என் மனதிற்கு நெருக்கமான நண்பர் ஒருவர், சில நேரங்களில் என்னை பா.ஜ.க ஆதரவாளர் என்று தீர்மானம் செய்து பேசுவார். பல நேரங்களில் என்னை சங்கி என்று பேசியிருக்கிறார். நான் எப்போதும் அவரிடம் சொல்வது, “நீ இவருக்கு தான் வாக்களிக்க வேண்டும்” என்று எப்போதும் உன்னை நிர்பந்திக்க மாட்டேன், இவருக்கு ‘நீ வாக்களி’ என்று பரிந்துரைக்க மாட்டேன். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் எப்படி தீர்மானிக்க வேண்டும் என்பதை எப்போதும் பேசிக்கொண்டிருப்பேன் என்று.
ரஜினியின் அரசியல் எண்ணங்களை கருத்துக்களை சரியாக உள்வாங்கி கொள்ளாத பாரதிராஜாவின் முன்கோப கருத்துக்கள் எப்படி அவர்களின் நட்பை பெரிதாக பாதிக்கவில்லையோ! அதே போல் அரசியல் சார் பேச்சுக்களில், உடனடியாக கருத்தை உள்வாங்கிக்கொள்ள தயாராக இல்லாமல் இருந்தாலும் எங்கள் நட்பில் ஒரு குறையும் இல்லாமல் இருந்தது.
காலம் அந்த நண்பருக்கும் சில விஷயங்களை புரியவைத்தார். நான் பா.ஜ.க ஆதரவாளராக இருந்ததில்லை. ஆனால், பொத்தாம் பொதுவாக பா.ஜ.க-வை எதிர்ப்பது, அவர்கள் கொண்டு வந்த சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, இருக்கின்ற மற்ற கட்சிகளோடு ஒப்பிடும் பொழுது அவர்களின் செயல்பாடு வேறுபட்டிருப்பதை கவனிக்காமல், ஜெயலலிதா மறைவிற்கு பின் நமக்குள் திட்டமிட்டு பரப்பப்பட்ட பா.ஜ.க. எதிர்ப்பை அப்படியே உமிழ்வது. இதை தான் நாம் பிழை என்று சுட்டியிருக்கிறோம். பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள், கட்சியின் செயல்பாடுகள் இரண்டையும் சரியாக சில இடங்களில் விமர்சிக்கவும் செய்து இருக்கிறோம்.
இப்ஷயங்
களை உள்வாங்கி கொண்டிருக்கிறார். ஐரோப்பாவில் பணி புரியும் அவர், தன்னுடைய இந்திய சகாக்களிடம் பேசும் பொழுது, மத்திய அரசின் செயல்பாடுகளில் இருக்கும் நியாயங்களை எடுத்து சொல்லியிருக்கிறார். உடனே அவரைப் பார்த்து “என்ன பா.ஜ.க-வா” என்று கேட்டு இருக்கிறார்கள். அவரைப் பார்த்து உலகத்திலேயே அந்த கேள்வியை கேட்ட முதல் ஆள்/ஆட்கள் அவரின் இந்திய சகாக்கள்.
இங்கே வாக்காளர்களாக நாம் செய்கின்ற தவறுகள் இது தான். வாக்காளர்களாக நாம் அரசியல் சார் விவாதங்களை நண்பர்களோடு முன்னெடுக்கும் பொழுது, ஒருவர் ஒரு கருத்தை முன்வைக்கிறார் என்றால், அதில் இருக்கும் உண்மையை ஆராய்ந்து, அதற்கு தர்க்க ரீதியிலான சரியான எதிர்கருத்துக்களை வைக்கலாம். அப்படி முடியவில்லை என்று அவர்கள் சொல்லும் கருத்தில் இருக்கும் உண்மையை தர்க்க ரீதியிலான நியாயத்தை ஏற்றுக்கொள்ளலாம். இப்படி வாதங்களில் அல்லது விவாதங்களில் நாம் ஒன்றும் ஜெயிக்க வேண்டியதில்லை. நம்முடைய இப்படியான ஒவ்வொரு கருத்துரையாடல்களும் வாக்காளர் சமூகமாக நம்மை மேம்படுத்துகிறது. மேம்பட்ட பண்பட்ட வாக்காளர் சமூகம் தலைவர்களை நிச்சயம் மேம்படுத்தும். ஆனால், இங்கே நாம் அதை செய்வதே இல்லை. ஒவ்வொரு கட்சி ஆதரவு வாக்காளர்களும் என்ன செய்கிறோம் (செய்கிறார்கள்) என்று கவனியுங்கள்.
