு கிடைக்கும். நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற திட்ட வரைபடத்தை தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து முந்தைய திமுக அரசு போட்டு இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறதே. நான்கு பேரை அனுப்பி கலவரம் நடக்க வாய்ப்பிருப்பதால் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது தானே!
இந்தப் பிரச்சனை குறித்து நாம் என்னவெல்லாம் பேசியிருக்க வேண்டும்? என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும்?
முதலில் நாம் இந்தியர்கள் ஒரு தேசத்தில் வாழ்கின்ற ஒரு தாய் மக்கள் என்கிற உணர்வை மீட்டெடுக்க வேண்டும்.
அலுவலக நண்பர் ஒருவர், காவேரி விவகாரம் குறித்த பேச்சை நம்மிடம் எடுத்தார். அவர் நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றார். தேசியமயம் ஆனாலும் அப்பொழுதும் கூட இங்கே அதை வைத்து அரசியல் செய்துகொண்டு தான் இருப்பார்கள்.
நதிகள் தேசியமயம் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். ஒரு பக்கம் ஒரு 300 பேருக்கு தண்ணீர் வேண்டும் மறுபக்கம் 300 பேருக்கு தண்ணீர் வேண்டும். 150 பேருக்கு தான் தண்ணீர் இருக்கிறது. என்ன செய்யலாம்? இதை சரிபாதியாக பிரித்துக்கொள்ளலாம் என்கிறீர்களா? கர்நாடகத்தில் 75 பேருக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு மீதியை தமிழகத்திற்கு அனுப்புகிற பொழுது அது வந்து சேர்வதற்குள் 50 பேருக்கு கிடைக்கும் அளவில் தான் வந்து சேரும். இந்த கணக்கை நாம் எளிமையான புரிதலுக்காக மட்டுமே இங்கே பயன்படுத்தியிருக்கிறோம். இதில் யாரும் நொட்டை சொல்ல முனைய வேண்டாம்.
அப்படிச் சூழலில் கர்நாடகத்தில் இருக்கின்ற 75 பேருக்கு கிடைக்கட்டும் என்பது தான் சரி. இதில் நீங்கள் முரண்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தமிழகத்தில் இருக்கும் 75 பேருக்கு தண்ணீர் தந்தாக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி நீதிமன்றம் சென்றோ தீர்ப்பாயம் சென்றோ திறந்து விட சொல்கிறீர்கள். ஏற்கனவே 300 பேருக்கு தண்ணீர் தேவைப்படுகிற இடத்தில் மேலும் தண்ணீர் திறந்தால் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று கர்நாடகம் பக்கம் இருக்கிறவர்களும் போர்க்கொடி தூக்குவார்கள்.
இந்த விஷயத்தில் நாம் உணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு பிரச்னையை சீர்தூக்கி பார்க்க வேண்டும். தண்ணீர் தேவை என்பது அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. ஒரு சாமானியன் பார்வையில், கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தை விட கர்நாடகம் விவசாயம் மற்றும் தொழில்துறை இரண்டிலும் ஒரு சமச்சீரான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அதனால் அவர்களின் தண்ணீர் தேவை தமிழகத்தின் தேவையை விட அதிகரித்துக் கொண்டே தான் போனது.
மறுபக்கம் தமிழகத்திலோ விவசாயம் பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறது. அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தேசியம் பேசிக்கொண்டிருந்த தேசத்தில் தேசிய கட்சியான காங்கிரஸை எதிர்க்க வேண்டும் பொருட்டு, திராவிட கூட்டம் தேசிய உணர்வுக்கு எதிரான ஒரு மனப்பாங்கை நமக்குள் விதைத்து இன்றளவும் அதற்கு நீரூற்றி வளர்த்துக்கொண்டிருக்கிறது. ஆகா! தேசியத்திற்கு எதிராகப் பேசி மொழி, மாநிலம் என்றெல்லாம் பேசினால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எல்லா மாநிலங்களிலும் பிராந்திய கட்சிகள் உருவாகி தேசத்திற்கு எதிரான எண்ணத்தை மக்கள் மனதில் வளர்த்துவிட்டது. இது இந்த தேசத்தில் நிகழ்ந்துவிட்ட மிகப்பெரும் பிழை.