ஊருக்கெல்லாம் பகுத்தறிவு பேசுவார்கள், “நானே சொன்னாலும் கூட உன் அறிவுக்கு சரியாக பட்டதை செய்” என்று பெரியார் சொன்னதாக சொல்லி பெரியார் புகழ் பாடுவார்கள். சரி! சொன்னது போல இவர்களாக எல்லா விஷயங்களிலும் எது சரி! எது தவறு என்று ஆய்ந்தறிந்து புரிந்து கொண்டு அரசியலை அணுகுகிறார்களா? நிச்சயமாக இல்லை.
இவர்களின் இந்த கூற்றுப்படி பார்த்தால், இவர்கள் யாரும் பெரியாரியவாதிகள் இல்லை. அநேகமான சமயங்களில் சங்கி என்று முத்திரை குத்தப்படும் நானும் இணை ஆசிரியரும் தான் பெரியாரியவாதிகள். இருவரும் சொன்னதை சொன்ன படி கேட்டு பின்பற்றி, பின் எல்லா நம்பிக்கைகளையும் மறுத்து, பின் படித்தறிந்து உணர்ந்து சில விஷயங்களை புரிந்து கொண்டு ஆன்மீகத்தை தீண்டத்தகாததாக நடத்தும் அளவிற்கும் அதில் பிழையில்லை என்று புரிந்து கொண்டோம்.
இயற்பியல் படித்தவன், ஜோதிடமும் அறிவியல் என்று உணர்வான், திருவாசகம் படித்தவன் கடவுளின் இருப்பை உணர்வான், கீதை படித்தவன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையிலான பிரிவு அல்ல அது எல்லா காலத்திலும் தொடரும் சமூக படிநிலைகள் என்று புரிந்து கொள்வான். பெரியார் இது எதையும் படித்ததில்லை. அவர் அவருடைய காலத்தில் செவி வழியாக கிடைக்கப்பெற்ற செய்திகள் மரபுகள் நம்பிக்கைகள் மீது அவருக்கு ஏற்பட்ட ஒவ்வாமையை வெளிக்காட்டினார். அவருக்கு ஒரு ராமகிருஷ்னர் கிடைத்து இருந்தால் அவர் விவேகானந்தர் ஆகியிருப்பாரோ என்னவோ?! ஏன், பெரியார் சொன்னதாக சொல்லப்படும், “நானே சொன்னாலும் கேட்காதே, உன் அறிவுக்கு எது சரி என்று படுகிறது அதை செய்” என்பதை இவர்கள் பின்பற்றாமல், பெரியாரை நியாயம் செய்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள் என்று பார்த்தால்.
இந்த ஒரு வாக்கியத்தை அவர் எங்காவது பேசியிருக்கலாம், பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், மற்ற நேரங்களில் அவரே கூட உண்மைகளை தேடி படித்து உணர்ந்து கொள்கிற முயற்சியில் ஈடுபடவில்லை. அவரின் வாதங்களை நியாயம் செய்வதிலேயே தான் அக்கறை காட்டினார். நீங்கள் ஒன்றாம் வகுப்பில், சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று படிக்கிறீர்கள். எட்டாம் வகுப்பில் சூரியன் ஒன்றும் உதிக்கவில்லை பூமியின் சுழற்சி அப்படி தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்று படிக்கிறீர்கள். நம்முடைய கற்றலும் புரிதலும் இப்படி தான் மேம்பட வேண்டும். பெரியார், உங்கள் வேதங்களே தீண்டாமையை ஆதரிக்கவில்லை என்று பேசவில்லை. விவேகானந்தர் பேசினார் வேதம் பிராமணர்களுக்கானது மட்டும் இல்லை என்று பேசினார். இந்த இருவரின் வேறுபாட்டுக்கு காரணம், விவேகானந்தர் உண்மையில் உண்மையை தேடினார், பெரியார் தான் சொன்னது தான் சரி என்று எப்போதும் அதிகார தொனியிலான வாதங்களை வைப்பதில் மும்மரம் காட்டினார்.
உண்மையான சீர்திருத்தம் தான் வேண்டுமென்றால் பெரியார் விவேகானந்தரை பின்பற்றியிருக்கலாம், படித்து இருக்கலாம், விவேகானந்தர் கருத்தில் முரண்பாடு இருந்தால் சொல்லியிருக்கலாம். எதையும் ஆய்ந்தறிந்து உன் அறிவுக்கு சரி என பட்டதை பின்பற்று என்கிற கோட்பாட்டை பெரியாரே கூட பின்பற்றவில்லை. அவர் கோணலாக ஒரு கோடு கிழித்து இது நேர் கோடு என்று நிறுவுவதில் தான் அக்கறை காட்டினார். அதனால், அவரின் பின்பற்றாளர்களும் இன்று வரை அதை நேர்கோடு தான் என்று வாதிடுவதிலேயே அக்கறை காட்டுகிறார்கள்.
பா.ஜ.க-வை எடுத்துக்கொண்டால், அந்த கட்சி எப்போதும் தனி மனித பிம்ப கட்டமைப்புகளை விட கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதில் தான் மும்மரம் காட்டியிருக்கிறது. அவர்களின் கொள்கை சார்ந்து தான் அவர்களின் கட்சியை அவர்கள் கட்டியெழுப்பிக்கொண்டு வந்தார்கள். தனிமனித முக்கியத்துவத்தை விட கட்சி முக்கியம் என்று தான் மக்களின் எண்ணங்களுக்கு எதிராக அண்ணாமலையை தலைமை பதவியில் இருந்து மாற்றினார்கள். ஆனால், இன்னமும் மோடியை மட்டுமே அவர்கள் முன்னிறுத்திக் கொண்டிருப்பதை கட்சிக்காரர்களும் கேட்பது இல்லை. அங்கு யோகி இருக்கிறாரே! யோகி எல்லோருக்கும் பொதுவான தலைவராக முன்னிறுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாநில அளவில் அண்ணாமலைக்கு இருக்கிற முக்கியத்துவத்தை விட கட்சி பெரிது என்று பேசுகிறவர்கள், தேசிய அளவில் மோடியை விட கட்சி முக்கியத்துவம் பெற்று இருக்கிறதா என்று சிந்திக்க மறுக்கிறார்கள். இது அவர்களின் சமீபத்திய செயல்பாடுகளில் பல மாற்றங்களை கொண்டுவந்து இருக்கிறது. அந்த மாற்றம் எப்படியானது என்றால், நாளை ஸ்டாலின் அவர்களோடு சேர்த்துக்கொண்டால், ஸ்டாலினை பிரதமராக கூட ஆக்குவார்கள். இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் பதவிக்காகவும் பணத்தை காப்பாற்றிக்கொள்ளவும் பா.ஜ.க.வில் சேர்ந்துகொள்வதும் கூட நடந்துகொண்டிருக்கிறது.