அந்த பிழையால் பெங்களூருவில் தண்ணீர் தேவை அதிகரித்திருக்கிறது என்னும் பொழுது, அங்கு வாழும் தமிழர்களுக்கும் சேர்த்தே தான் அந்த தேவை அதிகரித்து இருக்கிறது என்பதை நாம் சிந்திப்பதில்லை. அரசியல் லாபங்களுக்காக பிராந்திய கட்சிகள் ஆரோக்கியமற்ற போட்டியையும் வெறுப்பையும் இந்திய மக்களிடையே உருவாக்கி விட்டது.
நதிகள் தேசியமயம் ஆனாலும் கூட தண்ணீர் தேவை மற்றும் பற்றாக்குறை காரணமாகவும் பிராந்திய கட்சிகள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற வெறுப்பின் காரணமாகவும் காவேரி நீரை பங்கிட்டு கொள்வதில் பெரும் சிக்கல் இருந்து கொண்டே தான் இருக்க போகிறது.
மேலே நீங்கள் படித்த விஷயங்களை ஒருவாறாக நம் அலுவலக நண்பருக்குச் சொன்னதும்; அவரோ அவர்கள் தண்ணீர் தரவில்லை என்றால், நாம் இங்கிருந்து எதையும் அனுப்பக்கூடாது என்றார். அந்த நண்பரின் அந்தச் சிந்தனையும் உணர்ச்சியும் பிராந்திய கட்சிகள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற வெறுப்பின் வெளிப்பாடு.
எதை நிறுத்த வேண்டும் என்று சொல்லுங்கள் என்றேன். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து நாம் மின்சாரத்தை அனுப்பக்கூடாது என்றார்.
பாரதிராஜா இதை முன்மொழிந்த பொழுது அப்பொழுதே இதை ரஜினி எதிர்த்தார்.
முதலில் தண்ணீரை நாம் காசு கொடுத்து வாங்குவதில்லை. மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தில் இருந்தாலும் அவைகளை நிறுவுவதற்கான பொருட்செலவில் ஒவ்வொரு இந்தியனின் பங்கும் இருக்கிறது. மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் இருந்து ஹிமாச்சலம் வரையெல்லாம் செல்வது இல்லை. 10 சதவீதம் கண்டிப்பாக தமிழகத்திற்கும், 15 சதவீதம் திடீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும். மிச்சம் இருக்கின்ற பகுதி தென் மாநிலங்களின் தேவைக்கேற்பவும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு 10 சதவீதம் மட்டும் தானா? என்றால் இல்லை. 10 சதவீதம் கட்டாயம். அது போக தேவைக்கேற்ற வகையில் பகிர்ந்தளிக்கும் முறையில் வரும் பங்கையும் சேர்த்து ஏறத்தாழ 50 சதவீதம் கிடைக்கிறது. இதற்கெல்லாம் தமிழக மின்பகிர்மான கழகம் பணம் செலுத்த வேண்டும். அதில் தமிழக மின்பகிர்மான கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஒரு பக்கம் வளர்ந்து கிடக்கிறது. அரசு சார் நிறுவனங்கள் ஆனாலும் இவையெல்லாம் ஒரு நிறுவனம் போல் இயங்கி இங்கே வியாபாரம் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் மின்சாரம் வழங்குவதை சேவையாக செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்தாலும் இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் இந்த நிறுவனங்கள் மொத்தமாக வீழ்ச்சி அடைந்து ஒன்றுக்கும் உதவாமல் போய் விடும்.
நாடு மாநிலம் ஊர் தெரு வீடு தனிநபர் என்று எதுவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் முற்றிலும் தன்னிச்சையாக இயங்க முடியாது. எல்லோரும் எல்லோரையும் சார்ந்து தான் இயங்கிக்கொண்டிருக்கிறோம். இப்படி சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது பரஸ்பர புரிந்துணர்வு இருக்க வேண்டும். அது இரண்டு தலைவர்களுக்கு மத்தியில் மட்டும் இல்லை இரு நாட்டு மக்களுக்கு இருக்க வேண்டும். இரு மாநில மக்களுக்கு இருக்க வேண்டும்.
தமிழக முதல்வரும் கூட கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்திவைக்க உத்தரவிட்டு இருக்கிறார்.