தி.மு.க.வை எடுத்துக்கொண்டால், அவர்களிடம் ஒரு ஒருங்கிணைப்பு இருக்கிறது, நிரூபணம் செய்ய முடியாத ஊழல் நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கட்சியில் இருந்தால், தொண்டன் எப்போதும் தலைவனாக முடியாது என்று தெரியும். ஆனாலும் அவர்களுக்கு அது போதும், நீங்கள் மாநிலத்தை பார்த்துக்கொள்ளுங்கள், நான் நகராட்சியை பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் மாநிலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் நான் ஊராட்சியை வைத்துக்கொள்கிறேன். உங்களுக்கு பின் உங்கள் மகன் முதல்வர் ஆகட்டும், எனக்கு பின் என் மகன் நகராட்சி மன்ற தலைவர் ஆகட்டும் என்று இருக்கிறார்கள்.
இந்த புரிதல், ஒப்பீட்டளவில் அ.தி.மு.க. வில் குறைவாகவே இருக்கிறது. அதுவே அந்த கட்சியில் இருக்கின்ற பல சல சலப்புகளுக்கு காரணம். எல்லோரும் பானையை என்னிடம் கொடுங்கள் நான் தான் உங்களுக்கு பங்கு வைத்து கொடுப்பேன் வகையறாவாக இருக்கிறார்கள். “அம்மா இருந்த பொழுது சின்னம்மா இருந்த பொழுது நான் எப்படி இருந்தேன் கட்சியில் நான் திண்ணையை பிடித்து நடந்த பொழுது என்னை பிடித்து நடந்தவர்கள் அதிகார போட்டி போடுகிறார்கள்”, நான் மட்டும் சளைத்தவனா என்று தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தார். ஓ.பி.எஸ் கையில் இருந்த அதிகாரத்தை கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு இன்று ஸ்டாலினோடு கைகோர்த்து இருக்கிறார்.
காங்கிரஸை பற்றி எழுத நிறைய இருக்கிறது, படிப்பதற்கு எத்தனை பேர் இருக்கிறார்கள். கட்சி ரீதியில் கட்சியை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்திக்க யார் இருக்கிறார்கள் என்று நாம் தேட வேண்டியதாக இருக்கிறது.
அண்ணன் சீமானும் தம்பி துரைமுருகனும் மூன்றாவது இடம் என்னுடையது அதுக்கு எவன் போட்டியா வந்தாலும் அடிப்பேன் என்று செயல்படுகிறார்கள். அதையே தான் தம்பிகளும் செய்து பூரித்து கொள்கிறார்கள்.
ஒரு பண்பட்ட கட்சியோ, அமைப்போ சமூகமோ எதுவாயினும் அது எப்படி இருக்க வேண்டும் என்றால், அதில் தலைவன் தொண்டர்களை/மக்களை வழி நடத்த வேண்டும். மக்கள் தலைவனை வழி நடத்த வேண்டும். தலைவன் மக்களின் கடிவாளமாக இருக்க வேண்டும். மக்கள் தலைவனின் கடிவாளாக இருக்க வேண்டும். இங்கு இதுவரை இருக்கின்ற கட்சிகளின் அமைப்புகளின் தற்போதைய நிலை அப்படியிருக்கிறதா என்று பார்த்தால் இல்லை. புது வரவுகளிடம் நாம் அந்த விஷயங்களை எதிர்பார்க்கிறோம்.
ஆரம்பத்தில், நவீன கேலி சித்திரமான மீம்கள் உருவாக்கத்தில், நாம் பெரிய அக்கறை காட்டவில்லை, பின்னர் அதை கொஞ்சம் மாற்றிக்கொண்டாலும் கூடுமான வரையில் சில கட்டுப்பாடுகளோடே தான் அதை செய்கிறோம். அப்படியிருந்தும், நாம் விஜயை கேலி செய்வதாக சிலர் குறைபாடு கொள்கிறார்கள்.
அவர்களுக்கு நாம் சொல்லிக்கொள்வது, நாம் விஜயை கேலி செய்யவில்லை. விஜய் போற்றிக் கொண்டாடும் உங்களை கேலி செய்கிறேன்.