உங்களுக்கு 300 ரூபாய் தேவை இருக்கிற பொழுது உங்கள் கையில் 200 ரூபாய் இருந்து உங்களிடம் ஒருவர் 150 ரூபாய் கேட்டால் நீங்கள் கொடுப்பீர்களா? கொடுக்கக்கூடாது கொடுத்தால் அது முட்டாள்தனம் கொடுத்தால் அது இருவரையும் பலவீனப்படுத்திவிடும்.
இங்கே தண்ணீர் விஷயம் மட்டும் இல்லை எதுவாக இருந்தாலும் அது இரு நாடுகளுக்கோ ஊர்களுக்கோ மாநிலங்களுக்கோ இடையிலான பங்கீடு என வரும் பொழுது எல்லோரும் இப்படித்தான் இயங்குவார்கள். இங்கே யாரும் தனித்து இயங்க முடியாது என்றாலும் கூடுமான வரையில் எல்லோரும் சுயசார்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.தனிநபர், வீடு, ஊர் மாநிலம், நாடு எதுவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் சுயசார்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்
தமிழகம் இந்த ஐம்பது ஆண்டுகளில் என்னவெல்லாம் தவறுகள் செய்தது?
எல்லாக் கட்சிகளையும் போல் இப்பொழுது தவெகவும் கூவம் நதியை சுத்தம் செய்ய கிளம்பியிருக்கிறது. அண்ணாமலை சமீபத்தில் வைகையை சுத்தம் செய்ய சென்றிருக்கிறார்.ஒரு பக்கம் இவர்கள் சுத்தம் செய்யும் பொழுதே மறுபக்கம் சாக்கடையும் குப்பையும் அதில் கலந்து கொண்டிருக்கும்
ஓட்டைகளை நாம் அடைக்க பழகவேயில்லை. குப்பைகளை சரியான மேலாண்மை செய்தால் தான் நதிகளிலும் நீர்வழிப்பாதைகளான கால்வாய்களிலும் குப்பை போடப்படுவது குறையும். அதை பற்றி சட்டமன்றத்தில் யாரும் பேசியதாக தெரியவில்லை. நம் சமூகம் அதைச் சிந்திப்பதாகவும் தெரியவில்லை. ஆங்காங்கே ஓரிருவர் நினைத்திருக்கலாம். அது சமூக சிந்தனையாக மாற வேண்டும்.சில சிந்தனைகள் கருத்துக்கள் சமூக சிந்தனையாக மாறும் பொழுது தான் அது உருப்பெற்று நடந்தேறும்.
குப்பைகள் எங்கு வேண்டுமானாலும் போடலாம் என்கிற நிலை இருக்கும் வரை குப்பைகள் போடுவதற்கு சரியான இடங்கள் இல்லாத வரை நீர்நிலைகள் குப்பையாகத்தான் இருக்கும்.
வைகையிலும் சரி மாநிலத்தின் இன்ன பிற நதிகளிலும் சரி சாக்கடை நீர் சாதாரணமாக கலந்துவிடப்பட்டு கொண்டிருக்கிறது.
வைகை நதிக்கு சம்ஸ்கிருத புராணங்களில் கிருதுமால் நதி என்று பெயர். பிற்காலத்தில் வைகையின் கிளை நதி அந்தப் பெயரில் வழங்கப்பெற்று வந்தது. இன்று நீங்கள் மதுரைக்கு சென்று கிருதுமால் நதி எங்கிருக்கிறது என்று கேளுங்கள்? அதிகம் பேருக்கு தெரியாது. கூவமாவது நதியாக இருந்தது என்கிற சேதியை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். கிருதுமால் நதியோ தன் பெயரை இழந்து முழுவதும் சாக்கடையாக மாறி நிற்கிறது.
மதுரையில் மட்டும், இன்ன பிற பகுதிகளில் ஆறுகளில் இருந்து கண்மாய்களை இணைத்த கால்வாய்கள் எல்லாம் குப்பைகள், சாக்கடைகள் என்று ஆகி பல கால்வாய்கள் இல்லாமலேயே போய் விட்டது.
நகரமயமாக்கல், வயல்களை வீடுகளாக்குவதை கட்டாயமாக்கிவிட்டது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால், அப்படி நடந்த பொழுது கால்வாய்களை நாம் அப்படியே பராமரித்திருக்க வேண்டும். கால்வாய்களை பராமரிக்காமல் விட்டதால் அநேகமான கண்மாய்கள் அழிந்து விட்டது சிலது அழிந்துகொண்டிருக்கிறது.
வயல் இருந்த இடத்தில் வீடு இருக்கிறது; கால்வாய்களை எதற்கு பராமரிக்க வேண்டும் என்கிற போக்கு தான் இங்கே நிலவியிருந்தது. அதன் காரணமாய் பல நீர்நிலைகள் தமிழகத்தில் அழிந்து போயிருக்கிறது. நீர்மேலாண்மையில் இத்தனை மோசமாக இருந்து கொண்டு மாநிலங்களுக்கிடையே வெறுப்பை வளர்க்கும் அரசியலை இங்கே செய்துகொண்டிருக்கிறார்கள்.
2011-2012 சமயத்திலோ அதற்கு பின்னரோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநில நதிகளை இணைக்கும் திட்டத்தை அறிவித்தார் அது என்ன நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை.
நீர்நிலைகள் பராமரிப்பில் தமிழகம் மிக மோசமாக செயல்பட்டுப் பல கால்வாய்களை கண்மாய்களை ஏரிகளை காவு கொடுத்திருக்கிறது. வளர்ந்த பல நாடுகள் எத்தனை வளர்ந்தாலும் நீர்நிலைகளை அப்படியே பேணிப்பாதுகாக்கிறார்கள். இது குறித்து தமிழகச் சட்டமன்றத்தில் விவாதித்திருக்க வேண்டும்.
தண்ணீர்த் தேவையில் கூடுமான அளவு சுயசார்பை நோக்கி நகரும் வழிகளைப் பற்றி ஆலோசித்திருக்க வேண்டும்.
தேசிய நதிகள் இணைப்பை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அது ஏதோ முடியாத காரியம் போல் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நதிகளை நாம் இணைக்க வேண்டியது இல்லை. இந்த தேசம் முழுவதும் சாலைகளும் தெருக்களும் இணைந்து தான் இருக்கிறது. சாலைகள் இடும் பொழுதே தண்ணீர் செல்வதற்கான கால்வாய்களை அமைத்து ஆங்காங்கு பெய்யும் மழை அருகில் இருக்கும் நீர்நிலைகள் சென்று சேருவது போன்ற ஒருங்கிணைத்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தினால் போதும். அது இல்லாமல் தண்ணீரை மறுசுழற்சி செய்து மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற வரையறைகளை கொண்டு வரலாம். இதை தமிழகம் மட்டும் இல்லை மொத்த இந்தியாவும் செய்ய வேண்டும்
இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு இல்லை. நம் நாட்டில், நம் ஊரில் இருந்த கட்டமைப்பு தான், அழகர் மலையில் மழை பெய்தால் இரண்டு மூன்று ஊர் தள்ளி இருக்கும் ஒரு தெப்பத்தில் நீர் தேங்கும் வகையில்தான் நம் கட்டமைப்பு இருந்தது. நாம் அந்த நுட்பங்களை ஆராயாமல் நம் நோக்கத்திற்கு வீடு கட்டுவது, சாலையிடுவதுமாய் இருந்து நதிகளில் சாக்கடைகளை கலப்பதுமாக இருந்து பழகிவிட்டோம்.
சாலைகள், தெருக்கள் மூலம் நீர்நிலைகளை இணைப்பது என்கிற நாம் மறந்து போன முறையை பல வளர்ந்த நாடுகள் பின்பற்றிக்கொண்டு தானே இருக்கிறது. அங்கெல்லாம் நீர் வராத சமயங்களில் கூட நீர்வழித்தடங்களை பாலம் கட்டுவதற்காகவோ குப்பை போடுவதற்கு சாக்கடையை கலப்பதற்கோ அவர்கள் பயன்படுத்துவதில்லை அதை அனுமதிப்பதும் இல்லை
நீர் மேலாண்மை என்பது தனித்த ஒன்று அல்ல சாக்கடை, குப்பை, நகரமயமாக்கல் இதையெல்லாம் நாம் எப்படி மேலாண்மை செய்கிறோம் என்பதையும் சேர்த்தது தான் நீர் மேலாண்மை.தண்ணீர் பிரச்சனையை சரி செய்ய நாம் எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும்.
இதை சமூகமும் அரசம் புரிந்துகொண்டால் அன்று தணியும் இந்த காவேரி தாகம்!