உங்களுக்கு விஜய் பிடித்திருக்கிறதா, அதில் நான் என் மூக்கை நுழைக்க வரவில்லை. தாராளமாக நேசியுங்கள், தாராளமாக கொண்டாடுங்கள். உங்களுக்கு கொண்டாடுவதற்கு விஜய் தேவைப்படுகிறார். எனக்கோ மாற்றம் கொண்டுவர ஒரு விஜய் தேவைப்படுகிறார். அதனால், இருக்கிற குறைகளை சுட்டிக்காட்டுவது கேலி செய்வதும் தான் சரி என்பது தான் நம் நிலைப்பாடு.
இங்கே விஜயை நேசிப்பதில் யாருக்கும் எந்த விமர்சனமும் இல்லை. ஆனால், சில விஷயங்களை எப்படி நியாயப்படுத்துகிறோம் என்று பார்க்க வேண்டும். அநியாயத்திற்கு நியாயம் செய்துகொண்டிருந்தால் அது நீங்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்களோ அவருக்கே பாதகமாக முடியும். விஜயை கொண்டாடும் நீங்கள் அந்த பாதகத்தை செய்துகொண்டு இருக்கிறீர்கள்.
அராத்து என்கிற ஒரு ப்ரொபைலில், உங்கள் மகளின் கணவர் இப்படி செய்தாலும் ஆதரிப்பீர்களா? என்று கேட்பவர்களை சாடி மகளின் யோனி யாருக்கானது என்று காவல் காப்பது தான் உங்கள் வேலையா என்று முற்போக்கு சிந்தனை என்கிற வாந்தியை கக்கி வைத்துள்ளார். நம் எல்லோருக்குள்ளும் மோசமான எண்ணங்கள் இருக்கும். சில மோசமான செயல்பாடுகளை பெரும்பான்மை ஆதரிக்கும் பொழுது, இப்படி வாந்திகள் இதெல்லாம் சரி தான் என்று அவர்களின் அயோக்கியத்தனமான சிந்தனைகளை நியாயப்படுத்துதலோடு சேர்த்துக்கொள்வார்கள்.
அந்த அராத்து ப்ரொபைல் போன்றவர்களுக்கு நாம் சொல்லும் பதில், யோனியை விடுங்கள், உங்களிடம் தொழில் ரீதியாகவோ சொத்து ரீதியாகவோ ஒருவர் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறார், சட்டபூர்வமான அந்த ஒப்பந்தத்தை அவர் மீறுகிறார் இந்த சட்ட மீறுதலை தனி உரிமை என்று பேச முடியாது, அந்த சட்ட மீறுதல் மகளுக்கு நடக்கவில்லை என்றாலும் சிலர் கேள்விகளை எழுப்ப தான் செய்வார்கள்.
உனக்கு விஜயை விமர்சனம் பண்ணனும் அவ்வளவு தானே என்று சிலர் நினைப்பார்கள். ஆம்! விஜயை விமர்சனம் செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம், மாற்றம் விஜய் மூலமேனும் சாத்தியப்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது பயணம் தொடங்கியதில் இருந்து மூழ்கிகொண்டிருக்கும் கப்பலை கீழ் நோக்கி இழுத்துக்கொண்டிருப்பவனை என்ன டா செய்யுற என்று நான் கேட்க தான் செய்வேன். இங்கே யாருடைய தனியுரிமை குறித்தும், தனிப்பட்ட வாழ்வு குறித்தும் நாம் பேசவில்லை. நீ ஒழுங்கா என்று பார் என்கிற விஜய் ரசிகர்களின் வாதங்களுக்கு என்னுடைய பதில் நான் ஒழுங்கு கிடையாது. 50 பேர் பயணிக்கும் பேருந்தில் 49 பேர் ஆடலாம் பாடலாம் ஓட்டுநர் ஆடினால் பாடினால் என்ன ஆகும்!?
கடவுளால் ஆட்கொள்ளப்பட்ட மாணிக்கவாசகர் பெண்ணின் அங்கங்களை சுட்டி, அதற்கு மயங்கும் மனது இறைவனுக்கு மயங்காமல் இருக்கிறதே என்று ஏங்குகிறார். கண்ணதாசன், ஒரு பெண்ணை பார்த்தால் இப்படி எண்ணங்கள் தோன்றுகிறது என்பதை ஒத்துக்கொள்கிறார். இயற்கையில் எல்லா ஜீவ ராசிகளிலும் ஆண் ஈர்க்கப்படுபவனாகவும் பெண் ஈர்க்கின்றவராகவும் தான் இருக்கிறார்கள். மனதளவில் கூட சீதையை தவிர யாரையும் தொடாத உத்தமன் நான் இல்லை. இங்கு எந்த ஆணும் இல்லை. அப்பறம் என்ன பஞ்சாயத்து முடிஞ்சுருச்சு தானே! அதான் இல்லை.
இங்கே இந்த விருப்பு வெறுப்புகள் பற்றி நாம் வாதங்களை வைக்கவில்லை. வெளிப்படைத்தன்மை பற்றிய விமர்சனத்தை தான் நாம் வைக்கிறோம். சட்டபூர்வமான ஒப்பந்தத்தை (திருமண ஒப்பந்தத்தை) அவர் மீறியிருந்தால் அதற்கு அவர் மன்னிப்பு கோரி சட்டபூர்வ தீர்வுகளுக்கு ஒத்துழைப்பேன் என்று சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச வேண்டாம் என்கிற பிரச்சாரத்தை ரசிகர்கள் கையிலெடுக்கும் பொழுது அவரே தான் பொதுவில் அந்த நடிகையோடு ஒன்றாக வந்து இறங்குகிறார்/தோன்றுகிறார். நாம் முன்னம் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது போல பிரபலங்களின் வாழ்க்கை விஷயங்களை நாம் எட்டிப்பார்ப்பதில்லை, ஊடக வெளிச்சத்திற்காக அவர்களே சில விஷயங்களை நம்மிடம் நீட்டுகிறார்கள்.
இந்த விவாகரத்து செய்தி பரபரப்புக்கு பின், ஆம்! இது அப்படித்தான் இருந்தது, இனி இப்படித்தான் நடக்கிறது என்று உண்மையை எடுத்து சொல்கிற தைரியம் இப்போது வரை விஜய்க்கு வரவில்லை. மாறாக இந்த வாத பிரதிவாதங்களுக்கு அவரே தீனி போட்டு மகிழ்கிறார் என்பது விஜயை ஆதரிப்பவர்களுக்கு புரிகிறதா? இந்த வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் அவர் இருப்பதை அவர் ரசிக்கிறார் என்று தான் நம்மை நினைக்க வைக்கிறது.
இந்த சந்தர்ப்பங்களில், ஆதரவு வாதங்கள் குறைவது தான் அவரின் அரசியலுக்கு நல்லது. அதாவது, விஜய் ரசிகர்களுக்கு என்ன சொல்கிறோம் என்றால், “நீங்கள் கொண்டாடுங்கள். ஆனால், இந்த சந்தர்ப்பங்களில் நியாயவாதங்களை தூக்கி கொண்டு வராதீர்கள்” அது மாற்றத்திற்கான கடைசி ஆயுதத்தை பலவீனப்படுத்தும். ஏற்கனவே உடைந்து கொண்டிருக்க பர்னிஷர். அதை சரி செய்யும் வேலைகளை தான் நாம் செய்யவேண்டும்.
எல்லா கட்சிகளிலும் தலைவனின் தடுமாற்றத்தை தொண்டனும், தொண்டனின் தடுமாற்றத்தை தலைவனும் சரி செய்ய வேண்டும். தடுமாறுகிறவனுக்கு கை கொடுப்பதாக நினைத்து அவனை கீழே தள்ளக்கூடாது. எல்லா கட்சியும் செய்துகொண்டிருப்பதையே தான் விஜயோடு நிற்போம் என்று நிற்கிற நீங்களும் செய்யப் போகிறீர்களா என்று சிந்தியுங்கள்.